அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குழவியுமாய் மோக
(திருவருணை)
திருவருணை முருகா!
அழியாத முத்தி வீட்டினை
இனியாவது அடியேன் அடைவேனோ?
தனதன
தானான தானன தனதன தானான தானன
தனதன தானான தானன ...... தனதான
குழவியு
மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக்
குனிகொடு
கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட
விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப்
பழயச
டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர
பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப்
பலபல
வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக
பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ
எழுகடல்
தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன்
இருளறு
பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய
அழகிய
மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி
அமரினை
மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்
அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குழவியுமாய், மோக மோகித குமரனுமாய், வீடு காதலி
குலவனுமாய், நாடு காடொடு ...... தடுமாறி,
குனிகொடு
கூன்இடு மா கிடு கிழவனுமாய், ஆவி போய்விட,
விறகு உடனே தூளி ஆவதும் ...... அறியாதாய்ப்
பழய
சடாதாரம் மெல் நிகழ் கழி உடல் காணா நிராதர
பரிவுஇலி வான் நாலை நாள்தொறும் ......
மடைமாறி,
பல
பல ஆம் யோக சாதக உடல்கொடு, மாயாத போதக
பதி, அழியா வீடு போய் இனி ...... அடைவேனோ?
எழுகடல்
தீ மூள, மேருவும் இடிபட, வேதாவும் வேதமும்
இரவியும் வாய்பாறி ஓடிட, ...... முதுசேடன்
இருள்
அறு பாதாள லோகமும், இமையமும் நீறு ஆக, வாள்கிரி
இரு பிளவாய் வீழ, மாதிர ...... மலை சாய,
அழகிய
மாபாக சாதனன் அமரரும் ஊர்பூத, மாறுசெய்
அவுணர் தம் மாசேனை தூள்எழ ...... விளையாடி,
அமரினை
மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா! உயர்
அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.
பதவுரை
எழுகடல் தீ மூள --- ஏழு கடல்களும் தீ மூண்டு எரியவும்,
மேருவும் இடிபட --- மேரு மலையும் பொடி படவும்,
வேதாவும் வேதமும் இரவியும் வாய்பாறி ஓடிட --– பிரமனும், வேதங்களும், சூரியனும் இடம் விட்டுப் பெயர்ந்து
ஓடவும்,
முது சேடன் இருள் அறு
பாதாள லோகமும் இமையமும் நீறு ஆக --- பழமையான ஆதிசேடன்
வாழும் இருள் இல்லாத பாதாள லோகமும்,
இமய
மலையும் பொடியாகவும்,
வாள்கிரி இருபிள வாய்வீழ --- சக்கரவாளகிரி இரண்டாகப் பிளவுபட்டு
வீழவும்,
மாதிர மலை சாய --– திசைகளில் உள்ள
எட்டு மலைகளும் சாய்ந்து விழவும்,
அழகிய மா பாக சாதனன் --- அழகுள்ள சிறந்த
இந்திரனும்
அமரரும் ஊர் பூத --- தேவர்களும் தங்கள் நகரில் குடி புகுதவும்,
மாறுசெய் அவுணர் தம் மாசேனை தூள் எழ விளையாடி --- நீதிக்கு
மாறானதையே செய்கின்ற அசுரர்களுடைய பெரிய சேனை தூள் படவும், திருவிளைாடல் புரிந்து,
அமரினை மேவாத சூரரை
அமர் செயும் வேலாயுதா --- அமைதியைப் பொருந்தாத சூரர்களுடன்
போர் புரிந்த வேலாயுதக் கடவுளே!
உயர் அருணையில்
வாழ்வாக மேவிய பெருமாளே --- உயர்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக
வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
குழவியுமாய் --- குழந்தையாய் இருந்து,
மோக மோகித குமரனுமாய் --- மோகத்தையே
விரும்பும் குமாரப் பருவத்தனாய்,
வீடு காதலி குலவனுமாய் --- வீடு மனைவி இவைகளுடன்
கூடிக் குலவுபவனாய்,
நாடு காடொடு தடுமாறி --- நாட்டிலும்
காட்டிலும் உழன்று தடுமாறுபவனாய்,
குனி கொடு கூன் நீடு
மா கிடு கிழவனுமாய் --- உடல் வளைந்து கூன் பெரிதாகிய கிழவனுமாய்,
ஆவி போய் விட --- உடலை விட்டு உயிர்
நீங்க,
விறகு உடனே தூளி ஆவதும் அறியாதாய் ---
உடல் விறகுடனே சாம்பல் பொடி ஆவதையும் அறிந்து தாவி,
பழய சடாதாரம் மேல்
நிகழ்
--- பழமையான ஆறு ஆதாரங்களின் மேல் காணக்கூடிய,
கழி உடல் காணா --- உடம்பு நீங்கிய நிலையை அடைந்து,
நிராதர --- சார்பு வேண்டாததும்,
பரிவு இலி --- துன்பம் இல்லாததும் ஆன
வான் நாலை நாள்தொறும் மடைமாறி ---
வானவெளியில் நின்று தினந்தோறும் வீணே கழியும் நாலங்குலப் பிராண வாயுவைக் கழியாது
திருப்பி,
பல பலவாம் யோக சாதக
உடல் கொடு ---
பலப்பல விதமான யோகப் பயிற்சிகள் செய்து, அழியாத
உடலைப் பெற்று,
மாயாத போதக பதி --- அழியாத அறிவு மயமான இறைவனுடைய
அழியா வீடு போய் இனி அடைவேனோ --- அழிவற்ற
முத்தி வீட்டைச் சென்று இனிமேலும் அடியேன் சேருவேனோ?
பொழிப்புரை
ஏழு கடல்களும் தீ மூண்டு எரியவும், மேரு மலையும் பொடி படவும், பிரமனும், வேதங்களும், சூரியனும் இடம் விட்டுப் பெயர்ந்து
ஓடவும், பழமையான ஆதிசேடன்
வாழும் இருள் இல்லாத பாதாள லோகமும்,
இமய
மலையும் பொடியாகவும், சக்கரவாளகிரி
இரண்டாகப் பிளவுபட்டு வீழவும், திசைகளில் உள்ள எட்டு
மலைகளும் சாய்ந்து விழவும், அழகுள்ள சிறந்த
இந்திரனும் தேவர்களும் தங்கள் நகரில் குடி புகுதவும், நீதிக்கு மாறானதையே செய்கின்ற
அசுரர்களுடைய பெரிய சேனை தூள் படவும், திருவிளைாடல்
புரிந்து, அமைதியைப் பொருந்தாத
சூரர்களுடன் போர் புரிந்த வேலாயுதக் கடவுளே!
உயர்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக
வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
குழந்தையாய் இருந்து, மோகத்தையே விரும்பும் குமாரப்
பருவத்தனாய், வீடு மனைவி இவைகளுடன் கூடிக்
குலவுபவனாய், நாட்டிலும்
காட்டிலும் உழன்று தடுமாறுபவனாய்,
உடல்
வளைந்து கூன் பெரிதாகிய கிழவனுமாய்,
உடலை
விட்டு உயிர் நீங்க, உடல் விறகுடனே
சாம்பல் பொடி ஆவதையும் அறிந்து தாவி, பழமையான
ஆறு ஆதாரங்களின் மேல் காணக்கூடிய,
உடம்பு
நீங்கிய நிலையை அடைந்து, சார்பு வேண்டாததும், துன்பம் இல்லாததும் ஆன வானவெளியில்
நின்று தினந்தோறும் வீணே கழியும் நாலங்குலப் பிராண வாயுவைக் கழியாது திருப்பி, பலப்பல விதமான யோகப் பயிற்சிகள் செய்து, அழியாத உடலைப் பெற்று, அழியாத அறிவு மயமான இறைவனுடைய அழிவற்ற
முத்தி வீட்டைச் சென்று இனிமேலும் அடியேன் சேருவேனோ?
விரிவுரை
குலவனும் ---
குலவன்
- மனைவி மக்களுடன் குலாவுபவன். அல்லது
நல்ல குலத்தினன் என்றும் பொருள் கொள்ளலாம்.
குலம்
இலாதானைக் குலவனே என்று... --- சுந்தரர்
தேவாரம்.
விறகுடனே
தூளி ஆவதும் அறியா ---
பாலும்
தேனும் பழமும் உண்டு வளர்த்த இவ்வுடம்பு முடிவில் விறகில் வெந்து சாம்பராகும்
தன்மை உடையது.
எத்துணைப்
பெரிய உடம்பாயினும் முடிசார்ந்த மன்னவன் உடம்பாயினும், முடிவில் பிடி சாம்பல் தான் ஆகும்.
முடிசார்ந்த
மன்னரும் மற்றும்உள்ளோரும் முடிவில்ஒரு
பிடிசாம்பராய்
வெந்து மண்ணாவதும் கண்டு, பின்னும் இந்த
படிசார்ந்த
வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின்அம்பலவர்
அடிசார்ந்து
நான் உய்யவேண்டும் என்றே அறிவார்இல்லையே. --- பட்டினத்தார்.
மாழ்கினரே
இவர் காலம் அறிந்து,
வரிசை
கெடாமல் எடும் எனஓடி
வந்து,
இள மைந்தர் குனிந்து சுமந்து,
கடுகி
நடந்து, சுடலை அடைந்து,
மானிட
வாழ்வு என வாழ்வு என நொந்து,
விறகு
இடமூடி, அழல் கொடுபோட,
வெந்து
விழுந்து, முறிந்து, நிணங்கள்
உருகி,
எலும்பு கருகி அடங்கி,
ஓர்
பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும்
அடியேனை இனி ஆளுமே… --- பட்டினத்தார்.
பொருபிடியும்
களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடிகாவல! சண்முகாவா! எனச் சாற்றி நித்தம்
இரு,பிடிசோறு கொண்டுஇட்டு உண்டு, இரு வினையோம் இறந்தால்.
ஒருபிடி
சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே. --- கந்தர் அலங்காரம்.
தாய் ---
"தாவி"
என்ற சொல் "தாய்" என வந்தது.
இந்த பொய்மையில் இருந்து தாவி அப்பால் போகவேண்டும்.
பழய
சடாதார மேல் நிகழ் ---
மூலாதாரம், மணிபூரகம், சுவாதிட்டானம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்கள்
பழமையானவை. இவைகளை யோக நெறியால் கடந்து, பிரமரந்திரம் தாண்டி, மேலைப் பெருவெளியில் சென்று நிற்றல்
வேண்டும்.
நீடார்
சடாதரத்தின் மீதே பராபரத்தை
நீகாண்
எனா அனைச்சொல் அருள்வாயே. --- (நாவேறு) திருப்புகழ்.
மூலாதாரம் - இது குதத்திற்கும் குறிக்கும் நடுவில் இருப்பது, முக்கோண வடிவுள்
நான்கு இதழ்க் கமலம், மாணிக்க நிறமாய்
உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற ஓரெழுத்து, இவற்றைப் பெற்று
விளங்குவது.
ஆதார
மூலத்து அடியில் கணபதியைப்
பாதார
விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்.
--- பத்திரகிரியார்
மெய்ஞ்ஞானப் புலம்பல்.
முக்கோண
வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின் திருவடித்
தாமரைகளைப் பணிவது எப்போது.
மூலத்து
உதித்து எழுந்த முக்கோணச் சதுரத்துள்
வாலைதனைப்
போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே. ---
பட்டினத்தார்
பூரணம்.
எங்கும்
நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த
திரிகோண வடிவமாய் உள்ள யந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும் வாலாம்பிகைத் தாயை
வணங்காமல் அறிவிழந்தேன்.
சுவாதிட்டானம் - இது குறிக்கும்
நாபிக்கும் நடுவில் இருப்பது, நால்சதுர வடிவுள் ஆறு இதழ்க் கமலம், செம்பொன் நிறமாய்
உள்ளது, பிரமன் - சரசுவதி, 'ந'
கரம்
என்ற எழுத்து, இவற்றைப் பெற்று
விளங்குவது.
மண்வளைந்த
நல்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்
கண்வளைந்து
பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்.
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
நாற்கோண
வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவை, உள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து
இருப்பது எப்போது.
உந்திக்
கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக்
காணாமல் தட்டழிந்தேன் பூரணமே. --- பட்டினத்தார் பூரணம்.
எங்கும்
நிறைந்த பொருளே, சுவாதிட்டானத்தில், அதாவது உந்தியாகிய கமலத்தில் விளங்கும்
நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.
மணிபூரகம் - இது நாபிக்
கமலத்தில் இருப்பது, மூன்றாம் பிறை வடிவுள் பத்து இதழ்க்
கமலம், மரகத நிறமாய்
உள்ளது. விஷ்ணு - இலட்சுமி, 'ம' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
அப்புப்
பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை
உப்புக்
குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்.
--- பத்திரகிரியார்
மெய்ஞ்ஞானப்புலம்பல்.
மூன்றாம்
பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவை, உப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே
தெரிந்து கொள்வது எப்போது.
நாவிக்
கமலநடு நெடுமால் காணாமல்
ஆவிகெட்டு
யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே. --- பட்டினத்தார் பூரணம்.
எங்கும்
நிறைந்த பொருளே, மணிபூரகத்தில்
விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.
அநாகதம் - இது இருதய கமலத்தில் இருப்பது. முக்கோண வடிவுள் பன்னிரண்டு இதழ்க் கமலம், படிக நிறமாய் உள்ளது. உருத்திரன் - பார்வதி. 'சி' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
மூன்று
வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்
தோன்றும்
உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்.
--- பத்திரகிரியார்
மெய்ஞ்ஞானப் புலம்பல்.
முக்கோண
வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத்
தொழுவது எப்போது.
உருத்திரனை
இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்து
அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே. --- பட்டினத்தார் பூரணம்.
எங்கும்
நிறைந்த பொருளே, அநாகதத்தில், அதாவது இருதயத்தில் உருத்திர
மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன்.
விசுத்தி - இது கண்டத்தில்
இருப்பது. ஆறு கோண வடிவுள் பதினாறு இதழ்க் கமலம்.
மேக நிறமாய் உள்ளது. மகேசுவரன் - மகேசுவரி. 'வ'
கரம்
என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
வாயுஅறு
கோணம்அதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும்
வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்.
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்
புலம்பல்.
அறுகோண
வடிவாய் உள்ள விசுத்தியின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் மகேச்சுரனைத் தரிசித்து
அவனுடன் கலக்கும் வழியை ஆராய்ந்து தொடங்குவது எப்போது.
விசுத்தி
மகேசுரனை விழிதிறந்து பாராமல்
பசித்து
உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே. --- பட்டினத்தார்
பூரணம்.
எங்கும்
நிறைந்த பொருளே, விசுத்தியில் அதாவது கண்டத்தில்
விளங்கும் மகேசுரனை நோக்கி விழித்துக் கொண்டு இருந்து தரிசியாமல், பசியால் வருந்தி மனம் கலங்கினேன்.
ஆஞ்ஞை - இது புருவ மத்தியில்
இருப்பது, வட்ட வடிவமான, மூன்ற இதழ்க் கமலம். படிக நிறமாய் உள்ளது. சதாசிவன்- மனோன்மணி. 'ய' கரம் என்ற எழுத்து இவற்றைப் பெற்று
விளங்குவது.
வட்ட
வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட
வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்
புலம்பல்.
வட்ட
வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை
அடைவது எப்போது.
நெற்றி
விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன்
பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே ---
பட்டினத்தார்
பூரணம்.
எங்கும்
நிறைந்த பொருளே, நெற்றியில் கண்ணை உடைய மலரகிதமாய் உள்ள
சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல், ஐம்பொறியில்
சிக்கி ஞானத்தை இழந்தேன்.
கழியுடல்
காணா ---
உடம்புடன்
நின்றே உடம்பை மறந்த நிலை.
வித்தைக்
கெடுத்து வியாக் கிரத்தேமிகச்
சுத்தத்
துரியம் பிறந்து, துடக்கு அற
ஒத்துப்
புலன் உயிர் ஒன்றாய், உடம்பொடு
செத்திட்டு
இருப்பர் சிவயோகியார்களே. --- திருமந்திரம்.
நின்னை
உணர்ந்துஉணர்ந்து எல்லாம் ஒருங்கிய
நிர்க்குணம் பூண்டு
என்னை
மறந்து இருந்தேன் இறந்தே விட்டது
இவ் உடம்பே. --- கந்தர் அலங்காரம்.
நிராதார
பரிவிலி வான்
---
பற்றுக்கோடு
இல்லாததும், துன்பம் இல்லாததும்
ஆண ஞானவெளி. பரிவு - துன்பம்.
நாலை
மடை மாறி
---
உயிர்
வாழ்க்கைக்கு இன்றியமையாதது பிராணவாயு.
இது வெளியே போவது 12 அங்குலம். உள்ளே மீள்வது 8 அங்குலம். 4
அங்குலம் வீணாகி விரமயாகின்றது.
இங்ஙனம்
4 அங்குல வாயு
வீணாகாமல் உள்ளே செலுத்தும் யோகிகள் கற்பகாலம் நிலைத்து இருப்பர்.
பலபலவாம்
யோக சாதக உடல்கொடு மாயாத போதகம் ---
ஆலம்ப
யோகம், நிராலம்ப யோகம், குண்டலி யோகம், சிவராஜ யோகம் என்பனவாதி யோகங்களில்
பலவகை உண்டு.
யோகத்தால்
நித்திய தேகம் பெற்று யோகிகள் சித்திர தீபம் போல் அசைவற்று இருப்பார்கள்.
அழியா
வீடு போய் இனி அடைவேனோ ---
என்றும்
அழியாத முத்தி வீட்டைப் பெறவேண்டும் என்று அடிகளார் முருகனிடம் வேண்டுகின்றார்.
கருத்துரை
அருணை
மேவும் அண்ணலே, அழியாத முத்தி
வீட்டினை அடியேனுக்கு அருள் செய்.
No comments:
Post a Comment