திரு நள்ளாறு




திரு நள்ளாறு

         சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.  பாடல் பெற்ற திருத்தருமபுரம் அருகிலுள்ளது.

     அருகில்ல் 2 கி.மீ. தொலைவில் "தக்களூர்" என்ற வைப்புத் தலம் உள்ளது. திருநள்ளாறு செல்பவர்கள் இத்தலத்திற்கும் சென்று வழிபட்டு வரலாம். இத்தலத்திலுள்ள இறைவன் பெயர் திருலோகநாதசுவாமி. இறைவியின் பெயர் தர்மசம்வர்த்தினி.


இறைவர்         : தர்ப்பாரண்யேசுவரர், திருநள்ளாற்றீசர்

இறைவியார்      : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை

தல மரம்           : தருப்பை

தீர்த்தம்           : நளதீர்த்தம், சிவகங்கை

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் -1. பாடக மெல்லடிப் பாவை,
                                             2. போகமார்த்த பூண்முலையாள்,
                                             3. ஏடுமலி கொன்றையர,
                                             4. தளிரிள வளரொளி.

                             2. அப்பர் -1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள்,
                                               2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.

                             3. சுந்தரர்  -    செம்பொன் மேனிவெண் ணீறணி.


         தர்ப்பாரண்யேசுவரர் ஆலயம் ஏழு நிலை இராஜகோபுரம் கொண்டு விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் நகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடுவது உன்மத்த நடனம்.

     இத்திருத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேசுவரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக தலங்களில் சனி பகவானுக்கு உரிய தலமாக திருநள்ளாறு விளங்குகிறது.

     சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேசுவரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார். இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.

         இக்கோயிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்து, இத்திருத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் பெருமளவில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேசுவரரையும் வழிபாடு செய்கின்றனர்.

         பச்சைப் பதிகம்: திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்தில் பாடி அருளிய "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் திருப்பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதத்தின் போது சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் திருஞானசம்பந்தப் பெருமானார் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற திருப்பதிகம் வந்தது. பெருமான் அந்த்த் திருப்பதிக ஏட்டினைத் தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான்.

         நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த இராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அரைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். உற்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும். சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.

         மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "இருமையினும் எள் ஆற்றின் மேவாத ஏற்பு உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 454
பங்கயப்பா சடைத்தடம்சூழ் பழனநாட்டு
         அகன்பதிகள் பலவும் நண்ணி,
மங்கைஒரு பாகத்தார் மகிழ்கோயில்
         எனைப்பலவும் வணங்கிப் போற்றி,
தங்குஇசையாழ்ப் பெரும்பாணர் உடன்,மறையோர்
         தலைவனார் சென்று சார்ந்தார்,
செங்கைமான் மழுஏந்தும் சினவிடையார்
         அமர்ந்துஅருளும் திருநள் ளாறு.

         பொழிப்புரை : இலைகள் பொருந்திய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களையுடைய சோழ நாட்டின் பெரிய பதிகள் பலவற்றையும் அடைந்து, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சிவந்த கைகளில் மானையும் மழுவையும் ஏந்தும் சினமுடைய விடையினரான இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் `திருநள்ளாற்றினை' இசை பொருந்திய பாணருடனே அந்தணர் தலைவரான பிள்ளையார் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 455
நள்ளாற்றில் எழுந்துஅருள, நம்பர்திருத்
         தொண்டர்குழாம் நயந்து சென்று,
கொள்ஆற்றில் எதிர்கொண்டு, குலவிஉடன்
         சூழ்ந்துஅணையக் குறுகி, கங்கைத்
தெள்ஆற்று வேணியர்தம் திருவளர்கோ
         புரம் இறைஞ்சி, செல்வக் கோயில்
உள்ஆற்ற வலம்கொண்டு, திருமுன்பு
         தாழ்ந்துஎழுந்தார், உணர்வின் மிக்கார்.

         பொழிப்புரை : திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் இறைவரின் அடியவர் கூட்டமானது விரும்பிச் சென்று, முறையாக எதிர்கொண்டு, மகிழ்வுடன் சூழ்ந்து வரச் சென்று அடைந்து, தெளிவான கங்கை ஆற்றைச் சூடிய சடையையுடைய இறைவரின் செல்வம் வளரும் கோபுரத்தை வணங்கி, அருட்செல்வம் மிக்க கோயிலுள்ளே பன்முறையும் வலம்வந்து, ஞானவுணர்வுடைய பிள்ளையார், பெருமான் திருமுன்பு வணங்கி எழுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 456
உருகியஅன் புஉறுகாதல் உள்உருகி
         நனைஈரம் பெற்றால் போல,
மருவுதிரு மேனிஎலாம் முகிழ்த்துஎழுந்த
         மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்,
அருவிசொரி திருநயனத்து ஆனந்த
         வெள்ளம்இழிந்து அலைய நின்று,
பொருஇல்பதிகம் "போகம் ஆர்த்தபூண்
         முலையாள்" என்று எடுத்துப் போற்றி.

         பொழிப்புரை : உருகுதற்குக் காரணமான அன்பு மீதூர்ந்த பெருவிருப்பத்தால் மனம் உருக, அதனால் பெருகும் ஈரத்தைப் பெற்றது போல், பொருந்திய திருமேனி முழுதும் எழுந்த மயிர்க் கூச்சலை வளர்க்கும் நீர்போல அருவி போன்று வழிகின்ற ஆனந்தக் கண்ணீர்ப் பெருக்குப் பெருகி அலைய நின்று, ஒப்பில்லாத பதிகத்தைப் `போகமார்த்த பூண் முலையாள்' என்று தொடங்கிப் போற்றினார்.

         `போகம் ஆர்த்த' (தி.1 ப.49) எனத் தொடங்கும் பதிகம், பழந்தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 457
யழ்நரம்பில் ஆரஇயல் இசைகூடப்
         பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படஓங்குந் திருக்கடைக்காப்
         புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றி இசைத்துப்
         புறத்து அணைந்து புவனம் ஏத்தும்
பாணனார் யாழில்இடப் பாலறா
         வாயர்அருள் பணித்த போது.

         பொழிப்புரை : யாழ்நரம்பில் பொருந்த இயல் தமிழும் இசைத் தமிழும் கூடுமாறு பாடி, எண்ணிறந்த காலப் பகுதிகளிலும், விண்ணுக்கு அப்பாலும் நிலைபெறுமாறு, ஓங்கும் திருக்கடைக்காப்புச் சாத்தியருளிச் சிவந்த கண்ணையுடைய பாம்பணியையுடைய மார்பர் ஆன இறைவரின் திருவடிகளைப் போற்றி செய்து, புறமுற்றத்தை அடைந்து, பாலறா வாயரான ஞானசம்பந்தர், உலகம் போற்றும் பெரும்பாணனாரை யாழில் இயற்றும்படி ஆணையிட்டருளினார்.

         பின்னர்ப் பிள்ளையார் சமணரொடு வாதிடும் பொழுது, நெருப்பில் இட்டும் வேகாதிருந்த பச்சைப் பதிகம் இதுவாக அமைதல் நோக்கி, `எண்ணில் கற்பச் சேணளவு பட வோங்கும் திருக்கடைக்காப்புச் சாத்தி' என எதிரது போற்றியுரைத்தார் ஆசிரியர்.


பெ. பு. பாடல் எண் : 458
பிள்ளையார் திருத்தாளம் கொடுபாடப்
         பின்புபெரும் பாண னார்தாம்
தெள்அமுத இன்னிசையின் தேம்பொழிதந்
         திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
         களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
         தொண்டருடன் மருவும் காலை.

         பொழிப்புரை : ஞானப்பிள்ளையார் திருத்தாளத்தைக் கொண்டு அளவு ஒத்து அறுத்து அப்பதிகத்தைப் பாட, அதைப் பின்தொடர்ந்து பெரும்பாணனாரும் தெள்ளிய அமுதமான இனிய இசைத்தேன் பொழியும் நரம்புகளையுடைய யாழைப் பண் அமைதி மிகுமாறு செய்து, பதிக இசையை அமைத்துப் பாடும் போது, உலகத்தவர் யாவரும் மகிழ்ச்சியடைய, விளங்கும் சீகாழிப் பெருவள்ளலாரான பிள்ளையார் திருவுள்ளம் கொண்டு மகிழ்ந்து தொண்டர்களுடனே அங்குத் தங்கியிருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 459
மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
         கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளம் தருநாட்டுப் புறம்பணைசூழ்
         திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகம்மலரும்
         திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னில்எழுந்து அருளினார் சைவசிகா
         மணியார்மெய்த் தவத்தோர் சூழ.

         பொழிப்புரை : பின், நிலைபெற்ற திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, விடைபெற்றுச் சென்று, மணமுடைய நல்லநீர் பொருந்திய காவிரியாறானது பல வளங்களையும் தருகின்ற சோழ நாட்டின் புறம்பணை சூழ்ந்த பல திருப்பதிகளையும் வணங்கி வழிபட்டு, மெய் அடியார்கள் சூழச் சைவசிகாமணியாரான பிள்ளையார் செந்நெல் வயல்களிலே செந்தாமரை மலர்கள் மாதர் முகம் என மலர்தற்கு இடமான `திருச்சாத்தமங்கை' என்ற பழம் பதியை அணுகினார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.049   திருநள்ளாறு                      பண் - பழந்தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
போகம்ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம்ஆர்த்த பைங்கண்வெள் ளேற்றுஅண்ணல் பரமேட்டி
ஆகம்ஆர்த்த தோல்உடையன் கோவண ஆடையின்மேல்
நாகம்ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.


          குருவருள் : அனல் வாதத்தின்போது ஞானசம்பந்தர் தாம் அருளிய பாடல் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்த்தபோது இப்போகமார்த்த பூண்முலையாள் என்னும் பதிகம் கிடைத்தது. திருமுறையில் கயிறு சார்த்திப் பார்க்கும் மரபை ஞானசம்பந்தரே தொடங்கி வைத்துள்ளதை இதனால் அறியலாம். போகமார்த்த பூண்முலையாள் என்னும் இத்தொடரால் இன்பதுன்ப அநுபவங்களாகிய போகத்தைத் தன் மார்பகத்தே தேக்கி வைத்து உயிர்களாகிய தம்பிள்ளைகட்குப் பாலாக ஊட்டுகிறாள் அம்மை என்ற குறிப்பும் கிடைக்கிறது. உலகில் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தே திருவருளால் சுரக்கின்ற தாய்ப்பாலைத் தங்கள் குழந்தைகட்குக் கரவாது கொடுத்து வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. தாய்ப்பாலே குழந்தைகட்குச் சிறந்த உணவு. நோய்த்தடுப்பு மருந்து. தாய்க்கும் சேய்க்கும் நலம் பயப்பது என்பது உணர்க.


பாடல் எண் : 2
தோடுஉடைய காதுஉடையன் தோல்உடையன் தொலையாப்
பீடுஉடைய போர்விடையன், பெண்ணும்ஓர் பால்உடையன்,
ஏடுஉடைய மேல்உலகோடு ஏழ்கட லும்சூழ்ந்த
நாடுஉடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :அம்மை பாகத்தே உள்ள இடச்செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப் புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 3
ஆன்முறையால் ஆற்றவெண்ணீறு ஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்துஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றியகை
நான்மறையான், நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 4
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து,அயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொன் பாதநி ழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும்பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 5
ஏறுதாங்கி ஊர்திபேணி ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல்ஓர் ஆடுஅர வம்சூடி,
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பினில், நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :ஆன்ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவியதலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 6
திங்கள்உச்சி மேல்விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள்உச்சி எம்இறைவன் என்றுஅடி யேஇறைஞ்சத்
தங்கள்உச்சி யால்வணங்கும் தன்அடி யார்கட்குஎல்லாம்
நங்கள்உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய், தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம்பெருமானே! என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 7
வெஞ்சுடர்த்தீ அங்கைஏந்தி விண்கொள் முழவுஅதிர
அஞ்சிடத்து ஓர்ஆடல்பாடல் பேணுவது அன்றியும்போய்ச்
செஞ்சடைக்குஓர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துஉள்ளே
நஞ்சுஅடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 8
சிட்டம்ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டு,மாட்டிச் சுண்ணவெண்ணீறு ஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம்ஆர்ந்த சென்னிமேல்ஓர் பால் மதியஞ்சூடி
நட்டம்ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டிய சென்னியின்மேல் பால்போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 9
உண்ணல்ஆகா நஞ்சுகண்டத்து உண்டு,உடனே ஒடுக்கி,
அண்ணல்ஆகா அண்ணல்நீழல் ஆர்அழல் போல்உருவம்,
எண்ணல்ஆகா உள்வினைஎன்று எள்க வலித்து,இருவர்
நண்ணல்ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :யாராலும் உண்ணமுடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 10
மாசுமெய்யர் மண்டைத் தேரர் குண்டர்கு ணம்இலிகள்
பேசும்பேச்சை மெய்என்றுஎண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டுஆர் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

         பொழிப்புரை :அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம்பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.


பாடல் எண் : 11
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்,நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோடு உலகில் உறைவாரே.

         பொழிப்புரை :நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.
                                             திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

         திருமதுரைப் பயணம் முடித்துத் திரும்பும் வழியில் திருநள்ளாற்று இறைவரை மீண்டும் வணங்குகின்றார் பிள்ளையார். சமணர்களோடு வாதிட்ட போது எரியில் வேகாத திருப்பதிகத்தை உடைய இறைவரை மீளவும் வணங்கும் பாங்கு இன்புறத் தக்கது.

பெரிய புராணப் பாடல் எண் : 901
போற்றிஇசைத்துப் புறம்போந்துஅங்கு உறையும் நாளில்,
         பூழியன்முன் புன்சமயத்து அமணர் தம்மோடு
ஏற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
         பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி,
ஆற்றவும்அங்கு அருள்பெற்றுப் போந்து, முன்னம்
         அணைந்தபதி களும்இறைஞ்சி, அன்பர் சூழ
நால்திசையும் பரவுதிரு நள்ளாறு எய்தி,
         நாடுஉடைநா யகர்கோயில் நண்ணினாரே.

         பொழிப்புரை : இங்ஙனம் இறைவரைப் போற்றி, வெளியில் வந்து, அப்பதியில் தங்கியிருந்த நாள்களில், பாண்டியனின் முன்னிலையில், புன்மையான சமயத்தவரான சமணர்களுடன் மேற்கொண்ட பெரிய வாதத்தில், தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான திருநள்ளாற்றின் இறைவரை வணங்க வேண்டி, வழியில் முன்சென்று வணங்கிய பதிகளையும் திரும்பவும் வணங்கி, அன்பர் கூட்டம் சூழ்ந்துவரச் சென்று, நாற்றிசையும் போற்ற வரும் திருநள்ளாற்றைச் சார்ந்து, நாடுடை நாயகரின் கோயிலை ஞானசம்பந்தர் அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 902
நீடுதிருத் தொண்டர்புடை சூழ, அங்கண்
         நித்திலயா னத்திடைநின்று இழிந்து, சென்று,
பீடுஉடைய திருவாயில் பணிந்து புக்கு,
         பிறைஅணிந்த சென்னியார் மன்னும் கோயில்
மாடுவலங் கொண்டு,உள்ளால் மகிழ்ந்து புக்கு,
         மலர்க்கரங்கள் குவித்துஇறைஞ்சி, வள்ள லாரைப்
"பாடகமெல் அடி" எடுத்துப் பாடி, நின்று
         பரவினார் கண்அருவி பரந்து பாய.

         பொழிப்புரை : பெருகவரும் தொண்டர்கள் அருகில் சூழ்ந்து வர, அங்கு முத்துச் சிவிகையினின்றும் இழிந்தருளிச் சென்று, பெருமை உடைய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர் நிலைபெற்று வீற்றிருக்கும் கோயிலின் உள்பக்கத்தேயுள்ள திருச்சுற்றுக்களில் வலமாக வந்து, மகிழ்வுடன் உள்ளே புகுந்து, வள்ளலாரான இறைவரைப் `பாடகமெல்லடி' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி நின்று, கண்களினின்றும் நீர் அருவி பெருகப் போற்றினார்.

         `பாடகமெல்லடி' எனத் தொடங்கும் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.1 ப.6). வினாவுரையாக வரும் இப்பதிகப் பாடல் தொறும் வரும் கருத்தை உளங்கொண்டே வரும் பாடலை அருளுகின்றார் சேக்கிழார்.


பாடல் எண் : 903
"தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
         தீயின்கண் இடும்ஏடு பச்சை ஆக்கி
என்உள்ளத் துணை ஆகி ஆலவாயில்
         அமர்ந்துஇருந்த வாறுஎன்கொல் எந்தாய்" என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
         பண்புஇனிய தொண்டர்உடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
         வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : பாண்டிய மன்னன் முன்பு, சமணர் செய்த வாதில் தீயில் இட்ட ஏடு பச்சையாக இருச்கச் செய்தும், என் மனத்தின்கண் துணையாகியும், ஆலவாயிலில் வெளிப்பட வீற்றிருந்த தன்மைதான் என்ன அதிசயம்! எந்தையே! என நயம் பெறப்போற்றி, நலம் குலாவிப் பன்முறையும் எடுத்துக் கூறும் தமிழ்த் தொடையான திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, வெளியே வந்து, அடிமைப் பண்பினால் இனிமை தருகின்ற தொண்டர்களுடன் கூடி அத்திருப்பதியில் தங்கியருளி, நிலையான புகழையுடைய திருப்பதிகள் பலவற்றையும் வணங்குதற்காகச் சம்பந்தர் திருநள்ளாற்றினை வணங்கி விடை பெற்றுச் செல்வார்,

         இதுபொழுது அருளப் பெற்ற பதிகம் `ஏடுமலி' (தி.2 ப.33) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்

1.007  திருநள்ளாறும் திருவாலவாயும்      பண் --- நட்டபாடை

                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாடக மெல்அடிப் பாவையோடும்
         படுபிணக் காடுஇடம் பற்றிநின்று
நாடக மாடும்நள் ளாறுஉடைய
         நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
         துணைவ ரொடுந்தொழுது ஏத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :பாடகம் என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப் பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்று நம் பெருமானே! நீ கையில் வளையல் அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி வந்து வழிபடுவதும், பொன்மாளிகைகள் நிறைந்ததுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 2
திங்களம் போதும் செழும்புனலும்
         செஞ்சடை மாட்டுஅயல் வைத்துஉகந்து
நங்கண் மகிழும்நள் ளாறுஉடைய
         நம்பெருமான்,இது என்கொல்சொல்லாய்,
பொங்குஇள மென்முலை யார்களோடும்
         புனமயில் ஆட நிலாமுளைக்கும்
அம்கழ கச்சுதை மாடக்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :பிறைமதி, அழகிய மலர்கள், வளமான கங்கை நதி ஆகியவற்றைத் தன் செஞ்சடையின் மேல் அருகருகே வைத்து மகிழ்ந்து நம் கண்கள் களிக்குமாறு நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, பூரித்து எழும் மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடு கானகத்தில் வாழும் ஆண் மயில்கள் களித்தாட, பெருமை மிக்க தமிழ்ச்சங்கத்தினையும், நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 3
தண்நறு மத்தமும் கூவிளமும்
         வெண்தலை மாலையும் தாங்கி,யார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுஉடைய
         நம்பெரு மான்,இது என்கொல்சொல்லாய்,
புண்ணிய வாணரும் மாதவரும்
         புகுந்துஉடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்குங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தை மலர் வில்வம் ஆகியவற்றையும் வெண்மையான தலை மாலையையும் அணிந்து, திருவருள் இருந்தாலன்றி யாராலும் சென்று வழிபடற்கரிய நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, புண்ணிய வாணரும் மாதவர்களும் வந்து ஏத்துவதும் அணி கலன்கள் புனைந்த மகளிர் இறைவனது புகழ் சேர்ந்த பாடல்களைப் பாடுவதுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக .


பாடல் எண் : 4
பூவினில் வாசம் புனலிற்பொற்புப்
         புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடல்நள் ளாறுஉடைய
         நம்பெரு மான், இது என்கொல்சொல்லாய்,
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
         தரர்கணத் தோடும் சிறந்துபொங்கி
ஆவினில் ஐந்துஉகந் தாட்டுங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :பூக்களில் வாசனையாய், நீரில் தண்மையாய், புதிய சந்தனத்தில் மணமாய், நாவில் பாடலாய்க் கலந்து விளங்கும் நள்ளாற்று நம் பெருமானே! நீ, தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்யாதரர்களும் ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவராய்ப் பசுவினிடம் தோன்றும் பஞ்சகவ்யங்களால் ஆட்டி வழிபடக் கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 5
செம்பொன்செய் மாலையும் வாசிகையும்
         திருந்து புகையும் அவியும்பாட்டும்
நம்பும் பெருமைநள் ளாறுஉடைய
         நம்பெரு மான்,இது என்கொல்சொல்லாய்,
உம்பரும் நாகர் உலகந்தானும்
         ஒலிகடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :செம்பொன்னால் செய்த மாலைகள், திருவாசி ஆகியவற்றுடன் மணப்புகை நிவேதனம் தோத்திரம் ஆகியவற்றை விரும்பி ஏற்கும் பெருமை உடைய, நள்ளாற்றில் விளங்கும் நம் பெருமானே! நீ, விண்ணவரும், நாகர் உலகத்தவரும், ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட மண்ணுலக மக்களும் ஏத்த, நான்கு மேகங்களால் சூழப்பட்ட கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 6
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு
         பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுஉடைய
         நம்பெரு மான், இது என்கொல்சொல்லாய்,
போகமும் நின்னை மனத்துவைத்துப்
         புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம் உடையவர் சேருங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :இடப்பாகமாக உமையம்மையை வைத்துக் கொண்டு, படமும் புள்ளிகளும் பெரிதாகப் பிளந்த வாயும் உடைய நாகத்தைப் பூண்டுள்ள நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, உன்னை மனத்தில் கொண்டு சிவபோகமும், புண்ணியர்களாம் அடியவர்கள் கூட்டுறவும் கொண்ட மேனியராகிய சான்றோர்கள் சேர்ந்துறையும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 7
கோவண ஆடையும், நீறுப்பூச்சும் ,
         கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும்,
நாவணப் பாட்டும், நள் ளாறுஉடைய
         நம்பெரு மான், இது என்கொல்சொல்லாய்,
பூவண மேனி இளையமாதர்
         பொன்னும் மணியும் கொழித்துஎடுத்து,
ஆவண வீதியில் ஆடுங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :வேதமாகிய கோவண ஆடையும் திருநீற்றுப் பூச்சும் கொடிய மழுவாயுதத்தை ஏந்தலும் சிவந்த சடையும் நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாய் இலங்கும் நள்ளாற்றுள் எழுந்தருளிய நம் பெருமானே! நீ பூப்போலும் மெல்லிய மேனியை உடைய இளம் பெண்கள் பொன்மணி முதலியவற்றைக் கொழித்து எடுத்துக் கடை வீதியில் விளையாடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 8
இலங்கை இராவணன் வெற்புஎடுக்க
         எழில்விரல் ஊன்றி, இசைவிரும்பி,
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுஉடைய
         நம்பெரு மான், இது என்கொல்சொல்லாய்,
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
         புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமருங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது, தனது அழகிய கால் விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவனது இசையை விரும்பிக்கேட்டு அவனுக்கு நன்மைகள் பலவும் பொருந்துமாறு உளங்கொண்ட நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, ஐம்புல இன்பங்களை வெறுத்து அவற்றைத் தரும் ஐம்பொறிகளை மடைமாற்றிப் புந்தியில் உன்னையே சிந்தனை செய்யும் தூய வாழ்க்கையையுடைய சிவஞானிகள் வாழும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 9
பணிஉடை மாலும், மலரினோனும்,
         பன்றியும், வென்றிப் பறவையாயும்,
நணுகல் அரியநள் ளாறுஉடைய
         நம்பெரு மான், இது என்கொல்சொல்லாய்,
மணிஒலி சங்குஒலி யோடுமற்றை
         மாமுர சின்ஒலி என்றும்ஓவாது
அணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :பாம்பணையானாகிய திருமாலும் தாமரை மலரில் எழுந்தருளிய நான்முகனும் முறையே பன்றியாயும் பறவை இனங்களில் மேம்பட்ட அன்னமாயும், அடிமுடிகளை மாறித் தேடியும் நணுக முடியாத நள்ளாறுடைய நம் பெருமானே! நீ மணி ஒலியும், சங்கொலியும், சிறந்த முரசின் ஒலியும் என்றும் இடையறவின்றிக் கேட்கும் சிறப்பினதும், மேம்பட்ட வேந்தர்கள் புகுந்து வழிபடும் பெருமையதும் ஆகிய கூடல் ஆலவாயின்கண் எழுந்தருளி விளங்கக்காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 10
தடுக்குஉடைக் கையரும் சாக்கியரும்
         சாதியில் நீங்கிய வத்தவத்தர்,
நடுக்குற நின்றநள் ளாறுஉடைய
         நம்பெரு மான், இது என்கொல்சொல்லாய்,
எடுக்கும் விழவும், நன்னாள்விழவும்,
         இரும்பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
         ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

         பொழிப்புரை :ஓலைத்தடுக்கைக் கையில் ஏந்தித் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந்நெறியாகிய சைவ சமயத்தைக் கண்டு அச்சமயிகளின் வழிபடு கடவுளைக் கண்டு நடுக்கம் உறுமாறு திரு நள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நீ, நாள் விழாவும், சிறப்பு விழாவும் நன்கு நடைபெற, அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக்கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 11
அன்புடை யானை அரனைக்கூடல்
         ஆலவாய் மேவியது என்கொல்என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை ,
         நயம்பெறப் போற்றி நலங்குலாவும்,
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
         பூசுரன், ஞானசம் பந்தன்சொன்ன,
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
         இமையவர் ஏத்த இருப்பர்தாமே.

         பொழிப்புரை :எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவனாம், அரனைக் கூடல் ஆலவாயில் மேவியதற்குக் காரணம் யாதெனக் கேட்டுத் தூய பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாகப் போற்றி, நலம் பயக்கும் செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய பூசுரனாகிய ஞானசம்பந்தன் பாடிய இனிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், இமையவர் ஏத்தத் தேவருலகில் விளங்குவர்.

                                             திருச்சிற்றம்பலம்

2.033 திருநள்ளாறு                       பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஏடுமலி கொன்றை,அரவு, இந்து, இள வன்னி
மாடவல செஞ்சடைஎம் மைந்தன்இடம் என்பர்,
கோடுமலி ஞாழல்குரவு ஏறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.

         பொழிப்புரை :இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள், வன்னிஇலை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு, சுரபுன்னை முதலிய மரங்களின் மணம் வீசும் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 2
விண்ணியல் பிறைப்பிளவு, அறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்கும்இடம் என்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடுஇசை பாடும்அடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.

         பொழிப்புரை :வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும் முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில் ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 3
விளங்குஇழை மடந்தைமலை மங்கைஒரு பாகத்து 
உளங்கொள இருத்திய ஒருத்தன்இடம் என்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

         பொழிப்புரை :விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலை மங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 4
கொக்குஅரவர், கூன்மதியர், கோபர்,திரு மேனிச்
செக்கர்அவர் சேரும்இடம் என்பர்,தட மூழ்கிப்
புக்கஅரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கர்அவர் நாமநினைவு எய்தியநள் ளாறே.

         பொழிப்புரை :திருக்குளத்தில் மூழ்கி நாகலோகத்தவரும், வித்யாதரர்களும், தேவர்களும், திகம்பரராய சிவபெருமான் திருவைந்தெழுத்தை நினைந்து வழிபடும் திருநள்ளாறு, கொக்கிறகு அணிந்தவர். வளைந்த பிறைமதியைச் சூடியவர், கோபம் உடையவர், சிவந்த திருமேனியர் ஆகிய சிவபெருமான் சேரும் இடம், என்பர்.


பாடல் எண் : 5
நெஞ்சம்இது கண்டுகொள் உனக்கென நினைந்தார்
வஞ்சம் அதுஅறுத்துஅருளும் மற்றவனை, வானோர்
அஞ்சமுது காகிஅவர் கைதொழ எழுந்த
நஞ்சுஅமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.

         பொழிப்புரை :மனமே! இதுவே நீ உய்தற்குரிய நெறி எனத்தம் மனத்துக்கு அறிவுறுத்தி நினைந்தவர்களின் குற்றங்களைப் போக்கியருள்பவரும், தேவர்கள் கடலிடைத் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடிவந்து, தன்னை வந்து கைதொழுத அளவில், அந்நஞ்சினை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபிரானது இருப்பிடம் திருநள்ளாறு.


பாடல் எண் : 6
பாலன்அடி பேணஅவன் ஆருயிர் குறைக்கும்
காலன்உடன் மாளமுன் உதைத்த அரன் ஊராம்,
கோலமலர் நீர்க்குடம் எடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

         பொழிப்புரை :மார்க்கண்டேயர் தம் திருவடிகளை வணங்கும் வேளையில் அவர் உயிரைக் கவர்தற்கு வந்த காலன் உடனே மாளுமாறு உதைத்தருளிய சிவபிரானது ஊர். மறையவர் அழகிய மலர்கள், நீர் நிரம்பிய குடங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து நால்வேத நெறி நின்று நீராட்டி அருச்சித்து வழிபடும் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 7
நீதியர், நெடுந்தகையர், நீண்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர் இருக்கை
வேதியர்கள் வேள்விஒழி யாதுமறை நாளும்
ஓதி,அரன் நாமமும் உணர்த்திடுநள் ளாறே.

         பொழிப்புரை :நீதி வடிவினர். மேலான குணங்களை உடையவர். புகழ் விரிந்த கயிலைமலைக்கு உரியவர். உமையொரு கூறர். மேலானவர். அவரது இருப்பிடம் அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின் சிறப்பை உணர்த்தி வரும் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 8
கடுத்துவல் அரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்குஇடமது என்பர்,அளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

         பொழிப்புரை :சினந்து வந்த கயிலைமலையை அடைந்து அதனை எடுத்தவனாகிய வலிய இராவணனின் முடியணிந்த தலைகள் பத்தையும், வலிமிகுந்த இருபது தோள்களையும் அடர்த்தவனாகிய சிவபிரானது இடம். வண்டுகள் இசைபாட மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப் பொருள்களின் மணம் நிறைந்த திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 9
உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து,உலகம் எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன்இடம் என்பர்,
வியந்துஅமரர் மெச்சமலர் மல்குபொழில் எங்கும்
நயந்தரும வேதஒலி ஆர்திருநள் ளாறே.

         பொழிப்புரை :உயர்ந்த உருவம் கொண்டு திரிந்த திருமால், உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரமன் ஆகியோர் நினைப்பதற்கும் அரிய பண்புகளை உடைய சிவபிரானது இடம் தேவர்கள் வியந்து போற்ற மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்குவதும் எல்லா இடங்களிலும் அறநெறியின் வடிவான வேதங்களின் ஒலி நிறைந்துள்ளதுமான திருநள்ளாறு என்பர்.


பாடல் எண் : 10
சிந்தைதிரு கல்சமணர் தேரர்தவம் என்னும்
பந்தனை அறுத்துஅருள நின்றபர மன்ஊர்,
மந்தமுழ வம்தரு விழாஒலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.

         பொழிப்புரை :மனம் மாறுபட்ட சமணர் தேரர்கள் செய்யும் தவம் என்னும் கட்டுப்பாடுகளை விலக்கி, தன்னை வழிபடும் அன்பர்க்கு அருள்புரிய நின்ற பரமனது ஊர், மந்த இசையொடு முழவம் முழங்கும் விழாக்களின் ஒலியும், வேதவொலியும் கலந்து நிறைந்து பொழிலில் முழங்கும் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 11
ஆடல்அரவு ஆர்சடையன் ஆயிழைதன் னோடும்
நாடுமலி எய்திட இருந்தவன் நள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடல்உடை யாரைஅடை யாபழிகள் நோயே.

         பொழிப்புரை :ஆடுகின்ற அரவினை அணிந்த சடையினனாகிய சிவபிரான் உமையம்மையோடு உலகம் மகிழ்ச்சியால் நிறையுமாறு எழுந்தருளியுள்ள திருநள்ளாற்றை, மாடவீடுகள் நிறைந்த சீகாழியில் வாழும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொற்களாலியன்ற இப்பதிகப் பாடல்களைப் பாடி வழிபடுபவரைப் பழிகளும் நோய்களும் அடையா.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

                  மதுரையில் சமணர்களோடு புரிந்த அனல் வாதத்தின்போது திருநள்ளாற்றுத் திருப்பதிக ஏட்டினை எரியில் இடுவதன் முன், திருநள்ளாற்றுப் பெருமானைப் பாடிப் பரவிய திருப்பதிகம்..

பெரிய புராணப் பாடல் எண் : 772
மீனவன் தன்மேல் உள்ள வெப்புஎலாம் உடனே மாற
ஆனபேர் இன்பம் எய்தி உச்சிமேல் அங்கை கூப்பி
மானம் ஒன்று இல்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த
ஞானசம் பந்தர் பாதம் நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.

         பொழிப்புரை : பாண்டிய மன்னன், தன்னிடத்துள்ள வெம்மை முழுவதும் நீங்கியதனால் உண்டான பெரிய இன்பத்தை அடைந்து, தலையின்மீது கைகளைக் குவித்துக் கொண்டு `மானம் ஒன்றுமில்லாத சமணர்கள் முன்னே, வலிய நோய் நீங்குமாறு வந்தருளிய ஞான சம்பந்தரின் திருவடிகளைச் சேர்ந்து நான் உய்ந்தேன்!\' எனக் கூறிப் போற்றினன்.


பெ. பு. பாடல் எண் : 773
கந்துசீறு மாலியானை மீனவன் கருத்துநேர்
வந்துவாய்மை கூறமற்று மாசுமேனி நீசர்தாம்
முந்தை மந்திரத்து விஞ்சை முற்றம் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவருந் திறம் தெரிந்து தேடுவார்.

         பொழிப்புரை : கட்டுத்தறியைச் சீறிவரும் மதயானைபோலப் பாண்டியனும், சமணர்பால் அமைந்த கருத்துப் பிணிப்பினின்றும் நீங்கி, நேர்பட வந்து உண்மை நிலையைக் கூற, அழுக்குப் படிந்த உடலை உடைய இழிந்தவர்களான சமணர்கள், தாம் முன்னால் கைக்கொண்ட மந்திரத்தின் வித்தை முழுதும் வலியில்லாததாகி ஒழியக் கண்டு, அச்சம் கொண்டு, சிந்தித்துத் தாம் வெற்றியடையும் திறத்தை எண்ணி ஆராய்பவராய்,


பெ. பு. பாடல் எண் : 774
சைவமைந்தர் சொல்லின்வென்றி சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பு ஒழித்த தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லல் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்.

         பொழிப்புரை : `சைவ மகனாரான பிள்ளையாருடைய சொற்க ளின் வெற்றிச் சிறப்பை, அவருடைய சொல் மாலைப் பதிகத்தால் பாண்டியனின் வெப்பு நோய் முழுவதும் நீங்கின தன்மையைக் கண்டனம், ஆதலால் உண்மை தெரிந்த தருக்க வாதத்தில் வெற்றி பெறுவது இயல்வதன்று, பொருந்திய தீயிலும் நீரிலும் வெற்றி பெற முயல்வோமாக!' எனத் தங்களுக்குள் எண்ணினார்கள்.


பெ. பு. பாடல் எண் : 775
பிள்ளையாரும் உங்கள்வாய்மை பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தரும், சமணர்களைப் பார்த்து `உங்கள் சமய உண்மையினைப் பேசுங்கள்' என்று சொல்ல, அதைக் கேட்டு, ஏற்பட்ட இரு நிலைகளிலும் (மடத்தையும், மன்னனின் வெப்பையும் மந்திர விதியால் தாம் எண்ணியவாறு செய்தலில்) தவறிய அந்தச் சமணர்கள், `வேறு தருக்க வடிவான கடா விடைகளால் வரும் வெற்றி பெறுதலையும் விடுத்து, அவரவர்களும் தாம்தாமும் கொண்டிருக்கும் கொள்கையின் உண்மைத் தன்மையை உள்ளவாறு கண் முன் நிறுத்திக் காட்டுதலே இப்போது செய்யத் தக்கது' எனச் சூளுரைத்தனர்.


பெ. பு. பாடல் எண் : 776
என்றுவாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்தபோது
ஒன்றும்அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்குஎனச்
சென்று பின்னும் முன்னும்நின்று சில்லிவாயர் சொல்லுவார்.

         பொழிப்புரை : என்று சமணர் தங்கள் வாதத்தைக் கூற, நோய் நீங்கப் பெற்ற பாண்டியனும், அவர்களைப் பார்த்து, `என் உடல் முழுதும் வெதும்பி வெப்பு நோய் என்னை உள்ளாக்கியபோது, ஒரு சிறிதும் அந்நோயைத் தீர்க்காது தோற்றீர்கள். ஆதலால் இனி உங்களுக்கு வாது என்ன இருக்கின்றது?' எனக் கூற, மன்னனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று கொண்டு, ஓட்டை வாயர்களான சமணர்கள் கூறுவார்களாய்,


பெ. பு. பாடல் எண் : 777
என்னவாது செய்வதென்று உரைத்ததே வினா எனாச்
சொன்ன வாசகம் தொடங்கி ஏடுகொண்டு சூழ்ச்சியால்
மன்னுதம் பொருட்கருத்தின் வாய்மைதீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை வெற்றி ஆவது என்றனர்.

         பொழிப்புரை : `நீங்கள் செய்வதற்கு என்ன வாது இருக்கின்றது\' என்று, தோல்வியுற்ற உமக்கு வாதம் ஒன்றுமில்லை என்ற குறிப்புப்படச் சொன்னதையே, தம்மை என்ன வாது செய்வது? என்று வினவியதாகக் கொண்டு, முன் தாம் சொன்ன வாசகத்தையே தொடர்ந்து கொண்டு, `ஏட்டைக் கையில் கொண்டு அறிவால் சூழ்ந்து நிலைபெறும் தம் தம் சமய உண்மைப் பொருட் கருத்தினை எழுதி, நெருப்பில் இட்டால் வேகாது இருப்பதுவே வெற்றியாம்' என்று கூறினார்.


பெ. பு. பாடல் எண் : 778
என்றபோது மன்னன்ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்
நன்றுநீர் உரைத்தவாறு நாடுதீயில் ஏடுதான்
வென்றிடில் பொருட்கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன்தனிக்கை யானைமன்னன் முன்புவம்மின் என்றனர்.

         பொழிப்புரை : என்று சமணர் உரைத்தபோது, அதற்கு விடையாய் மன்னன் ஒன்று சொல்வதன் முன்பே, ஞானசம்பந்தர் `நீங்கள் கூறிய வழிநன்று! தீயில் இட்ட ஏடு, தான் வேகாது இருக்கின்றமை காட்டி வென்றால், அதில் எழுதிய பொருட் கருத்து உண்மை உடையதாகும்' எனக் கூறுவீராயின், வலிய ஒற்றைக் கையையுடைய யானையை யுடைய மன்னன் முன்னர், `அவ்வாறே வாதம் செய்து முடிவு கொள்ள வாருங்கள்' என்றுரைத்தார்.


பெ. பு. பாடல் எண் : 779
அப்ப டிக்குஎதிர் அமணரும் அணைந்து உறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்
செப்ப அருந்திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்
வெப்பு உறுந்தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான்.

         பொழிப்புரை : அங்ஙனமே எதிர் ஏற்றுச் சமணர்களும் வந்து பொருந்திய அளவில், ஒப்பில்லாத உண்மையையும் புகழையும் உடைய சீகாழித் தலைவரின் சொல்லால், சொலற்கரிய வன்மை உடைய மன்னனும் `திருந்தும் அரசவையின் முன்பு வெம்மை உடைய தீயை அமைப்பீராக!' என்று ஏவி, அதற்கான ஏவலர்களையும் அனுப்பினன்.


பெ. பு. பாடல் எண் : 780
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கித்
தீ  அமைத்தலும் சிகைவிடு புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ்அழற் கடவுளும் படர்ஒளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும் அணையவந்து அருளி.

         பொழிப்புரை : தீயை அமைக்க, ஏவப்பட்ட பணியாளர்களும் விறகை வெட்டி உடனே அடுக்கித் தீயினை அமைக்கவும், கொழுந்து விட்டு எரிதலால் புகையானது எழுந்து, பின் அது மாறப் பெற்று, சுடும் வெம்மையான தீக்கடவுளும் படரும் ஒளியினைக் காட்ட, உயர்ந்தோர் ஆய்கின்ற முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரும், அத் தீயினுக்கு அருகே நெருங்கி வந்து,


பெ. பு. பாடல் எண் : 781
செங்கண் ஏற்றவ ரேபொருள் என்றுதாம் தெரித்த
பொங்கு இசைத்திருப் பதிகநன் முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள் எனத்தொழுது எடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு காப்புநாண் அவிழ்த்தார்.

         பொழிப்புரை : சிவந்த கண்களையுடைய ஆனேற்று ஊர்தியை உடைய சிவபெருமானே உண்மைப் பொருளாவார் என, உலகம் அறிய உபதேசித்தருளிய, பொங்கும் இசையுடன் கூடிய திருப்பதிகங்களை எழுதிய நல்ல திருமுறைச் சுவடியைப் போற்றி, எங்கள் தலைவரான சிவபெருமானே முழுமுதற் கடவுளாய் எல்லோர்க்கும் மேலான பரம்பொருளாவார் என்று வணங்கி, கையால் எடுத்துத் திருமுடிமேற் கொண்ட பின்பு, அதன் காப்பான கயிற்றை அவிழ்த்தனர்.


பெ. பு. பாடல் எண் : 782
சாற்றும் மெய்ப்பொருள் தரும்திரு முறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும் வந்துநேர்ந்து உளதால்
நால்த டம்புயத்து அண்ணலார் மருவுநள் ளாறு
போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்தபூண் முலையாள்.

         பொழிப்புரை : வணங்கும் மெய்ப்பொருளைத் தரும் திருமுறையினைத் தாமே திருநீறு பொருந்திய வள்ளன்மையுடைய கையினால் பிரித்த பொழுது, நான்கு பெரிய தோள்களையுடைய இறைவர் எழுந்தருளிய திருநள்ளாற்றினைப் போற்றிய பதிகம் நேர்பட வந்தது, அப்பதிகம் `போகமார்த்த பூண்முலையாள்\' (தி.1 ப.49) எனத் தொடங்கும் திருப்பதிகமாக அமைந்திருந்தது.


பெ. பு. பாடல் எண் : 783
அத்தி ருப்பதி கத்தினை அமர்ந்துகொண்டு அருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள் ளாறரை வணங்கி
மெய்த்த நல்திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.

         பொழிப்புரை : அந்தத் திருப்பதிகத்தை விரும்பி மேற்கொண்டு, இருண்ட வெவ்விய நஞ்சு பொருந்திய கழுத்தையுடைய திருநள் ளாற்று இறைவரைப் போற்றி, உண்மை பொருந்திய நல்ல அவ்வேட்டைத் திருமுறைச் சுவடியினின்றும் பிரித்து எடுத்து, மெய்ம் மகிழ்ந்து ஞானசம்பந்தர் கையில் வைத்துக் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 784
நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின் நாதன்என்று எடுத்தும்
என்னை ஆள்உடை ஈசன்தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருள் ஆம்எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆக எனத் தளிர்இள வளர்ஒளி பாடி.

         பொழிப்புரை : நன்மையில் செலுத்தும் மெய்யான அப்பதிகத்தால் போற்றப்பட்ட இறைவன் என்று எடுத்துக் கொண்டு, என்னை ஆளாக உடைய இறைவரின் நாமமே எப்போதும் நிலைபெறும் பொருளாம் எனக் காட்டும்படி, `தீயில் வேகாது இருப்பதாகுக!' என்று `தளரிள வளரொளி' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி,

         குறிப்புரை : `தளரிள வளரொளி' (தி.3 ப.87) எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணிலமைந்ததாகும்.


பெ. பு. பாடல் எண் : 785
செய்ய தாமரை அகஇத ழினும்மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றுஅரை யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் இட்டார்.

         பொழிப்புரை : செந்தாமரை மலரின் அக இதழை விட மிகச் சிவந்த கையில் கொண்ட அந்த ஏட்டை, பாண்டியனின் அவையினர் காணுமாறு, ஆடையில்லாத அரையை உடைய சமணர்களின் மனங்கள் வெந்து அழியுமாறு, உலகுய்ய, கவுணியர் தலைவர் வெம்மை மிக்க தீயிடத்தில் மகிழ்ச்சியுடன் முன்னர் இட்டார்.

         `போகம் ஆர்த்த' எனும் தொடக்கமுடைய திருப்பதிகத்தைத் தழலிலிட்டபொழுது அருளிய திருப்பதிகம், `தளிரிளவளர்ஒளி' எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 786
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டுஉ லாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்டமூர்த்தியைப் பொருள்என உடைமையால் அமர்ந்து
பட்ட தீஇடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.

         பொழிப்புரை : மேற்கூறியவாறு ஞானசம்பந்தர் தம் கையால், தீயில் இட்ட ஏட்டில் எழுதப்பட்ட திருநள்ளாற்றுப் பதிகம், மணம் வீசும் கூந்தலையும் அழகிய மார்பகங்களையும் உடைய மலைமகளான உமையம்மையாரை ஒருமருங்கில் கொண்டவராகவும், எண்வகைப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானையே பொருளாகக் கொண்டமையால், பொருந்திக் கிடந்த தீயிடையே வேகாமல் இருந்ததுடன் பச்சையாயும் விளங்கியது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


3. 087    திருநள்ளாறு       திருவிராகம்     பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தளிர்இள வளர்ஒளி தனதுஎழில் தருதிகழ் மலைமகள்
குளிர்இள வளர்ஒளி வனமுலை இணைஅவை குலவலின்,
நளிர்இள வளர் ஒளி மருவு நள்ளாறர் தம் நாமமே
மிளிர்இள வளர்எரி இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல் போல , வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின் , குளிர்ந்த , வளரும் இள ஒளிவீசும் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால் . குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும் , ` போகமார்த்த பூண் முலையாள் ` என்று தொடங்கும் ( தி .1. ப .49. பா .1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை , அவர் திருமேனிபோல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே .


பாடல் எண் : 2
போதுஅமர் தருபுரி குழல்எழில் மலைமகள் பூண்அணி
சீதம் அதுஅணிதரு முகிழ்இள வனமுலை செறிதலின்
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே
மீதமது எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்ப்பட்ட கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து , குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த , அரும்பொத்த இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும், நாத தத்துவம் அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாற்று இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .


பாடல் எண் : 3
இட்டுஉறும் மணிஅணி இணர்புணர் வளர்ஒளி எழில்வடம்
கட்டுஉறு கதிர்இள வனமுலை இணையொடு கலவலின்
நட்டுஉறு செறிவயல் மருவு நள்ளாறர் தம் நாமமே
இட்டுஉறும் எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : பூங்கொத்துக்களைப் போன்று , இரத்தினங்கள் வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின் , ஒளி வீசும் இளைய அழகிய முலைகளைத் தழுவும் , கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள வயல்வளமிக்க திருநள்ளாற்று இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே .


பாடல் எண் : 4
மைச்சுஅணி வரிஅரி நயனிதொல் மலைமகள் பயன்உறு
கச்சுஅணி கதிர்இள வனமுலை அவையொடு கலவலின்
நச்சுஅணி மிடறுஉடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே
மெச்சுஅணி எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம் , அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.


பாடல் எண் : 5
பண்இயல் மலைமகள் கதிர்விடு பருமணி அணிநிறக்
கண்இயல் கலசமது அனமுலை இணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுது நள்ளாறர் தம் நாமமே
விண்இயல் எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த , அழகான கலசம் போன்ற இருமுலைகளையும் கூடும் , குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .


பாடல் எண் : 6
போதுஉறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்அணி
சூதுஉறு தளிர்நிற வனமுலை அவையொடு துதைதலின்
தாதுஉறு நிறம்உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே
மீதுஉறும் எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த , சூதாடும் வட்டை ஒத்த , தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால் , பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது , சத்தியமே .


பாடல் எண் : 7
கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின்உறு
சீர்மலி தருமணி அணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே
ஏர்மலி எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : அடர்த்தியான , பின்னப்பட்ட , சுருண்ட கார்மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின் அழகிய , சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும் , மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .


பாடல் எண் : 8
மன்னிய வளர்ஒளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்இயல் மணிஅணி கலசம் அதுஅனமுலை புணர்தலின்
தன்இயல் தசமுகன் நெரிய நள்ளாறர் தம் நாமமே
மின்இயல் எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும் மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை அணியப்பெற்றனவாய் , இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய் , கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப் புணர்கின்றவரும் , ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .


பாடல் எண் : 9
கான்முக மயில்இயல் மலைமகள் கதிர்விடு கனமிகு
பால்முகம் இயல்பணை இணைமுலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர் தம் நாமமே
மேல்முக எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியின் , ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும் , பிரமனும் , திருமாலும் அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே .


பாடல் எண் : 10
அத்திர நயனிதொல் மலைமகள் பயன்உறும் அதிசயச்
சித்திர மணிஅணி திகழ்முலை இணையொடு செறிதலின்
புத்தரொடு அமணர்பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே
மெய்த்திரள் எரியினில் இடில்இவை பழுதுஇலை மெய்ம்மையே.

         பொழிப்புரை : அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம் விளைவிக்கும் , பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கி யிருப்பவரும் , புத்தர்களாலும் , சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதன வாகும் என்பது சத்தியமே .


பாடல் எண் : 11
சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும்
நல்திறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில் இடஉவை கூறிய
சொல்தெரி ஒருபதும் அறிபவர் துயர்இலர் தூயரே.

         பொழிப்புரை : சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை , நன்மைதரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பாண்டிய மன்னனின் எதிரில் , நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய , இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர் . மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர் .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------
  
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 240
சீர்தரு செங்காட் டங்குடி, நீடும் திருநள்ளாறு,
ஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி,
வார்திகழ் மென்முலை யாள்ஒரு பாகன் திருமருகல்,
ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.

         பொழிப்புரை : அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் சிறப்பு உடைய திருச்செங்காட்டங்குடி, செல்வம் மிகும் திருநள்ளாறு, பூமரங்கள் நிறைந்த சோலைகள் சூழந்த திருச்சாத்தமங்கையில் உள்ள அயவந்தி, கச்சுப் பொருந்திய மார்பகங்களையுடைய அம்மையை ஒரு கூற்றில் கொண்டருளும் சிவபெருமானின் திருமருகல் ஆகிய திருப்பதிகளை எல்லாம் அன்புடன் சென்று வணங்கி இன்பம் அடைந்தார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருச்செங் காட்டங்குடி: `பெருந்தகையை` (தி.6 ப.84) -                                                      திருத்தாண்டகம்.

2.    திருநள்ளாறு:    (அ). `உள்ளாறாத` (தி.5 ப.68) - திருக்குறுந்தொகை.
                                   (ஆ). `ஆதிக்கண்` (தி.6 ப.20) - திருத்தாண்டகம்.

3.    திருமருகல்: `பெருகலாம்` (தி.5 ப.88) - திருக்குறுந்தொகை.
திருச்சாத்தமங்கைக்குரிய பதிகம் கிடைத்திலது.
  
திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

5. 068    திருநள்ளாறு            திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
உள்ஆ றாததுஓர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ஆ றாதபொன் கொன்றை கமழ்சடை
நள்ளா றாஎன நம்வினை நாசமே.

         பொழிப்புரை : உள்ளே தன் நிறம் கெடாததாகிய ஒப்பற்ற தாமரைத் தொகுதியின் தெளிவு நீங்காததாகிய சிவ ஒளிப் பிழம்பினை , தேன் நீங்காத பொன்போன்ற கொன்றைகமழும் சடையினை உடைய ` நள்ளாறா !` என்று கூற நம் வினைகள் நாசமாகும் .


பாடல் எண் : 2
ஆர ணப்பொரு ளாம்அரு ளாளனார்,
வார ணத்துஉரி போர்த்தம ணாளனார்,
நாரணன் நண்ணி ஏத்துநள் ளாறனார்,
கார ணக்கலை ஞானக் கடவுளே.

         பொழிப்புரை : திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர் , வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர்; யானையின் தோலைப் போர்த்த மணவாளர் ; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர் .


பாடல் எண் : 3
மேகம் பூண்டதோர் மேருவில் கொண்டுஎயில்
சோகம் பூண்டுஅழல் சோரத்தொட் டான்அவன்,
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.

         பொழிப்புரை : மேகத்தினைத் தன் உச்சியிற் கொண்டதாகிய மேருமாமலையாகிய வில்லைக்கொண்டு , முப்புரங்களும் சோகம் பூணுமாறு கனல் சோரத் தொட்டவனாகிய அவன் , தன்னொரு பாகத்திற்கொண்ட திருமாலும் , நான்முகனும் வழிபடுமாறு நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாற்று இறைவன் .


பாடல் எண் : 4
மலியுஞ் செஞ்சடை வாள்அர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்,
நலியும் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியும் கண்டுஇறு மாந்து மகிழ்வனே.

         பொழிப்புரை : செஞ்சடையில் மலிந்த பாம்பினோடு பொலிகின்ற கங்கையை வைத்த புனிதனாராகிய கூற்றுவனை நலிந்த நள்ளாறரது அருளாற்றலையும் கண்டு இறுமாந்து மகிழ்வேன் .


பாடல் எண் : 5
உறவ னாய்நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன்,
இறைவன் ஆகிநின்று எண்நிறைந் தான்அவன்,
நறவம் நாறும் பொழில்திரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.

         பொழிப்புரை : தேன்மணக்கும் பொழிலை உடைய திருநள்ளாற்றுப் பெருமான் உற்றுப் பொருந்தியவனாய் நிறைந்து உள்ளத்தைக் குளிர்விப்பவன் ; இறைவனாகி நின்று எண்ணத்தில் நிறைந்தவன் ; மறம் உடையவனாய் அருச்சுனனின் பொருட்டுப் பன்றியின்பின் சென்ற மாயம் என்னையோ ?


பாடல் எண் : 6
செக்கர் அங்குஅழி செஞ்சுடர்ச் சோதியார்,
நக்கர், அங்குஅரவா ஆர்த்தநள் ளாறனார்,
வக்க ரன்உயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரம்அருள் செய்த சதுரரே.

         பொழிப்புரை : சிவந்த வானமும் அழகிற்குத் தோற்று  உள்ளமழிதற்குக் காரணமாகிய செஞ்சுடர் வீசும் சோதியரும் , திகம்பரருமாகிய பாம்பினை ஆர்த்துக் கட்டிய நள்ளாற்றிறைவர் வக்கராசுரன் உயிர் போக்கியவராகிய திருமாலுக்குச் சக்கரப் படையை அருள் செய்த திறம் உடையவர் .


பாடல் எண் : 7
வஞ்ச நஞ்சில் பொலிகின்ற கண்டத்தர்,
விஞ்சை யில்செல்வப் பாவைக்கு வேந்தனார்,
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்,
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும்நள் ளாறரே.

         பொழிப்புரை : நைந்த உள்ளம் உடையவர்களுக்கு அருளும் நள்ளாற்று இறைவர் வஞ்சனைமிக்க நஞ்சினாற் பொலிகின்ற திருக்கழுத்தினர் : தெய்வச் செல்வப்பாவையாகிய உமா தேவிக்கு வேந்தர் : வஞ்சனை உடைய நெஞ்சத்தவர்களுக்கு வழி கொடாதவர் .


பாடல் எண் : 8
அல்லன் என்றும் அலர்க்கு,அரு ளாயின
சொல்லன் என்றுசொல் லாமறைச் சோதியான்,
வல்லன் என்றும்வல் லார்வளம் மிக்கவர்
நல்லன் என்றும்நல் லார்க்குநள் ளாறனே.

         பொழிப்புரை : அலர்க்கு அல்லன் என்றும் , அருளாயின சொல்லன் என்றும் , சொல்லாமறைச் சோதியானாகிய வல்லன் என்றும் துதிக்க வல்லவர் வளம் மிக்கவராவர் . அத்தகைய நல்லார்க்கு நள்ளாறன் என்றும் நல்லன் .


பாடல் எண் : 9
பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்,
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும்,
தாம்ப ணிந்துஅளப்பு ஒண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்துஅடி போற்றுநள் ளாறனே.

         பொழிப்புரை : நாம் பணிந்து அடிபோற்றும் நள்ளாற்று இறைவன் , பாம்பாகிய அணையத்தக்க பள்ளியினைக் கொண்ட திருமாலும் , பூவாகிய பணைத்த பள்ளியிற் பொலிகின்ற புராணனாகிய நான்முகனும் , தாம் பணிந்து அளக்க இயலாத ஒப்பற்ற தனித்தழலாக உள்ளவன் .


பாடல் எண் : 10
இலங்கை மன்னன் இருபது தோள்இற,
மலங்க, மால்வரை மேல்விரல் வைத்தவர்,
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாள்தொறும்
வலங்கொள் வார்வினை ஆயின மாயுமே.

         பொழிப்புரை : இலங்கை மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் இற்று மனஞ் சுழலும்படியாகத் திருக்கயிலாயப் பெரு வரையின் மேல் திருவிரல் ஊன்றியவரும் , நன்மை மிகுந்த திரு நீற்றருமாகிய நள்ளாறரை நாள்தோறும் வலம் வந்து வணங்குவார் வினைகள் மாயும் .
                                    திருச்சிற்றம்பலம்


6. 020    திருநள்ளாறு            திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
         அல்லாத சொல்உரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல
         சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை,
மாதிமைய மாதுஒருகூறு ஆயி னானை,
         மாமலர்மேல் அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற் றானை
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .


பாடல் எண் : 2
படையானை, பாசுபத வேடத் தானை,
         பண்டுஅனங்கற் பார்த்தானை, பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள்
         அருமருந்தை, ஆவாஎன்று அருள்செய் வானை,
சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை,
         சங்கத்த முத்துஅனைய வெள்ளை ஏற்றின்
நடையானை, நம்பியை, நள்ளாற் றானை
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.


பாடல் எண் : 3
படஅரவம் ஒன்றுகொண்டு அரையில் ஆர்த்த
         பராபரனை, பைஞ்ஞீலி மேவி னானை,
அடல்அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
         அமுதாக உண்டானை, ஆதி யானை,
மடல்அரவம் மன்னுபூங் கொன்றை யானை,
         மாமணியை, மாணிக்காய்க் காலன் தன்னை
நடல்அரவஞ் செய்தானை, நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .


பாடல் எண் : 4
கட்டங்கம் ஒன்றுதம் கையில் ஏந்திக்
         கங்கணமும், காதில்விடு தோடும் இட்டு,
சுட்டங்கம் கொண்டு துதையப் பூசி,
         சுந்தரனாய்ச் சூலங்கை ஏந்தி னானை,
பட்டங்க மாலை நிறையச் சூடிப்
         பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :கட்டங்கம் என்ற படையைக் கையில் ஏந்திக் கங்கணம் அணிந்து , காதில் தோடு அணிந்து , உடம்பை எரித்த சாம்பலைத் தன் திருமேனியில் நிறையப் பூசி அழகனாய்த்தன் கையில் சூலம் ஏந்தி எலும்பு மாலையை நிறையச் சூடிப் பூதக்கூட்டமும் தானுமாய்ப் பரந்து சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .


பாடல் எண் : 5
உலந்தார்தம் அங்கங்கொண்டு உலகம் எல்லாம்
         ஒருநொடியில் உழல்வானை, உலப்புஇல் செல்வம்
சிலந்திதனக்கு அருள்செய்த தேவ தேவை,
         திருச்சிராப் பள்ளிஎம் சிவலோகனை,
கலந்தார்தம் மனத்துஎன்றும் காத லானை,
         கச்சி ஏகம்பனை, கமழ்பூங் கொன்றை
நலந்தாங்கும் நம்பியை, நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :இறந்தவர்களுடைய எலும்பு மாலையை அணிந்து உலகமெல்லாம் ஒரு நொடிநேரத்தில் சுற்றிவருகின்றவனாய் , அழிவில்லாத பெருஞ்செல்வத்தைச் சிலந்திப் பூச்சிக்கு அருளிய தேவதேவனாய்ச் சிராப்பள்ளியில் உகந்தருளியிருக்கும் சிவலோகனாய்த் தன்னைக் கூடிய அடியவருடைய உள்ளத்தைத் தான் என்றும் விரும்புபவனாய்க் காஞ்சியில் ஏகம்பத்து உறைவானாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூவினால் செயற்கை அழகு கொண்ட குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .


பாடல் எண் : 6
குலங்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னை,
         குலவரையின் மடப்பாவை இடப்பா லானை,
மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட
         மறையவனை, பிறைதவழ்செஞ் சடையி னானை,
சலங்கெடுத்துத் தயாமூல தன்மம் என்னும்
         தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலங்கொடுக்கும் நம்பியை, நள்ளாற் றானை
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :அடியவர் குடி என்ற பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்க வல்லவனாய் , பார்வதியை இடப்பாகனாய் , உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குக்களை நீக்கித் தன் திருவருளாகிய புனித நீரில் அவற்றை மூழ்குவிப்பவனாய் , வேதத்தை ஓதுபவனாய் , பிறை சூடிய சடையினனாய் , நடுக்கத்தைப் போக்கி இரக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு அறம் என்னும் உண்மைப்பொருளின் வழியில் வாழ்ந்து தன்னை வழிபடுபவருக்கெல்லாம் நன்மையை நல்கும் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே .


பாடல் எண் : 7
பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானை,
         புறம்பயத்துஎம் பெருமானை, புகலூ ரானை,
மாஇரிஅக் களிறுஉரித்த மைந்தன் தன்னை,
         மறைக்காடும் வலிவலமும் மன்னி னானை,
தேஇரியத் திகழ்தக்கன் வேள்வி எல்லாம்
         சிதைத்தானை, உதைத்துஅவன்தன் சிரங்கொண் டானை,
நாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :பூவாய் விரியும் கொன்றை மலரைச் சூடிய சடையினனாய்ப் புறம்பயம், புகலூர், மறைக்காடு, வலிவலம் என்ற திருத்தலங்களை உகந்தருளிய பெருமானாய், மற்றைய விலங்குகள் அஞ்சி ஓடுதற்குக் காரணமான வலிமையை உடைய களிற்றின் தோலை உரித்த வலிமையை உடையவனாய், ஏனைய தேவர்களும் அஞ்சி ஓடுமாறு தக்கனுடைய வேள்வி முழுதையும் அழித்தவனாய், அவனை ஒறுத்து அவன் தலையை நீக்கினவனாய், நாவினின்றும் வெளிப்படுமாறு வேதத்தை ஓதுபவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.


பாடல் எண் : 8
சொல்லானை, சுடர்ப்பவளச் சோதி யானை,
         தொல்அவுணர் புரமூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை,
         மெல்இயலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்ஆலின் நீழற்கீழ் அறங்கண் டானை,
         காளத்தி யானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :வேதங்களை ஓதுபவனாய் , ஒளி வீசும் பவளம் போன்ற செந்நிறத்தானாய்ப் பழைய அசுரருடைய மூன்று மதில்களையும் எரியச் செய்த வில்லினை ஏந்தியவனாய் , எல்லாருக்கும் மேம்பட்டவனாய்ப் பார்வதி பாகனாய்க் கல்லாலின் கீழே அமர்ந்து நால்வேதங்களின் அறத்தையும் மௌன நிலையில் நால்வருக்கு உபதேசித்தவனாய்க் காளத்தியையும் , கயிலை மலையையும் உகந்தருளிய பெரியவனாய்க் குணபூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .


பாடல் எண் : 9
குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்
         குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றுஆக அவுணர்புரம் மூன்றும் வேவ
         ஆரழல்வாய் ஓட்டி அடர்வித் தானை,
சென்றுஆது வேண்டிற்றுஒன்று ஈவான் தன்னை,
         சிவனேஎம் பெருமான்என்று இருப்பார்க்கு என்றும்
நன்றுாகும் நம்பியை, நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :மேம்பட்ட முனிவனான மார்க்கண்டேயனுடைய குறை வாழ்நாள் ஆகிய சாபம் தீருமாறு திருவடியால் கூற்றுவனை வருத்திய பெருமானாய்ப் பகைமை உண்டாயினமையின் அசுரர் உடைய மும்மதில்களையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்தவனாய்த் தன்னை அடைந்து வேண்டியவர் வேண்டியதை ஈவானாய்ச் ` சிவ பெருமானே எம் இறைவன் ` என்று அவனையே வழிபட்டுக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு எல்லா நலன்களாகவும் விளங்கும் குண பூரணனாகிய நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .


பாடல் எண் : 10
இறவாமே வரம்பெற்றேன் என்று மிக்க
         இராவணனை இருபதுதோள் நெரிய ஊன்றி,
உறவாகி, இன்னிசைகேட்டு இரங்கி, மீண்டே
         உற்றபிணி தவிர்த்துஅருள வல்லான் தன்னை,
மறவாதார் மனத்துஎன்றும் மன்னி னானை,
         மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவுஆர்செஞ் சடையானை, நள்ளாற் றானை,
         நான்அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த வாறே.

         பொழிப்புரை :தான் சாகா வரம் பெற்றானாகச் செருக்கிய இராவணனை அவன் தோள்கள் இருபதும் நசுங்குமாறு திருவடி விரலை ஊன்றியவனாய்ப் பின் அவன் உறவாகி இசைத்த இன்னிசை கேட்டு இரங்கி அவன் துயரைத் துடைத்தவனாய்த் தன்னை மறவாத அடியவர் மனத்து என்றும் நிலைபெற்றிருப்பவனாய்க் கொன்றை, வன்னி, ஊமத்தம் பூ இவற்றின் தேன் நிறைந்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------
 
சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், திருவாரூரில் சில நாள்கள் தங்கி வழிபட்டு, பிற தலங்களையும் வணங்கிக் கொண்டு திருநள்ளாறு சென்று வலங்கொண்டு மண்டிய பேரன்பினொடும் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 143)

பெரிய புராணப் பாடல் எண் : 143
பரிசனமும் உடன்போத, பாங்கு அமைந்த பதிகள்தொறும்
கரி உரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி,
துரிசுஅறுநல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறு மெய்த் திருத்தொண்டர் எதிர்கொள்ளப் புக்கு அணைந்தார்.

         பொழிப்புரை : தமக்குப் பணிபுரிகின்ற ஏவலர்களும் உடன் வந்திட, அருகில் அமைந்திருக்கின்ற கோயில்கள் தோறும் சென்று, அத்திருப்பதிகளில் எல்லாம் யானைத் தோலினைப் போர்த்த பெருமானின் திருவடிகளைத் தொழுது, மகிழ்ந்து, கும்பிட்டு, குற்றம் அற்ற பெருந்தொண்டராய சுந்தரர், திருநள்ளாறு என்னும் கோயிலினை வணங்குதற்கு, இவர்பால் அன்புற்ற அடியார்கள் அங்கிருப்பார் வந்து எதிர்கொள்ள, உள்ளே புகுந்து சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 144
விண்தடவு கோபுரத்தைப் பணிந்து, கரம் மேல்குவித்துக்
கொண்டு புகுந்து, அண்ணலார் கோயிலினை வலஞ்செய்து,
மண்டியபேர் அன்பினொடு மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்த, நில மிசைப்பணிந்தார்.

         பொழிப்புரை : வானளாவிய அக்கோபுரத்தைப் பணிந்து, கைகளை உச்சிமேற் குவித்து, உட்புகுந்தருளி, பெருமானுடைய கோயிலினை வலம்செய்து, உள்ளத்துப் பெருகும் பேரன்புடன் என்றும் அங்கு அமர்ந்தருளும் திருநள்ளாற்றுப் பெருமானின் செந்தாமரை மலர் போலும் சேவடியின் கீழாக, நிலத்தில் விழுந்து வணங்கினார்.
        
         இத்திருப்பதிகம், திருநள்ளாற்று இறைவரை வணங்கிய பொழுது, அவரை மறக்கலாற்றாமையை எடுத்து அருளிச் செய்தது.
    
சுந்தரர் திருப்பதிகம்

7. 068    திருநள்ளாறு                     பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
செம்பொன் மேனிவெண் நீறுஅணி வானை,
         கரிய கண்டனை, மாலயன் காணாச்
சம்பு வை, தழல் அங்கையி னானை,
         சாம வேதனை, தன்ஒப்பு இலானை,
கும்ப மாகரி யின்உரி யானை,
         கோவின் மேல்வருங் கோவினை, எங்கள்
நம்ப னை,நள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : செம்பொன் போலும் திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிபவனும் , கரிய கண்டத்தை உடையவனும் , திரு மாலும் பிரமனும் காணாத சம்புவும் , நெருப்பை அகங்கையில் ஏந்தியவனும் , சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாவதொரு பொருள் இல்லாதவனும், குடம்போலும் தலையை உடைய பெரிய யானையின் தோலை உடையவனும் , எருதின்மேல் ஏறிவரும் தலைவனும் , எங்கள் அருந்துணைவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 2
விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை,
         வேத கீதனை, மிகச்சிறந்து உருகிப்
பரசு வார்வினைப் பற்றுஅறுப் பானை,
         பாலொடு ஆன்அஞ்சும் ஆடவல் லானை,
குரைக டல்வரை ஏழ்உல குடைய
         கோனை, ஞானக் கொழுந்தினை, கொல்லை
நரைவிடை உடைநள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : மணத்தைத் தருகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவனும் , வேதத்தின் இசையை விரும்புபவனும் , அன்பு மிகச்சிறந்து , மனம் உருகித் துதிப்பவர்களது வினைத்தொடர்பை அறுப்பவனும் , பால் முதலிய ஆனைந்தினை ஆடவல்லவனும் , ஒலிக் கின்ற கடலும், மலையும் , உலகும் ஆகியவற்றை ஏழேழாக உடைய தலைவனும் , ஞானத்திற்கு எல்லையாய் உள்ளவனும் , முல்லை நிலத் திற்குரிய வெள்ளிய இடபத்தை உடையவனும் , திருநள்ளாற்றில் எழுந் தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 3
பூவில்வா சத்தை, பொன்னினை, மணியை,
         புவியை, காற்றினை, புனல்அனல் வெளியை,
சேவின் மேல்வருஞ் செல்வனை, சிவனை,
         தேவ தேவனை, தித்திக்கும் தேனை,
காவிஅம் கண்ணி பங்கனை, கங்கைச்
         சடைய னை, கா மரத்திசை பாட
நாவில் ஊறுநள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : பூவில் உள்ள மணமும் , பொன்னும் , மணியும் ஆகிய இவைபோல்பவனும் , ` மண் , நீர் , தீ , காற்று , வானம் ` என்னும் ஐம்பெரும் பூதங்களாய் நிற்பவனும் , எருதின்மேல் வரும் செல்வத்தை உடையவனும் , நன்மையே வடிவானவனும் . தேவர்கட்கெல்லாம் தேவனும் , தித்திக்கும் தேன்போல இனிப்பவனும் , குவளைப் பூப் போலும் கண்களையுடையவளாகிய மங்கைதன் பங்காளனும் , கங்கையைத் தாங்கிய சடையை உடையவனும் , ` சீகாமரம் ` என்னும் இசையாற் பாடுமிடத்து , நாவில் இனிமை மிகுகின்றவனும் , திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம்போல்பவனை மறந்து , நாய்போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 4
தஞ்சம் என்றுதன் தாள்அது அடைந்த
         பாலன்மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்டபி ரானை,
         நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை,
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
         கடைந்த வேலையுள் மிக்குஎழுந்து எரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : ` அடைக்கலம் ` என்று சொல்லித் தனது திருவடியை அடைந்த சிறுவன்மேல் சினந்து வந்த இயமனை , வீழ்ந்து உருளும்படி அவனது மார்பில் ஓர் உதை உதைத்தலை மேற்கொண்ட தலைவனும் , தன்னை நினைப்பவரது மனத்தை விட்டு நீங்குதல் இல்லாதவனும் , அறிவு மிக்க தேவர்களும் , அசுரர்களும் கூடிக் கடைந்த கடலுள் மிகுதியாய்த் தோன்றி வெம்மையுற்று நின்ற நஞ்சினை உண்டவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல் பவனை மறந்து, நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 5
மங்கை பங்கனை, மாசிலா மணியை,
         வான நாடனை, ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்புஅரி யானை,
         ஏழை யேற்குஎளி வந்தபி ரானை,
அங்கம் நான்மறை யான்நிறை கின்ற
         அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனை,நள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : மங்கை ஒருத்தியது பங்கை உடையவனும் , இயல் பாகவே மாசில்லாது விளங்கும் மணிபோல்பவனும் , வானமாகிய நாட்டை உடையவனும் , பன்றியும் அன்னமும் எவ்விடத்துத் தேடியும் காணுதல் அரியவனும் , எளியேனுக்கு எளியனாய் எதிர்வந்த தலை வனும் , ஆறு அங்கங்களையுடைய நான்கு வேதங்களோடு நிறைந்து நிற்கின்ற அந்தணர்கள் தனது திருவடியைப் போற்றுகின்ற நம் தலை வனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் . வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 6
கற்ப கத்தினை, கனகமால் வரையை,
         காம கோபனை, கண்ணுத லானை,
சொற்ப தப்பொருள் இருள்அறுத்து அருளும்
         தூய சோதியை, வெண்ணெய்நல் லூரில்
அற்பு தப்பழ ஆவணம் காட்டி
         அடியனா என்னை ஆளது கொண்ட
நற்ப தத்தை,நள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : கற்பக தருவும் பெரிய பொன்மலையும் போல்பவனும் , காமனைக் காய்ந்தவனும் , கண் பொருந்திய நெற்றியை உடையவனும் , சொல் நிலையில் நிற்கும் பொருள் உணர்வாகிய அறியாமையைக் களைந்து , பொருள்கள் , நேரே விளங்குமாறு விளக்குகின்ற தூய ஒளியாய் நிற்பவனும் , என்னை அடியவனாக , திருவெண்ணெய் நல்லூரில் , யாவரும் வியக்கத் தக்க , பழமையதாகத் தீட்டப்பட்டதோர் ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நன்னிலை யாய் உள்ளவனும் , திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து , நாய் போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 7
மறவ னை,அன்று பன்றிப்பின் சென்ற
         மாயனை, நால்வர்க்கு ஆலின்கீழ் உரைத்த
அறவ னை,அம ரர்க்குஅரி யானை,
         அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
         கோனை, நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : அன்று ஒரு பன்றியின்பின் அதனைத் துரத்திச் சென்ற வேடனும் , அன்னதொரு மாயம் வல்லவனும் , நால்வர் முனிவர்க்கு ஆல் நிழலில் இருந்து சொல்லிய அறத்தை உடையவனும் , தேவர்கட்கு அரியனாய் நிற்பவனும் , தேவர் சேனைக்குத் தலை வனாகிய , குறவர் மகளாகிய வள்ளிதன் கணவனைப் பெற்ற தலைவ னும் , நான் செய்த குற்றங்களைப் பொறுப்பவனும் , பூக்களின் மணம் பரக்கின்ற திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 8
மாதி னுக்குஉடம்பு இடங்கொடுத் தானை,
         மணியி னை,பணி வார்வினை கெடுக்கும்
வேதனை, வேத வேள்வியர் வணங்கும்
         விமல னை,அடி யேற்கெளி வந்த
தூதனை, தன்னைத் தோழமை அருளித்
         தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னை,நள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : மாதராள் ஒருத்திக்குத் தனது உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும் , மாணிக்கம் போல்பவனும் , தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற , வேத முதல்வனாய் உள்ளவனும் , வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும் , அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும் , தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து , அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும் , திரு நள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றை யும் நினையேன் .


பாடல் எண் : 9
இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
         எடுப்ப, ஆங்குஇம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள்
         இருப துந்நெரித்து, இன்னிசை கேட்டு,
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த
         வள்ளலை, பிள்ளை மாமதி சடைமேல்
நலங்கொள் சோதி,நள் ளாறனை, அமுதை,
         நாயி னேன்மறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : இலங்கைக்கு அரசன் அழகு விளங்குகின்ற கயிலாய மலையைப் பெயர்க்க , அது போழ்து மலையரையன் மகளாகிய உமை அஞ்சுதலும் , அவனது விளங்குகின்ற பெரிய முடி யணிந்த தலைகள் ஒருபதையும் , தோள்கள் இருபதையும் நெரித்து , பின்னர் அவன் செருக்கொழிந்து பாடிய இனிய இசையைக் கேட்டு , வலக்கையிற் பிடிக்கும் வாளினையும் ` இராவணன் ` என்ற பெயரை யும் , அவனுக்கு அளித்த வள்ளலும், குழவிப் பருவத்தையுடைய சிறந்த சந்திரன் , சடைமேல் தங்கி நன்மையுடன் வாழ்கின்ற ஒளி யுருவினனும் திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய்போலும் அடியேன் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .

பாடல் எண் : 10
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றுஎம்
         சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை,
மறந்து நான்மற்று நினைப்பது ஏதுஎன்று,
         வனப்பகை அப்பன், ஊரன்,வன் தொண்டன்,
சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும்
         சிந்தைஉள் உருகிச் செப்ப வல்லார்க்கு,
இறந்து போக்குஇல்லை வரவுஇல்லை ஆகி,
         இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே

         பொழிப்புரை : நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநள்ளாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானை , திருநாவலூரில் தோன்றியவனும் , ` சிங்கடி ` என்பவளுக்கும் ` வனப்பகை ` என்ப வளுக்கும் தந்தையும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் , ` இப் பெருமானை மறந்து நான் நினைப்பது வேறு யாது ` என்று சொல்லி , அன்பு மிகுந்து பாடிய பாடல்களாகிய இப்பத்தினையும் மனம் உள்ளுருகிப் பாட வல்லவர்க்கு , இறந்து போதலும் , பிறந்து வருதலும் இல்லையாக , பேரின்ப வெள்ளத்துள் இனிதே இருப்பார்கள் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...