திருச்செங்கோடு - 0394. பொன்சித்ரப் பச்சைப்பட்டு

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொன்சித்ர (திருச்செங்கோடு)

முருகா!
மாதர் மயக்கில் உழலாமல்,
உன் திருவடிகளை வழிபட்டு உய்ய அருள்.

தத்தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத்தத் தத்தத் தத்தத்
          தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான


பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
     கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
          புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள்

புட்பட்டுச் செப்பத் துப்பற்
     கொத்தப்பொற் றித்தத் திட்பப்
          பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார்

கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
     தத்திற்புக் கிட்டப் பட்டுக்
          கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல்

கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
     சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
          கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய்

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
     துக்கச்சத் துக்குக் குக்குக்
          குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா

குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்
     கக்ஷத்திற் பட்சத் தத்தக்
          கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி

சற்சித்துத் தொற்புத் திப்பட்
     சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
          சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே

தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
     செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
          சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பொன் சித்ரப் பச்சைப் பட்டுக்
     கச்சு இட்டுக் கட்டி, பத்மப்
          புட்பத்துக்கு ஒப்பக் கற்பித்து, ...... இளைஞோர்கள்

புள்பட்டுச் செப்பத்துப் பல்
     கொத்தப் பொற்று, சித்தத் திட்பப்
          பொற்பில் பெற்று உக்ர, சக்ரத் ...... தன மானார்,

கல் சித்தச் சுத்தப் பொய்ப் பித்-
     தத்தில் புக்கு, இட்டப் பட்டுக்
          கைக்குத்து இட்டு இட்டு, சுற்றித் ...... திரியாமல்,

கற்று உற்றுச் சித்திக் கைக்குச்
     சித்திப்பப் பக்ஷத்தில் சொல்
          கற்பித்து ஒப்பித்துக் கொற்றக் ...... கழல்தாராய்.

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
     துக்க அச்சத்துக் குக்குக்குக்
          குக்குக்குக் குக்குக் குக்குக்கு ...... எனமாறா

குட்சிக்கு பட்சிக்கைக்குக்
     கட்சத்தில் பட்சம் தத்தக்
          கொட்டிச் சுட்டிக் கொக்கரி குக்- ...... குடதாரி

சற்சித்து தொல் புத்திப் பட்ச
     அத்தர்க்கு ஒப்பித்து, ட்சத்துச்
          சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே!

தட்சப் பற்றுக் கெர்ப்பத்தில்
     செல் பற்றைச் செற்றிட்டு, ச்சச்
          சற்பப் பொற்றைக்குள் சொக்கப் ...... பெருமாளே.


 பதவுரை

     குற்சித்து --- (பசிக்கு இரையில்லேயே யென்று) அருவருப்புடன்,

     கொட்டு கொட்டு --- கொட்டு கொட்டு என்றும்,

     துக்க அச்சத்து --- பசியினால் துக்கமும் அச்சமுங் கொண்டு,

குக்குக்குக் குக் குக்குக்குக்குக் குக் குக்கு என மாறா --- குக் குக்குக் குக் குக்குக் குக் குக்குக் குக் குக்குக குக்குக்கு என்று ஓயாமல்,

     குட்சிக்கு பட்சிக்கைக்கு - வயிற்றின் இரைக்காக,

     கட்சத்தில் பட்சம் தத்த --- விலாப்புறத்தில் சிறகுபடும்படி,

     கொட்டி சுட்டி --- அடித்துக் கொண்டு குறிப்பாக,

     கொக்கரி --- கொக்கரிக்கின்ற,

     குக்குட தாரி --- சேவலைத் தரித்தவரே!

     சற்சித்து --- சத்தும் சித்தும் ஆனவராய்,

     தொல் புத்தி பட்ச அத்தர்க்கு --- பழமை ஞானம் அன்பு என்ற இவற்றை உடையவராய தந்தைக்கு,

     அட்சத்து சத்தத்தை ஒப்பித்த --- அட்சரத்துச் சத்தமாகிய தேவாரப் பாடல்களை சமர்ப்பித்த,

     சத்தி --- ஆற்றல் மிக்க,

     கொச்சை பதி வாழ்வே --- சீகாழியும் பதியில் வாழ்பவரே!

     தட்ச பற்று --- தட்சணம் பற்றுவதும்,

     கெர்பத்தில் செல் --- கருவிலே செலுத்துவதுமான,

     பற்றை செற்றிட்டு --- பற்றுக்களை ஒழித்து,

     உச்சம் --- உயர்ந்துள்ள,

     சற்ப பொற்றைக்கு உள் --- நாகமலையில் வாழ்கின்ற,

     சொக்க --- அழகிய,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     பொன் சித்ர பச்சை பட்டு கச்சு அணிவித்து --- அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய இரவிக்கையை அணிவித்து,

     கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப --- கட்டித் தாமரைப் பூவுக்கு ஒப்பாகும் என்று,

     கற்பித்து இளைஞோர்கள் --- கற்பனைக் கூறி இளைஞர்கள்,

     புள்பட்டு செப்பத்து --- பறவை வலையில் சிக்கியதுபோல் (வேசையர் வலையிற் சிக்கி)

     பல் கொத்தப் பெற்று ---  பல்லால் கொத்தப் பெற்று,

     பொன் சித்த --- பொன்னை அடைவதற்கு,

     திட்ப --- தெளிவாகவும்,

     பொற்பில் --- அழகாகவும்,

     பேசி --- பேசி,

      பெற்ற --- பொன்னைப் பெறுகின்ற,

     உக்ர சக்ர தன மானார் --- கொடிய சக்கரம் போல் வட்டவடிவமான தனங்களையுடைய பொது மாதர்களின்,

     கல் சித்த --- கல்லைப் போல் கடினமான நெஞ்சமாகிய,

     சத்த பொய் பித்தத்தில் புக்கு --- சுத்தப் பொய்யான பைத்தியத்துக்குள் புகுந்து,

     இட்ட பட்டு --- அதில் அதிக விருப்பம் வைத்து,

     கை குத்து இட்டு இட்டு --- தன்னைப்போல் அவ்வேசையரிடம் வரும் காமுகர்களுடன் கைக்குத்துச் சண்டையும், போட்டு,

     சுற்றி திரியாமல் --- அங்கு இங்குஞ்சுற்றி அலையாமல்,

     கற்று உற்று --- ஞான நூலைக் கற்று உம்மையுடைந்து,

     சித்தி கைக்கு சித்திப்ப --- சித்தியானது கைக்கூடுவதற்கு,

     பட்சத்தில் --- அன்புடன்,

     சொல் கற்பித்து --- நல்ல சொற்களைக் கற்பித்தும்,

     ஒப்பித்து --- அவற்றை உமது திருவடிக்கே ஒப்புவிக்குமாறும்,

     கொற்ற கழல் தாராய் --- உமது வீரக்கழல் அணிந்த திருவடியை அடியேனுக்குக் தந்தருள்வீர்.


பொழிப்புரை

         பசிக்கு இரையில்லையே என்று அருவருப்புடன் கொட்டுக் கொட்டு என்னும் பசியால், துக்கமும் அச்சமுங்கொண்டு, குக்குக்குக் குக்குக்குக் குக்குக்குக் குக்குக் என்று ஓயாமல், வயிற்றின் இரைக்காக விலாப்புறத்துப் பக்கங்களில் படும்படி இறகை யடித்துக் குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைத் தரித்தவரே!

     சத்தாய் சித்தாய் பழையராய் ஞானியாய் அன்புடைய தந்தையாராகிய சிவபெருமானுக்கு அட்சரத்து ஒலியாகிய தேவாரப் பாடல்களைச் சமர்ப்பித்த, ஆற்றலையுடைய சீகாழிச் செல்வமே!

     உடனே பற்றிக் கொள்வதும் கருவிலேயே பற்றுவதுமாகிய பற்றுக்களை ஒழித்து, உயர்ந்த நாகமலையின் எழுந்தருளியுள்ள அழகிய பெருமிதமுடையவரே!

         அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய இரவிக்கையை அணிவித்து, கட்டித்தாமரைப் பூவுக்கு ஒப்பாகும் என்று கற்பனை கூறி இளைஞர்கள், பறவை வலையில் சிக்கியது போல், அவ்வேசையரது வலையில் சிக்கி பல்லால் கொத்தப் பெற்று, பொன்னை அடைவதற்கு வேண்டு தெளிவாகவும் அழகாகவும் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம்போல் வட்டவடிவான கொங்கைகளையுடைய மாதர்களின், கல்லைப் போன்ற கடினமான நெஞ்சமாகிய சுத்தப் பொய்யான பைத்தியத்துக்குள் புகுந்த, அதில் அதிக விருப்பத்தை வைத்து, தன்னைப்போல் அவ்வேசையரிடம் வரும், பிற காமுகர்களுடன் கைக் குத்துச் சண்டையிட்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து அலையாமல்,

     ஞான நூல்களை ஓதி உம்மை அடைந்து, நல்ல சித்தி கைகூடுமாறு கற்பித்தும், அச்சொற்களை உமக்கே ஒப்பித்தும் உய்ய உமது வீரக்கழலணிந்த திருவடிகளை தந்தருளுவீர்.


விரிவுரை

இத்திருப்புகழில் முதல் மூன்று அடிகளில் விலைமகளிர் மாய வலையில் வீழ்ந்த இளைஞர்களின் பரிதாப நிலையைக் கூறுகின்றார்.

கற்றுற்று ---

கற்று உற்று. ஞான நூல்களைக் கற்றும், கற்றதன் பயனாக அப்பரமபதியை உற்றும்.

சித்தி கைக்குச் சித்திப்ப ---

அஷ்டமா சித்திகளும் கைக்குள் சித்திக்க அருளுவான் முருகன்.

சொல்கற்பித்து ஒப்பித்து ---

உயர்ந்த சொற்களைக் கற்பிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்.

அரிய பதத்தினின் அருவி இருப்பிடம்
   அமையும் எனக்கிடம் உனது பதச் சரண்”     --- (குருவியென) திருப்புகழ்.

குற்சித்து ---

குற்சிதம்-அருவருப்பு. சேவல் பசிக்கு இரையில்லையே என்று அருவருப்புடன் கொக்கரிக்கின்றது.

கொட்டுக் கொட்டு ---

கொட்டுக்கொட்டு என்று பசித்திருக்கின்றது.

துக்கச் சத்து ---

துக்க -அச்சம். துன்பமும் திகிலும் அடைகின்றது.

குக்குக்குக்குக்குக்கு ---

பசியின் காரணமாகக் கோழி குக்குக்வென்று ஒலிக்கின்றது.

பசித்திரைக் கிசை கூவும் பெடைத்திரட்
   களித்த குக்குடக் கொடிக் கரத்த”            --- (கடற்செகத் தடக்கி) திருப்புகழ்.

சிறகையடித்துக் கொக்கறுகோ என்று கோழி கொக்கரிக்கும்.

சற்சித்து தொற்புத்திப் பட்சத்தர்க்கு ---

சத்து-உண்மை. சித்து-அறிவு. சொல்-பழமை. புத்தி-ஞானம். பட்சம்-அன்பு.

இவற்றையுடையவர் சிவபெருமான்.

அட்சத்துச் சத்தத்தை ---

"அட்சரத்து" என்ற சொல் "அட்சத்து" என வந்தது.

இனிய எழுத்துக்களால் ஆன தேவாரப் பாடலை சம்பந்தர் சிவபிரானுக்கு ஒப்பித்ததை இங்கே குறிப்பிடுகின்றார்.

தட்சப் பற்று ---

"தட்சணம்" என்ற சொல், "தட்சம்" என வந்தது. பற்று தட்சணமே வந்து பற்றும் திறனுடையது.

கெர்ப்பத்தில் செல் ---

பற்று கருவிலேயே சென்று பற்றும். பற்று அற்றால் பிறப்பறும். (அருணகிரியாருக்கு) அப்பற்றை அகற்றிய ஆறுமுகப் பெருமான் நாககிரியில் எழுந்தருளியிருக்கின்றார்.


கருத்துரை

         நாககிரி முருகா! உம்மைப் பாட உமது திருவடிகளைத் தந்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...