திருவண்ணாமலை - 0533. இறுகும் அணிமுலை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இறுகும் அணிமுலை (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை நினைந்து வருந்தும் இப்பெண்ணின் தனிமைத் துயர் தீ,
அருணாசலத்தில் எழுந்தருள வேண்டும்.

தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான


இறுகு மணிமுலை மருவு தரளமு
     மெரியு முமிழ்மதி ...... நிலவாலே

இரவி யெனதுயிர் கவர வருகுழ
     லிசையி லுறுகட ...... லலையாலே

தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
     சரமி லெளியெனு ...... மழியாதே

தருண மணிபொழி லருணை நகருறை
     சயில மிசையினில் ...... வரவேணும்

முறுகு திரிபுர மறுகு கனலெழ
     முறுவ லுடையவர் ...... குருநாதா

முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
     முடுகு மரகத ...... மயில்வீரா

குறவர் மடமக ளமுத கனதன
     குவடு படுமொரு ...... திருமார்பா

கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
     குறுக விடவல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இறுகும் அணிமுலை மருவு தரளமும்,
     எரியும் உமிழ் மதி ...... நிலவாலே,

இரவி எனது உயிர் கவர வரு குழல்
     இசையில் உறுகடல் ...... அலையாலே,

தறுகண் ரதிபதி மதனன் விடு,கொடு
     சரமில் எளியெனும் ...... அழியாதே,

தருண மணிபொழில் அருணை நகர் உறை
     சயில மிசையினில் ...... வரவேணும்.

முறுகு திரிபுரம் மறுகு கனல் எழ
     முறுவல் உடையவர் ...... குருநாதா!

முடிய கொடுமுடி அசுரர் பொடிபட
     முடுகும் மரகத ...... மயில்வீரா!

குறவர் மடமகள் அமுத கன தன
     குவடு படும் ஒரு ...... திருமார்பா!

கொடிய சுடர் இலை தனையும் எழுகடல்
     குறுக விட வல ...... பெருமாளே.

பதவுரை


      முறுகு திரிபுர மறுகு கனல் எழ --- கடுமை உடைய முப்புரங்களின் வீதிகளில் நெருப்பு எழும்படி

     முறுவல் உடையவர் குருநாதா --- புன்சிரிப்புச் செய்தவராகிய சிவபெருமானுடைய குருநாதரே!

      முடிய கொடுமுடி அசுரர் பொடிபட --- எல்லா மலை உச்சிகளிலும் வாழ்திந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியுமாறு

     முடுகும் மரகத மயில்வீரா --- செலுத்திய பச்சை மயில் வீரரே!

      குறவர் மடமகள் அமுத கன தன குவடு படும் ஒரு திருமார்பா --- குறவர் திருமகளாகிய வள்ளிநாயகியின் அமுதம் பொதிந்த கனத்த கொங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய திருமார்பை உடையவரே!

      கொடிய சுடர் இலை தனையும் --- உக்கிரம் பொருந்திய, ஒளியை உடைய இலை போன்ற வேலாயுதத்தை

     எழுகடல் குறுக விடவல பெருமாளே --- எழு கடல்களும் வற்றிச் சுருங்குமாறு செலுத்த வல்ல பெருமையில் சிறந்தவரே!

         இறுகும் அணிமுலை மருவு தரளமும் --- நெருங்கி அழகாய் உள்ள மார்பகங்களின் மீதுள்ள முத்துமாலையும்,

     எரியும் உமிழ் மதி நிலவாலே --- தீ உமிழுமாறு காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும்,

      இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் --- என்னை வருத்தி, என் உயிரைக் கவர்வதற்கு எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும்,

     உறுகடல் அலையாலே --- பொருந்திய கடல் அலையின் ஒலியாலும்,

      தறுகண் ரதி பதி --- அஞ்சாமை உடையவனாகிய, இரதியின் கணவன் ஆகிய

     மதனன் விடு கொடு சரமில் --- மன்மதன் விடுகின்ற கொடிய கணையினாலும்,

     எளியெனும் அழியாதே --- எளியேன் நொந்து அழிவு படாமல்,

      தருணம் அணிபொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும் --- தக்க தருணத்தில் அழகிய சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலைப் பதியில் உள்ள மலைமீது வந்து அருள வேண்டும்.

பொழிப்புரை


         கடுமை உடைய முப்புரங்களின் வீதிகளில் நெருப்பு எழும்படி புன்சிரிப்புச் செய்தவராகிய சிவபெருமானுடைய குருநாதரே!

         எல்லா மலை உச்சிகளிலும் வாழ்திந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியுமாறு செலுத்திய பச்சை மயில் வீரரே!

         குறவர் திருமகளாகிய வள்ளிநாயகியின் அமுதம் பொதிந்த கனத்த கொங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய திருமார்பை உடையவரே!

         உக்கிரம் பொருந்திய, ஒளியை உடைய இலை போன்ற வேலாயுதத்தை எழு கடல்களும் வற்றிச் சுருங்குமாறு செலுத்த வல்ல பெருமையில் சிறந்தவரே!

         நெருங்கி அழகாய் உள்ள மார்பகங்களின் மீதுள்ள முத்துமாலையும், தீ உமிழுமாறு காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும்,

         என்னை வருத்தி, என் உயிரைக் கவர்வதற்கு எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், பொருந்திய கடல் அலையின் ஒலியாலும்,

         அஞ்சாமை உடையவனாகிய, இரதியின் கணவன் ஆகிய மன்மதன் விடுகின்ற கொடிய கணையினாலும், எளியேன் நொந்து அழிவு படாமல்,

         தக்க தருணத்தில் அழகிய சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலைப் பதியில் உள்ள மலைமீது வந்து அருள வேண்டும்.

விரிவுரை

 
இத் திருப்புகழ் அகப் பொருள் துறையில் பாடப் பெற்றது.  முருகனை நாயகனாக அடைய விரும்பிய ஆன்மாவாகிய பெண் முருகனை வேண்டுகின்றாள்.

நிலவும், குழலோசையும், கடலோசையும், காமன் கணையும் விரக நோயை மிகுவிப்பன.

இரவி - இராவி என்ற சொல் இரவியென வந்தது.  இராவுதல் - வருத்துதல்.

தறுகண் ரதிபதி மதனன் ---

தறுகண் - அஞ்சாமை.  மன்மதன், திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், விசுவாமித்திரர், காசிபர் முதலிய மிகப் பெரியவர்கள்பாலும் அஞ்சாது பூங்கணை பொழிந்து மையல் ஊட்டுவான்.  சரத்தில் என்ற சொல் சரமில் என வந்தது.

திரிபுர மறுகு கனலெழ முறுவலுடையவர் ---

மும்மல காரியமாகிய முப்புரத்தைச் சிவபெருமான் சிரித்து எரித்து அருளினார்.

என்னசெயம் கொண்டார் இவர்என்றான் முப்புரத்தைச்
சொன்னமயமாய்ச் சமைத்த சோழீசர் - பின்னும்
சிரித்துசெயம் கொண்டார், சித்தசனைக் கண்ணால்
எரித்துச் செயம் கொண்டார் இவர்.

கருத்துரை 

வேலாயுதப் பெருமானே, அருணையில் தோன்றி என் தனிமை தவிர்த்துக் காத்து அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...