அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அமுதம் ஊறுசொல்
(திருவருணை)
திருவருணை முருகா!
பொதுமாதர் மயல் அற அருள்
தனன
தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
அமுத
மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ ......
னுரைகூறும்
அசடு
மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி .....னருள்தாராய்
குமரி
காளிவ ராகிம கேசுரி
கவுரி மோடிசு ராரிநி ராபரி
கொடிய சூலிசு டாரணி யாமளி ......
மகமாயி
குறளு
ரூபமு ராரிச கோதரி
யுலக தாரிஉதாரிப ராபரி
குருப ராரிவி காரிந மோகரி ......
அபிராமி
சமர
நீலிபு ராரித னாயகி
மலைகு மாரிக பாலிந னாரணி
சலில மாரிசி வாயம னோகரி ......
பரையோகி
சவுரி
வீரிமு நீர்விட போஜனி
திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
சகல வேதமு மாயின தாயுமை ......
யருள்பாலா
திமித
மாடுசு ராரிநி சாசரர்
முடிக டோறுக டாவியி டேயொரு
சிலப சாசுகு ணாலிநி ணாமுண ......
விடும்வேலா
திருவு
லாவுசொ ணேசர ணாமலை
முகிலு லாவுவி மானந வோநிலை
சிகர மீதுகு லாவியு லாவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அமுதம்
ஊறு சொல் ஆகிய தோகையர்,
பொருள் உளாரை என்ஆணை உன்ஆணை, என்
அருகு வீடு, இது தான், அதில் வாரும் என்
......உரைகூறும்,
அசடு
மாதர், குவாது சொல் கேடிகள்,
தெருவின் மீது குலாவி உலாவிகள்,
அவர்கள் மாயை படாமல், கெடாமல் நின் ..... அருள்தாராய்.
குமரி, காளி, வராகி, மகேசுரி,
கவுரி, மோடி, சுராரி, நிராபரி,
கொடிய சூலி, சுடாரணி, யாமளி, ...... மகமாயி,
குறள்
உரூப முராரி சகோதரி,
உலக தாரி, உதாரி, பராபரி,
குரு பராரி, விகாரி, நமோ கரி, ...... அபிராமி,
சமர
நீலி, புராரி தன் நாயகி,
மலை குமாரி, கபாலி, நன் ஆரணி,
சலில மாரி, சிவாய மனோகரி, ...... பரையோகி,
சவுரி, வீரி, முநீர் விட போஜனி,
திகிரி மேவு கையாளி, செயாள், ஒரு
சகல வேதமும் ஆயின தாய்உமை ...... அருள்பாலா!
திமிதம்
ஆடு சுராரி, நிசாசரர்
முடிகள் தோறு கடாவி இடே ஒரு
சில பசாசு குணாலி நிணாம் உண ......
விடும்வேலா!
திரு
உலாவு சொணேசர் அணாமலை,
முகில் உலாவு விமான நவோநிலை
சிகர மீது குலாவி உலாவிய ......
பெருமாளே.
பதவுரை
குமரி --- இளமை உடையவளும்,
காளி --- தேவியும்,
வராகி --- வராகியாக விளங்குபவளும்,
மகேசுரி --- பெரிய செல்வத்தை
உடையவளும்,
கவுரி --- பொன் நிறம் உடையவளும்,
மோடி --- பகைவருக்கு அச்சத்தைச்
செய்பவளும்,
சுராரி நிராபரி --- தேவர்களுக்குப்
பகைவர்களாகிய அசுரர்களை முதன்மை இழக்கச் செய்பவளும்,
கொடிய சூலி --- உக்கிரமான
சூலாயுதத்தை ஏந்தியவளும்,
சுடாரணி --- மயானத்தில் இருப்பவளும்,
யாமளி --- பச்சை நிறம் படைத்தவளும்,
மகமாயி --- மகாமாயியும்,
குறள் உரூப முராரி சகோதரி --- வாமன
வடிவம் கொண்டவரும் முரன் என்ற அரக்கனைக் கொன்றவரும் ஆகிய திருமாலின் சகோதரியும்,
உலக தாரி --- உலகங்களைத் தாங்கிக்
காப்பவளும்,
உதாரி --- தயாள குணம் உடையவளும்,
பராபரி --- முதன்மை பூண்டவளும்,
குரு பராரி --- குருபரனாம்
சிவபெருமானுக்குக் கண் போன்றவளும்,
விகாரி --- வேறுபாடுகளைப் பூண
வல்லவளும்,
நமோ கரி --- வணங்கப்படுபவளும்,
அபிராமி --- பேரழகு உள்ளவளும்,
சமர நீலி --- போரில் வல்ல
துர்க்கையும்,
புராரி தன் நாயகி --- திரிபுரத்தை எரித்தவருடைய
பத்தினியும்,
மலை குமாரி --- இமயமலையின்
புதல்வியும்,
கபாலி --- கபாலத்தை ஏந்தியவளும்,
நல் நாரணி --- நல்ல நாரணியும்,
சலில மாரி --- நீர் பொழியும் மழைத்
தேவியும்,
சிவாய மனோகரி --- சிவ சம்பந்தப்பட்டு
விரும்பத்தக்கவளும்,
பரை யோகி ---- பராசத்தியும் யோகியும்
ஆனவளும்,
சவுரி --- சௌரியம் உடையவளும்,
வீரி --- வீரத்தைப் படைத்தவளும்,
முநீர் விட போஜனி --- கடலில் விளைந்த
நஞ்சை உண்டவளும்,
திகிரி மேவு கையாளி --- சக்கரத்தை
ஏந்திய திருக்கரத்தை உடையவளும்,
செயாள் --- செம்மை உடையவளும்,
ஒரு சகல வேதமும் ஆயின தாய் ---
ஒப்பற்ற எல்லா வேதங்களுமாய் நிறைந்த அன்னையும் ஆகிய,
உமை அருள்பாலா --- உமாதேவி அருளிய
குழந்தையே!
திமிதம் ஆடு --- பேரொலி செய்து
போராடியவர்களும்,
சுர அரி --- தேவர்களை அழிப்பவர்களும்,
நிசாசரர் --- இரவில் உலாவுபவர்களும்
ஆகிய அசுரர்களின்,
முடிகள் தோறும் --- தலைகள் தோறும்,
கடாவி இடு --- ஆயுதங்களைச் செலுத்திப்
படுமாறு செய்து,
ஏய் --- அங்கு பொருந்தியிருந்த,
ஒரு சில பசாசு --- ஒரு சில பேய்கள்,
குணாலி --- குணலை என்ற ஒருவகைக்
கூத்தாடி,
நிணாம் உண விடும் வேலா --- மாமிசங்களை
உண்ணும்படி வேலாயுதத்தை விட்டவரே!
திரு உலாவு சொணேசர்
அணாமலை ---
இலட்சுமிகரம் பொருந்திய சோணேசரது திருவண்ணாமலையில்,
முகில் உலாவு விமானம் --- மேகங்கள்
உலாவுகின்ற கோயிலில்,
நவோ நிலை சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே ---
ஒன்பது
நிலைகளை உடைய கோபுரத்தின் மீது மகிழ்ச்சியுடன் உலாவிய பெருமையில் சிறந்தவரே!
அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர் ---
அமுதம் ஊறுவது போன்ற இனிய சொற்களை உடைய மயில் போன்ற மாதர்கள்,
பொருள் உளாரை --- செல்வம்
படைத்தவர்களை,
என் ஆணை உன் ஆணை --- என்மேல் ஆணை
என்றும் உன்மேல் ஆணை என்றும் கூறி,
என் அருகு வீடு இது தான் --- என் வீடு
அருகில் உள்ள இதுதான்,
அதில் வாரும் --- அங்கே வாரும்,
என் உரை கூறும் --- என்று
உரையாடுகின்ற,
அசடு மாதர் --- மூடப் பெண்கள்,
குவாது சொல் கேடிகள் --- குதர்க்கம்
பேசுகின்ற கேடுறுவோர்,
தெருவின் மீது குலாவி உலாவிகள் ---
நடுத் தெருவில் குலாவி உலாவுபவர்கள்,
அவர்கள் மாயை படாமல் கெடாமல் ---
இத்தகைய பொது மாதர்களின் மாயை என் மீது தாக்காமலும், அடியேன் கெட்டுப்
போகாமல் இருக்கவும்,
நின் அருள் தாராய் --- தேவரீருடைய
திருவருளைத் தந்தருளுவீராக.
பொழிப்புரை
இளமை உடையவளும், தேவியும், வராகியாக விளங்குபவளும், பெரிய செல்வத்தை உடையவளும், பொன் நிறம் உடையவளும், பகைவருக்கு அச்சத்தைச் செய்பவளும், தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்களை
முதன்மை இழக்கச் செய்பவளும், உக்கிரமான
சூலாயுதத்தை ஏந்தியவளும், மயானத்தில்
இருப்பவளும், பச்சை நிறம்
படைத்தவளும், மகாமாயியும், வாமன வடிவம் கொண்டவரும் முரன் என்ற
அரக்கனைக் கொன்றவரும் ஆகிய திருமாலின் சகோதரியும், உலகங்களைத் தாங்கிக் காப்பவளும், தயாள குணம் உடையவளும், முதன்மை பூண்டவளும், குருபரனாம் சிவபெருமானுக்குக் கண்
போன்றவளும், வேறுபாடுகளைப் பூண
வல்லவளும், வணங்கப்படுபவளும், பேரழகு உள்ளவளும், போரில் வல்ல துர்க்கையும், திரிபுரத்தை எரித்தவருடைய பத்தினியும், இமயமலையின் புதல்வியும், கபாலத்தை ஏந்தியவளும், நல்ல
நாரணியும், நீர் பொழியும் மழைத்
தேவியும், சிவ சம்பந்தப்பட்டு
விரும்பத்தக்கவளும், பராசத்தியும்
யோகியும் ஆனவளும், சௌரியம் உடையவளும், வீரத்தைப் படைத்தவளும், கடலில் விளைந்த நஞ்சை உண்டவளும், சக்கரத்தை ஏந்திய திருக்கரத்தை
உடையவளும், செம்மை உடையவளும், ஒப்பற்ற எல்லா வேதங்களுமாய் நிறைந்த
அன்னையும் ஆகிய, உமாதேவி அருளிய குழந்தையே!
பேரொலி செய்து போராடியவர்களும், தேவர்களை அழிப்பவர்களும், இரவில் உலாவுபவர்களும் ஆகிய அசுரர்களின், தலைகள் தோறும், ஆயுதங்களைச் செலுத்திப் படுமாறு செய்து, அங்கு பொருந்தியிருந்த, ஒரு சில பேய்கள், குணலை என்ற ஒருவகைக் கூத்தாடி, மாமிசங்களை உண்ணும்படி வேலாயுதத்தை
விட்டவரே!
இலட்சுமிகரம் பொருந்திய சோணேசரது
திருவண்ணாமலையில், மேகங்கள் உலாவுகின்ற
கோயிலில், ஒன்பது நிலைகளை உடைய
கோபுரத்தின் மீது மகிழ்ச்சியுடன் உலாவிய பெருமையில் சிறந்தவரே!
அமுதம் ஊறுவது போன்ற இனிய சொற்களை உடைய
மயில் போன்ற மாதர்கள், செல்வம் படைத்தவர்களை, "என்மேல்
ஆணை" என்றும் "உன்மேல் ஆணை" என்றும் கூறி, "என் என் வீடு அருகில்
உள்ள இதுதான், அங்கே வாரும்", என்று உரையாடுகின்ற, மூடப் பெண்கள், குதர்க்கம் பேசுகின்ற கேடுறுவோர், நடுத் தெருவில் குலாவி உலாவுபவர்கள்
ஆகிய பொது மாதர்களின் மாயை என் மீது தாக்காமலும், அடியேன் கெட்டுப்
போகாமல் இருக்கவும், தேவரீருடைய
திருவருளைத் தந்தருளுவீராக.
கருத்துரை
அருணைக் கோபுரத்து உச்சியில் உலாவிய
முருகா, மாதர் மயல் அற அருள்
செய்.
No comments:
Post a Comment