இவர்க்கு இவர் தெய்வம்

8. இவர்க்கு இவர் தெய்வம்

ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்க ளேதெய்வம்;
     அன்பான மாணாக்கருக்கு
அரியகுரு வேதெய்வம்; அஞ்சினோர்க்கு ஆபத்து
     அகற்றினோ னேதெய்வமாம்;

காதல்உறு கற்புடைய மங்கையர் தமக்கு எலாம்
     கணவனே மிக்கதெய்வம்;
காசினியில் மன்னுயிர் தமக்கு எலாம் குடிமரபு
     காக்கும்மன் னவர்தெய்வமாம்;

ஓதஅரியபிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம்;
     உயர்சாதி மாந்தர் யார்க்கும்
உறவின்முறை யார்தெய்வம்; விசுவாசம் உள்ள பேர்க்கு
     உற்றசிவ பக்தர்தெய்வம்;

மா தயையி னால்சூர் தடிந்து அருள் புரிந்ததால்
     வானவர்க் குத்தெய்வம் நீ.
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

          இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் --- பசியினால் வந்து இரப்பவர்க்கு உணவு கொடுத்தவர்களே தெய்வம்,

     அன்பான மாணாக்கருக்கு அரிய குருவே தெய்வம் --- அன்புடைய மாணவர்க்கு அருமையான குருநாதரே தெய்வம்,

     அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வம் ஆம் --- அச்சம் உற்றவர்கட்கு அந்த அச்சத்தை அகற்றியவனே தெய்வம் ஆவான்,

     காதல் உறு கற்பு உடைய மங்கையர் தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் --- அன்பும் கற்பும் உடைய மாதர்கள் எல்லோருக்கும் அவரவர்களுடைய கணவரே சிறந்த தெய்வம்,

     காசினியில் மன் உயிர் தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வம் ஆம் --- உலகத்தில்  உள்ள நிலையான உயிர்களுக்கு எல்லாம் அவர்களுடைய குடியை வழிவழியாகக் காக்கும் மன்னவர்கள் தெய்வம்,

     ஓத அரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் --- சொல்லுதற்கு முடியாத சிறப்பினை உடைய சிறுவர்களுக்குத் தாயும் தந்தையும் தெய்வம்,

     உயர் சாதி மாந்தர் யார்க்கும் உறவின் முறையார் தெய்வம் --- உயர்குடி மக்கள் எல்லோருக்கும் அவருடைய உறவினர்கள் தெய்வம்,

     விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் --- சிவபெருமானிடம் அன்பு உடைய அடியவர்களுக்கு சிவன் அடியவர்கள் தெய்வம்,

     மா தயையினால் சூர்தடிந்து அருள் புரிந்ததால் வானவர்க்கு நீ தெய்வம் --- வானவரிடம் கொண்டிருந்த பெருங்கருணையினால் சூரபதுமனைப் பிளந்து அருள் செய்ததால் வானவர்களுக்கு நீயே தெய்வம்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...