திருவண்ணாமலை - 0548. கார்ஆடக் குழல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காராடக் குழல் (திருவருணை)

திருவருணை முருகா!
விலைமாதர் வாஞ்சையால் அடல் அழிந்து மங்காமல் ஆட்கொண்டு அருள்.


தானா தத்தன தானா தத்தன
     தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
     தந்தன தந்தன தான தந்தன
தானா தத்தன தானா தத்தன
     தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான


காரா டக்குழ லாலா லக்கணை
     கண்கள்சு ழன்றிட வேமு கங்களி
னாலா பச்சிலை யாலே மெற்புசி
     மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள
காதா டக்கலன் மேலா டக்குடி
     யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர்

காசா சைச்செய லாலே சொக்கிடு
     விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
போலே நற்றெரு வூடா டித்துயல்
     தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட
கால்தா விச்சதி யோடே சித்திர
     மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச்

சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை
     வந்துக லந்துயி ரோட வங்கமொ
டூடா டிப்பல நோயோ டுத்தடி
     கொண்டுகு ரங்கென வேந டந்துசொல்
சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
     டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச்

சேரா மற்பொறி கேளா மற்செவி
     துன்பமொ டின்பமு மேம றந்துபின்
ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
     மண்டியு மண்டையு டேகு விந்திது
சீசீ சிச்சிசி போகா நற்சனி
     யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ

மாரோன் முப்புர நீறா யுற்றிட
     அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி
தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
     கங்கையி ளம்பிறை யார ணிந்தவர்
மாடே றிக்கட லாலா லத்தையு
     முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா

மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
     யம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதா மக்கலை ரூபாள் முக்கணி
     ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
மாஞா னக்கும ராதோ கைப்பரி
     யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச்

சூரார் மக்கிட மாமே ருக்கிட
     அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
தீபே ழற்றிட பாதா ளத்துறை
     நஞ்சர வின்பண மாயி ரங்கெட
சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
     விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா

சோர்வே தத்தலை மேலா டிச்சுக
     பங்கய செங்கர மோட கம்பெற
வாகா னக்குற மாதோ டற்புத
     மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
தூணோ டிச்சுட ராகா சத்தைய
     ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


கார் ஆட அக் குழல், லாலக் கணை
     கண்கள் சுழன்றிடவே, முகங்களில்
நாலா பச்சிலையாலே மெல் புசி,
     மஞ்சள் கலந்து, அணி வாளி, கொந்தள
காது ஆட, கலன் மேல் ஆட, குடி
     இன்ப ரசம் குடம் மார், பளிங்கு ஒளி ...... கொங்கைமாதர்,

காசு ஆசைச் செயலாலே சொக்கு இடு
     விஞ்சையர், கொஞ்சிடுவார், இளங்குயில்
போலே நல் தெரு ஊடு ஆடி, துயல்
     தொங்கல் நெகிழ்ந்து, டையே துவண்டிட,
கால் தாவி, சதியோடே சித்திரம்
     என்ப நடம் புரிவார், டல் செயல் ...... மிஞ்சல் ஆகி,

சீர் ஆடி, சில நாள் போய், மெய்த் திரை
     வந்து கலந்து, யிரோட வங்கமொடு
ஊடாடி, பல நோயோடு, தடி
     கொண்டு குரங்கு எனவே நடந்து, சொல்
சீ ஓடி, கிடை பாயோடு உக்கி,
     அடங்கி, அழிந்து, யிரோடு உளைஞ்சு, ளி ...யும்கண்மாறிச்

சேராமல் பொறி, கேளாமல் செவி,
     துன்பமொடு இன்பமுமே மறந்து, பின்
ஊரார் சுற்றமும் மாதோர் மக்களும்
     மண்டியும் அண்டையுடே குவிந்து, து
சீசீ சிச்சிசி போகா, நல்சனி-
     யன் கட என்றிடவே கிடந்து உடல் ...... மங்குவேனோ?

மாரோன், முப்புரம் நீறுஆய் உற்றிட,
     அங்கி உமிழ்ந்திடுவோர், இபம் புலி
தோல் சீயத்தொடெ ஏகாசர், சடை
     கங்கை இளம்பிறை ஆர் அணிந்தவர்,
மாடு ஏறி, கடல் ஆலாலத்தையும்
     உண்டவர், ந்தை, சிவ அநுபங்கு உறை ...... என்தன்மாதா,

மாலோனுக்கு இளையாள், மா பத்தினி,
     அம்பிகை, சங்கரி, மோக சுந்தரி,
வேத ஆகமக் கலை ரூபாள், முக்கண்,
     நிரம்பிய கொங்கையினாள் பயந்து அருள்
மா ஞானக் குமரா! தோகைப் பரி-
     யின் பத வண் குருவே! என அம் சுரர் ...... தொண்டுபாட,

சூரார் மக்கிட, மாமேரு உக்கிட,
     அம்கடல் எண்கிரியோடு, இபம் கொடு
தீப ஏழ் அற்றிட, பாதாளத்து உறை
     நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட,
சூழ் வாளக்கிரி தூள் ஆகி, பொடி
     விண்கண் நிறைந்திடவே நடம் புரி ...... கின்ற வேலா!

சோர் வேதத் தலை மேல் ஆடி, சுக,
     பங்கய செங்கரமோடு அகம்பெற,
வாகு ஆனக் குற மாதோடு, அற்புத
     மங்குல் அணங்கு உடனே மகிழ்ந்து, நல்
தூண் ஓடிச் சுடர் ஆகாசத்தை
     அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் ...... தம்பிரானே.


பதவுரை


      மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட --- மன்மதனும், மூன்று புரங்களும் சாம்பல் ஆகும்படி

     அங்கி உமிழ்ந்திடுவோர் ---  நெருப்பை உமிழ்ந்தவரும்,

     இபம் புலி தோல் சீயத்தொடெ ஏகாசர் --- யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின் தோலையும் போர்வையாகக் கொண்டவரும்,

     சடை கங்கை இளம்பிறை ஆர் அணிந்தவர் --- சடையில் கங்கையையும், இளம்பிறைச் சந்திரனையும், ஆத்தி மாலையும் சூடிக் கொண்டவரும்,

     மாடு ஏறி --- விடையின் மீது ஏறுபவரும்,

     கடல் ஆலாலத்தையும் உண்டவர் --- கடலில் தோன்றிய ஆலகால நஞ்சை உண்டவரும்,

     எந்தை சிவ அநுபங்கு உறை என் தன் மாதா --- எமது தந்தையுமாகிய சிவபெருமானுடன், அவர் திருமேனியில் பாதியாக உறையும் எனது தாயும்,

      மாலோனுக்கு இளையாள் --- திருமாலுக்குத் தங்கையும்,

     மா பத்தினி --- மகாபத்தினியும்,

     அம்பிகை --- அம்பிகையும்,

     சங்கரி --- சுகத்தைச் செய்பவளும்,

     மோக சுந்தரி --- அன்புக்கு உரிய அழகியும்,

     வேதாமக் கலை ரூபாள் ---  வேத ஆகம நூல்களின் வடிவமானவளும்,

     முக்கணி --- மூன்று கண்களை உடையவளும்,

     நிரம்பிய கொங்கையினாள் --- பருத்த தனங்களை உடையவளும் ஆகிய உமாதேவியார்

     பயந்து அருள் மா ஞானக் குமரா --- பெற்று அருளிய பெருமை மிக்க ஞானக்குமாரக் கடவுளே!

     தோகைப் பரியின் பத --- தோகையை உடைய மயிலின் மீது வருபவரே,

     வண்குருவே --- அருட்கருணை கொண்ட குருநாதரே

     என அம் சுரர் தொண்டு பாட --- என்று அழகிய தேவர்கள் துதித்துப் போற்றவும்,

      சூரார் மக்கிட ---  சூராதி அவுணர்கள் அழிந்து போகவும்,

     மாமேரு உக்கிட --- பெரிய மேரு மலையும் மெலிவு அடையவும்,

     அம் கடல் எண்கிரியோடு --- அழகிய கடலோடு எட்டுக் குலமலைகளும்,

     இபம் கொடு --- யானைகளுடன்

     தீப ஏழ் அற்றிட --- எழு தீவுகளும் குலையவும்,

     பாதாளத்து உறை --- பாதாளத்தில் வாழ்கின்ற

     நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட --- நஞ்சை உடைய ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் ஆயிரமும் கேடு அடையவும்,

     சூழ் வாளக்கிரி தூளாகிப் பொடி --- சூழ்ந்துள்ள சக்கரவாள மலை தூள்பட்டு,

     விண்கண் நிறைந்திடவே --- அப் பொடி ஆகாயமெல்லாம் நிறையும் வண்ணம்

     நடம் புரிகின்ற வேலா --- திருநடம் புரிகின்ற வேலாயுதரே!

      சோர் வேதத் தலை மேல் ஆடி --- சோர்கின்ற வேதத்தின் உச்சிமேல் விளங்குபவரே!

      சுக பங்கய செங்கரமோடு அகம் பெற --- சுகத்தையும், உமது தாமரை மலர் போன்ற செம்மையான கரத்துடன், உள்ளத்தையும் பெற்ற,

     வாகானக் குற மாதோடு --- அந்த அழகிய குறமகளாம் வள்ளியுடனும்,

     அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து --- அற்புதமான விண்ணுலக மடந்தையுடனும் மகிழ்ச்சி உற்று,

      நல் தூண்  ஓடிச் சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு --- நல்ல நெருப்புத் தூணாம் சிவசுடர் ஆகாயத்தை அளாவி விளங்கும்

     அருணாசலம் திகழ் தம்பிரானே --- திருவண்ணாமலையில் விளங்குகின்ற தனிப்பெரும் தலைவரே!

      கார் ஆடக் குழல் --- கூந்தலானது மேகம் போல் விளங்க,

     ஆலாலக் கணை கண்கள் சுழன்றிடவே --- ஆலகால நஞ்சு தோய்ந்த கணை போன்ற கண்கள் சுழல,

     முகங்களில் நாலா பச்சிலையாலே மெல் புசி --- முகத்தின் மேல் நாலா வகையான பச்சிலைகளை பூசி,

     மஞ்சள் கலந்து அணி வாளி --- மஞ்சள் கலந்து அணிந்துள்ள காதணியானது,

     கொந்தள காது ஆட --- கூந்தலுக்கு அருகில் உள்ள காதில் ஆட,

     கலன் மேல் ஆட --- ஆபரணங்கள் மேலே ஆட,

     குடி இன்ப ரசம் குடம் --- இன்பச் சுவை குடிகொண்ட குடங்கள் போன்று,

     ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் --- பளிங்கின் ஒளி கொண்ட தனங்களை உடைய பெண்கள்,

      காசு ஆசைச் செயலாலே --- காசின் மீது உள்ள ஆசையால்,

     சொக்கிடு விஞ்சையர் --- மயக்கப் பொடி போடுகின்ற மாய வித்தையில் வல்லவர்கள்,

     கொஞ்சிடுவார் ---  கொஞ்சிப் பேசுபவர்கள்,

     இளங்குயில் போலே நல் தெரு ஊடு ஆடி --- இளம் குயிலைப் போல தெருக்களில் இங்கும் அங்கும் உலாவி,

     துயல் தொங்கல் நெகிழ்ந்து --- அசைகின்ற மேலாடை நெகிழவும்,

     இடையே துவண்டிட --- இடை துவளவும்,

     கால் தாவி --- காலால் தாவி,

     சதியோடே --- தாள ஒத்துடன்

     சித்திரம் என்ப நடம் புரிவார் --- சித்திரப் பதுமை எனும்படி நடனம் ஆடுபவர்கள்,

     உடல் செயல் மிஞ்சல் ஆகி --- இத்தகைய பொது மாதர்களுடன் இணங்கும் தன்மை அதிகமாகி,

      சீர் ஆடி, சில நாள் போய் ---  சிறப்பாகக் காலம் கழித்து, சில நாள் சென்ற பின்,

     மெய்த் திரை வந்து கலந்து ---  உடலில் தோல் சுருக்கங்கள் வந்து சேர்ந்து,

     உயிர் ஓட --- உயிர் போகும்படி,

     அங்கமொடு ஊடாடி --- இந்த உடம்புடன் வேதனைப்பட்டு,

     பல நோயோடு --- பலப்பல நோய்களுடன்

     தடி கொண்டு குரங்கு எனவே நடந்து --- தடி ஊன்றி குரங்கு போல் கூனி நடந்து,

     சொல் சீ ஓடி --- சொல்லுகின்ற சீ என்ற சொல் எங்கும் பரவ,

     கிடை பாயோடு உக்கி, உடங்கி, அழிந்து, --- கிடக்கை பாயுடன் மெலிந்து அடங்கி அழிந்து,

     உயிரோடு உளைஞ்சு --- உயிர் வேதனை அடைய,

     ஒளியும் கண் மாறி --- கண்களில் ஒளியும் மங்கி,

      சேராமல் பொறி --- பொறிகள் ஒரு வழிப் படாமல் கலங்கி,

     கேளாமல் செவி --- காது கேட்காமல்,

     துன்பமொடு இன்பமுமே மறந்து --- துன்பம் இன்பம் இரண்டையும் மறந்து, நினைவு அற்றுப் போய்,

     பின் ஊரார் சுற்றமும் மாதோர் மக்களும் மண்டியும் --- ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மக்களும், நெருங்கியும்,

     அண்டையுடே குவிந்து --- அருகில் கும்பலாகக் கூடியும்,

     இது சீசீ சிச்சிசி போகா --- "இது சீசீ சிச்சிசி இப்போது போகாது",

     நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ ---  "நல்ல சனியன் கிடக்கட்டும்" என்று கூறிச் செல்ல, அப்படியே கிடந்து உடல் அழிவேனோ?


பொழிப்புரை

          மன்மதனும், மூன்று புரங்களும் சாம்பல் ஆகும்படி நெருப்பை உமிழ்ந்தவரும், யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின் தோலையும் போர்வையாகக் கொண்டவரும், சடையில் கங்கையையும், இளம்பிறைச் சந்திரனையும், ஆத்தி மாலையும் சூடிக் கொண்டவரும், விடையின் மீது ஏறுபவரும், கடலில் தோன்றிய ஆலகால நஞ்சை உண்டவரும், எமது தந்தையுமாகிய சிவபெருமானுடன், அவர் திருமேனியில் பாதியாக உறையும் எனது தாயும், திருமாலுக்குத் தங்கையும், மகாபத்தினியும், அம்பிகையும், சுகத்தைச் செய்பவளும், அன்புக்கு உரிய அழகியும், வேத ஆகம நூல்களின் வடிவமானவளும், மூன்று கண்களை உடையவளும், பருத்த தனங்களை உடையவளும் ஆகிய உமாதேவியார் பெற்று அருளிய பெருமை மிக்க ஞானக்குமாரக் கடவுளே!

         சூராதி அவுணர்கள் அழிந்து போகவும், பெரிய மேரு மலையும் மெலிவு அடையவும், யானைகளுடன் எழு தீவுகளும் குலையவும், பாதாளத்தில் வாழ்கின்ற நஞ்சை உடைய ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் ஆயிரமும் கேடு அடையவும், சூழ்ந்துள்ள சக்கரவாள மலை தூள்பட்டு, அப் பொடி ஆகாயமெல்லாம் நிறையும் வண்ணம் திருநடம் புரிகின்ற வேலாயுதரே!

         சோர்கின்ற வேதத்தின் உச்சிமேல் விளங்குபவரே!

         சுகத்தையும், உமது தாமரை மலர் போன்ற செம்மையான கரத்துடன், உள்ளத்தையும் பெற்ற, அந்த அழகிய குறமகளாம் வள்ளியுடனும், அற்புதமான விண்ணுலக மடந்தையுடனும் மகிழ்ச்சி உற்று, நல்ல நெருப்புத் தூணாம் சிவசுடர் ஆகாயத்தை அளாவி விளங்கும் திருவண்ணாமலையில் விளங்குகின்ற தனிப்பெரும் தலைவரே!

         கூந்தலானது மேகம் போல் விளங்க, ஆலகால நஞ்சு தோய்ந்த கணை போன்ற கண்கள் சுழல, முகத்தின் மேல் நாலா வகையான பச்சிலைகளை பூசி, மஞ்சள் கலந்து அணிந்துள்ள காதணியானது, கூந்தலுக்கு அருகில் உள்ள காதில் ஆட, ஆபரணங்கள் மேலே ஆட, இன்பச் சுவை குடிகொண்ட குடங்கள் போன்று, பளிங்கின் ஒளி கொண்ட தனங்களை உடைய பெண்கள், காசின் மீது உள்ள ஆசையால், மயக்கப் பொடி போடுகின்ற மாய வித்தையில் வல்லவர்கள், கொஞ்சிப் பேசுபவர்கள், இளம் குயிலைப் போல தெருக்களில் இங்கும் அங்கும் உலாவி, அசைகின்ற மேலாடை நெகிழவும், இடை துவளவும், காலால் தாவி, தாள ஒத்துடன் சித்திரப் பதுமை எனும்படி நடனம் ஆடுபவர்கள், இத்தகைய பொது மாதர்களுடன் இணங்கும் தன்மை அதிகமாகி, சிறப்பாகக் காலம் கழித்து, சில நாள் சென்ற பின், உடலில் தோல் சுருக்கங்கள் வந்து சேர்ந்து, உயிர் போகும்படி, இந்த உடம்புடன் வேதனைப்பட்டு, பலப்பல நோய்களுடன் தடி ஊன்றி குரங்கு போல் கூனி நடந்து, சொல்லுகின்ற சீ என்ற சொல் எங்கும் பரவ, கிடக்கை பாயுடன் மெலிந்து அடங்கி அழிந்து, உயிர் வேதனை அடைய, கண்களில் ஒளியும் மங்கி,  பொறிகள் ஒரு வழிப் படாமல் கலங்கி, காது கேட்காமல், துன்பம் இன்பம் இரண்டையும் மறந்து, நினைவு அற்றுப் போய், ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மக்களும், நெருங்கியும், அருகில் கும்பலாகக் கூடியும், "இது சீசீ சிச்சிசி இப்போது போகாது, நல்ல சனியன் கிடக்கட்டும்" என்று கூறிச் செல்ல, அப்படியே கிடந்து உடல் அழிவேனோ?


விரிவுரை


கார் ஆடக் குழல் ---

மாதர்களின் குழல் கரிய மேகம் போல் கருத்துப் பெருத்து விளங்குகின்றது.

பெண்களுக்கு மிகவும் அழகு செய்வது, இருண்டு சுருண்ட கூந்தலாகும்.

ஆலாலக் கணை கண்கள் சுழன்றிட ---

ஆலகால நஞ்சு தோய்ந்த கணையைப் போல் கண்டார் உயிரைத் திருகிப் பருகும் கொடுமையுடைய கண்கள் சக்கரம்போல் சுழல்கின்றன.

முகங்களில் நாலா பச்சிலையாலே மெற்புசி ---

முகம் மினுமினு என்று ஒளி செய்யும் பொருட்டு, பலவிதமான பச்சிலைகளைப் பூசுவர்.

தற்காலத்தில் பழக்கத்தில் உள்ள சுண்ணாம்புச் சத்து சேர்ந்த சோப்பு என்ற சாதனம் உடலின் மினுமினுப்பை மாற்றி, உடல் நலத்தைக் குறைக்கும் தன்மை உடையது.

"மேல்பூசி" என்ற சொல் சந்தத்தைக் கருதி "மெற்புசி" என வந்தது.
  
வாளி கொந்தள காதாட ---

வாளி என்பது ஒருவகை காதணி. கூந்தலின் அருகில் உள்ள காதில் அந்த காதணி அசைந்து அழகு செய்யும்.

கலன் மேலாட ---

நெற்றியில் உள்ள சுட்டி, கழுத்தணி, மார்பில் உள்ள முத்தாரம், கைவளைகள் முதலிய அணிகலன்கள் அசைந்து ஒளி செய்யும்.

துயல் தொங்கல் நெகிழ்ந்திட ---

துயல் - அசைகின்ற.  அசைகின்ற மேலாடை நெகிழ்வது போல் செய்து இளைஞர்களது உள்ளத்தை ஈர்ப்பார்கள்.

வாடாமாலை ஓடையோடு துயல்வர   ---  திருமுருகாற்றுப்படை.
  
கால்தாவிச் சதியோடே சித்திரமென்ப நடம்புரிவார் ---

கால் தாவித் தாவிச் செல்ல.  சதி - தாள ஒத்துடன், சித்திரப் பதுமை போல் நடனம் புரிவார்கள்.
  
சீராடி ---

இத்தகைய விலைமாதருடன் கூடியாடி சிலகாலம் சிறப்பாகக் கழியும். 

மெய்த்திரை வந்து ---

உடம்பில் சுருக்கம் வந்து திரைத்து நரைத்து வனப்பு குன்றி நிற்கும்.

தடிகொண்டு குரங்கெனவே நடந்து ---

தெய்வத்தையும், பெரியோர்களையும் மதியாமலும், துதியாமலும், நிமிர்ந்து நடந்த காலம் நீங்கி, தடி ஊன்றி, குரங்குபோல் கூனி நடக்கும் அவலநிலை எய்தும்.

செங்கையினில் ஓர் தடியும் ஆகியே
வருவது போவது ஒரு முதுகூனும்
மந்தி எனும்படி குந்தி நடந்து.....                 ---  பட்டினத்தார்.

சீயோடிக் கிடை பாயோடு உக்கிய ---

முதுமை வந்து மனிதன் வேதனை அடைகின்ற போது, முன் அன்பாகப் பழகிய மனைவி மக்கள், சீசீ உனக்கு சாவு வரவில்லையே.  நீ ஏன் இன்னும் பூமிக்குப் பாரமாக இருக்கிறாய் என்று கூறி இகழ்வார்கள்.

மாதர் சீயென, வாலர் சீயென    ---   (அறுகுநுனி) திருப்புகழ்.
    
சீசீசிச்சிசி போகா நல் சனியன் கட என்றிட ---

சீசீ இது இன்னும் சாகாமல் கிடக்கின்றதே சனியன், இதற்கு யார் உபகாரம் செய்வார் அப்படியே கிடக்கட்டும் என்று கூறி உறவினர் வெறுத்து விலகுவர். இது பெரிய பரிதாபம். இவ்வாறு அழியுமுன் முருகன் பாதம் சேரவேண்டும்.

சீயத்தொடே ஏகாசர் ---

சீயம் - புலி.  ஏகாசம் - மேல் போர்வை.

பொருபூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகர்...     --- கந்தர் அலங்காரம்

சிவபெருமான் சிங்கத்தின் தோலை உரித்து அத் தோலையும் தலையையும் அணிந்தார்.

தரியா வுளமால் கொடுதன் னிகழும்
அரியொ டுகைம்மா வையடல் புலியை
உரியா மிசைபோர் வையுடுக் கையென
பரியா அரன்உற் றதுபார்த் திலையே        --- கந்தபுராணம், காமதகனச் சருக்கம்.

தங்கிய மாதவத்தின் தழல் வேள்வியினின்று எழுந்த
சிங்கமும் நீள்புலியும் செழு மால் கரியோடு அலறப்
பொங்கிய போர்புரிந்து, பிளந்து, ஈர்உரி போர்த்ததுஎன்னே?
செங்கயல் பாய்கழனித் திரு நாகேச் சரத்தானே.

சிங்கத்து உரி மூடுதிர், தேவர்கணம்
         தொழநிற்றீர், பெற்றம் உகந்து ஏறிடுதிர்,
பங்கம்பல பேசிடப் பாடும் தொண்டர்
         தமைப் பற்றிக்கொண்டு ஆண்டு விடவும்கில்லீர்,
கங்கைச்சடையீர், உம் கருத்துஅறியோம்,
         கண்ணுமூன்றுஉடையீ,ர் கண்ணேயாய் இருந்தால்,
அங்கத்து உறு நோய்களைந்து ஆளகில்லீர்,
         அடிகேள்உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.        --- சுந்தரர்.

தாருகாவனத்து இருடிகள் சிவபெருமானைப் பகைத்து அபிசார வேள்வி செய்து, சிங்கம், புலி, யானை இவைகளைத் தோற்றுவித்து, சிவமூர்த்தியைக் கொல்லும் பொருட்டு ஏவினார்கள்.  அரனார் அவைகளை அடர்த்து, அவைகளின் தோலை உரித்து உடுத்துக்கொண்டார். மேலே போர்த்துக் கொண்டார்.

சிவ அநுபங்கு உறை என்றன் மாதா ---

சிவ அநுபங்கு உறை.

சிவபெருமானுடன் அவர் திருமேனியில் பாதி கொண்டு உறையும் என் தாய் பார்வதி.

வேதாமக்கலை ரூபாள் ---

வேதாகம என்பது சந்தம் நோக்கி, இடைக் குறையாக வேதாம என்று வந்தது. வேதாகம சாத்திர வடிவானவள் தேவி.

நாதவடிவி, அகிலம் புரந்தவள்        --- (ஓலமறை) திருப்புகழ்.
  
எனஞ்சுரர் ---

என அம் சுரர்

என்று அழகிய தேவர்கள் அடிமை பூண்டு முருகவேளைத் துதி செய்கின்றார்கள்.

எண்கிரி ---

எண் திசைகளில் உள்ள குலகிரிகள்.  இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமானம் என்பன.

இபம் ---

எண் திசையில் உள்ள எட்டு யானைகள்.  ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபூமம், சுப்பிரதீபம் என்பன.

தீபேழ் ---

எழு தீவுகள்.  நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகு என்ற இவ் எழுவகைப் பொருள்கள் அவ்வத்தீவில் மிக்கன.  ஆதலால் அவற்றால் அத் தீவுகள் பேர் பெற்றன.

நடம் புரிகின்ற வேலா ---

முருகவேள் சூராதியவுணரைக் கொன்ற போர்க்களத்தில் நடனம் புரிந்து அருளினார்.  இது துடிக்கூத்து, குடைக்கூத்து என்பன.  தண்டையணி என்ற திருப்புகழிலும் இந்த நடனத்தை மிக அழகாக அடிகளார் கூறியுள்ளார்.

சோர்வேதத் தலை மேலாடி ---

நெறி பல கொண்டு, உண்மை இது எனத் தெற்றென உணர்த்தாது வேதம் தளர்கின்றது.

தூண் ஓடிச் சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் ---

மாலும் அயனும், தாமே பரம் என்று மாலும் மனத்தினராக எதிர்த்துப் போராடினர்.  பலகாலும் போர்புரிய உலகம் தடுமாறித் தளர்ந்தது.

அவ் இருவருக்கு நடுவே சிவபெருமான் ஆதி அந்தம் காணாதவாறு சோதித் தூணாக நின்றார்.  அச் சிவசுடரின் தூண் உலகெலாம் ஊடுருவி நின்றது.  அதன் அடிமுடி காணாது அயனும் அரியும் அயர்ந்து நின்றார்கள்.  அண்ணாது - எட்டாது நின்றபடியால் அண்ணாமலை எனப்பட்டது.

இதனால், திருவண்ணாமலை எல்லை இல்லாத சிறப்புடையது என உணர்க.  சிவந்த சோதிமலை ஆதலின், அருணாசலம் (அருணம் - சிவப்பு) சோணசைலம், சோணாத்திரி, அருணகிரி எனப் பலப்பல பேர் பெற்றது.

இம் மலையை நினைப்பவர் வினைப்பகை நீங்கும். சித்தியும் முத்தியும் பெறுவர்.


கருத்துரை


அருணை மேவும் அண்ணலே, உடல் மெலிந்து நலிந்து வீணே அழியாமல் உன் திருவடி சேர அருள் செய்.




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...