11. எறும்பு எண்ணாயிரம்
குறும்பு
எண்ணாது உயர்ந்த நல்லோர் ஆயிரம் சொன்
னாலும், அதைக் குறிக்கொ ளாமல்,
வெறும்
பெண்ணாசையில் சுழல்வேன், மெய்ஞ்ஞானம்
பொருந்தி உனை வேண்டேன்! அந்தோ!
உறும்பெண்ணார்
அமுது இடம்சேர் தண்டலைநீள்
நெறியே! என் உண்மை தேரில்
‘எறும்பு எண்ணா யிரம் அப்பா!
கழுதையும் கை
கடந்ததெனும்' எண்ணம் தானே!
இதன் பொருள் ---
உறும் பெண்ணார் அமுது இடம் சேர்
தண்டலைநீள் நெறியே --- பெண்களில் சிறந்தவள் ஆகிய உமையம்மையாரை இடப்பக்கத்தில் கொண்டு உள்ள திருத்
தண்டலை நீள்நெறி நாதரே!
உயர்ந்த நல்லோர் குறும்பு எண்ணாது ஆயிரம்
சொன்னாலும் --- சிறந்த நற்பண்பு உடையோர் குறும்பாக நினையாமல், உண்மையிலேயே ஆயிரம் நல்லறிவு
கூறினாலும்,
அதைக் குறிக்கொளாமல் --- அவர்கள் கூறுவதை மனத்தில் கொள்ளாமல்,
வெறும் பெண் ஆசையில் சுழல்வேன் ---
வீணே பெண்ணின் மேல் வைத்த காமத்தால் அலைவேன்,
உனை மெய்ஞ்ஞானம் பொருந்தி வேண்டேன் ---
உன்னை உண்மையறிவுடன் வழிபாடு செய்து உன்னருளை
வேண்டேன்,
அந்தோ --- ஐயோ,
என் உண்மை தேரில் --- எனது உண்மையான நிலைமை என்ன
என்று ஆராய்ந்தால்,
அப்பா --- அப்ப அப்பா,
எறும்பு
எண்ணாயிரம் --- எண்ணாயிரம் என்று எறும்புகளை (மிகவும் சிரம்பபட்டு) எண்ணினேன்
கழுதையும் கைகடந்தது எனும் எண்ணந்தான்
---- கழுதையும் போய்விட்டது என்பவனுடைய எண்ணம் போன்றதே.
விளக்கம் --- பெண் ஆர் அமுது --- பெண்களில்
சிறந்தவள்; உமாதேவியைக் குறித்தது. ‘பெண்ணின் நல்லாள்' என்பது திருஞானசம்பந்தர்
தேவாரம்.
கழுதையைப் பார்த்துக் கொண்டு இருப்பவன், கழுதையின் மேல் வைக்க வேண்டிய எண்ணத்தை விட்டு, எறும்பை எண்ணிக்
கொண்டிருந்தான். கழுதையை விட்டு விட்டான். பெண்கள் மீது வைத்த ஆசையிலே உள்ளத்தைச்
செலுத்தி, இறைவரை வழிபடுவதைக் கைநெகிழ விட்டதை இது குறிக்கின்றது. இறைவனை வழிபட்டு, பிறவா நிலையை அடையவே, இறையருளால் இந்தப் பிறவி வந்தது. ஆனால், இறைவனை மறந்து, பெண் ஆசையிலே மனம் சுழன்றது. ஆசைகள் மூவகைப்படும். மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை. மண்ணாசையும், பொன்னாசையும் மனிதப் பிறவி அல்லாத மற்றவற்றுக்கு இல்லை. ஆனால், பெண் ஆசை என்பது எல்லாப் பிறவிக்கும் உள்ளது. அது பிறவிகள் தோறும் விடாது வருவது. அதனால், பெண் ஆசையை விடுவது எளிது அல்ல. இறையருளால் மட்டுமே அதை நீக்கிக் கொள்ள முடியும். " முருகா! நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகள் ஆயின பின், பேசா அனுபூதி பிறந்ததுவே" என்று அருணகிரிநாதப்பெருமான் வேண்டுமாற்றால், ஆசையானது இறையருள் எய்தினால் ஒழிய அகலாது என்பது தெளிவு.
No comments:
Post a Comment