விராலிமலை - 0368. மோதி இறுகி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மோதி இறுகி (விராலிமலை)

முருகா!
எமதூதர் வரும் முன் உமது திருவடி தரிசனத்தை அருள்.

தான தனதனன தான தனதனன
     தான தனதனன ...... தந்ததான


மோதி யிறுகிவட மேரு வெனவளரு
     மோக முலையசைய ...... வந்துகாயம்

மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
     மூட மெனஅறிவு ...... கொண்டதாலே

காதி வருமியம தூதர் கயிறுகொடு
     காலி லிறுகஎனை ...... வந்திழாதே

காவ லெனவிரைய வோடி யுனதடிமை
     காண வருவதினி ...... யெந்தநாளோ

ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
     யாடு மரனுமிவ ...... ரொன்றதான

ஆயி யமலைதிரி சூலி குமரிமக
     மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே

சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
     தோய வளர்கிரியி ...... னுந்திநீடு

சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
     தோகை மயிலுலவு ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மோதி இறுகி வடமேரு என வளரும்
     மோக முலை அசைய ...... வந்து, காயம்

மோசம் இடும் அவர்கள் மாயை தனில்முழுகி,
     மூடம் என அறிவு ...... கொண்டதாலே,

காதி வரும் இயம தூதர் கயிறு கொடு
     காலில் இறுக எனை ...... வந்து இழாதே,

காவல் என விரைய ஓடி, உனது அடிமை
     காண வருவது இனி ...... எந்த நாளோ?

ஆதி மறையவனும், மாலும், உயர் சுடலை
     ஆடும் அரனும், வர் ...... ஒன்றது ஆன

ஆயி, அமலை, திரி சூலி, குமரி, மக
     மாயி, கவுரி, மை ...... தந்தவாழ்வே!

சோதி நிலவு கதிர் வீசும் மதியின்மிசை
     தோய வளர்கிரியின் ...... உந்தி நீடு

சோலை செறிவு உள விராலி நகரில் வளர்
     தோகை மயில் உலவு ...... தம்பிரானே.


 பதவுரை

      ஆதி மறையவனும் --- ஆதி மறையவனாகிய பிரமனும்,

     மாலும் --- திருமாலும்,

     உயர் சுடலை ஆடும் அரனும் --- மயானத்தில் திருநடனம் புரிகின்ற அரனும்,

     இவர் ஒன்றது ஆன ஆயி --- இந்த மும்மூர்த்திகட்கும் ஒப்பற்ற அன்னையும்,

     அமலை --- மலம் இல்லாதவரும்,

     திரிசூலி --- திரிசூலத்தை ஏந்தியவரும்,

      குமரி --- இளமையானவரும்,

     மகமாயி --- பெரியமாயியும்,

     கவுரி --- பொன்னிறம் உடையவரும் ஆகிய,

     உமை தந்த வாழ்வே --- உமாதேவியார் பெற்ற செல்வமே!

     சோதி நிலவு கதிர் வீசு --- சோதியாகிய ஒளிக்கிரணங்கள் வீசுகின்ற

     மதியின் மிசை தோய வளர்கிரியின் --- சந்திரன்மீது தோயும் படி வளர்ந்துள்ள மலைமீது,

     உந்தி நீடு --- ஆறு நீண்டுள்ள,

     சோலை செறிவு உள --- சோலைகளும் நெருங்கியுள்ள,

     விராலி நகரில் வளர் --- விராலிமலையில் வீற்றிருக்கின்ற,

     தோகை மயில் உலவு --- தோகை மயில் உலாவுகின்ற

     தம்பிரானே --- தனிப்பெருந்தலைவரே!

      மோதி --- மேலெழுந்து,

     இறுகி --- திண்ணியதாய்,

     வடமேரு என வளரும் --- வட மேருகிரிபோல் வளர்ந்துள்ள,

     மோகமுலை அசைய --- மோகத்தை மூட்டும் முலைகள் அசைய,

     வந்து காயம் மோசம் இடும் அவர்கள் --- ஆடவர்பால் வந்து உடலால் மோகஞ் செய்கின்ற பொதுமாதர்களின்,

     மாயை தனில் மூழ்கி --- மாயையிலே அடியேன் மூழ்கி,

     மூடம் என அறிவு கொண்டதாலே --- மூடத்தனம் என்னும் படி அறிவைக் கொண்ட காரணத்தால்,

     காதி வரும் --- உயிரைப் பிரிக்கவரும்,

     இயமதூதர் --- இயமனுடைய தூதர்கள்,

     கயிறு கொடு --- பாசக்கயிற்றைக் கொண்டு,

     காலில் இறுக --- பிராணவாயுவுடன் கட்டி,

     எனை வந்து இழாதே --- அடியேனிடம் வந்து இழுக்காமல்,

     காவல் என --- அடியேனுக்குக் காவலாக,

     விரைய ஓடி --- விரைந்து ஓடிவந்து,
    
     உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ --- உமது அடியைாகிய சிறியேன் கண்டு உய்யும்படி வருவது இனி எந்த நாளோ?


பொழிப்புரை


     ஆதிப்பிரமனும், அரியும், சுடலையில் ஆடும் அரனும் ஆகிய திரிமூர்த்திகட்கும் அன்னையும், மலமற்றவரும் திரிசூலத்தை யுடையவரும், குமரியும், மகமாயியும் பொன்னிறமுடையவரும், ஆகிய உமாதேவியார் பெற்ற செல்வரே!

     சோதிமயமான ஒளியை எங்கும் வீசுகின்ற சந்திரன் மீது தோயும்படி உயர்ந்து வளர்ந்துள்ளதும், ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ளதும் ஆகிய விராலிமலைமீது வாழ்பவரே!

     தோகைமயிலில் உலாவுகின்ற தனிப்பெருந் தலைவரே!

         மேலோங்கி திண்ணிய தாய வடமேருமலை போல் வளர்ந்து மோகத்தை ஊட்டுகின்ற தனங்கள் அசைய வந்து உடல், நலத்தால் மோகஞ்செய்கின்ற பொது மாதர்களின் மாயையில் மூழ்கி, மூடத்தன்மை யென்னும்படியான காரணத்தால், உயிரைப்பற்றி இயமதூதர்கள் வந்து கயிறுகொண்டு பிராணவாயுவுடன் கட்டி என்னை இழுக்காமல், காவலாக நீர் விரைந்து ஓடி அடியேன் கண்டு தெரிசிக்க வருவது இனி எந்த நாளோ?

விரிவுரை


கயிறுகொடு காலில் இறுக எனை வந்து இழாதே ---

இயமதூதர்கள் வினைகளின் முடிவில் வந்து பிராணவாயுடன் பாசக்கயிற்றைச் சேர்த்துக் கட்டி இழுத்து உயிரைப் பிரித்துக் கொண்டு போவார்கள்.

கால்-வாயு.

காலனார் வெங்கொடுந் துதர் பாசங்கொடுஎன்
   காலின் ஆர் தந்து உடன் கொடுபோக”        --- திருப்புகழ்.

காவலென விரைய வோடி ---

முருகவேள் அடியார்க்குக் காவல்காரனாக நின்று அருள்புரிவார்.

தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே”    --- (ஒருபொழுதும்) திருப்புகழ்.

அடிமை காண வருவது இனி எந்த நாளோ ---

கால தூதர் பற்றி இழுக்காமுன் தேவரீர் அடியேன் முன் ஓடிவந்து காட்சிதருவது எந்த நாளோ” என்று சுவாமிகள் ஏங்குகின்றார்.

ஆதி மறையவனும் ---

தீயோம்பு மறைவாணர்க்கு ஆதியாம் திசைமுகன்”   --- திருஞானசம்பந்தர்.

மறையவர்கட்குத் தலைவன் பிரமதேவன்.


உந்தி சோலை செறிவுள ---    

உந்தி - காட்டாறு

ஆறுகளும் சோலைகளும் சூழ்ந்துள்ள அரிய தலம் விராலிமலை.


கருத்துரை

விராலிமலை மீது மேவும் பெருமானே! உமது தரிசனந்தந் தருள்வீர்.



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...