பன்றி பல பெற்றும் பயனில்லை




7. பன்றி பல ஈன்றும் என்ன?

நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும்
     குலம் முழுதும் நன்மை உண்டாம்;
அன்றி, அறிவு இல்லாத பிள்ளை ஒரு
     நூறு பெற்றும் ஆவது உண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
     ரே! சொன்னேன்! வருடம் தோறும்
பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று
     ஈன்றதனால் பயன்உண் டாமே;

     இதன் பொருள் ---

     மன்றில்  நடம்  புரிவாரே --- திருச்சிற்றம்பலத்திம் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளும்  பெருமானே!,

     தண்டலையாரே! --- திருத்தண்டலை என்னும்திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவவரே!,

     பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளைப் பெற்றெடுத்தாலும் பயன் என்ன?,

     குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் --- யானையானது ஒரு கன்றை பெற்றாலும் மிக்க பயன் உண்டாகும்.


     (அது போலவே),

     நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் --- நலம் தரும் பிள்ளை ஒருவனைப் பெற்றாலும் அவனது மரபுக்கு எல்லாம் நலம் உண்டாகும்,

     அன்றி --- அல்லாமல்,

     அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ --- அறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை விளையுமா? (இல்லை).

      கருத்து --- குலம் முழுதும் நன்மை உண்டாகும் என்றார். "எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின்" என்னும் திருவள்ளுவ நாயானர் அருள் வாக்கின்படி, குற்றமற்ற நல்ல மகன் ஒருவன் பிறந்துவிட்டால், எழுகின்ற பிறவி எல்லாம் தீயவை தாக்கமாட்டாது.

பொற்பு அறிவு இல்லாத பல புத்திரப் பேறு எய்தலின், ஓர்
நல் புதல்வனைப் பெறுதல் நன்று ஆமே - பொன்கொடியே!
பன்றிபல குட்டி பயந்ததனால் ஏதுபயன்?
ஒன்று அமையாதோ கரிக் கன்று, து.   

என்பது நீதிவெண்பா.

பொன்னால் ஆன கொடி போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்?  ஒன்றும் இல்லை. யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதா? நீ சொல். அதனால், நல்ல அறிவு இல்லாத பல பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும், நல்ல அறிவு உள்ள ஒரு மகனைப் பெறுதல் நலம் ஆகும் என்பது இந்தப் பாடலின் பொருள். இதனைச் சிந்திக்க.

அதனால், புத்திரப் பேறு வேண்டுவோர், சற்புத்திரனை வேண்டுவது நல்லது. 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...