திருவண்ணாமலை - 0535. உலையில்அனல் ஒத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உலையில்அனல் ஒத்த (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் மயல் விட்டு,
சிவயோக நிலையில் நிற்க அருள்.


தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான


உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
     யுடுபதியை முட்டி ...... யமுதூற

லுருகிவர விட்ட பரமசுக முற்று
     வுனதடியை நத்தி ...... நினையாமற்

சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
     திகழ்முகவர் முத்து ...... நகையாலே

சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
     திருடனென வெட்கி ...... யலைவேனோ

கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா

கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதவமண ருற்ற ...... குலகாலா

அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
     அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே

அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
     அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி,
     உடுபதியை முட்டி, ...... அமுது ஊறல்

உருகிவர விட்ட பரமசுகம் உற்று,
     உனது அடியை நத்தி ...... நினையாமல்

சிலைநுதலில் இட்ட திலதம்அவிர் பொட்டு
     திகழ்முகவர் முத்து ...... நகையாலே

சிலுகுவலை இட்ட மயல்கவலை பட்டுத்
     திருடன்என வெட்கி ...... அலைவேனோ?

கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா!

கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதஅமணர் உற்ற ...... குலகாலா!

அலைகடல் உடுத்த தலம்அதனில், வெற்றி
     அருணைவளர் வெற்பில் ...... உறைவோனே!

அசுரர்களை வெட்டி அமரர்சிறை விட்டு
     அரசுநிலை இட்ட ...... பெருமாளே.

பதவுரை

       கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட --- சாத்திர முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன்மயமாக விளங்குவதும், வட்ட வடிவுடையதுமான திமிலை என்ற தோல் கருவி பறை போல் ஒலிக்க,

     கனகமயில் விட்ட கதிர்வேலா --- பொன்மயிலைச் செலுத்தி ஒளி மிகுந்த வேலாயுதரே!

      கருதலரின் முட்டி --- பகைவர்கள் போல் எதிர்த்துத் தாக்கி,

     கருகி வரு துட்ட கத --- கரிய நிறத்துடன் வந்த கொடியவர்களும் சினம் கொண்டவர்களும் ஆகிய

     அமணர் உற்ற குலகாலா --- சமணருடைய குலத்தைக் காலன் போல் அழித்தவரே!

      அலைகடல் உடுத்த தலம் அதனில் --- அலைகள் வீசும் கடலை ஆடையாக உடுத்த பூமியில்,

     வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே --- வெற்றித் தலமாம் திருவருணையில் வளர்ந்துள்ள மலையில் வீற்றிருப்பவரே!

      அசுரர்களை வெட்டி --- சூராதி அவுணர்களைத் துணி செய்து,

     அமரர் சிறை விட்டு --- தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்து,

     அரசு நிலை இட்ட பெருமாளே --- தேவலோக ராஜ்ஜியத்தை ஒரு நிலையில் வைத்து அருளிய பெருமையில் சிறந்தவரே!

      உலையில் அனல் ஒத்த --- உலைக் களத்தில் உள்ள நெருப்புப் போல்

     உடலின் அனல் பற்றி --- உடம்பில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து,

     உடுபதியை முட்டி --- சந்திர மண்டலத்தை முட்டி,

      அமுது ஊறல் உருகி வர விட்ட பரமசுகம் உற்று --- அங்கு அமுதின் ஊற்றுப் பெருகி வர விடுகின்ற பெரிய சுகத்தை அடைந்து,

     உனது அடியை நத்தி நினையாமல் --- உமது திருவடியை விரும்பி நினையாமல்,

      சிலை நுதலில் இட்ட --- வில்லைப் போல் வளைந்த நெற்றியில் இட்ட

     திலதம் அவிர் பொட்டு --- திலகம் எனத் திகழும் பொருட்டு

     திகழ் முகவர் முத்து நகையாலே --- விளங்கும் முகத்தை உடைய மாதர்களின் முத்துப் போன்ற சிரிப்பினால்,

         சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டு --- துன்ப வலையில் சேர்ப்பித்த காமப் பித்தால் கவலைப்பட்டு,

     திருடன் என வெட்கி அலைவேனோ --- திருடன் என்று பலர் பழிக்க, நாணப்பட்டு அடியேன் அலையலாமோ?

பொழிப்புரை


         சாத்திர முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன்மயமாக விளங்குவதும், வட்ட வடிவுடையதுமான திமிலை என்ற தோல் கருவி பறை போல் ஒலிக்க, பொன்மயிலைச் செலுத்தி ஒளி மிகுந்த வேலாயுதரே!

         பகைவர்கள் போல் எதிர்த்துத் தாக்கி, கரிய நிறத்துடன் வந்த கொடியவர்களும் சினம் கொண்டவர்களும் ஆகிய சமணருடைய குலத்தைக் காலன் போல் அழித்தவரே!

         அலைகள் வீசும் கடலை ஆடையாக உடுத்த பூமியில், வெற்றித் தலமாம் திருவருணையில் வளர்ந்துள்ள மலையில் வீற்றிருப்பவரே!

         சூராதி அவுணர்களைத் துணி செய்து, தேவர்களைச் சிறையினின்றும் விடுவித்து, தேவலோக ராஜ்ஜியத்தை ஒரு நிலையில் வைத்து அருளிய பெருமையில் சிறந்தவரே!

         உலைக் களத்தில் உள்ள நெருப்புப் போல் உடம்பில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து, சந்திர மண்டலத்தை முட்டி, அங்கு அமுதின் ஊற்றுப் பெருகி வர விடுகின்ற பெரிய சுகத்தை அடைந்து, உமது திருவடியை விரும்பி நினையாமல், வில்லைப் போல் வளைந்த நெற்றியில் இட்ட திலகம் எனத் திகழும் பொருட்டு விளங்கும் முகத்தை உடைய மாதர்களின் முத்துப் போன்ற சிரிப்பினால், துன்ப வலையில் சேர்ப்பித்த காமப் பித்தால் கவலைப்பட்டு, திருடன் என்று பலர் பழிக்க நாணப்பட்டு, அடியேன் அலையலாமோ?
  
விரிவுரை


உலையில் அனல் ஒத்த உடலில் அனல் பற்றி ---

உடம்பில் உள்ள மூலாக்கினியை உள்முகமாகப் பிராணவாயுவைச் செலுத்தும் யோக சாதனையால் சுடர்விட்டு மூளுமாறு செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்தால், அந்த மூலக்கனல் கொல்லனுடைய உலைக் களத்தில் நெருப்பு சுடர்விட்டு எரிவது போல் மூண்டு எழும்.

நாளும்அதிவேக கால்கொண்டு தீமண்ட
வாதிஅனல்ஊடு போய்ஒன்றி   ---  (மூளும்வினை) திருப்புகழ்.


உடுபதியை முட்டி அமுதூறல் உருகிவர ---

உடுபதி - சந்திரன்.  யோக சைதனையால் எழுந்த மூலத்தீ மூண்டு சந்திர மண்டலத்தைத் தாக்கி வெதுப்பும்.  அதனால் மதிமண்டலத்து உள்ள அமுத தாரையை உண்டு, சிவயோகிகள் காலத்தி வென்று சிலைபோல் நிலைபெற்று இருப்பார்கள்.

            ….              ….     வானின்கண்
நாமமதி மீதில் ஊறும் கலா இன்பம்
நாடி,அதன் மீதுபோய் நின்ற ஆனந்த
மேலைவெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி,
நாடி இனும் வேறு தான்இன்றி     வாழ்கின்றது ஒருநாளே. ---  (மூளும்வினை) திருப்புகழ்.

பரமசுகமுற்று ---

சிவயோகத்தின் முடிவில் சோரமசம் உண்டு, நான் அற்றுத் தானாகி நிற்கும் நிலையில் உண்டாகும் சுகம் எல்லாச் சுகங்கட்கும் மேலான பரமசுகம் என உணர்க.

இருவினை மும்மலமுமற இறவியொடு பிறவியற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும் வகை பரமசுகம் அதனையருள்.          ---  (அறுகுநுனி)  திருப்புகழ்.

தண்அமுத மதிகுளிர்ந்த கிரணம் வீச
     தடம்பொழில் பூமணம் வீச, தென்றல் வீச
எண்ணமுத பளிக்குநிலா மூற்றத்தே இன்
     இசைவீச தண்பனிநீர் எடுத்துவீச
பெண்ணமுதம் அனையவர் விண்ணமுதம் ஊட்டப்
     பெறுகின்ற சுகம்அனைத்தும் பிற்பட்டுஓட
கண்ணமுதத்து உடம்புஉயிர் மற்றுஅனைத்தும் இன்பம்
     கலந்துகொளத் தரும்கருணைக் கடவுள்தேவே.      --- திருவருட்பா.

இன்று வருமோ, நாளைக்கே வருமோ, அல்லது மற்று
என்று வருமோ அறியேன், எம்கோவே! --- துன்றுமல
வெம் மாயை அற்று, வெளிக்குள் வெளி கடந்து,
சும்மா இருக்கும் சுகம்.                                         --- திருவருட்பா.

உனதடியை நத்தி ---

சிவயோகத்தில் சலனம் அற நின்று, தற்போதம் இன்றி, முருகன் திருவடியை விரும்பி, அலை இல்லாத கடல்போல் இருத்தல் வேண்டும். இத்தகைய சுகநிலையை நினையாமல் மக்கள் கீழான சிறிய இன்பத்தை விரும்பி அலைகின்றார்கள்.
  
சிலைநுதலில் …   ….  மயல் கவலைப்பட்டு ---

பொட்டு அணிந்து, புன்னகை புரிந்து, மையல் வலைவீசும் மாதர் ஆசை வலையில் அகப்பட்டு, அதனால் மயக்கமுற்று பெரும் கவலைப்படுதல் கூடாது.

திருடன் என வெட்கி அலைவேனோ ---

உலகத்தார் இவன் திருடன் என்று இகழுமாறு அடியேன் அலைதல் கூடாது என்று சுவாமிகள் முருகனிடம் விண்ணப்பம் புரிகின்றார்.

கனகமயில் விட்ட கதிர்வேலா ---

பொன்மயில் – பிரணவம்.
கதிர்வேல் – ஞானம். 

ஒங்காரத்தின் நடுவில் ஞானவொளியாய் நிற்கும் பரம்பொருள் முருகன்.

அமணருற்ற குலகாலா ---

திருஞானசம்பந்தரை அதிட்டித்து, அக் காலத்துப் பிணக்கம் உற்ற அமண குலத்தை முருகன் கருவறுத்து அருளினார்.

அலைகடல் உடுத்த தலம் அதனில் ---

கடல் சூழ்ந்த பூமியில். அன்றி தலம் என்ற சொல்லுக்கு க்ஷேத்திரம் என்று பொருள் கொண்டால், அலைவீசும் திருச்செந்தூர் என்று பொருள்படும்.

திருச்செந்தூரிலும் திருவண்ணாமலையிலும் வீற்றிருப்பவனே என்று கூறுகின்றார்.

அரசு நிலையிட்ட பெருமாளே ---

சூராதி அவுணர்களை அழித்து, அமரர்களின் சிறையை மீட்டு, முன்போல் இந்திர உலகில் இந்திரன் அறநெறியுடன் அரசு புரிய முருகன் கருணை புரிந்தான்.


கருத்துரை    

அருணை மேவும் அண்ணலே, மாதர் வலைப்படாது சிவயோக நிலையில் பரமசுகம் பெற அருள் செய்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...