திருவண்ணாமலை - 0539. கமல மொட்டை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கமல மொட்டை (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் உறவு ஆகாது.


தனன தத்தத் தத்த தத்தத் தனதன
     தனன தத்தத் தத்த தத்தத் தனதன
          தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான


கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
     நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
          கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற ......இளநீரைக்

கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
     சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
          கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத .....னபிஷேகம்

அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
     அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
          னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ ...... டிருதாளம்

அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
     சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
          மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ......   ளுறவாமோ

தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
     தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
          தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட ......    எனவோதிச்

சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
     விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
          தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ...... கழுகாட

அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
     அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
          அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ......மயிலோனே

அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
     னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
      அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள்.....பெருமாளே.


பதம் பிரித்தல்


கமல மொட்டைக் கட்டு அழித்து, குமிழியை
     நிலை குலைத்து, பொன் குடத்தைத் தமனிய
          கலச வர்க்கத்தைத் தகர்த்து, குலை அற ......இளநீரைக்

கறுவி, வட்டைப் பின் துரத்திப் பொருது,
     சயம் விளைத்து, செப்பு அடித்து, குலவிய
          கரி மருப்பைப் புக்கு ஒடித்து, திறல்மதன்.....அபிஷேகம்

அமலர் நெற்றிக் கண் தழற்குள் பொடிசெய்து,
     அதிக சக்ரப் புள் பறக்க, கொடுமையின்
          அடல் படைத்து அச்சப் படுத்திச் சபதமொடு ......இருதாளம்

அறைதல் கற்பித்து,  பொருப்பைப் பரவிய
     சிறகு அறுப்பித்து, கதிர்த்துப் புடை படும்
          அபிநவச் சித்ரத் தனத்துத் திருடிகள் ......உறவு ஆமோ?

தமர மிக்கு, திக்கு அதிர்க்க, பலபறை
     தொகு தொகுக்குத் தொத்தொகுக்குத் தொகுதொகு
          தரிகிடத்தத் தத்த ரிக்கத் தரிகிட ......     என ஓதிச்

சவடு உறப் பக்கப் பழு ஒத்தி, புகை எழ,
     விழிகளுள் செக்கச் சிவத்து, குறளிகள்
          தசைகள் பட்சித்துக் களித்துக் கழுதொடு......கழுகுஆட,

அமலை உற்று, கொக்கரித்து, படுகள
     அசுரர் இரத்தத்தில் குளித்து, திமியென
          அடி நடித்திட்டு, ட்டு இடித்துப் பொருதிடு......மயிலோனே!

அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியின்
     உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர!
      அருணையிற் சித்தித்து எனக்குத் தெளிவு அருள்.....பெருமாளே.
  

பதவுரை


      தமரம் மிக்குத் திக்கு அதிர்க்க --- ஒலி மிகுந்து திசைகள் அதிர்ச்சி உற,

     பல பறை தொகு தொகுக்குத் தொத்தொகுக்குத் தொகுதொகு தரிகி டத்தத் தத்தரிக்கத் தரிகிட என ஓதி --- பலவகையான பறைகள் தொகு தொகுக்குத் தொத் தொகுக்குத் தொகு தொகு தரிகிடத்தத் தத்தரிக்கத் தரிகிட என்ற ஒலியுடன் முழங்க,

      சவடு உற, பக்கப் பழு ஒத்தி --- அழுத்தம் உண்டாகும்படி பக்க விலா எலும்புகளைத் தாக்கி,

     புகை எழ விழிகள் உள் செக்கச் சிவத்து --- புகை எழுமாறு கண்கள் மிகவும் சிவந்து,

     குறளிகள் தசைகள் பட்சித்துக் களித்து --- மாய வித்தைகள் செய்யும் பேய்கள் மாமிசங்களை உண்டு களிப்படையவும்,

     கழுதொடு கழுகு ஆட –-- பேய்களுடன் கழுகுகள் ஆடவும்,

      அமலை உற்றுக் கொக்கரித்து --- ஆரவாரம் மிகுந்து கொக்கரித்தும்

     படுகள அசுரர்  இரத்தத்திற் குளித்து --- பலர் மாண்டு போன போர்க்களத்தில் அசுரர்களின் உதிரத்தில் குளித்து,

     திமி என அடி நடித்திட்டு, இட்டு இடித்துப் பொருதிடு மயிலோனே --- திமி என்ற ஒலியுடன் பாதங்களை வைத்து நடித்து, மேல் சென்று இடித்து, போர் புரிந்த மயில்வாகனரே!

      அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியின் உலவு --- அழகு மிகுந்த அலங்காரமான பச்சைக் குதிரையாம் மயிலின் மீது ஏறி உலாவுகின்ற

     மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குரு பர --- உண்மை வெளிப்படையாக வந்த நல்ல சற்குருபரனே!

     அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருள் பெருமாளே --- திருவண்ணாமலையில் அடியேன் சித்தி பெறுமாறு அடியேனுக்கு அறிவுத் தெளிவை அருள் புரிந்த பெருமையில் சிறந்தவரே!

      கமல மொட்டைக் கட்டு அழித்து --- தாமரையின் மொட்டை கட்டு அவிழ்த்து அழகை இழக்கச் செய்தும்,

     குமிழியை நிலை குலைத்து --- நீர்க்குமிழியை நிலை குலைந்து உருவிழக்கச் செய்தும்,

     பொற் குடத்தை --- தங்கக் குடத்தையும்,

     தமனிய கலச வர்க்கத்தைத் தகர்த்து --- பொன்னால் ஆன கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்தும்,

     குலை அற இளநீரைக் கறுவி ---  குலையாக உள்ள இளநீரைச் சீறியும்,

      வட்டைப் பின் துரத்திப் பொருது --- சொக்கட்டான் காய்களைப் புறம் காணச் செய்து,

     அபசயம் விளைத்து --- போர் செய்து தோல்வியுறச் செய்தும்,

     செப்பு அடித்து --- செப்புச் சிமிழை நொறுக்கியும்,

     குலவிய கரி மருப்பைப் புக்கு ஒடித்து --- விளங்கிய யானையின் கொம்பைப் போய் ஒடித்தும்,

     திறல் மதன் அபிஷேகம் --- வலிமை மிக்க மன்மதனுடைய மகுடத்தை

      அமலர் நெற்றிக் கண் தழற்கு உள் பொடிசெய்து --- சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பில் பொடி படுத்தியும்,

     அதிக சக்ரப் புள் பறக்க --- அதிக தூரத்தில் சக்கரவாகப் பறவை பறந்து போகும்படி

     கொடுமையின் அடல் படைத்தி --- கொடுமையான வலிமை கொண்டு அதை அச்சப்படுத்தியும்,

     சப்படுத்திச் சபதமொடு இரு தாளம் --- ஒளியுடனே இரு தாளங்களும் அறைதல் கற்பித்து --- ஒன்றோடு ஒன்று அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்தும்,

      பொருப்பைப் பரவிய சிறகு அறுப்பித்து --- மலையினுடைய பரந்த சிறகுகளை அறுபடும்படிச் செய்தும்,

    கதிர்த்துப் புடைபடும் அபிநவ சித்ரத் தனத்துத் திருடிகள் உறவு ஆமோ --- வளர்ச்சி உற்றுப் பக்கத்து இடம் யாவும் பரவி, புதுமையும் அழகும் படைத்த கொங்கைகளை உடைய திருடிகளாம் பொதுமாதர்களின் உறவு ஆமோ? (ஆகாது).


பொழிப்புரை


         ஒலி மிகுந்து திசைகள் அதிர்ச்சி உற, பலவகையான பறைகள் தொகு தொகுக்குத் தொத் தொகுக்குத் தொகு தொகு தரிகிடத்தத் தத்தரிக்கத் தரிகிட என்ற ஒலியுடன் முழங்க, அழுத்தம் உண்டாகும்படி பக்க விலா எலும்புகளைத் தாக்கி, புகை எழுமாறு கண்கள் மிகவும் சிவந்து, மாய வித்தைகள் செய்யும் பேய்கள் மாமிசங்களை உண்டு களிப்படையவும், போய்களுடன் கழுகுகள் ஆடவும், ஆரவாரம் மிகுந்து கொக்கரித்தும் பலர் மாண்டுபோன போர்க்களத்தில் அசுரர்களின் உதிரத்தில் குளித்து, திமி என்ற ஒலியுடன் பாதங்களை வைத்து நடித்து, மேல் சென்று இடித்து, போர் புரிந்த மயில்வாகனரே!

         அழகு மிகுந்த அலங்காரமான பச்சைக் குதிரையாம் மயிலின் மீது ஏறி உலாவுகின்ற உண்மை வெளிப்படையாக வந்த நல்ல சற்குருபரனே!

         திருவண்ணாமலையில் அடியேன் சித்தி பெறுமாறு அடியேனுக்கு அறிவுத் தெளிவை அருள் புரிந்த பெருமையில் சிறந்தவரே!

         தாமரையின் மொட்டை கட்டு அவிழ்த்து அழகை இழக்கச் செய்தும்,  நீர்க்குமிழியை நிலை குலைந்து உருவிழக்கச் செய்தும், தங்கக் குடத்தையும், பொன்னால் ஆன கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்தும், குலையாக உள்ள இளநீரைச் சீறியும், சொக்கட்டான் காய்களைப் புறம் காணச் செய்து, போர் செய்து தோல்வியுறச் செய்தும், செப்புச் சிமிழை நொறுக்கியும், விளங்கிய யானையின் கொம்பைப் போய் ஒடித்தும், வலிமை மிக்க மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பில் பொடி படுத்தியும், அதிக தூரத்தில் சக்கரவாகப் பறவை பறந்து போகும்படி கொடுமையான வலிமை கொண்ட அதை அச்சப்படுத்தியும், ஒளியுடனே இரு தாளங்களும் ஒன்றோடொன்று அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்தும், மலையினுடைய பரந்த சிறகுகளை அறுபடும்படிச் செய்தும், வளர்ச்சி உற்றுப் பக்கத்து இடம் யாவும் பரவி, புதுமையும் அழகும் படைத்த கொங்கைகளை உடைய திருடிகளாம் பொது மாதர்களின் உறவு ஆமோ? (ஆகாது).

விரிவுரை
  
இந்தத் திருப்புகழ் மாதர்களின் தன வர்ணனைப் பொடல்.

தாமரை மொட்டு, நீர்க்குமிழி, பொற்குடம், தங்கக் கலசம், இளநீர், சூதாடும் கருவி, செப்புச் சிமிழ், கரியின் கொம்பு, மன்மதன் முடி, சக்ரவாகப் பறவை, தாளம், மலை என்ற இவைகளைக் கொங்கைகள் வெல்லுகின்றன என்பதை முதல் நான்கு அடிகள் விளக்குகின்றன.

இதில் தற்குறிப்பேற்றம் என்ற அணியைக் காணலாம்.  தாமரையின் மொட்டு தானே மலர்வதை, தனங்களைக் கண்டு மலர்வது போலவும்,

நீர்க்குமிழி தானே உடைவதை தனத்துக்கு அஞ்சி உடைவதாகவும்,

சூதாட்டத்தில் சூதுக் கருவி ஆட்டத்தில் தோற்பதையைும்,

யானையின் கொம்பை கண்ணன் ஒடித்ததையும்,

மன்மதன் சிவபிரான் கனல் கண்ணால் எரிந்ததையும்,

சக்கரவாகப் பறவை நெடுந்தொலைவில் பறப்பதையும்,

இந்திரன் மலைகைகளின் சிறகை அரிந்ததையும்,

தாளம் ஒன்றுடன் ஒன்று தட்டுவதையும்,

தற்குறிப்பு ஏற்றமாக அடிகளார் கூறும் திறம் மிகமிக வியத்தற்கு உரியது.

தமர மிக்குப் …... பொருதிடு ---

இந்த மூன்று அடிகள் போர்க்களத் திறத்தையும் மயிலின் சிறப்பையும் கூறுகின்றன.

மெய்ப் ப்ரத்யட்ச நற்குருபர ---

உண்மையாக கட்புலன் காண வெளிப்பட்டுத் தோன்றி அருள்கின்ற தெய்வம் முருகன்.

ஒழியாத புவனத்து உயிர்க்கு உயிரதாய் நிற்பது
ஒருதெய்வம் ஊண்டுஎன எடுத்து
உரையால் உணர்த்துவதை ஒழிய எவரெவர்கட்கும்
ஊன்கண் உளக்கண்ணதாம்
விழியாக முன்னின்று தண்ணளி சுரந்து, அவர்கள்
வேண்டிய வரம் கொடுப்பான்,
மெய்கண்ட தெய்வம்இத் தெய்வம்அல்லால் புவியில்
வேறுஇல்லை என்று உணர்தியால்....                --- குமரகுருபரர்.


அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருளும். ---

இது அருணகிரியாரின் வரலாற்றுப் பகுதி.

கருத்துரை

அருணை அண்ணலே, விலைமாதர் உறவு கூடாது.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...