திருவண்ணாமலை - 0541. கரிமுகக் கடகளிறு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிமுகக் கடகளிறு (திருவருணை)

திருவருணை முருகா! முருகா! முருகா! அருள்வாய்


தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான


கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
     கஜமுகத் தவுணனைக் ...... கடியானை

கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
     கனிவயிற் றினிலடக் ...... கியவேழம்

அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
     தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே

அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
     றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா

நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
     கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன்

நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
     கரியுரித் தணிபவற் ...... கொருசேயே

துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
     துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச்

சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கரிமுகக் கட களிற்று அதிக கற்பக மதக்
     கஜமுகத்து அவுணனைக் ...... கடி, யானை,

கடலை எள் பயறு நல் கதலியில் கனி பலக்
     கனி வயிற்றினில் அடக் ...... கிய வேழம்,

அரிமுகத்தின் எதிர்த்திடு களத்தினில் மிகுத்து
     அமர் புரிக் கணபதிக்கு ...... இளையோனே!

அயில் எடுத்து, சுரர் வெற்பு அலைவ உறப் பொருது, வெற்
     றியை மிகுத்த அறுமுகக் ...... குமர ஈசா!

நரி மிகுக் கிளைகளைப் பரி எனக் கடிவளக்
     கையில் பிடித்து எதிர் நடத் ...... திடும் ஈசன்

நடனம் இப்படி இடத்தினும், இசைத்து, ரையினில்
     கரி உரித்து அணிபவற்கு ...... ஒருசேயே!

துரிபெறச் சரிபொழில் கனவயற்கு அழகு உளத்
     துரிய மெய்த் தரளம் மொய்த் ...... திட வீறிச்

சுரர் துதித்திட, மிகுத்து இயல் தழைத்த அருணையில்
     சுடர் அயில் சரவணப் ...... பெருமாளே.


பதவுரை


      கரிமுக கடகளிற்று அதிக கற்பக மதக் கஜமுகத்து அவுணனைக் கடி யானை --- யானை முகத்தையும், மதத்தையும் கொண்ட யானை, மதம் கொண்ட யானை முகம் உடைய கதமுகாசுரனை அடக்கிய யானை,

       கடலை எள் பயறு நல் கதலியில் கனி பலக் கனி வயிற்றினில் அடக்கிய வேழம் --- கடலை, எள், பயறு, நல்ல வாழைப்பழம், பலாப்பழம் என்ற இவைகளை வயிற்றினில் நிரப்பிய யானை,

      அரி முகத்தினன் --- அழகிய முகத்தை உடையவர்,

     எதிர்த்திடு களத்தினில் மிகுத்து அமர் புரி --- எதிர்த்துப் போர் புரியும் போர்க்களத்தில் மிகவும் போர் புரியும்

     கணபதிக்கு இளையோனே ---- கணங்களுக்கு அதிபரான விநாயகருடைய தம்பியே!

      அயில் எடுத்து --- வேலாயுதத்தைச் செலுத்தி,

     அசுரர் --- அரக்கர்களும்,

     வெற்பு அலைவுறப் பொருது --- கிரவுஞ்ச மலையும் அலைச்சல் உறுமாறு போர் செய்து,

     வெற்றியை மிகுத்த அறுமுகக் குமர ஈசா ---- மிகுந்த வெற்றியைப் பெற்ற ஆறுமுகங்களை உடைய குமாரக் கடவுளே!

      நரி மிகுக் கிளைகளைப் பரி என --- நரியின் பெரிய கூட்டங்களை குதிரைகளாகச் செய்து,

     கடிவளக் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன் --- கடிவாளத்தைக் கையில் பிடித்து, பாண்டியன் முன்னே நடத்திய சொக்கேசரும்,

       நடனம் இப்படி இடத்தினும் இசைத்து --- இந்த மண்ணுலகத்திலும் திருவிளையாடல் புரிந்தவரும்,

     அரையினில் கரி உரித்து அணிபவற்கு ஒரு சேயே --- யானையை உரித்து அதன் தோலை இடையில் உடுத்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற புதல்வரே!

      துரி பெறச் சரி பொழில் --- காய்கனிகளின் சுமையால் சாய்ந்துள்ள சோலையிலும்,

     கனவயற்கு --- பெருமை வாய்ந்த வயலிலும்,

     அழகு உள --- அழகு உடையனவும்,

     துரிய மெய்த் தரளம் மொய்த்திட வீறி --- தூய வடிவைக் கொண்டனவும் ஆகிய முத்துக்கள் நெருங்கிக் கிடக்க, பெருமை மிகுந்து

       சுரர் துதித்திட --- தேவர்கள் துதி செய்ய,

     மிகுத்து இயல் தழைத்து அருணையில் --- இயல் தமிழ் மிகுதியாகத் தழைத்துள்ள திருவண்ணாமலையில்


     சுடர் அயில் சரவணப் பெருமாளே --- ஒளி மிகுந்த வேலாயுதத்தை ஏந்திய சரவணத்தின் பெருமை மிகுந்தவரே!

பொழிப்புரை

         யானை முகத்தையும், மதத்தையும் கொண்ட யானை, மதம் கொண்ட யானை முகம் உடைய கதமுகாசுரனை அடக்கிய யானை, கடலை, எள், பயறு, நல்ல வாழைப்பழம், பலாப்பழம் என்ற இவைகளை வயிற்றினில் நிரப்பிய யானை, அழகிய முகத்தை உடையவர், எதிர்த்துப் போர் புரியும் போர்க்களத்தில் மிகவும் போர் புரியும் கணங்களுக்கு அதிபரான விநாயகருடைய தம்பியே!

         வேலாயுதத்தைச் செலுத்தி, அரக்கர்களும், கிரவுஞ்ச மலையும் அலைச்சல் உறுமாறு போர் செய்து, மிகுந்த வெற்றியைப் பெற்ற ஆறுமுகங்களை உடைய குமாரக் கடவுளே!

         நரியின் பெரிய கூட்டங்களை குதிரைகளாகச் செய்து, கடிவாளத்தைக் கையில் பிடித்து, பாண்டியன் முன்னே நடத்திய சொக்கேசரும், இந்த மண்ணுலகத்திலும் திருவிளையாடல் புரிந்தவரும், யானையை உரித்து அதன் தோலை இடையில் உடுத்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற புதல்வரே!

         காய்கனிகளின் சுமையால் சாய்ந்துள்ள சோலையிலும், பெருமை வாய்ந்த வயலிலும், அழகு உடையனவும், தூய வடிவைக் கொண்டனவும் ஆகிய முத்துக்கள் நெருங்கிக் கிடக்க, பெருமை மிகுந்து தேவர்கள் துதி செய்ய, இயல் தமிழ் மிகுதியாகத் தழைத்துள்ள திருவண்ணாமலையில் ஒளி மிகுந்த வேலாயுதத்தை ஏந்திய சரவணத்தின் பெருமை மிகுந்தவரே!
   
விரிவுரை 

இத் திருப்புகழ் முழுவதும் துதிமயமானது.

கரிமுகக் கடகளிற்று ---

திருக்கயிலாய மலையில் மந்திரச் சித்திரச் சாலையில் சிவபெருமானும் உமாதேவியாரும் எழுந்தருளினார்கள்.  மந்திரச் சித்திரங்களின் இடையே சமஷ்டி பிரணவம், வியஷ்டி பிரணவம் என்று இரு பிரணவங்கள் இருந்தன.  அந்த இரு பிரணவங்களை பார்வதியும் பசுபதியும் திருக்கண் சாத்தியருளினார்கள்.  இரு பிரணவங்களும் ஒன்றுடன் ஒன்று சேர, அப் பிரணவத்தில் இருந்து யானை முகத்துடன் விநாயகப் பெருமான் தோன்றி அருளினார்.

இச்சா சத்தி, கிரியா சத்தி, ஞானசத்தி என்ற மும்மதங்களைப் பொழிபவர்.

அதிக கற்பகம் ---

கற்பகம் - நினைத்ததைத் தரும் ஆற்றல் படைத்தது.  விநாயகர் கற்பகம் போல் அடியார்க்கு நினைத்தவை அனைத்தையும் வழங்கும் வரதமூர்த்தி.  ஆதலால், கற்பக விநாயகர் எனப் பெற்றவர்.

கற்பகம் என, வினை கடிது ஏகும்     ---  (கைத்தல) திருப்புகழ்.

கஜமுத்து அவுணனைக் கடி யானை ---

கஜமுகாசுரன் எண்ணில்லாத வரங்களைப் பெற்று வானவர்களைப் பல கொடுமைகள் புரிந்து வந்தான்.  மால் அயன் ஆதி வானவர்கள் விநாயகப் பெருமானை வேண்டி நின்றனர். தேவர்களின் மூறையீட்டுக்கு இரங்கிய விநாயகப் பெருமான், போருக்கு எழுந்தருளி, பலப்பல ஆயுதங்களை அவன் மீது ஏவினார். அக் கணைகளால் அவன் மரணம் அடைந்தானில்லை.  தமது கொம்பை முறித்து ஏவினார்.  கஜமுகனுடைய கடிய கொடிய அசுர உடம்பை, ஞானமயமான தந்தம் பிளந்தது.  அவன் பெருச்சாளியாக வடிவெடுத்து விநாயகரை எதிர்த்து வந்தான்.  விநாயகர் அதன்மீது கருணை மழை பொழிந்தருளினார்.  அதன் கொடுமை அடங்கி, தூய எண்ணம் பெற்றுப் பெருமான் முன் நின்றது.  விநாயகர் அந்த மூஷிகத்தைத் தனக்கு வாகனமாகக் கொண்டு அருள் புரிந்தார்.

கடலை எள் பயறு நல் கதலியில் கனி, பலக்கனி வயிற்றினில் அடக்கிய வேழம் ---

விநாயகர் மூலாதாரப் பொருள்.  அவருக்கு அவல், பொரி, கடசலை, எள், பயறு, கணிகள் இவைகளை நிவேதித்து உண்பார்க்கு சத்துவ குணம் உண்டாகும்.

அரி முகத்தினன் ---

அரி - அழகு. அழகிய முகத்தினன்.

அரி - தெருச் சந்தி.  முகம் - இடம்.

தெருச் சந்திகளான இடத்தில் இருப்பவர் விநாயகர் என்றும் பொருள்படும்.  திருநெல்வேலியில் சந்தி விநாயகர் கோயில் என்று ஒரு கோயில் இருப்பதும் கண்கூடு.



நரிமிகுக் கிளைகளைப்  பரி என ---

சிவபெருமான் மாணிக்கவாசகர் பொருட்டு காட்டில் உள்ள நரிக் கூட்டங்களை எல்லாம், குதிரைகள் ஆக்கிக் கொண்டு, வேதப் பரி மீது சென்று அரிமர்த்தன பாண்டியன் முன் நடாத்திக் காட்டி அருளினார்.

சர்க்கஸ் தொழில் நடத்துபவர் எல்லா விலங்குகளையும் அடக்கி மக்கள் முன் நிறுத்திக் காட்டுவர். ஆனால், நரி ஒன்று மட்டும் மனிதனுக்கு அடங்குவதில்லை.  சர்க்கஸில் நரியைப் பார்க்க இயலாது.  ஆகவே, யாரும் செய்யாத செயலைச் சிவபெருமான் செய்து காட்டி அருளினார்.

நடனம் இப்படி இடத்தினும் இசைத்து ---

இறைவன் சுத்தவித்யா உலகத்துக்கும் அப்பால் பட்டவர்.  அத்தகைய பரமன் அடியார் பொருட்டு இம் மண்ணுலகில் தமது திருவடியை வைத்துத் திருவிளையாடல் புரிந்து அருளினார்.

வானத்தில் மண்ணில் பெண்ணில்
         மைந்தரில் பொருளில் ஆசை
தான்அற்றுத் தனையும் அற்று
         தத்துவம் உணர்ந்த யோகர்
ஞானக்கண் கொண்டே அன்றி
         நாடஅரும் சோதி மண்ணோர்
ஊனக்கண் கொண்டும் காண
         உடன் விளையாடல் உற்றார்.--- திருவிளையாடல் புராணம்.

துரி பெறச் சரி பொழில் ---

துரி - சுமை.  பழுத்த மரங்கள்.   காய் கனிகளின் சுமை தாங்காது சாயந்து காட்சி தருகின்றன.

துரிய மெய்த்தரளம் ---

துரியம் - தூய்மை.  தூய்மையான உருவத்தை உடைய முத்துக்கள்.  திருவண்ணாமலையில் சோலைகளிலும், வயல்களிலும் முத்துக்கள் மிகுந்த ஒளி வீசுகின்றன.

இயல் தழைத்த அருணையில் ---

புலவர்கள் இயல் தமிழால் இறைவனைப் பாடிப் பரவுகின்றனர்.

திருவண்ணாமலையில் பல ஞானிகளும் சிறந்த புலவர்களும் வாழுகின்றார்கள். மிகப் புனிதமான ஞானபூமி.





No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...