அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தாமா தாம ஆலாபா
(திருச்செங்கோடு)
முருகா! அவமே அழியாமல்
ஆண்டு அருள்
தானா
தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
தாமா
தாமா லாபா லோகா
தாரா தாரத் ...... தரணீசா
தானா
சாரோ பாவா பாவோ
நாசா பாசத் ...... தபராத
யாமா
யாமா தேசா ரூடா
யாரா யாபத் ...... தெனதாவி
யாமா
காவாய் தீயே னீர்வா
யாதே யீமத் ...... துகலாமோ
காமா
காமா தீனா நீணா
காவாய் காளக் ...... கிரியாய்கங்
காளா
லீலா பாலா நீபா
காமா மோதக் ...... கனமானின்
தேமார்
தேமா காமீ பாகீ
தேசா தேசத் ...... தவரோதுஞ்
சேயே
வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தாமா!
தாம ஆலாபா! லோக
ஆதாரா! தாரம் ...... தரணி ஈசா!
தான
ஆசாரோ பாவா! பாவோ
நாசா! பாசத்து ...... அபராத
யாமா
யாமா தேசு ஆர் ஊடாய்
ஆராயா ஆபத்து ...... எனது ஆவி
ஆமா? காவாய்! தீயேன் நீர் வா-
யாதே ஈமத்து ...... உகலாமோ?
காமா!
காம ஆதீனா! நீள் நா-
காவாய்! காளக் ...... கிரியாய்!கங்
காளா!
லீலா! பாலா! நீபா!
காம ஆமோதக் ...... கனமானின்
தேம்
ஆர் தேமா காமீ! பாகீ!
தேசா! தேசத் ...... தவர் ஓதும்
சேயே!
வேளே! பூவே! கோவே!
தேவே! தேவப் ...... பெருமாளே.
பதவுரை
தாமா --- மாலையை உடையவரே!
தாம ஆலாபா --- சுக சம்பாஷணை உடையவரே!
லோக ஆதாரா --- உலகுக்கு ஆதாரமானவேர!
தாரம் தரணி ஈசா --- நீர் நிலம்
என்றவைகட்குத் தலைவரே!
தான ஆசாரோ பாவா --- தானமும் ஆசாரமும், உடையவர்களால் தியானிக்கப்படுபவரே!
பாவோ நாசா --- பாவத்தை நாசஞ் செய்பவரே!
காமா --- அன்பரே!
காம ஆதீனா --- அன்பர்கள் விரும்புவதை
வழங்கும் சுதந்திரம் உடையவரே!
நீள் நாகா வாய் காளக்கிரியாய் --- நீண்ட
பாம்புருவம் வாய்ந்துள்ள, நாக மலையில்
இருப்பவரே!
கங்காள லீலா பாலா --- எலும்புக் கூட்டை
விளையாட்டாகத் தரித்துள்ள சிவபெருமானுடைய குமாரரே!
நீபா --- கடப்ப மலர் மாலையணிந்தவரே!
காம ஆமோத கனமானில் தேம் ஆர் தேமா காமீ ---
அன்பும் மகிழ்ச்சியும் பெருமையும் உள்ள வள்ளி நாயகியின், தேன் கலந்த இனிய தினைமாவின் விருப்பமுள்ளவரே!
பாகீ --- தகுதியுள்ளவரே!
தேசா --- ஒளியுள்ளவரே!
தேசத்தவர் ஓதும் சேயே --- உலகத்தவர்கள்
புகழ்ந்து போற்றும், - செம்மையானவரே!
வேளே --- உபகாரியே!
பூவே --- அழகரே!
கோவே --- தலைவரே!
தேவே --- தேவரே!
தேவ பெருமாளே --- தேவர்கள் வணங்கும்
பெருமை மிகுந்தவரே!
பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு ஆய்
ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா --- பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக தெற்கிலுள்ள, யமதேசத்தில் உள்ளவரிடையே, ஆராய்ச்சியில்லாத ஆபத்து நிலையில்
என்னுடைய உயிர் சேர்தல் ஆமா?
காவாய் --- காத்தருள்;
தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ ---
பொல்லேனாகிய அடியேன் நற்குணம் வாய்க்கப்
பெறாமல் மயானத்தில் அழியலாமோ?
பொழிப்புரை
மாலை அணிந்தவரே!
இனிய உரையாடலை உடையவரே!
உலகத்துக்கு ஆதாரமானவேர!
நீர் நிலம் இவைகட்குத் தலைவரே!
கொடைக்குணமும் ஆசாரமும் உள்ளவர்கள்
தியானிக்கும் பொருளே!
பாவத்தை அழிப்பவரே!
அன்பரே!
அன்பர்கள் விருப்பத்தையளிக்கும்
சுதந்திர முடையவரே!
பெரிய பாம்பு வடிவாயுள்ள நாகமலையில்
இருப்பவரே!
எலும்புக் கூட்டை விளையாட்டாக அணிந்த
சிவபெருமானுடைய புதல்வரே!
கடப்ப மாலை யணிந்தவரே!
மிகுந்த விருப்பமுள்ள பெருமை பொருந்திய
வள்ளிநாயகி கொடுத்த தேன் கலந்த இனிய தினைமாவில் விருப்பமுள்ளவரே!
தகுதியுள்ளவரே!
ஒளியுள்ளவரே!
உலகத்தவர் புகழும் சேயே!
உபகாரியே!
அழகரே!
தலைவரே!
தேவரே!
தேவர் போற்றும் பெருமிதமுடையவரே!
பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாகத்
தென் திசையில் உள்ள யமபுரத்தில் ஆராய்ச்சி இல்லாமல் ஆபத்து நிலையில் என் உயிர் சேர்தல்
ஆமோ? காத்தருளுவீர்.
தீயேன் நற்குணம் வாய்க்காமல் மயானத்தில் சென்று அழியலாமோ?
விரிவுரை
தாமா
---
தாமம்-மாலை.
தாமா
லாபா ---
தாம
ஆலாபா. சுகமான உரையாடலையுடையவன்.
தாரத்
தரணி ஈசா ---
தாரம்-தண்ணீர்.
தரணி-பூமி. இவைகட்குத் தலைவன்.
தானா
சாரோ பாவா ---
தான
ஆசா ரோ பாவா தானஞ்செய்து ஆசாரமாகவுள்ள
அடியார்கள்
தியானிக்கும் பொருள் முருகன்.
பாவோ
நாசா ---
பாவங்களை
நாசஞ் செய்பவன்.
பாசத்
தபராத ---
ஆசாபாசமுள்ளவர்களைத்
தண்டிக்கும் இடம் நரகலோகம்.
யாபா
யாமாதே சாரூடா ---
யாமம்-தென்திசை. தென்திசையில் உள்ள யமபுரியோர்.
எனதாவி
யாமா ---
என்
ஆவி யமனுடைய நகரஞ் சேர்வது ஆமா?
அது
நல்லதன்று. காவாய்- காத்தருள்.
தீயேனீர்வாயாதே
---
தீயேன்
நீர் வாயாதே. நீர்-நீர்மைக் குணம். நற்குணம்.
“பெருக்கு நீ ரவளொடும்
பெருந்தகை யிருந்ததே” - தேவாரம்.
ஈமத்து
உகலாமோ ---
சுடலையில்
சென்று அழியலாமோ?
காமா
---
காமம்-அன்பு.
அன்பனே!
காமாதீனா
---
காம
ஆதீனா. அன்பர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறு வழங்குவதில் சுதந்தரமுடையவர்
முருகவேள்.
நீணாகாவாய்
காளக்கிரியாய் ---
நீள்
நாவாய் காளக்கிரி-நீண்ட பாம்புருவம் வாய்ந்த சர்ப்பகிரி.
கங்காளா
லீலா பாலா ---
கங்காளம்-எலும்புக்கூடு.
சர்வசங்கார
காலத்து மாலயனாதி வானவரை எரித்து அவரது கங்காளத்தை சிவமூர்த்தியணிந்து கொள்வார், அதனால் அவர் கங்காளர் எனப்பேர்
பெற்றார்.
“கங்காளன் பூசுங்
கவசத் திருநீற்றை” --- திருமந்திரம்.
நங்காய்!
இது என்னதவம், நரம்போடு எலும்புஅணிந்து
கங்காளம்
தோள்மேலே காதலித்தான் காண்ஏடீ!
கங்காளம்
ஆமாகேள், காலஅந்த ரத்துஇருவர்
தம்காலம்
செய்யத் தரித்தனன்காண் சாழலோ. ---
திருவாசகம்.
காமாமோதக்
கணமானின் ---
காமம்-விருப்பம், ஆமோதம்-மகிழ்ச்சி. கனம்-பெருமை.
மான்-வள்ளி.
தேமார்
தேமா காமீ ---
தேம்-தேன்.
ஆர்-நிறைந்த. தே-இனிமை. மா-தினைமா. காமீ- விருப்பமுள்ளவர்.
தேன் கலந்த இனிய தினைமாவில் முருகர்
விருப்பமுள்ளவர்.
கருத்துரை
நாககிரி நாயகா! அவமே அழியாது
ஆண்டருள்வீர்.
No comments:
Post a Comment