திருவண்ணாமலை - 0542. கரிஉரி அரவம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிஉரி அரவம் (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் உறவு அற அருள்


தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான


கரியுரி அரவ மணிந்த மேனியர்
     கலைமதி சலமு நிறைந்த வேணியர்
          கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் ...... கஞ்சமாதின்

கனமுலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர் கயிலை யமர்ந்த காரணர்
          கதிர்விரி மணிபொ னிறைந்த தோளினர் ......கண்டகாள

விரிவென வுனது ளுகந்த வேலென
     மிகவிரு குழையு டர்ந்து வேளினை
          யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ ...குண்டுநாடும்

வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற
     விதமிகு கலவி பொருந்தி மேனியு
          மெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ .....ழிந்திடாதோ

எரிசொரி விழியு மிரண்டு வாளெயி
     றிருபிறை சயில மிரண்டு தோள்முகி
          லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ ...... டிந்துவீழ்வ

தெனவிழ முதுகு பிளந்து காளிக
     ளிடுபலி யெனவு நடந்து தாள்தொழ
          எதிர்பொரு துதிர முகந்த வேகமு ......   கைந்தவேலா

அரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலை
     அருணையி லறவு முயர்ந்த கோபுர
          மதினுறை குமர அநந்த வேதமொ ...... ழிந்துவாழும்

அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்
     அடவியி லரிவை குயங்கள் தோய்புய
          அரியர பிரம புரந்த ராதியர் ......        தம்பிரானே.


பதம் பிரித்தல்


கரி உரி, அரவம் அணிந்த மேனியர்,
     கலைமதி சலமும் நிறைந்த வேணியர்,
          கனல்மழு உழையும் அமர்ந்த பாணியர், ...... கஞ்ச மாதின்

கனமுலை பருகி வளர்ந்த காமனை
     முனிபவர், கயிலை அமர்ந்த காரணர்,
          கதிர் விரி மணிபொன் நிறைந்த தோளினர், ......கண்டகாள

விரிவு என, உனதுள் உகந்த வேல் என,
     மிக இரு குழையும் அடர்ந்து, வேளினை
          அனையவர் உயிரை விழுங்கி, மேலும் வெ ...குண்டு, நாடும்

வினைவிழி மகளிர் தனங்கள் மார்பு உற,
     விதமிகு கலவி பொருந்தி, மேனியும்
          எழில் கெட, நினைவும் அழிந்து, மாய்வது.....ஒழிந்திடாதோ?

எரிசொரி விழியும் இரண்டு வாள் எயிறு
     இருபிறை, சயிலம் இரண்டு தோள்,முகில்
          எனவரும் அசுரர் சிரங்கள் மேரு ......    இடிந்து வீழ்வது

என விழ, முதுகு பிளந்து, காளிகள்
     இடுபலி எனவும் நடந்து தாள்தொழ,
          எதிர்பொருது உதிரம் உகந்த வேகம் ......உகைந்த வேலா!

அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை
     அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம்
          அதின் உறை குமர! அநந்த வேதம் ...... மொழிந்து வாழும்

அறுமுக வடிவை ஒழிந்து, வேடர்கள்
     அடவியில் அரிவை குயங்கள் தோய் புய!
          அரி அர பிரம புரந்தர ஆதியர் ...... தம்பிரானே.


பதவுரை

       இரண்டு எரி சொரி விழியும் --- நெருப்பைச் சொரிகின்ற இரண்டு கண்களுடனும், 

     இரு பிறை வாள் எயிறு --- இருபிறைச் சந்திரனைப் போன்ற ஒளியுடைய பற்களுடனும்,

     சயிலம் இரண்டு தோள் --- மலை போன்ற இரண்டு தோள்களுடனும்,

     முகில் என வரும் --- கரிய மேகம் போல் வந்த, 

     அசுரர் சிரங்கள் --- அசுரர் தலைகள்,

     மேரு இடிந்து வீழ்வது என --– மேருமலை இடிந்து வீழ்வது போல் விழவும்,

     முதுகு பிளந்து --- முதுகு பிளவு படவும்,

     காளிகள் இடு பலி எனவும் நடந்து தாள் தொழ --– போர்க்களத்துக் காளிகள் தமக்கு இட்ட பலியுணவு என்று நடந்து உமது திருவடியைத் தொழவும்,

     எதிர் பொருது --- எதிரித்துப் போர் செய்து,

     உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா --- உதிரத்தை விரும்பின வேகத்துடன் சென்ற வேற்படையை உடையவரே!

      அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை --- சிங்கம், யானை, புலி முதலிய விலங்குகள் நெருங்கி உள்ள ஒளி வீசும் மலையாகிய,

     அருணையில் --- திருவண்ணாமலையில்,

     அறவும் உயர்ந்த கோபுரம் அதின் உறை குமர --– மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

      அநந்த வேதம் மொழிந்து வாழும் --- அளவில்லாத வேதங்கள் துதி செய்ய வாழுகின்ற,

     அறுமுக வடிவை ஒழிந்து --- ஆறுமுக வடிவத்தை விட்டு,

     வேடர்கள் அடவியில் --- வேடர்கள் வாழுகின்ற காட்டில்,

     அரிவை குயங்கள் தோய் புய --– வள்ளிநாயகியின் தனங்களைச் சேரும் தோள்களை உடையவரே!

     அரி அர பிரம புரந்தர ஆதியர் தம்பிரானே --- திருமால் உருத்திரன் பிரமன் இந்திரன் முதலியவர் போற்றும் தனிப்பெரும் தலைவரே!

      கரி உரி அரவம் அணிந்த மேனியர் --- யானையின் உரித்த தோலையும் பாம்பையும் தரித்த திருமேனியரும்,

     கலைமதி சலமும் நிறைந்த வேணியர் --- கலைகள் கொண்ட சந்திரனும் கங்கையும் நிறைந்த சடையினை உடையவரும்,

     கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் --- நெருப்பையும், மழுவாயுதத்தையும், மானையும் தரித்த திருக்கரங்களை உடையவரும்,

     கஞ்ச மாதின் கனமுலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் --- இலக்குமியின் அழகிய கொங்கையின் பாலை உண்டு வளர்ந்த மன்மதனைக் காய்ந்து அழித்தவரும்,

     கயிலை அமர்ந்த காரணர் --- திருக்கயிலாய மலையில் அமர்ந்துள்ள மூலப் பொருள் ஆனவரும்,

     கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் --- ஒளி வீசும் இரத்தினமும் பொன்னும் நிறைந்த தோள்களை உடையவரும்,

     கண்டகாள விரிவு என --– கழுத்தில் உள்ள விஷத்தின் விரிவோ இது என்னும் படியும்,

     உனது உள்உகந்த வேல் என --– தேவரீருடைய திருவுள்ளத்துக்கு உகந்த வேலாயுதமோ இது என்னும்படியும்,

     மிக இரு குழையும் அடர்ந்து ---  இரண்டு குழைகளை மிகவும் நெருங்கியும்,

     வேளினை அனையவர் உயிரை விழுங்கி --- மன்மதனை ஒத்த அழகினை உடைய ஆடவர்களின் உயிரையே விழுங்கியும்,

     மேலும் வெகுண்டு --- பின்னும் கோபித்து,

     நாடும் வினை விழி மகளிர் தனங்கள் மார்பு உற --– நாடுகின்ற செயலினை உடைய கண்களை உடைய பொது மாதர்களின் முலைகள் மார்பில் பொருந்த,

     விதம் மிகு கலவி பொருந்தி --- பலவிதமான காமலீலைகளில் பொருந்தி,

     மேனியும் எழில் கெட --- உடலின் அழகு அழியவும்,

     நினைவும் அழிந்து --- நினைவு அழிந்தும்,

     மாய்வது ஒழிந்திடாதோ --- இறந்து போகும் தன்மை தொலையாதோ ​?

பொழிப்புரை


         நெருப்பைச் சொரிகின்ற இரண்டு கண்களுடனும், இருபிறைச் சந்திரனைப் போன்ற ஒளியுடைய பற்களுடனும், மலை போன்ற இரண்டு தோள்களுடனும் கரிய மேகம் போல் வந்த அசுரர் தலைகள் மேருமலை இடிந்து வீழ்வது போல் விழவும், முதுகு பிளவுபடவும், போர்க்களத்துக் காளிகள் தமக்கு இட்ட பலியுணவு என்று நடந்து உமது திருவடியைத் தொழவும், எதிரித்துப் போர் செய்து உதிரத்தை விரும்பின வேகத்துடன் சென்ற வேற்படையை உடையவரே!

         சிங்கம், யானை, புலி முதலிய விலங்குகள் நெருங்கி உள்ள ஒளி வீசும் மலையாகிய, திருவண்ணாமலையில், மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

         அளவில்லாத வேதங்கள் துதி செய்ய வாழுகின்ற, ஆறுமுக வடிவத்தை விட்டு, வேடர்கள் வாழுகின்ற காட்டில் வள்ளிநாயகியின் தனங்களைச் சேரும் தோள்களை உடையவரே!

     திருமால் உருத்திரன் பிரமன் இந்திரன் முதலியவர் போற்றும் தனிப்பெரும் தலைவரே!

         யானையின் உரித்த தோலையும் பாம்பையும் தரித்த திருமேனியரும்,  கலைகள் கொண்ட சந்திரனும் கங்கையும் நிறைந்த சடையினை உடையவரும், நெருப்பையும், மழுவாயுதத்தையும், மானையும் தரித்த திருக்கரங்களை உடையவரும், இலக்குமியின் அழகிய கொங்கையின் பாலை உண்டு வளர்ந்த மன்மதனைக் காய்ந்து அழித்தவரும், திருக்கயிலாய மலையில் அமர்ந்துள்ள மூலப் பொருள் ஆனவரும், ஒளி வீசும் இரத்தினமும் பொன்னும் நிறைந்த தோள்களை உடையவரும், தமது கழுத்தில் தங்கி உள்ள விஷத்தின் விரிவோ இது என்னும் படியும்,  தேவரீருடைய திருவுள்ளத்துக்கு உகந்த வேலாயுதமோ இது என்னும்படியும், இரண்டு குழைகளை மிகவும் நெருங்கியும், மன்மதனை ஒத்த அழகினை உடைய ஆடவர்களின் உயிரையே விழுங்கியும், பின்னும் கோபித்து நாடுகின்ற செயலினை உடைய கண்களை உடைய பொது மாதர்களின் கொங்கைகள் மார்பில் பொருந்த, பலவிதமான காமலீலைகளில் பொருந்தி, உடலின் அழகு அழியவும், நினைவு அழிந்தும் இறந்து போகும் அவலநிலை அடியேனை விட்டு நீங்கமாட்டாதோ ​?​

விரிவுரை


இந்தத் திருப்புகழில் பொது மகளிரது கண்கள் தன்மை குறித்து அடிகளார் கூறுகின்றார்.

ஏனைய புலவர்கள் கண்கள் நஞ்சு போன்றது என்று கூறுவார்கள். ஆனால், அருணை முனிவர் பெருமான், சிவபெருமானுடைய கண்டத்தில் விளங்கும் ஆலகால விடம் போன்றது என்று கூறுகின்றார். அவ்வாறு கூற வந்த அடிகளார் சிவபெருமானை ஆறு வரிகளில் புகழ்ந்து துதி செய்கின்றார்.

கரி உரி அரவம் அணிந்த மேனியர் ---

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானைக் கொல்லுமாறு அபிசார வேள்வியில் கரிய பெரிய யானையை உண்டாக்கி அனுப்பினார்கள்.  சிவபெருமான் கருங்குன்று போல் வந்த யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்திக் கொண்டு அருளினார்.  இந்த மூர்த்தி கஜசம்மாரர் எனப்படுவர்.  வழுவூர் எந்ற திருத்தலத்தில் கஜசம்மார மூர்த்தி கண்கொள்ளாக் காட்சியுடன் விளங்குகின்றார்.

சிவபெருமானைக் கொல்ல நினைந்த தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வியில் கொடிய பாம்புகளைத் தோற்றுவித்து சிவமூர்த்தி மீது ஏவினார்கள்.  கருணைக் கடலாகிய கண்ணுதற் கடவுள் அந்தப் பாம்புகளைக் கொல்லாது அணிகலன்களாகப் பூண்டு அருள் புரிந்தார்.

கலைமதி சலமும் அணிந்த வேணியர் ---

தக்கனுடைய சாபத்தால் கலைகள் தேய்ந்து உயிர் ஓய்ந்து சரணம் அடைந்த சந்திரனைச் சிவபெருமான் சடைமுடி மீது சூடி போரருள் புரிந்தருளினார்.

சந்திரனும் கங்கையும் திண்மையும் தண்மையும் உடையவை.  குளிர்ந்த தன்மையைத் தலையில் வைக்க வேண்டும். தலை குளிர்ச்சியாக இருக்கவேண்டும். "பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்" என்கின்றார் அப்பர் பெருமான்.

கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் ---

சிவபெருமான் நெருப்பையும் மழுவையும் மானையும் திருக்கரங்களில் தரித்துள்ளார்.

கஞ்ச மாதின் கனமுலை பருகி வளர்ந்த காமனை---

திருமாலின் சித்தத்தில் தோன்றியவன் மன்மதன்.  அதனால் சித்தஜன் என்று பேர் பெற்றான்.  இலக்குமியின் திருமுலைப்பால் உண்டு வளர்ந்தான்.

காமனை முனிபவர் ---

தேவர்கள் ஏவலால் மன்மதன் சிவமூர்த்தியின் யோக நிலையைக் குலைக்குமாறு வந்து ஐங்கணை ஏவினான்.  சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அவனைப் பொடியாகக் காய்ந்தருளினார்.

கயிலை அமர்ந்த காரணர் ---

கயிலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை எல்லாவற்றுக்கும் மூலகாரணம் ஆனவர்.
  
கண்ட காள விரிவு என ---

சிவபெருமானுடைய திருக்கழுத்தில் விளங்கும் ஆலகால விடத்தின் விரிவு இதுவோ என்று எண்ணுமாறு பொதுமாதர் கண்கள் விளங்குகின்றன.

உனது உள் உகந்த வேல் என ---

முருகவேள் உள்ளம் உவந்து வேலை ஏந்தியுள்ளார்.  அவர் மிகவும் விரும்புவது மேல்.  வேல் போன்ற கூர்மை உடையது அம் மாதருடைய கண்கள்.

மிக இரு குழையும் அடர்ந்து ---

கண்களின் சிறந்து இலக்கணங்களில் ஒன்று காதுவரை மீண்டு இருப்பது.

அரி அர பிரம புரந்தர ஆதியர் தம்பிரானே ---

திருமாலாதி மூவர்க்கும் இந்திராதி தேவர்க்கும் தலைவர் முருகவேள்.

படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே.    
                                                                     --- கனைத்ததிர்க்கு (திருப்புகழ்).

கருத்துரை

அருணை மேவும் அண்ணலே, மாதர் மயலால் அழியாது அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...