திரு வாஞ்சியம்
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
இத் திருக்கோயில் மயிலாடுதுறை - பேரளம்
இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்கு மேற்கே 9 கீ.மீ.தூரத்தில் உள்ளது.
நன்னிலத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. (ஸ்ரீவாஞ்சியம் என்றும்
வழங்கப்படுகின்றது).
இறைவர்
: திருவாஞ்சியநாதர்
இறைவியார்
: வாழவந்தநாயகி, மங்களநாயகி
தல
மரம் : சந்தனம்
தீர்த்தம் : குப்த கங்கை, யம தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - வன்னிகொன்றை
2. அப்பர் - படையும்
பூதமும் பாம்பும்.
3. சுந்தரர் - பொருவனார்
புரிநூலர்.
இறைவன்
திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகை "வாழவந்த நாயகி"யாக
இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் என்ற செய்தி இத்தல புராணத்தில்
காணப்படுகின்றது. பராசர முனிவர் இத்தலத்தில் நீராடி, வீரதனு மன்னனைப் பற்றியிருந்த
பிரமகத்தியைப் போக்கிய சிறப்பால் இத்தீர்த்தம் அம்முனிவர் பெயரால் விளங்குகின்றது.
அத்திரி முனிவர் நீராடித் தத்தாத்ரேயரை மகவாகப் பெற்ற சிறப்பால் அத்திரி தீர்த்தம்
என்று வழங்குகிறது. பூமகள், திருமகள்
இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து
இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை
வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம்
கூறுகிறது. உரோமச முனிவர் தவம் செய்து முத்திப் பெற்ற வரலாறு புராணத்தில்
கூறப்படுகிறது. திருமால் வழிபட்டுத் திருமகளை அடைந்ததோடு, காத்தல் தொழிலைப் பெற்றார். நான்முகன்
வழிபட்டுப் படைத்தல் தொழிலைப் பெற்றார். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான்.
மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான்.
மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி ஆனந்த வடிவமுற்றான். விருட்சி என்பவனின்
மனைவி சாருமதி கயநோய் நீங்கப் பெற்றாள். தர்மத்துவசன் என்ற வணிகன் நற்கதி
எய்தினான்.
இயமன் எல்லா
உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம்
நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு
வாகனமாகும் பேற்றையும் பெற்றான். இயமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது. இறைவன்
இயமனுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்த ஐதீகத் திருவிழா மாசி மாதம் பரணியில்
நிகழ்கின்றது. இத்தலத்தில் வாழ்கின்ற / இறக்கின்றவர்களுக்கு எமவாதனை இல்லை எனவும், இங்கு இறப்போர் வலச் செவியில் இறைவன்
ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) ஓதி சிவலோகத்தில் சேர்ப்பித்துக் கொள்கிறான் எனவும்
தலபுராணம் கூறுகின்றது.
இத்தல தீர்த்தம்
(குப்தகங்கை), அத்திரி, பரத்துவாசர், ஜமதக்கினி, விசுவாமித்திரர், வசிட்டர், கௌதமர் ஆகியோர் நிறுவியருள் பெற்ற
சிறப்புடையது. காசியில் கங்கைதன்னிடம் மக்கள் போக்கிக்கொள்ளும் பாவங்கள்
சேர்ந்ததைத் தீர்க்க கங்கை வந்து இத்தலத்தில் தங்கி வழிபட்டுப் பாவங்களை நீக்கிக்
கொண்டாள். இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பால் உயர்வு பெற்ற சிறப்புடையத்
தலமாகும். நான்கு யுகங்களில் முறையே புண்ணிய தீர்த்தம், அத்திரி தீர்த்தம், பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் என்ற நாமங்களைக் கொண்டு
விளங்கியுள்ளது. கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இறைவன் இங்குத் தீர்த்தம்
கொடுத்தருளுகின்றார். பஞ்சமா பாதகம், பிரமகத்தி, நோய்கள், பிற பீடைகள், சிவத்துரோகம் முதலிய பாவங்கள்
அனைத்தையும் நீக்கி வெற்றி, ஆனந்தம், வீடுபேறு முதலிய பயன்களை அளிக்கவல்லது
இத்தலம். இத்தீர்த்தக் கரையில் தருமம் செய்வோர் சிறந்த பலன்களைப் பெறுவர்.
இத்தலம் மூவர்த்
தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலமாகும். மாணிவாசகப் பெருமானும்
கீர்த்தித் திருவகவலிலும், திருக்கோவையாரில் 268-வது பாடலிலும் இத் திருத்தலத்தைக்
குறித்துள்ளார். இது மூர்த்தி,
தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து
விளங்குகிறது. இத்தலம் ஸ்கந்தபுராணம், பிரும்மாண்டபுராணம், ஆக்நேயபுராணம் ஆகிய வடமொழி நூல்களில்
மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டுள்ளன. பாவங்களை ஏற்று அகற்றும் கங்கா நதியானவள்
தனது 1000 கலைகளில் ஒரு கலையை
மட்டும் காசியில் வைத்து மீதி 999 கலைகளுடன் இத்தல
தீர்த்தத்தில் வசிப்பதால் இத்தல தீர்த்தம் "குப்தகங்கை" என
வழங்குகின்றது. தல விருட்சம் சந்தனமாகும்.
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் உள்ளது. தலபுராணங்கள் வடமொழியிலும், தமிழிலும் உள்ளன. தமிழில் தலபுராணம்
பாடியவர் களந்தைக் குமரன் ஆவார். சிவராமசுந்தரம் பிள்ளை பாடிய மங்களாம்பிகை
பிள்ளைத்தமிழ் உள்ளது. தருமை குருமுதல்வர்
ஸ்ரீகுருஞானசம்பந்தர் சிவபோகாசாரத்தில் முத்தித் தலங்களில் ஒன்றாக இதனைக்
குறித்தருளுகிறார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "ஆம் ககனம் தாம் சியத்தை
வேங்கைத் தலையால் தடுக்கின்ற வாஞ்சியத்தின் மேவு மறையோனே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 572
அவனிமிசை
மழைபொழிய உணவு மல்கி,
அனைத்து உயிரும்
துயர்நீங்கி, அருளி னாலே
புவனம்எலாம்
பொலிவு எய்தும் காலம் எய்த,
புரிசடையார்
கழல்பலநாள் போற்றி வைகி,
தவமுனிவர்
சொல்வேந்த ரோடும் கூடத்
தம்பிரான்
அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழும்
தானங்கள் வணங்கப் போவார்,
தென்திருவாஞ்
சியமூதூர் சென்று சேர்ந்தார்.
பொழிப்புரை : உலகில் மழை பெய்ததால்
உணவுப் பொருள்கள் பெருகி, அதனால் எல்லா
உயிர்களும் துன்பம் நீங்கித் திருவருளினால் உலகம் முற்றும் செழிப்படையும் நற்காலம்
வரவே, பிள்ளையார் சுருண்ட
சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் பலநாள்கள் போற்றி, அங்கு எழுந்தருளியிருந்த பின்பு, தவமுனிவரான நாவுக்கரசரோடு கூடத் தம்
இறைவரின் திருவருள் பெற்றுக் கொண்டு, உலகத்தில்
சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும் வணங்கிச் செல்பவராய் அழகிய
திருவாஞ்சியம் என்ற பழைய பதியைச் சென்று அடைந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 573
நீடுதிரு
வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற்று அருமணியை
வணங்கிப் போற்றி,
பாடுஒலிநீர்த்
தலையாலங்காடு, மாடு
பரமர்பெரு வேளூரும்
பணிந்து பாடி,
நாடுபுகழ்த்
தனிச்சாத்தங் குடியில் நண்ணி,
நம்பர்திருக் கரவீரம்
நயந்து பாடி,
தேடுமறைக்கு
அரியார்தம் விளமர் போற்றி,
திருஆரூர்
தொழநினைந்து சென்று புக்கார்.
பொழிப்புரை : நிலைபெறும் `திருவாஞ்சியத்தில்\' விரும்பி எழுந்தருளியிருக்கும், மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய
அரிய மணியான இறைவரை வணங்கிப் போற்றிப் பெருமை பொருந்திய ஒலியையுடைய நீர் சூழ்ந்த
திருத்தலையாலங்காடும், அதன் அருகிலுள்ள
இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி,
நாடும்
புகழை உடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் சென்று அடைந்து, இறை வரின் திருக்கரவீரத்தையும்
விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைகளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும்
போற்றிப் பின் திருவா ரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அந்நகரில் புகுந்தார்.
இப்பதிகளில் அருளிய
பதிகங்கள்:
திருவாஞ்சியம்
- வன்னிகொன்றை (தி.2 ப.7) - இந்தளம்.
திருப்பெருவேளூர்
- அண்ணாவும் (தி.3 ப.64) - பஞ்சமம்.
திருக்கரவீரம்
- அரியும் நம்வினை (தி.1 ப.58)- பழந்தக்கராகம்.
திருவிளமர்
- மத்தகம் அணிபெற (தி.3 ப.88) - சாதாரி.
திருத்தலையாலங்காட்டிலும்
திருச்சாத்தங்குடியிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.
2.007 திருவாஞ்சியம் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வன்னி
கொன்றைமத மத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்
இயன்றசடை யில்பொலி வித்தபு ராணனார்
தென்ன
என்றுவரி வண்டுஇசை செய்திரு வாஞ்சியம்
என்னை
ஆள்உடை யான்இட மாக உகந்ததே.
பொழிப்புரை :வன்னியிலை கொன்றைமலர்
ஊமத்தம் மலர் வில்வம் ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும், என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய
சிவபிரான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் `தென்ன` என்ற ஒலிக் குறிப்போடு இசைபாடும்
திருவாஞ்சியமாகும்.
பாடல்
எண் : 2
கால
காலர்,கரி கான்இடை மாநடம்
ஆடுவர்,
மேலர்
வேலைவிடம் உண்டுஇருள்கின்ற மிடற்றினர்,
மாலை
கோலமதி மாடமன் னும்திரு வாஞ்சியம்
ஞாலம்
வந்து பணியப்பொலி கோயில் நயந்ததே.
பொழிப்புரை :காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த நடனம்
புரிபவர்; எப்பொருட்கும் எல்லா
உயிர்கட்கும் மேலானவர்; கடலிடைத் தோன்றிய
நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி
உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள்
பெறுமாறு விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.
பாடல்
எண் : 3
மேவில்
ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவில்
நாலர்உடல் அஞ்சினர், ஆறர், ஏழ்ஓசையர்,
தேவில்
எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவம்
தீர்ப்பர்பழி போக்குவர் தம்அடி யார்கட்கே.
பொழிப்புரை :விரும்பி வழிபடின் நீ
நான் என்ற வேற்றுமையின்றி அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய்
விரியுமிடத்து, சிவம் சத்தி என
இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர். நாவினால் நான்கு வேதங்களை அருளியவர்.
பரை ஆதி இச்சை ஞானம் கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர்.
ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர்.
இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள செல்வனார் தம் அடியவர்களின்
பாவங்களைத் தீர்ப்பர். அவர் அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.
பாடல்
எண் : 4
சூலம்
ஏந்திவளர் கையினர், மெய்சுவண் டாகவே
சால
நல்லபொடிப் பூசுவர், பேசுவர் மாமறை,
சீல
மேவுபுக ழால்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆலம்
உண்டஅடி கள்இடம் ஆக அமர்ந்ததே.
பொழிப்புரை :சூலம் ஏந்திய நீண்ட
கையினை உடையவர்; தம் திருமேனிக்குப்
பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்; சிறந்த வேதவசனங்களைப் பேசுபவர். ஆலகாலம்
உண்டருளிய அவ்விறைவர், ஒழுக்கத்தால்
சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திருவாஞ்சியத்தை இடமாகக் கொண்டு அமர்ந்துள்ளார்.
பாடல்
எண் : 5
கை
இலங்கும்மறி ஏந்துவர், காந்தள்அம் மெல்விரல்
தையல்
பாகம்உடை யார்,அடை யார்புரம்
செற்றவர்,
செய்ய
மேனிக்கரி யமிடற் றார்,திரு வாஞ்சியத்து
ஐயர்
பாதம்அடை வார்க்குஅடை யாஅரு நோய்களே.
பொழிப்புரை :கையின்கண், விளங்கும் மான்கன்றை ஏந்தியவர்; காந்தள் இதழ் போன்ற மெல்லிய விரல்களை
உடைய பார்வதிதேவியைத் தமது பாகமாகக் கொண்டவர்; பகைவராகிய திரிபுரத்து அசுரரின்
முப்புரங்களை அழித்தவர்; சிவந்த
திருமேனியையும் கரியமிடற்றையும் உடையவர்; இத்தகையோராய்த்
திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய தலைவராகிய சிவபிரான் திருவடிகளை அடைபவர்களைப்
போக்கற்கு அரிய நோய்கள் எவையும் அடையா.
பாடல்
எண் : 6
அரவம்
பூண்பர்,அணி யுஞ்சிலம்பு
ஆர்க்க அகந்தொறும்
இரவில்
நல்லபலி பேணுவர், நாண்இலர், நாமமே
பரவு
வார்வினை தீர்க்கநின் றார்,திரு வாஞ்சியம்
மருவி
ஏத்தமட மாதொடு நின்றஎம் மைந்தரே.
பொழிப்புரை :அரவை அணிகலனாகப்
பூண்பவர்; காலில் அணியும்
சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல பலியைப் பெறுபவர்; தம் திருப்பெயர்களைக் கூறிப் பரவுவார்
வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு உமையம்மையாரோடு
எழுந்தருளியுள்ளார்.
பாடல்
எண் : 7
விண்ணில்
ஆனபிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே
கண்ணி
னால்அநங் கன்உட லம்பொடி ஆக்கினார்,
பண்ணில்
ஆனஇசை பாடன்மல்கும் திரு வாஞ்சியத்து அண்ணலார் தம்அடி போற்றவல் லார்க்குஇல்லை
அல்லலே.
பொழிப்புரை :வானகத்தே தோன்றிய
பிறைமதியைத் தம் திரு முடியில் தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை
நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய
திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப் போற்றவல்லார்க்கு அல்லல்
இல்லை.
பாடல்
எண் : 8
மாட
நீடுகொடி மன்னிய தென்இலங் கைக்குமன்
வாடிஊ
டவரை யால்அடர்த் து,அன்றுஅருள் செய்தவர்,
வேட
வேடர்,திரு வாஞ்சியம் மேவிய
வேந்தரைப்
பாட
நீடுமனத் தார்வினை பற்றுஅறுப் பார்களே.
பொழிப்புரை :நீண்ட கொடிகள்
நிலைத்துள்ள மாடவீடுகளைக் கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடிவருந்தக்
கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன் பொருட்டு வேட்டுவக் கோலம்
தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப் பெறுவர்.
பாடல்
எண் : 9
செடிகொள்
நோயின்அடை யார்,திறம் பார்செறு
தீவினை,
கடிய
கூற்றமும் கண்டுஅக லும்,புகல் தான்வரும்,
நெடிய
மாலொடுஅயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்து
அடிகள் பாதம்அடைந் தார்அடி யார்அடி
யார்கட்கே.
பொழிப்புரை :நீண்டுயர்ந்த
திருமாலும் பிரமனும் தம்மை வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய
சிவபிரான் திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள், துன்பம் தரும் நோய்களை அடையார்.
துன்புறுத்தும் தீவினைகளால் மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி
அகல்வான். சிவகதி அவர்களைத் தேடிவரும்.
பாடல்
எண் : 10
பிண்டம்
உண்டுதிரி வார்,பிரியும் துவர்
ஆடையார்,
மிண்டர்
மிண்டுமொழி மெய்அல, பொய்இலை எம்இறை,
வண்டு
கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்து
அண்ட
வாணன்அடி கைதொழு வார்க்குஇல்லை அல்லலே.
பொழிப்புரை :பிறர் திரட்டித்தந்த
சோற்றை உண்டு திரியும் சமணரும்,
செந்நிற
ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட
புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல. பொய்யிலியாகிய எம்
இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன் நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த
திருவாஞ்சியத்துள் எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன் திருவடிகளைக்
கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.
பாடல்
எண் : 11
தென்றல்
துன்றுபொழில் சென்றுஅணை யுந்திரு வாஞ்சியத்து
என்றும் நின்றஇறை யானை உணர்ந்துஅடி
ஏத்தலால்
நன்று
காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்றும்
உள்ளம்உடை யார்அடை வார்உயர் வானமே.
பொழிப்புரை :தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன்
சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை உணர்ந்து அவனடிகளை ஏத்தித்
துதித்தலால், நன்மை தரும்
காழிப்பதியுள் மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில்
ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடுபேற்றை
அடைவர்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 262
காலம்
தவறு தீர்ந்து, எங்கும்
கலிவான் பொழிந்து, புனல்கலந்து,
ஞாலம்
எல்லாம் குளிர்தூங்கி,
உணவு பெருகி, நலம்சிறப்ப,
மூல
அன்பர் இருவர்களும்
மொழிமா லைகளும்
பலசாத்தி,
நீல
கண்டர் உறைபதிகள்
பிறவும் வணங்க
நினைவுற்றார்.
பொழிப்புரை : கால நிலைமையால்
ஏற்பட்ட வறுமை நீங்கி, ஒலிக்கும் மேகம் மழை
பொழிந்து நீர் பெருகிப் பரவி உலகம் எங்கும் குளிர்ச்சி மிகுந்து, உணவுப் பொருள்கள் பெருக விளைந்து, நன்மை பெருக, அதனால் உலகம் நன்மை அடைவதற்குக் காரணமாக
நின்ற அப்பெருமக்கள் இருவரும், மொழிமாலையான தேவாரப்
பதிகங்கள் பலவற்றையும் பாடிச் சாத்தித், திருநீலகண்டரான
இறைவர் எழுந்தருளியிருக்கும் பிற திருப்பதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும் என்று
எண்ணினர்.
பெ.
பு. பாடல் எண் : 263
வாய்ந்த
மிழலை மாமணியை
வணங்கி, பிரியா விடைகொண்டு,
பூந்தண்
புனல்சூழ் வாஞ்சியத்தைப்
போற்றி, புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த
அன்பி னால் இறைஞ்சி
இசைவண் தமிழ்கள்
புனைந்துபோய்ச்
சேர்ந்தார்
செல்வத் திருமறைக்காடு
எல்லை இல்லாச்
சீர்த்தியினார்.
பொழிப்புரை : அரிதில் கிடைக்கப்
பெற்ற திருவீழிமிழலையின் பெருமணியாம் இறைவரை வணங்கிப் பிரிய இயலாத நிலையில் விடை
பெற்றுக் கொண்டு, அழகான குளிர்ந்த
நீரினாலே சூழப்பட்ட திருவாஞ்சியத்திற்குச் சென்று வழிபட்டு, வினையின் நீங்கி விளங்கிய அறிவினனாய
சிவபெருமான் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய மற்ற திருப்பதிகளையும் அன்பினால்
இறைஞ்சித் தொழுது, இசையும் வளமையுமுடைய
தமிழ்ப் பதிகங்களைப் பாடி, மேற்சென்று, அளவில்லாத சிறப்புடையராய அப்பெருமக்கள்
இருவரும், செல்வம் மிக்க
திருமறைக்காட்டைச் சென்றடைந்தனர்.
நாவரசர்
திருவாஞ்சியத்திற்கு இதற்கு முன்னரும் (பா.216) எழுந்தருளியிருப்பினும், ஆசிரியர் சேக்கிழார் ஆங்கு அணைந்தார்
என்ற அளவிலேயே கூறியுள்ளனர்.
இம்முறை எழுந்தருளிய பொழுது
திருவாஞ்சியத்தைப் போற்றி என்பதால் இதுபொழுது பதிகத்தைப் பாடினர் என்றலே பொருந்துவதாம்.அப்பதிகம்:
`படையும் பூதமும்` (தி.5 ப.67) - திருக்குறுந்தொகை. `புனிதர் வாழ்பதிகள் ........ வண்டமிழ்கள்
புனைந்து` என்பதால்
திருவாஞ்சியத்திற்கும் திருமறைக்காட்டிற்கும் இடையில் உள்ள பல பதிகளையும்
ஞானசம்பந்தரொடு இவரும் சேர்ந்து சென்றிருப்பதால், அங்கெல்லாம் பதிகங்கள் பாடியே
சென்றிருக்க வேண்டும்.
அப்பதிகளாக அறிவன: திருத்தலையாலங்காடு, திருச்சாத்தங்குடி, திருக்கரவீரம், திருவிளமர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண் டலை நீணெறி, திருக்களர் என்பனவாம். (தி.12 பு.28 பா.575) எனி னும் இப்பதிகளுள் திருத்தலையாலங்காடு
என்ற பதிக்கு மட்டுமே திருப்பதிகம் கிடைத்துள்ளது, அப்பதிகம்: `தொண்டர்க்கு` (தி.6 ப.79) - திருத்தாண்டகம்.
5. 067 திருவாஞ்சியம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
படையும்
பூதமும் பாம்பும்புல் வாய்அதள்
உடையும்
தாங்கிய உத்தம னார்க்குஇடம்
புடைநி
லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய
வல்லவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே.
பொழிப்புரை : படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான் தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய
பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய
பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.
பாடல்
எண் : 2
பறப்பை
யும்பசு வும்படுத் துப்பல
திறத்த
வும்உடை யோர்திக ழும்பதி
கறைப்பி
றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு
டைத்திரு வாஞ்சியம் சேர்மினே.
பொழிப்புரை : பறவை வடிவாகிய
யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை
உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய
பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய
திருவாஞ்சியம் சேர்வீராக.
பாடல்
எண் : 3
புற்றில்
ஆடுஅர வோடு புனல்மதி
தெற்று
செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று
மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப்
பாடுவார்க் குப்பாவம் இல்லையே.
பொழிப்புரை : புற்றில் ஆடும்
இயல்புடைய பாம்பினோடு கங்கையும்,
பிறையும்
பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப்பற்றிப்
பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை.
பாடல்
எண் : 4
அங்கம்
ஆறும் அருமறை நான்குடன்
தங்கு
வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண்
மால்இடம் ஆர்திரு வாஞ்சியம்
தங்கு
வார்நம் அமரர்க்கு அமரரே.
பொழிப்புரை : நம் தேவதேவராகிய
இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும்
தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும் நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை
இடப்பாற்கொண்டு தங்குவார்.
பாடல்
எண் : 5
நீறு
பூசி நிமிர்சடை மேல்பிறை
ஆறு
சூடும் அடிகள் உறைபதி
மாறு
தான்ஒருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி
வாழ்பவர்க் குச்செல்வம் ஆகுமே.
பொழிப்புரை : திருநீறு பூசி
நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும்
வயல்வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும்.
பாடல் எண் : 6
அற்றுப்
பற்றுஇன்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற
நல்துணை ஆவான் உறைபதி
தெற்று
மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச்
சேர்பவர்க் குக்கருத்து ஆவதே.
பொழிப்புரை : பாசக்கட்டுகள்
நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல
துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள்
சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன்.
பாடல்
எண் : 7, 8, 9
* * * * * * * * * *
* *
பாடல்
எண் : 10
அருக்கன்
அங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ்
சேவடி யான்திக ழுந்நகர்
ஒருத்தி
பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தி
யால்அடை வார்க்குஇல்லை அல்லலே.
பொழிப்புரை : சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற
சேவடியான் திகழும் நகரமாகியதும்,
மங்கையை
ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால்
அடைவார்க்கு அல்லல் இல்லை.
திருச்சிற்றம்பலம்
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருவீழிமிழலையைப் பணிந்து பாடிய பின், திருவாஞ்சியம் சென்று தொழுது
பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12
பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 60)
பெரிய
புராணப் பாடல் எண் : 60
வாசி
அறிந்து காசுஅளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு
மிக்க திருவருள்முன்
பெற்று, திருவாஞ்
சியத்துஅடிகள்
பாச
மறுத்துஆட் கொள்ளும் தாள்
பணிந்து, "பொருவ
னார்"என்னும்
மாசுஇல்
பதிகம் பாடி அமர்ந்து,
அரிசிற்
கரைப்புத்தூர் அணைந்தார்.
பொழிப்புரை : தாம் வழங்கிய
பொற்காசுகளில் குற்றமும், குற்றம் இன்மையுமாகக்
கொடுத்திட வல்ல திருவீழிமிழலையில் அமர்ந்து அருளும் பெருமானிடம், உயிர் விளக்கம் பெறுதற்கான அருள்
பெற்றுத்
திருவாஞ்சியத்தில் அமர்ந்தருளும் சிவபெருமானின், பாசம் அறுத்து ஆட்கொள்ளும் திருவடி
மலர்களைப் பணிந்து, `பொருவ னார்\' எனத் தொடங்கும் மாசில்லாத, புகழுடைய திருப்பதிகத்தினைப் பாடி
அங்குத் தங்கிப் பின் திருஅரிசில்கரைப்புத்தூரை அணுகச் சென்றார்.
`பொருவனார்' எனத் தொடங்கும் பதிகம், பியந்தைக்காந்தாரப் பண்ணிலமைந்ததாகும்
(தி.7 ப.76).
7. 076 திருவாஞ்சியம் பண் -
பியந்தைக் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பொருவ
னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு
மருவ
னார்,மரு வார்பால்
வருவதும் இல்லைநம் அடிகள்,
திருவ
னார்பணிந் தேத்தும் திகழ்திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார்
அடியாரை ஊழ்வினை நலியஒட் டாரே
பொழிப்புரை : நம் இறைவர் , தீயவரோடு மாறுபடுபவர் ; முப்புரி நூலை அணிபவர் ; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு
கூடியிருத்தலை உடையவர் ; தம்மை
அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை ;
திருமகளை
உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற , புகழால்
விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற வராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது
ஒரு தலையாகக் காப்பர் .
பாடல்
எண் : 2
தொறுவில்
ஆன்இள ஏறுதுண்என இடிகுரல் வெருவிச்
செறுவில்
வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத்து ஒதுங்கக்
கறு
இலாமனத் தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு
இலாதவெண் ணீறு பூசுதல் மன்னும்ஒன்று உடைத்தே
பொழிப்புரை : பசுக் கூட்டத்துள் , இளைய ஆனேறு , கேட்டவர் மனம் துண்ணென்று வெருவுமாறு
ஒலிக்கின்ற குரலுக்கு அஞ்சி , வயல்களில் உள்ள
வாளைமீன்கள் ஓடவும் , செவ்வரிகளையுடைய
கயல்மீன்கள் தாமரைப் பூக்களில் ஒளியவும் , பகையில்லாத மனத்தை உடைய சான்றோர்
அவற்றைக்கண்டு இரங்குதல் பொருந்திய திரு வாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும்
இறைவர் , குற்றமற்ற வெள்ளிய
நீற்றைப் பூசுதல் , சிறந்ததொரு கருத்தை
உடையது .
பாடல்
எண் : 3
தூர்த்தர்
மூவெயில் எய்து சுடுநுனைப் பகழி அதுஒன்றால்
பார்த்த
னார்திரள் தோள்மேற் பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த
மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து
மாமணிக் கச்சுஅங்கு ஒருதலை பலதலை உடைத்தே
பொழிப்புரை : தீர்த்தமாகிய , சிறந்த , பூக்களையுடைய பொய்கைகளையுடைய , புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில்
எழுந்தருளியிருக்கும் இறைவர் , நெறி பிறழ்ந்தவரது
மூன்று மதில்களை , சுடுகின்ற
முனையையுடைய ஓர் அம்பினால் அழித்து , ஒருவனாகிய
அருச்சுனனது திரண்ட தோள்மீது பல கூரிய அம்புகளை அழுத்தி , தாம் கட்டுகின்ற பெரிய மாணிக்கத்தை உடைய
கச்சு , ஒரு பக்கத்திலே பல
தலைகளையுடையதாய் இருக்கின்றது ;
இது
வியப்பு !
பாடல்
எண் : 4
சள்ளை
வெள்ளைஅம் குருகு
தான்அது வாம்எனக்
கருதி
வள்ளை
வெண்மலர் அஞ்சி
மறுகிஓர் வாளையின்
வாயில்
துள்ளு
தெள்ளுநீர்ப் பொய்கைத்
துறைமல்கு
வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை
நுண்பொடிப் பூசும்
விகிர்தம்ஒன்று
ஒழிகிலர் தாமே
பொழிப்புரை : `சள்ளை` என்னும் மீன், வள்ளைக் கொடியின் வெண்மையான மலரை , வெண்மையான குருகு என்று கருதி அஞ்சிச்
சுழன்று, பின், வாளைமீனின் வாயிலே சென்று துள்ளுகின்ற, தெளிவாகிய நீரையுடைய பொய்கைத் துறைகள்
நிறைந்த திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் , வெள்ளிய, நுண்ணிய சாம்பலைப் பூசுகின்ற
வேறுபாடொன்றனை எஞ்ஞான்றும் ஒழியாதே உடையர் .
பாடல்
எண் : 5
மைகொள்
கண்டர்எண் தோளர்
மலைமகள் உடன்உறை
வாழ்க்கைக்
கொய்த
கூவிள மாலை
குலவிய சடைமுடிக்
குழகர்
கைதை
நெய்தல்அம் கழனி
கமழ்புகழ்
வாஞ்சியத்து அடிகள்
பைதல்
வெண்பிறை யோடு
பாம்புடன் வைப்பது
பரிசே
பொழிப்புரை : கருமை நிறத்தைக்
கொண்ட கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மலைமகளோடு உடன்உறைகின்ற வாழ்க்கையையும் , பறிக்கப்பட்ட கூவிளை இலையால் ஆகிய மாலை
விளங்குகின்ற சடைமுடியையும் உடைய அழகராகிய , நெய்தற் பூக்களையுடைய அழகிய கழனிகளில் , தாழம்பூக்கள் மணம் வீசுகின்ற , புகழையுடைய திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும்
இறைவர்க்கு , இளைய வெண்பிறையோடு
பாம்பைச் சேர்த்து அணிவதுதான் இயல்பு .
பாடல்
எண் : 6
கரந்தை
கூவிள மாலை கடிமலர்க் கொன்றையும் சூடிப்
பரந்த
பாரிடம் சூழ வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து
மாடங்கள் நீடு திகழ்தரு வாஞ்சியத்து உறையும்
மருந்த
னார்அடி யாரை வல்வினை நலியஒட் டாரே
பொழிப்புரை : தம் இயல்பு காரணமாக , கரந்தைப் பூவினாலும் , கூவிள இலையாலும் , மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய
மாலைகளைச் சூடிக்கொண்டு , மிக்க பூதகணங்கள்
புடைசூழ வருபவரும் , நம் இறைவரும் ஆகிய , திருத்தமான மாடங்கள் உயர்ந்து
தோன்றுகின்ற , புகழால் விளங்குகின்ற
திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் அமுதம் போல்பவர் , தம் அடியாரை , வலிய வினைகள் வந்து துன்புறுத்த ஒட்டாது
காப்பவரேயாவர் .
பாடல்
எண் : 7
அருவி
பாய்தரு கழனி
அலர்தரு குவளைஅம்
கண்ணார்
குருவி
ஆய்கிளி சேர்ப்பக்
குருகுஇனம் இரிதரு
கிடங்கில்
பருவ
ரால்குதி கொள்ளும்
பைம்பொழில்
வாஞ்சியத்து உறையும்
இருவ
ரால்அறி ஒண்ணா
இறைவனது அறைகழல் சரணே
பொழிப்புரை : மலர்ந்த குவளைப்
பூப்போலும் கண்களையுடைய மகளிர் ,
நீர்த்
திரள் பாய்கின்ற கழனிகளில் கதிர்களை ஆராய்கின்ற குருவிகளையும் , கிளிகளையும் அங்கு நின்றும் நீங்கிச்
சென்று சேரப் பண்ணுகையால் , குருகுகளின் கூட்டம்
அஞ்சி நீங்குகின்ற கால்வாய் களில் பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற , பசிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியத்தில்
எழுந்தருளியிருக்கும் , ` மால் , அயன் ` என்பார்க்கு அறிய ஒண்ணாத இறைவரது , ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளே
நமக்குப் புகலிடம் .
பாடல்
எண் : 8
களங்கள்
ஆர்தரு கழனி
அளிதரக் களிதரு வண்டு
உளங்கல்
ஆர்கலிப் பாடல்
உம்பரில் ஒலித்திடும்
காட்சி
குளங்கள்
ஆல்நிழல் கீழ்நல்
குயில்பயில்
வாஞ்சியத்து அடிகள்
விளங்கு
தாமரைப் பாதம்
நினைப்பவர் வினைநலிவு
இலரே
பொழிப்புரை : ஏர்க்களம் நிறைதற்கு
ஏதுவாகிய வயல்கள் அன்பைத் தர , அதனால் மகிழ்வுற்ற
வண்டுகள் , கேட்போர் உள்ளம்
இன்பம் நிறைதற்குரிய ஆரவாரமான இசை ,
மேற்சென்று
ஒலிக்கின்ற கேள்வியை , குளக்கரைகளில் உள்ள
ஆலமரத்தின் கீழ்க்கிளையில் இருந்து நல்ல குயில்கள் பழகுகின்ற திருவாஞ்சியத்தில்
எழுந்தருளி யிருக்கும் இறைவரது,
ஒளி
வீசுகின்ற , தாமரை மலர்போலும்
திருவடி களை நினைப்பவர் வினையால் துன்புறுத்தப்படுதல் இலராவர் .
பாடல்
எண் : 9
வாழை
யின்கனி தானும்
மதுவிம்மு
வருக்கையின் சுளையும்
கூழை
வானரம் தம்மில்
கூறுஇது சிறிதுஎனக்
குழறித்
தாழை
வாழைஅம் தண்டால்
செருச்செய்து
தருக்குவாஞ் சியத்துள்
ஏழை
பாகனை அல்லால்
இறைஎனக் கருதுதல்
இலமே
பொழிப்புரை : வாழைப் பழங்களையும் , சாறு மிக்கொழுகுகின்ற பலாப் பழத்தின்
சுளைகளையும் , ` எனக்கு வைத்த இப்
பங்கு சிறிது ` என்று இகழ்ந்து , அறிவு குறைந்த குரங்குகள் தமக்குள்
கலாய்த்து , தாழை மட்டையும் , வாழை மட்டையுமாகிய கோல்களால் போர்
செய்து செருக்குக் கொள்கின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளி யிருக்கும் மங்கை
பங்காளனை யல்லது வேறொருவரை , யாம் , ` கடவுள் ` என்று நினைத்தல் இலம் .
பாடல்
எண் : 10
செந்நெ
லங்கலங் கழனித்
திகழ்திரு
வாஞ்சியத்து உறையும்,
மின்
அலங்கல்அம் சடைஎம்
இறைவனது அறைகழல்
பரவும்
பொன்அ
லங்கல்நன் மாடப்
பொழில்அணி நாவல்ஆ
ரூரன்
பன்
அலங்கல்நல் மாலை
பாடுமின் பத்தர்
உளீரே
பொழிப்புரை : செந்நெற்களையுடைய
அழகிய மரக்கலம் போலும் கழனிகளையுடைய புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத் தில்
எழுந்தருளியிருக்கும் , இனிய மாலைகளை யணிந்த
சடையை யுடைய எம் இறைவனது , ஒலிக்கின்ற
கழலையணிந்த திருவடிகளைத் துதித்த ,
பொன்னரி
மாலைகள் தூக்கப்பட்ட நல்ல மாடங்களையுடைய , சோலைகளையுடைய திருநாவலூரில் தோன்றிய
நம்பியாரூரனது , பல அழகுகளையுடைய , கற்கத் தகுந்த நல்ல பாமாலையை , அடியராய் உள்ளவர்களே , பாடுமின்கள் .
திருச்சிற்றம்பலம்
சிறப்பான பதிவு. மிகவும் நன்றி.
ReplyDelete