திருவண்ணாமலை - 0529. இருவர் மயலோ
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருவர் மயலோ (திருவருணை)

திருவருணை முருகா!
அடியனது முறையீட்டினைத் திருச்செவியில் ஏற்று அருள்.


தனன தனனா தனன தனனா
     தனன தனனா ...... தனதான


இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத

இருடி அயன்மா லமர ரடியா
     ரிசையு மொலிதா ...... னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா
     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதா
     னுனது கிருபா ...... கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்
     பவன முதலா ...... கியபூதப்

படையு முடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவா ...... கியவேலா

அரியு மயனோ டபய மெனவே
     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருவர் மயலோ? அமளி விதமோ?
     என் என செயலோ? ...... அணுகாத

இருடி அயன் மால் அமரர் அடியார்
     இசையும் ஒலி தான் ...... இவை கேளாது?

ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
     ஒருவர் பரிவாய் ...... மொழிவாரோ?

உனது பத தூள் புவன கிரிதான்,
     உனது கிருபா ...... கரம் ஏதோ?

பரம குருவாய், ணுவில் அசைவாய்,
     பவனம் முதல் ...... ஆகிய பூதப்

படையும் உடையாய்! சகல வடிவாய்!
     பழைய வடிவு ...... ஆகிய வேலா!

அரியும் அயனோடு அபயம் எனவே,
     அயிலை இருள்மேல் ...... விடுவோனே!

அடிமை கொடு நோய் பொடிகள் படவே,
     அருணகிரி வாழ் ...... பெருமாளே.

பதவுரை

      பரம குருவாய் --- மேலான குருநாதராக விளங்கி,

     அணுவில் அசைவாய் --- அணுவுக்குள் அணுவாக நின்று,

     பவனம் முதலாகிய பூதப் படையும் உடையாய் --- வாயு முதலாகிய ஐம்பெரும் பூதங்களைப் படையாக உடையவரே!

      சகல வடிவாய் --- எல்லா வடிவங்களும் ஆகி,

     பழைய வடிவாகிய வேலா --- பழமையாகிய சச்சிதானந்த வடிவத்தை உடைய வேலாயுதரே!

      அரியும் அயனோடு அபயம் எனவே --- திருமால், திசைமுகன் ஆதி தேவர்கள் உனது திருவடிகட்கு அபயம் என்று முறையிடவும்,

     அயிலை இருள்மேல் விடுவோனே --- சூரபன்மன் யுத்த முடிவில் இருள் வடிவாகி அமரரைக் கொல்லக் கருதிய போது, அந்த இருளின் மீது வேலாயுதத்தை விட்டருளிய வித்தகரே!

      அடிமை கொடு நோய் பொடிகள் படவே --- அடிமையாகிய எனது கொடுமையாகிய உடற்பிணிகளும், உயிர்ப்பிணியும் துகள்பட்டு அழிய,

      அருணகிரி வாழ் பெருமாளே --- திருவண்ணாமலையில் எழுந்தருளி வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!

(அடியேன் ஓலமிட்டு உம்மை அழைக்கின்ற குரல் தேவரீருக்குப் பன்னிரு செவிகள் இருந்தும் கேளாமல் இருப்பதற்குக் காரணம்)

      இருவர் மயலோ --- வள்ளியம்மையார் தெய்வயானை அம்மையார் என்ற இருவரும் தேவரீரது அருகில் எழுந்தருளி இருப்பதால் அவர்கள் மீது உள்ள மயக்கமோ?

     அமளி விதமோ --- அங்குள்ள அநேக ஆரவாரங்களின் வேறுபாடோ?

     என் என செயலோ --- இன்னும் கந்தவுலகில் என்னென்ன அற்புதங்களும் தேவரீரை இப்புறம் திரும்பாதவண்ணம் செய்தற்குரிய வனப்புக்கள் உளவோ?

      அணுகாத இருடி அயன் மால் --- இவைகள் அன்றி அண்மையில் நெருங்க முடியாதவர்களாகிய முனிவர்களும், பிரமதேவரும், திருமாலும்

     அமரர் அடியார் இசையும் ஒலி தான் --- தேவர்களும் அடியார்களும் "முருகா முருகா" என்று (கடல் போல ஓலமிட்டு) இரைச்சல் இடுகின்ற பேரொலியால்

     இவை கேளாது --- அடியேன் அழைக்கும் சிறுகுரல் மொழிகள் கேட்கமாட்டாது,

      ஒருவன் அடியேன் அலறும் மொழிதான் --- ஒருவனாகிய அடியேன் ஆற்றொணாத் துன்பத்தால் அலறுகின்ற முறையீடாகிய மொழிகளை

     ஒருவர் பரிவாய் மொழிவாரோ --- அங்கும் இங்கும் உள்ளவர்களில் தகுதி பெற்ற ஒருவர் தேவரீரிடம் வந்து அன்போடு சொல்லமாட்டார்களா?

      உனது பத தூள் புவன கிரிதான் --- (ஆயின் தேவரீர் உணர்த்த உணர்பவர் அன்று) உலகங்களும் மலைகலும் தேவரீரது திருவடித் துகளே ஆகும். 

(அங்ஙனம் யாண்டும் நீக்கமற நிறைந்த உமக்கு எல்லாம் தெரியும்.  இருந்தும் ஏழை மீது இரங்கி அருள் புரியவில்லை.)

     உனது கிருபாகரம் ஏதோ --- தேவரீரது கருணையின் தன்மை எப்படியோ தெரியவில்லை.


பொழிப்புரை


         மேலான குருநாதராக விளங்கி, அணுவுக்குள் அணுவாக நின்று, வாயு முதலாகிய ஐம்பெரும் பூதங்களைப் படையாக உடையவரே!

         எல்லா வடிவங்களும் ஆகி, பழமையாகிய சச்சிதானந்த வடிவத்தை உடைய வேலாயுதரே!

         திருமால், திசைமுகன் ஆதி தேவர்கள் உனது திருவடிகட்கு அபயம் என்று முறையிடவும், சூரபன்மன் யுத்த முடிவில் இருள் வடிவாகி அமரரைக் கொல்லக் கருதிய போது, அந்த இருளின் மீது வேலாயுதத்தை விட்டருளிய வித்தகரே!

         அடிமையாகிய எனது கொடுமையாகிய உடற்பிணிகளும், உயிர்ப்பிணியும் துகள்பட்டு அழிய, திருவண்ணாமலையில் எழுந்தருளி வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!

          (அடியேன் ஓலமிட்டு உம்மை அழைக்கின்ற குரல் தேவரீருக்குப் பன்னிரு செவிகள் இருந்தும் கேளாமல் இருப்பதற்குக் காரணம்) வள்ளியம்மையார் தெய்வயானை அம்மையார் என்ற இருவரும் தேவரீரது அருகில் எழுந்தருளி இருப்பதால் அவர்கள் மீது உள்ள மயக்கமோ? அங்குள்ள அநேக ஆரவாரங்களின் வேறுபாடோ? இன்னும் கந்தவுலகில் என்னென்ன அற்புதங்களும் தேவரீரை இப்புறம் திரும்பாதவண்ணம் செய்தற்குரிய வனப்புக்கள் உளவோ?

         இவைகள் அன்றி அண்மையில் நெருங்க முடியாதவர்களாகிய முனிவர்களும், பிரமதேவரும், திருமாலும் தேவர்களும் அடியார்களும் "முருகா முருகா" என்று (கடல் போல ஓலமிட்டு) இரைச்சல் இடுகின்ற பேரொலியால் அடியேன் அழைக்கும் சிறுகுரல் மொழிகள் கேட்கமாட்டாது,

         ஒருவனாகிய அடியேன் ஆற்றொணாத் துன்பத்தால் அலறுகின்ற முறையீடாகிய மொழிகளை அங்கும் இங்கும் உள்ளவர்களில் தகுதி பெற்ற ஒருவர் தேவரீரிடம் வந்து அன்போடு சொல்லமாட்டார்களா?

         (ஆயின் தேவரீர் உணர்த்த உணர்பவர் அன்று) உலகங்களும் மலைகலும் தேவரீரது திருவடித் துகளே ஆகும்.  (அங்ஙனம் யாண்டும் நீக்கமற நிறைந்த உமக்கு எல்லாம் தெரியும்.  இருந்தும் ஏழை மீது இரங்கி அருள் புரியவில்லை.) தேவரீரது கருணையின் தன்மை எப்படியோ தெரியவில்லை.


விரிவுரை


இந்தத் திருப்புகழ் மிகவும் உருக்கமானது.கருங்கல் மனத்தையும் கரைந்து உருகச் செய்யும். சுவாமிகள் உருகி உருகி ஒவ்வொரு சொல்லும் உணர்ச்சி மயமாய் ஓதுதற்கு இனிமையாய் பாடியருளுகின்றனர். இப் பாடலை சற்று அமைதியாக ஒருமுறை பாடினால் உரைகுழறி, கண்களில் தொடுமணல் கேணியில் ஊற்றுப் போல் விழி அருவி பெருகி, உள்ளம் நெகிழ்ந்து, ஒருமை உறுதல் கண்கூடு. அன்பர்கள் இவ்வரிய திருப்புகழை மனப்பாடம் செய்துகொண்டு நாள்தோறும் முருகவேளிடம் முறையிட்டு வரின், அப் பரமபதியின் கருணை வெள்ளம் பொங்கி வருதல் ஒருதலை.

இனி, அருணகிரிநாதர் காலத்தில் திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் என்ற ஒரு சாக்தேயன் இருந்தான். அவன் அழுக்காற்றின் கருவூலம். அவன் சுவாமிகளிடம் வாதிட்டு, அம்பிகையை வருவித்துக் காட்டுவதாகக் கூறி அது முடியாது ஒழிய அஞ்சி ஓடினன். பிரபுடதேவ மன்னன் முதலியோர் முருகவேளை வரவழைத்துக் காட்டுமாறு சுவாமிகளை வேண்டினர். அவ்வமயம், அருணகிரியார் முருகனை அழைக்க, அக் கருணைக்கடலின் வரவு சற்று தாமதித்தது. அவ்வமயம் இப் பாடலைப் பாடி அருளுவாராயினர்.

இருவர் மயலோ ---

"முருகப் பெருமானே! அடியேன் பன்முறை முறையிட்டு அலறி அழைத்தும், இவ் ஏழையின் குரல் தேவரீருடைய திருச்செவியில் விழாத காரணம் யாதோ? கருத்து வேறு ஒரு பொருளில் இருக்குமானால் என் குரல் கேளாது.  தங்களின் இருமருங்கிலும் வள்ளியம்மையாரும், தெய்வயானையம்மையாரும் எழுந்தருளி உள்ளார்களே? அவர்கள் மீது உள்ள அன்பின் பெருக்கால் ஏற்பட்ட மயக்கத்தால் என் முறைப்பாட்டை அறியாமல் இருக்கின்றீரோ?” என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றனர். இதேபோல், மற்றொரு திருப்பகழிலும் கூறுமாறு காண்க...

நண்பு உகப் பாதம் அதில் அன்புறத் தேடி, உனை
"நங்கள் அப்பா சரணம்" என்று கூறல்
உன்செவிக்கு ஏறலைகொல்? பெண்கள்மெற்
பார்வையைக் கொல்?
உன்சொலைத் தாழ்வுசெய்து மிஞ்சுவார்ஆர்? ….  --- (நஞ்சினைப் போலும்) திருப்புகழ்.

அமளி விதமோ ---

அமளி - ஆரவாரம். கந்த உலகத்து உள்ள பலப்பல ஆரவாரத்தால் என் குரல் கேட்கவில்லையோ என்று வினாவுகின்றனர். 

அமளி - படுக்கை எனினும் அமையும். அலங்கரித்த படுக்கையின் விதங்களால் மயங்கி இருக்கின்றீரோ என்பதும் கருத்து.

எனென செயலோ ---

கருத்தை இழுக்கக் கூடிய அற்புதங்களும், விசித்திரங்களும், ஆடல் பாடல், வேதம், கீதம் துதி முதலியவைகளும், மலாக்காவனமும், காட்சியும், மாட்சியும் ஆக என்ன என்ன அதிசயங்கள் அங்கு உளவோ? அவைகளில் கருத்தைச் செலுத்துவதால் ஒருவேளை என் குரல் கேட்கவில்லையோ?

அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் ---

கந்தவுலகில் முருகப் பெருமானுடைய சந்நிதியை நெருங்க முடியாத முனிவர்கள், பிரமன், திருமால், அமரர், அடியார் முதலியோர் முருகா முருகா என்று கடல் முழங்குவது போல் முறையிட்டு இரைவதால் என் ஒரு குரல் பேரிரைச்சலைத் தாண்டி வரவில்லையோ

மாலயனாதி வானவரும் நெருங்க முடியவில்லை என்பதனால், முருகவேளை அணுகுவதன் அருமை விளங்குகின்றது.

அரியசமயம் ஒருகோடி, அமரர் சரணர் சதகோடி,
அரியும் அயனும், இவர்கூடி
அறியஅறிய அறியாத அடிகள் அறிய, அடியேனும்
அறிவுள் அறியும் அறிவு ஊற    அருள்வாயே 
                                                               --- (சுருதிமறைகள்) திருப்புகழ்.

அடியார்களும் அமரர்களும் முறைகூறி கடல்போல இரைகின்றார்கள் என்பதை அடியில் காணும் அடிகளால் அறிக.

குமர குருபர முருக சரவண
குகஷண் முககரி           பிறகான
குழக சிவசுத சிவய நமஎன
குருவன் அருள்குரு        மணியேஎன்று
அமுத இமையவர் திமிர்தம் இடுகடல்
அதென அநுதினம்          உனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபயம் இடுகுரல்           அறியாயோ.      --- திருப்புகழ்.

ஒருவனடியேன்  …..  ஒருவர் பரிவாய் மொழிவாரோ ---

"முருகா! மூவர் முதல்வா! சிறியேனாகிய அடியேன் துணை செய்வார் இன்றி ஒருவனாக நின்று "ஓ" என்று அலறி முறையிடுகின்றேன். நெடும்பொழுது முறையிட்டும் தேவரீர் திருச்செவியில் என் முறையீடு விழவில்லை. தேவரீருக்குப் பன்னிரு செவிகள் இருந்தும் என் முறைக்கு ஒரு செவியும் பயன்படவில்லை. இங்ஙனம் ஆயின், தமியேன் என் செய்வேன்? யாரொடு நோவேன்? யார்க்கு எடுத்து உரைப்பேன்? அலறி அலறி அவமே கழியவோ? அங்கும் இங்கும் உள்ள தகுதியுடைய ஒருவர் என் குறையையும் முறையையும் தெரிந்து, நின்பால் வந்து, பெருமானே! அருணகிரி நெடிது முறையிடுகின்றான்.  அவனை ஆதரிப்பாய் என்று அன்புடன் கூறமாட்டார்களோ?”

அணுவில் அணுவாய் ---

அணுவிலும் அணுவாய் பெரிதினும் பெரிதாய் உள்ள பரம ஆன்மா இந்தச் செந்துவினது இருதய குகையில் உளது.  தன்னுடைய மகிமைக்கு ஏதுவாய் உள்ள அதனைக் கன்ம நீக்கம் உள்ளோன் தனக்கு ஆதாரமான ஈசனது பிரகாசத்தினால் சோகமில்லாதவனாய்க் காண்கின்றான்.

சகல வடிவாய் ---

எல்லா வடிவங்களாக விளங்குபவர் முருகப் பெருமானே. பிரம தேவராக நின்று ஆக்கல் தொழில் புரிபவரும் அவரே.  திருமாலாக நின்று அளித்தல் தொழில் புரிபவரும் அவரே.  உருத்திரமூர்த்தியாக நின்று அழித்தல் தொழில் புரிபவரும் அவரே.

பழைய வடிவாகிய வேலா ---

தேவர்கள் சூரபன்மன் கொடுமைக்கு ஆற்றாது சிவபெருமானை வேண்டி குறையிரந்து நின்றனர். அது கேட்ட அரனார் ஆறுமுகமாகிக் காட்சி தந்து ஆறு திருமுகங்கள் தோறும் உள்ள நெற்றிக் கண்களில் இருந்து அருட்பெருஞ் ஜோதிப் பொறிகளை வெளிப்படுத்தினார்.  எனவே, சிவமூர்த்தியின் பழைய வடிவு ஆறுமுக வடிவு.

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள்மேல் விடுவோனே ---

சூரபன்மன் இறுதி நாளில் மிகவும் சீற்றமுற்று முருகவேளைக் கொணர்ந்து போர் புரியச் செய்த மாலயனாதி அமரரை மாய்ப்பேன் என்று ஒரேயிருள் மயமாகி அவ்விருளில் வானவரைக் கொல்ல முயன்றான்.  அதுகண்டு வானவர்கல் நடுநடுங்கி ஓலமிடுவாராயினர்.

நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞானநா யகனே ஓலம்
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.

தேவர்கள் தேவே ஓலம், சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்.

இவ் ஓலத்தைக் கேட்ட கந்தப் பெருமான் இருள்வடிவாக நின்ற சூரபன்மன் மீது வேலை ஏவி அழித்தனர்.

உனது புததூள் புவனகிரிதான் ---

முருகப் பெருமானுடைய பாத தூள்களில் புவனங்களும் மலைகளும் அடங்கும். இது அவருடைய பரமேசுர வடிவம்.

அளவற்ற தவம் புரிந்த சூரபன்மனுக்கு இறுதியில் எந்தை கந்தவேள் ஞானக்கண்ணையும் நல்லுணர்வையும் நல்கி, தமது பரமேசுர வடிவத்தைக் காட்டி அருளினார்.  அதனைக் கண்ட சூரபன்மன் திகைத்து, "நான் சிவபெருமானிடம் பெற்ற 1008 அண்டங்களும் ஆறுமுகக் கடவுளின் திருவடியில் ஒரு உரோமத்தில் காணப்படுகின்றதே?" என்று இறும்பூதுற்று கூறுகின்றான்.

மீஉயர் வடிவம் கொண்டு மேவிய தூதன் சொற்ற
வாய்மைகள் சரதம்அம்மா, மற்றுயான் பெற்றஅண்டம்
ஆயவை முழுதும் மற்று அறுமுகம் படைத்த செம்மல்
தூயபொற் பதரோமத்தில் தோன்றியே நிற்கும்அன்றே.

"முருகா! எல்லாம் உமது திருமேனியில் அடங்க, யாவையுமாய் அல்லையுமாய் நின்ற தேவரீருக்கு என் முறை கேளாமல் இருக்குமோ? திண்ணமாகக் கேட்கும். எறும்பு நடக்கும் ஒலியும், கொசு பறக்கும் ஒலியும் உமது செவியில் கேட்கின்றது.  செவியில்லாமலேயே எல்லாவற்றையும் கேட்டருளுகின்றீர்.  எங்கணும் உமக்குத் திருமுகங்கள் உள. எங்கணும் உமக்கு விழிகள். எங்கணும் உமக்குச் செவிகள். எங்கணும் கரங்கள்.  எங்கணும் திருமேனி. ஆதலினால், அடியேனுடைய குரல் எப்படி கேளாமல் இருக்க முடியும்?”.

எங்கணும் பணிவதனங்கள், எங்கணும் விழிகள்,
எங்கணும் திருக்கேள்விகள், எங்கணும் கரங்கள்,
எங்கணும் திருக்கழலடி, எங்கணும் வடிவம்,
எங்கணும் செறிந்துஅருள் செய்யும் அறுமுகத்திறைக்கே.

பரமகுரு ---

சனகாதிகளுக்குக் கல்லாலின் புடையமர்ந்து வாக்கிறந்த வான் பொருளை சொல்லாமல் சொல்லிய தென்முகப் பரமாசிரியருக்கும் "ஓம்" எனும் தனி மந்திரத்தை உபதேசித்தவர் முருகப் பெருமான். ஆதலின், பரமகுரு என்றனர்.

அணுவில் அசைவாய் ---

இறைவன் அணுவுக்குள் அணுவாக நின்று அதனை அசைவிக்கின்றனன்.

அடிமை கொடுநோய் பொடிகள்படவே ---

அருணகிரிநாதருக்கு உண்டாகிய பல்வேறு வகையான உடல் பிணிகளையும், பிறவிப் பிணியாகிய உயிர்ப்பிணியையும் வயித்தியநாதராகிய வடிவேலிறைவன் தீர்த்தருளினார்.

அருணகிரி வாழ் பெருமாளே ---

திருவருணையில் வல்லாள மன்னன் புதுக்கிய திருக்கோபுரக் குடவரையின் வடபுறத்தில் எழுந்தருளிய முருகவேள் அருணகிரிநாதருக்குக் குருநாதராக வெளிப்பட்டு அருளினர்.


கருத்துரை


வேலாயுதரே! சூரபன்மனை அட்ட சுப்பிரமணிய மூர்த்தியே! திருவருணையில் எழுந்தருளி உள்ளவரே! என் முறை கேட்டு எளியேனை ஆட்கொண்டு அருள்வீர்.

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...