திருவண்ணாமலை - 0518. அருமா மதனை
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருமா மதனை (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேன் நரகில் புகாவண்ணம் காத்து,
உனது திருவடியை அருள்.


தனனா தனனத் தனனா தனனத்
     தனனதா தனனத் ...... தனதான


அருமா மதனைப் பிரியா தசரக்
     கயலார் நயனக் ...... கொடியார்தம்

அழகார் புளகப் புழுகார் சயிலத்
     தணையா வலிகெட் ...... டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
     றிளையா வுளமுக் ...... குயிர்சோர

எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
     கிருபா தமெனக் ...... கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
     டுரமோ டெறிபொற் ...... கதிர்வேலா

உறைமா னடவிக் குறமா மகளுக்
     குருகா றிருபொற் ...... புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற்
     றெரியா வரனுக் ...... கரியோனே

செழுநீர் வயல்சுற் றருணா புரியில்
     திருவீ தியினில் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருமா மதனைப் பிரியாத சர
     கயலார், நயனக் ...... கொடியார், தம்

அழகு ஆர் புளகப் புழுகு ஆர் சயிலத்து,
     அணையா, வலி கெட்டு, ...... உடல் தாழ,

இருமா நடை புக்கு, உரை போய், உணர்வு அற்று,
     இளையா, உளம் உக்கு, ...... உயிர்சோர,

எரிவாய் நரகில் புகுதாத படிக்கு
     இருபாதம் எனக்கு ...... அருள்வாயே.

ஒரு மால் வரையைச் சிறு தூள் படவிட்டு,
     உரமோடு எறிபொன் ...... கதிர்வேலா!

உறை மான் அடவிக் குறமா மகளுக்கு
     உருகு ஆறு இருபொன் ...... புயவீரா!

திருமால் கமலப் பிரமா விழியில்
     தெரியா அரனுக்கு ...... அரியோனே!

செழுநீர் வயல் சுற்று அருணா புரியில்
     திரு வீதியினில் ...... பெருமாளே.


பொழிப்புரை


      ஒருமால் வரையை --- ஒப்பற்ற மாயைகள் செய்த கிரவுஞ்ச மலையைச்

     சிறுதூள் படவிட்டு --- சிறிய தூளாகும்படிச் செய்து,

     உரமோடு எறி பொன் கதிர்வேலா --- வலிமையுடன் செலுத்திய அழகிய ஒளி வீசுகின்ற வேலாயுதரே!

      மான் உறை அடவி --- மான்கள் வாழ்கின்ற கானகத்தில்

     குற மாமகளுக்கு உருகு --- குறமகளாம் வள்ளியம்மைபால் உருகிய

     ஆறிரு பொற் புயவீரா --- அழகிய பன்னிரு புயங்களை உடைய வீரமூர்த்தியே!

      திருமால் கமலப் பிரமா விழியில் --- நாராயணர், தாமரையில் வாழும் பிரமதேவர் என்ற இருவருடைய கண்களுக்கும்

     தெரியா அரனுக்கு அரியோனே --- காணப் பெறாத சிவமுர்த்திக்கும் அருமை வாய்ந்தவரே!

      செழுநீர் வயல்சுற்று அருணா புரியில் --- செழுமை வாய்ந்த நீர் நிரம்பிய கழனிகள் சூழ்ந்துள்ள திருவண்ணாமலை நகரின்

     திருவீதியினில் பெருமாளே ---- அழகிய வீதியில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      அரு மாமதனைப் பிரியாத சரக் கயலார் --- அரிய அழகிய மன்மதனைப் பிரியாத கணைகள் போலவும், கயல் மீன் போலவும்

     நயனக் கொடியார் தம் --- சிறந்த கண்களை உடைய பொல்லாத பொதுமாதர்களின்,

      அழகுஆர் -- அழகு நிறைந்ததும்,

     புளகப் புழுகுஆர் சயிலத்து அணையா -- பூரித்து இருப்பதும், புனுகு சட்டம் பூசப் பெற்றதும், மலை போன்றதுமான முலைகளைத் தழுவி,

     வலிகெட்டு உடல்தாழ --- அதனால் வலிமை குன்றி உடல் நலிய,

      இருமா நடை புக்கு --- இருமலில் படும் தன்மை அடைந்து,

      உரைபோய் உணர்வு அற்று இளையா --- பேச்சு அற்று, உணர்வும் அற்று, இளைத்து,

     உளம் உக்கு உயிர் சோர --– உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று,

      எரிவாய் நரகில் புகுதாத படிக்கு --- நெருப்புடன் கூடிய நரகில் புகுதாத வண்ணம்,

     இருபாதம் எனக்கு அருள்வாயே --- தேவரீருடைய இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தந்து அருளுவீராக.பொழிப்புரை


         ஒப்பற்ற மாயைகள் செய்த கிரவுஞ்ச மலையைச் சிறிய தூளாகும்படிச் செய்து, வலிமையுடன் செலுத்திய அழகிய ஒளி வீசுகின்ற வேலாயுதரே!

         மான்கள் வாழ்கின்ற கானகத்தில் குறமகளாம் வள்ளியம்மைபால் உருகிய பன்னிரு புயங்களை உடைய வீரமூர்த்தியே!

         நாராயணர், தாமரையில் வாழும் பிரமதேவர் என்ற இருவருடைய கண்களுக்கும் காணப் பெறாத சிவமுர்த்திக்கும் அருமை வாய்ந்தவரே!

         செழுமை வாய்ந்த நீர் நிரம்பிய கழனிகள் சூழ்ந்துள்ள திருவண்ணாமலை நகரின் அழகிய வீதியில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

         அரிய அழகிய மன்மதனைப் பிரியாத கணைகள் போலவும், கயல் மீன் போலவும் சிறந்த கண்களை உடைய பொல்லாத பொதுமாதர்களின்,

         அழகு நிறைந்ததும், பூரித்து இருப்பதும், புனுகு சட்டம் பூசப் பெற்றதும், மலை போன்றதுமான முலைகளைத் தழுவி அதனால் வலிமை குன்றி உடல் நலிய,

         இருமலில் படும் தன்மை அடைந்து, பேச்சு அற்று, உணர்வும் அற்று, இளைத்து, உள்ளம் மெலிந்து, உயிர் சோர்வுற்று,

         நெருப்புடன் கூடிய நரகில் புகுதாத வண்ணம், தேவரீருடைய இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தந்து அருளுவீராக.


விரிவுரை


அருமா மதனைப் பிரியாத சரம் ---

அரிய அழகுள்ள மன்மதனை விட்டுப் பிரியாத அவனுடைய பாணங்களைப் போன்றது பெண்களின் கண்கள்.

கயலார் நயனம் ---

கயல் மீன் போன்றது அக் கண்கள்.  கயல் மீன் இங்கும் அங்கும் திரிவது போல விழி புரண்டு அழகு செய்யும்.

சயிலத்து அணையா வலிகெட்டு உடல் தாழ ---

சயிலம் - மலை. இது உவம ஆகுபெயராகக் கொங்கையைக் குறிக்கின்றது.  மலைபோன்ற பருத்த முலைகளைத் தழுவி அதனால் வலிமை இழந்து உடல் மெலிந்து அவலமுறுவர்.

இருமா நடை புக்கு ---

மாதர் உறவால் இருமல் நோய் கைவரப் பெற்றுத் துண்புறுவர்.

               ….              …. தூறு இருமல்
சாழல்உற, மூலகசுமாலம் என நாறி, உடல்  அழிவேனோ....   --– (வாலவயதாகி) திருப்புகழ்.

இருமல் வந்தது, தூக்கம் ஒழிந்தது -– (முனையழிந்தது) திருப்புகழ்.

உறக்கம் வரும் அளவில் எலும்பு
குலுக்கிவிடும் இருமல் தொடங்கி
உரத்த கன குரலும் நெரிந்து              தடிகாலாய்

உரத்த நடை தளரும் உடம்பு
பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
உனக்கு அடிமை படும்அவர் தொண்டு     புரிவேனோ  --- (கறுத்ததலை) திருப்புகழ்.

உரை போய் உணர்வற்று ---

நோயின் மிகுதியால் பேசும் சக்தி அற்றுத் துன்புறுவர். அறிவும் இழந்து மயங்குவர்.

எரிவாய் நரகில் புகுதாத படி ---

எரிவாய் நரகம் - கும்பிபாகம்.  மிகுந்த பாவம் செய்தவர்களை, செங்கல் சூளையில் சுடுவதுபோல், நமன்தமர் கும்பிபாகம் என்ற எரிமயமான நரகில் தள்ளி வாட்டுவர்.

நரகம் ஏழு – கூடகாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து என்பன.

திருமால் கமலப் பிரமா விழியில் தெரியா அரன் ---

நாராயணரும் நான்முகனும், பன்றியும் அன்னமும் ஆகிப் பலகாலும் தேடியும் அவர்களுடைய கண்களுக்குக் காண ஒண்ணாமல் அழல் இருவாய் சிவமூர்த்தி நின்றனர்.  அதனால் அது அண்ணாமலை எனப் பெற்றது.
  
மேலுற எழுந்தும், மிகு கீழுற அகழ்ந்தும்,
மாலும் இருவர்க்கு அரியார் ஒருவர்      --- பெரியபுராணம்.


கருத்துரை


அருணை வீதியில் நின்ற அண்ணலே, அடியேன் நரகில் விழாதபடி உன் திருவடியைத் தந்து அருள்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...