திருவண்ணாமலை - 0531. இருவினை ஊண்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருவினை ஊண் (திருவருணை)

திருவருணை முருகா!
நில்லாத உடம்பை நிற்கும் என எண்ணி  மயங்கும் நிலை நீங்கி,
உனது திருவடித் தாமரையைச் சேர அருள்.


தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
     தனதன தாந்த தந்த ...... தனதான


இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
     யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி

இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
     மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக்

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
     டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென்

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
     னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
     ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும்

அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
     கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங்

கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
     கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருவினை ஊண் பசும்பை, கருவிளை கூன் குடம்பை,
     இடர் அடை பாழ்ம் பொதும்பு,  ...... அகிதவாரி

இடைதிரி சோங்கு, கந்த மது அது தேங்கு கும்பம்,
     இரவு இடை தூங்குகின்ற ...... பிணம், நோவுக்கு

உரு இயல் பாண்டம், அஞ்சு மருவிய கூண்டு, நெஞ்சொடு
     உயிர்குடி போம் குரம்பை ...... அழியாது என்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்து ஒழிந்து,
     உன் உபய பதாம்புயங்கள் ...... உடைவேனோ?

அருணையில் ஓங்கு துங்க சிகர கராம் புயங்கள்
     அமரர் குழாம் குவிந்து ...... தொழவாழும்

அடியவர் பாங்க, பண்டு புகல் அகிலாண்டம் உண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே!

கருணை ம்ருகேந்த்ர! அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட
     கடவுள் நடேந்த்ரர் மைந்த! ...... வரைசாடும்

கலப ககேந்த்ர! தந்த்ர அரச! நிசேந்த்ர! கந்த
     கர குலிசேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.

பதவுரை
 

      அருணையில் ஓங்கு துங்க சிகர --– திருவண்ணாமலையில் உயர்ந்து விளங்கியதும், பரிசுத்தமுடையதுமான கோபுரத்தில் உறைபவரே!

      கர அம்புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க --– தேவர்களின் கூட்டங்கள் தங்களின் தாமரை அனைய கரங்களைக் குவித்துத் தொழும்படியாக வாழ்கின்ற அடியவர்களின் தோழரே!

      பண்டு புகல் --- முன்னொரு காலத்தில் கணக்கிட்டுச் சொல்லப்பட்ட

     அகிலாண்டம் உண்ட --- எல்லா அண்டங்களையும் உண்டவரும்,

     அபிநவ --- புதுமையானவரும்,

     சார்ங்க கண்டன் மருகோனே --- சாரங்கம் என்னும் வில்லை உடைய வீரரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

      கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் --- --– கருணை மிகுந்த விலங்கினத்தில் உயர்ந்தவரான வியாகர்பாதர் என்னும் அன்பருடன்

     உரகேந்த்ரர் கண்ட கடவுள் --- நாக வேந்தராம் பதஞ்சலி தரிசித்த கடவுளாகிய

     நடேந்த்ரர் மைந்த --- நடராசப் பெருமானுடைய புதல்வரே!

      வரைசாடும் கலப ககேந்த்ர --– மலைகளைப் பொடியாக்கும் தோகையை உடைய பறவைகளில் உயர்ந்த மயில் வாகனரே!

      தந்த்ர அரச --– ஆகம நூல்களில் வல்ல அரசரே!

      நிசேந்த்ர --– உண்மையில் சிறந்தவரே!

      கந்த --– கந்தக் கடவுளே!
    
      கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே --- கரத்தில் குலிசாயுதத்தை ஏந்திய தேவேந்திரர்களுக்கு பெருமையில் சிறந்தவரே!

      இருவினை ஊண் பசும் பை --- இருவினைகளுக்கு இடமான புதிய பையும், 

     கருவிளை கூன் குடம்பை --- கரு வளர்வதற்கு இடமான பாத்திரமும், கூடு போன்றதும்,


     இடர் அடை பாழ்ம் பொதும்பு --- துன்பங்கள் அடைந்து உள்ள பாழ்படுகின்ற குகையும்,

     அகித வாரி இடை திரி சோங்கு --- துன்பக்கடலின் நடுவே திரிகின்ற கப்பலும்,

      கந்த மது அது தேங்கு கும்பம் --- இந்திரியங்களின் சுவை நிறைந்துள்ள குடமும்,

     இரவு இடை தூங்குகின்ற பிணம் --- இரவில் தூங்குகின்ற பிணம் போன்றதும்,

       நோவுக்கு உரு இயல் பாண்டம் --- நோய்களுக்கு வடிவாய் அமைந்த பாத்திரமும்,

     அஞ்சும் மருவிய கூண்டு --- ஐம்பூதங்களும் பொருந்திய கூடும்,

      நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை --- மனத்துடன் உயிர் வெளியேறும் சிறு குடிலும் ஆகிய இந்த உடம்பு

     அழியாது என்று --- அழியாமல் நிலைத்து இருக்கும் என்று,

         உலகு உடன் ஏன்று கொண்ட கரும பிராந்து ஒழிந்து ---  உலகத்தாருடன் இசைந்துள்ள, வினையால் வரும் மயக்கம் ஒழிந்து,

     உன் உபய பத அம்புயங்கள் அடைவேனோ --- தேவரீருடைய இருபாத தாமரைகளைப் பெறுவேனோ?

பொழிப்புரை

         திருவண்ணாமலையில் உயர்ந்து விளங்கியதும், பரிசுத்தம் உடையதுமான கோபுரத்தில் உறைபவரே!

         தேவர்களின் கூட்டங்கள் தங்களின் தாமரை அனைய கரங்களைக் குவித்துத் தொழும்படியாக வாழ்கின்ற அடியவர்களின் தோழரே!

         முன்னொரு காலத்தில் கணக்கிட்டுச் சொல்லப்பட்ட எல்லா அண்டங்களையும் உண்டவரும், புதுமையானவரும், சாரங்கம் என்னும் வில்லை உடைய வீரரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

         கருணை மிகுந்த விலங்கினத்தில் உயர்ந்தவரான வியாகர்பாதர் என்னும் அன்பருடன் நாக வேந்தராம் பதஞ்சலி தரிசித்த கடவுளாகிய நடராசப் பெருமானுடைய புதல்வரே!

         மலைகளைப் பொடியாக்கும் தோகையை உடைய பறவைகளில் உயர்ந்த மயில் வாகனரே!

         ஆகம நூல்களில் வல்ல அரசரே!

         உண்மையில் சிறந்தவரே!

         கந்தக் கடவுளே!
    
         கரத்தில் குலிசாயுதத்தை ஏந்திய தேவேந்திரர்களுக்கு பெருமையில் சிறந்தவரே!

          இருவினைகளுக்கு இடமான புதிய பையும், கரு வளர்வதற்கு இடமான பாத்திரமும், கூடு போன்றதும், துன்பங்கள் அடைந்து உள்ள பாழ்படுகின்ற குகையும், துன்பக்கடலின் நடுவே திரிகின்ற கப்பலும், இந்திரியங்களின் சுவை நிறைந்துள்ள குடமும், இரவில் தூங்குகின்ற பிணம் போன்றதும்,  நோய்களுக்கு வடிவாய் அமைந்த பாத்திரமும், ஐம்பூதங்களும் பொருந்திய கூடும், மனத்துடன் உயிர் வெளியேறும் சிறு குடிலும் ஆகிய இந்த உடம்பு அழியாமல் நிலைத்து இருக்கும் என்று, உலகத்தாருடன் இசைந்துள்ள, வினையால் வரும் மயக்கம் ஒழிந்து, தேவரீருடைய இருபாத தாமரைகளைப் பெறுவேனோ?

விரிவுரை
 

இருவினை ஊண் பசும்பை ---

நல்வினை தீவினை என்ற இருவினைகள் தம் பயனை நுகர்வதற்கு இடமானது இவ்வுடம்பு. புதியதாக அயன் படைத்துத் தந்த பை போன்றது.  பசும் பை என்ற சொல் புதுமையைத் தெரிவிக்கின்றது.

கருவிளை கூன் ---

கரு வளர்வதற்கு உடமான பாத்திரம் இந்த உடம்பு.  கூன் என்ற சொல் பாத்திரம் என்ற பொருளில் வந்தது.

குடம்பை ---

குடம்பை என்பது பறவை உறைகின்ற கூடு.

குடம்பை தனித்துஒழிய புள்பறந்து அற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.              ---  திருக்குறள்.

மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை
     விறகின்மை கொண்டு குருகார்
கச்சோதம் என்று கருதிக் குடம்பை
     தனில்உய்த்து மாண்ட கதை போல்.      ---  கந்தபுராணம்.

இடர் அடை பாழ்ம் பொதும்பு ---

எண்ணில்லாத துன்பங்கள் அடைந்து பாழ்படுகின்ற குழி.

பொதும்பு என்ற சொல் குழி என்றும், குகை என்றும் பொருள்படும்.

அகித வாரியிடை திரி சோங்கு ---

கிதம் - இதம் சுகம்.  அகிதம் - சுகம் இல்லாமை.  இல்லாமை.  துன்பக் கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம் போன்றது இவ்வுடம்பு. கடலில் திரிகின்ற கப்பல் பாறையால் மோதப்பட்டுப் படார் என்று உடைந்து விடும். அதுபோல், இந்த உடம்பு கூற்றுவனாகிய பாறையால் மோதப்பட்டு ஒரு கணத்தில் அழியக் கூடியது.

காக மோடுகழுகு அலகை நாய்நரிகள்
              சுற்று சோறுஇடு துருத்தியை,
      கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்
              காமவேள் நடன சாலையை,
போகஆசைமுறி இட்ட பெட்டியை,மும்
              மலமி குந்துஒழுகு கேணியை,
      மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,
              முடங்க லார்கிடை சரக்கினை,
மாக இந்த்ரதனு மின்னை ஒத்துஇலக
              வேதம் ஓதியகு லாலனார்
      வனைய, வெய்யதடி கார னானயமன்
               வந்து அடிக்குமொரு மட்கலத்
தேக மானபொய்யை, மெய் எனக்கருதி
               ஐய! வையமிசை வாடவோ?
      தெரிவ தற்கரிய பிரம மே!அமல
               சிற்சு கோதய விலாசமே!      --- தாயுமானார்.
   
கந்த மது அது தேங்கு கும்பம் ---

இந்திரியங்களில் சுவை தேங்குகின்ற குடம்.  இந்திரியங்கள் என்பன-- மெய், வாய், கண், மூக்கு, செவி. இவைகளில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சுவை. உடம்புக்கு இனிய காற்றிலும், மெத்தென்ற படுக்கையிலும் விருப்பம். நாக்குக்குச் சுவையில் விருப்பம். கண்ணுக்கு இனி காட்சியில் விருப்பம். மூக்குக்கு நறுமணத்தில் விருப்பம், காதுக்கு இன்னிசையில் விருப்பம்.  இவ்வாறு ஐம்பொறிகளின் சுவை தேங்குகின்ற குடம் போன்றது இவ்வுடம்பு.

இரவிடை தூங்குகின்ற பிணம் ---

இரவு முழுவதும் தூங்கிக் காலத்தை அவமே கழிக்கின்ற அவலம் உள்ளது இந்த உடம்பு.  பிணம் போல் தூங்குவது.

அருளாளர்கள் தூக்கத்தைத் துறந்து, இறைவனுடைய தியான சமாதியில் நிற்பார்கள்.

கட்டமும் கழன்றேன், கவலைவிட்டு ஒழிந்தேன்,
கலக்கமும் தீர்ந்தனன், பிறவிச்
சட்டமும் கிழித்தேன், தூக்கமும் துறந்தேன்,
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்.          --- திருவருட்பா.

இரவில் தூங்குவதே அல்லாமல், பகலிலும் தூங்குகின்றவர்களைப் பற்றி என்னென்று உரைப்பது.

நோவுக்கு உருவியல் பாண்டம் ---

நோய்கள் யாவும் உருவெடுத்துத் தங்குகின்ற பாத்திரம். 
அரிசி, பருப்பு முதலிய பண்டங்களைப் பாண்டங்களில் வைப்பது போல், இருமல், வலிவாதம் முதலிய நோய்கள் தங்குகின்ற இடம் இந்த உடம்பு.

அஞ்சு மருவிய கூண்டு ---

மண், புனல், கனல், காற்று, வெளி என்ற ஐந்து பூதங்கள் மருவிய கூடு போன்றது இந்த உடம்பு.

நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை ---

மனமும் உயிரும் குடியிருந்து விட்டு திடீர் என்று பிரிந்து போய்விடும்.  ஆகவே, அவைகள் விட்டுப் பிரிகின்ற சிறு வீடு இந்த உடம்பு.

குரம்பை - சிறு குடில்.

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசை இரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவை பல கசுமாலம்..      ---  திருப்புகழ்.

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே --- திருவாசகம்.

அழியாது என்று உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்து ---

உடம்பு நெடுங்காலம் நிற்கக் கூடியது என்று உலகத்தார் அறிவு இன்மையால் நினைத்து மகிழ்ந்து காலத்தை அவமே கழிப்பர்.  அவர்களுடன் அடியேனும் சேர்ந்து மயங்குகின்றேன்.  இந்த மயக்கம் ஒழியவேண்டும் என்று அடிகளார் முருகனிடம் முறையிடுகின்றார்.

பிராந்து - பிராந்தி - மயக்கம்.

உபய பத அம்புயங்கள் அடைவேனோ ---

உறைவனுடைய இரு திருவடிகள் மயக்கத்தை ஒழிக்கும் ஞானமயமானது.  ஒரு திருவடி கிரியா சத்தி, மற்றொரு திருவடி ஞானசத்தி.

அருணையில் ஒங்குகின்ற சிகரம் ---

அருணம் - சிவப்பு.  சிவந்த நிறமாக விளங்குவதால் இம் மலை அருணாசலம் எனப் பேர் பெற்றது. அருணாசலம் என்ற சொல்லின் சுருக்கம் அருணை. திருவண்ணாமலையில் வானளாவிய கோபுரங்கள் மிக அழகாகக் காட்சி தருகின்றன.  கிழக்கே முதலில் உள்ள கோபுரம் அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்த பிரபுட தேவராயர் புதுக்கியது. அடுத்துள்ள கோபுரம் வல்லாளராஜன் புதுக்கியது.  இந்தக் கோபுரத்தின் வாயிலில் தென்புறத்தில் விநாயகரும், வடபுறத்தில் முருகரும் எழுந்தருளி உள்ளார்கள்.

கர அம்புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ ---

முருகவேள் சந்நிதியில் தேவர்களின் கரங்கள் தாமே குவிகின்றன.  குவிந்து - தன்வினை.  குவித்து - பிறவினை.  உள்ளத்தால் நினைத்துக் கரங்களைக் குவிப்பது.  செயலற்ற நிலையில் தாமே கரங்கள் குவிகின்றன.

கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க ---  மணிவாசகம்.

கைகாள் கூப்பித் தொழீர்                 ---  அப்பர்.

அடியவர் பாங்க ---

பாங்கன் - தோழன்.  பாங்கு - பக்கம்.  பக்கத்திலேயே இருந்து துணை புரிவதனால் பாங்கன் எனப்பட்டனன்.


கருணை மிருகேந்தர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட ---

         மழமுனிவர் என்பவர் தில்லையில் இருந்து சிவலிங்கம் அமைத்து வழிபாடு புரிந்து வந்தார்.  நாள்தோறும் அதிகாலையில் மரங்களில் ஏறி மலர் பறிக்கும்பொருட்டு புலிக்காலும், நகங்கள்தோறும் கண்களும் பெற்றார்.  அதனால் வியாக்ரபாதர் எனப் பேர் பெற்றார். அவர் வழிப்ட்ட சிவாலயம் திருப்புலீச்சுரம் எனப் பேர் பெற்றது. அவர் இருந்து வழிபாடு செய்ததனால் சிதம்பரம், திருப்புலியூர் - பெரும்பற்றப்புலியூர் எனப் பேர் பெற்றது.

         திருப்பாற்கடலில் ஆதிசேடன் மீது அறிதுயில் புரியும் திருமால் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.  ஆதிசேடன் அவரைப் பணிந்து, ஆனந்தக் கண்ணீர் சொரிந்த காரணம் யாது எனக் கேட்டார்.  தாருகாவனத்தில் சிவபெருமான் ஆனந்த நடனம் புரிந்தார்.  அதனை அருகில் இருந்து தரிசித்தேன்.  அத் திருநடனத்தை நினைத்ததனால் ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று என்றார்.

         ஆதிசேடன் தானும் அந்த நடனத்தைத் தரிசிக்க விரும்பினார்.  திருமாலின் கட்டளைப்படி, அத்திரி முனிவருக்கு மகனாகத் தோன்றிப் பதஞ்சலி என்ற நாமம் பெற்றார்.  இவர் தில்லைவனம் வந்து வியாக்ரபாதருடன் இருந்து திருநடன தரிசனம் வேண்டித் தவம் செய்தார்.  அது அனந்தேச்சுரம் எனப் பேர் பெற்றது.  இந்த மாதவர்களாகிய பதஞ்சலி, வியாக்ரபாதர் பொருட்டு, தேவரும் மூவரும் தரிசிக்க, தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் சிவபெருமான் தைப்பூசத்தன்றுதிருநடனம் புரிந்து அருள் புரிந்தார்.  இந்த அரிய வரலாற்றை இந்த ஒருவரியில் அருணகிரிநாதர் அழகாகக் கூறியருளினார்.

நடேந்த்ரர் மைந்த ---

சிவபெருமான் உலகம் உய்யத் திருநடனம் புரிகின்றார்.  இந்த நடனத்தால் ஆக்கல், அளித்தல், ஒடுக்கல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களும் நடைபெறுகின்றன.

கலப ககேந்த்ர ---

ககம் - பறவை.  பறவைகளில் தலை சிறந்தது மயில்.  இது ஓம் என்ற பிரணவ வடிவானது.  விஷ பயத்தை விலக்கவல்லது.  மயில் இந்தியாவுக்கு தேசியப் பறவையாக அமைந்த சிறப்பு உவகைக்குரியது.

தந்த்ர ---

தந்திரம் - ஆகமம்.  முருகனைப் பற்றிக் கூறும் ஆகமம்.   குமாரதந்திரம் எனப் பேர் பெறும்.  ஆகம நூல்களில் வல்லவர் முருகர்.

நிசேந்த்ர ---

நிசம் -  உண்மை.  மெய்ப்பொருளாக விளங்கும் விமலன் கந்தவேள்.


கருத்துரை
 

         அருணை மேவும் அண்ணலே, புன்புலால் யாக்கையின் மயக்கம் தீர்ந்து உன் பதம் சேர அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...