பாடல் 7 - புண்ணிய வசத்தினால்



7. பொருள்செயல் வகை

புண்ணிய வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;
     பொருளை ரட்சிக்க வேண்டும்
  புத்தியுடன் அது ஒன்று நூறாக வேசெய்து
     போதவும் வளர்க்க வேண்டும்;

உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ர ஆபரணம்
     உடலில் தரிக்க வேண்டும்;
  உற்ற பெரியோர் கவிஞர் தமர் ஆதுலர்க்கு உதவி
     ஓங்கு புகழ் தேட வேண்டும்;

மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர் மோட்ச
     வழிதேட வேண்டும்; அன்றி,
  வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே
     மார்க்கம் அறியாக் குருடராம்

அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
     அழகன்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அண்ணலே --- தலைவனே!,

     கங்காகுலத் தலைவன் மோழைதரும் அழகன் --- கங்கை மரபில் தலைவனான மோழை ஈன்றெடுத்த அழகு மிக்கவனான,

     எமது அருமை மதவேள் --- எம் அரிய மதவேள் என்பான்,
     அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- நாள்தோறும் உள்ளத்தில் கொண்டு வழிபடுகின்ற, சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     செல்வமது புண்ணிய வசத்தினால் வரவேண்டும் --- செல்வமானது ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியத்தின் பயனாக வந்து சேர வேண்டும்.

     பொருளை ரட்சிக்க வேண்டும் --- அவ்வாறு சிறுச் சிறிதாக வந்த செல்வத்தைக் காப்பாற்றி வைக்க வேண்டும்.

     புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து போதவும் வளர்க்க வேண்டும் --- அறிவோடு சிந்தித்து, அந்தப் பொருளை ஒன்று நூறாகுமாறு நன்றாகப் பெருக்கும் உபாயத்தைத் தேட வேண்டும்.

     உண்ண வேண்டும் --- உலோப குணம் இல்லாமல் வயிறு ஆர உண்ண வேண்டும்.

     பின்பு நல்ல வத்திரம் ஆபரணம் உடலில் தரிக்க வேண்டும் --- பிறகு அழகிய ஆடைகளையும், அணிகலன்களையும் உடலிலே தரித்துக் கொள்ள வேண்டும்.

     உற்ற பெரியோர், கவிஞர், தமர், ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் --- தம்மை அடைந்த பெரியோர்க்கும், கவிஞருக்கும், உறவினர்க்கும், வறியவர்க்கும் கொடுத்து, மிக்க புகழைத் தேடிக் கொள்ள வேண்டும்,

     மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும் --- உலகிலே பல வகையான அறச் செயல்களையும் செய்தல் வேண்டும்.

     உயர் மோட்ச வழி தேட வேண்டும் --- மேலான வீடு பேற்றினை அடையும் வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்,

     அன்றி - இவ்வாறு அல்லாமல்,

     வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் --- தேடிய செல்வத்தை வீணிலே மண்ணில் புதைத்து வைத்துவிட்டு (தானும் துய்த்து) பிறர்க்கு அளிக்காதவர்களே நெறி அறியாத குருடர்கள் ஆவர்.

          குறிப்பு --- கங்கை என்பது இங்கே தண்ணீரைக் குறிக்கும். வேளாளர்கள் தமது உழவுத் தொழிலுக்குத் தண்ணீரையே சார்ந்து இருப்பதனால் அவர்களை கங்கா குலத்தவர் என்றார். 

        செல்வத்துப் பயனே ஈதல்.  "தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை" என்னும் தெய்வப்புலவர் அருள் வாக்கினையும் எண்ணுக.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...