புகழிமலை - 0413. மருவுமலர் வாசம்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மருவுமலர் வாசம் (புகழிமலை)

முருகா!
மூவாசையில் முழுகாமல், உனது கருணையில் முழுக அருள்


தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான


மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
     வரிவிழியி னாலு ...... மதியாலும்

மலையினிக ரான இளமுலைக ளாலு
     மயல்கள்தரு மாதர் ...... வகையாலும்

கருதுபொரு ளாலு மனைவிமக வான
     கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ

கமலபத வாழ்வு தரமயிலின் மீது
     கருணையுட னேமுன் ...... வரவேணும்

அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
     அமரர்முநி ராசர் ...... தொழுவோனே

அகிலதல மோது நதிமருவு சோலை
     அழகுபெறு போக ...... வளநாடா

பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
     புனல்சுவற வேலை ...... யெறிவோனே

புகலரிய தான தமிழ்முநிவ ரோது
     புகழிமலை மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மருவுமலர் வாசம் உறு குழலினாலும்,
     வரி விழியினாலும், ...... மதியாலும்,

மலையின் நிகர் ஆன இள முலைகளாலும்,
     மயல்கள் தரு மாதர் ...... வகையாலும்,

கருது பொருளாலும், மனைவி மகவு ஆன
     கடல் அலையில் மூழ்கி ...... அலைவேனோ?

கமல பத வாழ்வு தர, மயிலின் மீது
     கருணையுடனே முன் ...... வரவேணும்.

அருமறைகள் ஓது பிரமன் முதல் மாலும்,
     அமரர் முநி ராசர் ...... தொழுவோனே!

அகிலதலம் ஓது நதி மருவு சோலை
     அழகுபெறு போக ...... வளநாடா!

பொருத வரு சூரர் கிரி உருவ, வாரி
     புனல்சுவற, வேலை ...... எறிவோனே!

புகல அரியது ஆன தமிழ் முநிவர் ஓது
     புகழிமலை மேவு ...... பெருமாளே.


பதவுரை


     அருமறைகள் ஓதும் --- அரிய வேதங்களை ஓதுகின்ற,

     பிரமன் முதல் மாலும் --- பிரமன் முதலாகத் திருமாலும்,

     அமரர் --- தேவர்களும்,

     முநி ராஜர் --- முனி வேந்தர்களும்,

     தொழுவோனே --- தொழப்படுந் தலைவரே!

     அகில தலம் ஓதும் --- எல்லாத் தலங்களில் உள்ளாரும் புகழ்கின்ற,

     நதி மருவு சோலை --- நதி சேர்ந்து சோலைகளால்,

     அழகு பெறு போக --- அழகு பெற்ற செல்வம் மிகுந்த,

     வள நாடா --- வளங்கள் கூடிய நாட்டினரே!

     பொருத வரு சூரர் --- போர் செய்ய வந்த சூரர்களும்,

     கிரி உருவ --- கிரவுஞ்ச மலையும் உருவவும்,

     வாரி புனல் சுவற --- கடலில் நீர் வற்றவும்,

     வேலை எறிவோனே --- வேலை விட்டு அருளியவரே!

     புகல அரியது ஆன --- சொல்லுதற்கு அரிதான,

     தமிழ் முனிவர் ஓது --- அகத்திய முனிவர் புகழ்கின்ற

     புகழி மலை மேவு --- புகழி மலையில் விற்றிருக்கும்

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தரே!

     மருவு மலர் வாசம் உறு --- பொருந்திய மலரின் நறுமணம் வாய்ந்த,

     குழலினாலும் --- கூந்தலாலும்,

     வரி விழியினாலும் --- வரிகள் படர்ந்த கண்களினாலும்,

     மதியாலும் --- சந்திரனைப் போன்ற முகத்தாலும்,

     மலையின் நிகர் ஆன --- மலைக்கு ஒப்பான,

     இள முலைகளாலும் --- இளம் முலைகளினாலும்,

     மயல்கள் தரும் --- மயக்கங்களைத் தருகின்ற,

     மாதர் வகையாலும் --- பெண்களின் இனத்தாலும்,

     கருது பொருளாலும் --- நமக்கே உரியது என்று எண்ணப்படுகின்ற பொருளாலும்,

     மனைவி மகவு ஆன --- மனைவி மக்கள் என்ற,

     கடல் அலையில் மூழ்கி --- கடல்அலையில் அடியேன் மூழ்கி,

     அலைவேனோ --- அலையலாமோ?

     கமல பத வாழ்வு தர --- தாமரை மலர் போன்ற உமது திருவடியையுடைய வாழ்வைத் தந்தருள,

     மயிலின் மீது --- மயில் வாகனத்தின் மீது,

     கருணை உடனே முன் வரவேணும் --- கருணையோடு அடியேன் முன் வந்தருள வேண்டும்.


பொழிப்புரை


அரிய வேதங்களை ஓதகின்ற பிரமதேவன், திருமால், தேவர்கள், முனிவர்கள், ஆகிய இவர்கள் வணங்கும் பெருமானே!

எல்லாத் தலங்களும் புகழ்கின்ற நதி சூழ்ந்து சோலைகளால் அழகு பெற்ற செல்வங் கொழிக்கும் வளநாட்டின் தலைவரே!

 போர் செய்ய வந்த சூரர்களும், கிரவுஞ்சமலையும், ஊடுருவவும், கடலில் நீர் வற்றவும் வேலைச் செலுத்தியவரே!

 சொல்லுதற்கு அரிதான தமிழ் முனிவராகிய அகத்தியர் புகழ்கின்ற புகழிமலையில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

பொருந்திய மலரின் நறுமணம் வாய்ந்த கூந்தலாலும், வரிகள் கொண்ட கண்களினாலும், சந்திரனையொத்த முகத்தாலும், மலைக்கு ஒப்பான இளந்தனங்களாலும், மயக்கங்களைத் தருகின்ற பெண்களின் இனத்தாலும், தனக்கேயுரியது என்று எண்ணுகின்ற பொருள், மனைவி மக்கள் என்கின்ற கடல் அலையில் மூழ்கி, அடியேன் அலையலாமோ? தாமரையன்ன உமது திருவடிகளைச் சேரும் வாழ்வை அடியேனுக்குத் தந்தருளும் பொருட்டு, மயிலின் மீது கருணையுடன், அடியேன்முன் வந்தருளவேண்டும்.


விரிவுரை

மாதர் வகையாலும் ---

மனிதர்களை மயக்கி அறிவை அழிக்கும் பொருள்கள் பல. அவற்றுள் ஒன்று பொது மாதர் உறவு.

கருது பொருளாலும் ---

நமக்கே உரியது என்று அழுத்தமாக எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளாசை அபினி போல் மயக்கத்தைத் தரும்.

மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி ---

மனைவி மக்கள் என்ற ஆசைக் கடலில் முழுகி மாந்தர் அலைகின்றார்கள்.

நம்பொருள் நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து,நீர்
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம்,
உம்பர் நாதன், உத்தமன், ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன் மேவு நல்நகர் நலங்கொள் காழி சேர்மினே.  --- திருஞானசம்பந்தர்.

மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுஉள சுற்றம் என்னும்
வினை உளே விழுந்து அழுந்தி, வேதனைக்க் இடம் ஆகாதே,
கனையும் மா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில், உய்யலாம் நெஞ்சினீரே.     --- அப்பர்.

மணம் என மகிழ்வர், முன்னே,
     மக்கள் தாய் தந்தை சுற்றம்,
பிணம் எனச் சுடுவர், பேர்த்தே;
     பிறவியை வேண்டேன், நாயேன்;
பணை இடைச் சோலை தோறும்
     பைம் பொழில் வளாகத்து எங்கள்
அணை வினைக் கொடுக்கும் ஆரூர்
     அப்பனே! அஞ்சினேனே .                                 --- சுந்தரர்.      
    
தாழ்வு எனும் தன்மை விட்டு,
     தனத்தையே மனத்தில் வைத்து,
வாழ்வதே கருதி, தொண்டர்
     மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்;
ஆழ் குழிப்பட்ட போது,
     அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்;
யாழ் முயன்று இருக்கும் ஆரூர்
     அப்பனே! அஞ்சினேனே .                                  --- சுந்தரர்.

பொங்கு ஆர வேலையில் வேலை விட்டோன் அருள்போல் உதவ,
எங்கு ஆயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது, இடாமல் வைத்த
வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும்
சங்காதமோ? கெடுவீர், உயிர்போம் அத் தனி வழிக்கே?     ---  கந்தர் அலங்காரம்.

புகழி மலை ---

புகழிமலை கரூரூக்கு அடுத்த புகலூர் புகைவண்டி நிலையத்துக் 2 கல் தொலைவில் உள்ள திருத்தலம்.

கருத்துரை

புகழிமலை முருகா! உன் பாதமலர் தந்து வாழ்வு தர மயிலின்மீது வந்தருள்வீர்.No comments:

Post a Comment

எல்லாம் தெரியும் என்பது புல்லறிவு

    எல்லாம் தெரியும் என்பது புல்லறிவு ----        திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். ப...