கலி காலத்தின் போக்கு





30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;
     சொல்லும்நற் கவியை மெச்சார்;
  துர்ச்சனர்க்கு அகம்மகிழ்ந்து உபசரிப் பார்;வரும்
     தூயரைத் தள்ளிவிடுவார்;

இட்டம்உள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்பு
     என்னிலோ போய்ப்பணிகுவார்;
  ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசை
     என்னிலோ காலில் வீழ்வார்;

நட்டலா பங்களுக்கு உள்ளான பந்துவரின்
     நன்றாக வேபே சிடார்;
  நாளும்ஒப் பாரியாய் வந்தபுத் துறவுக்கு
     நன்மைபல வேசெய் குவார்;

அட்டதிசை சூழ்புவியில் ஓங்குகலி மகிமைகாண்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ----

     அத்தனே - தலைவனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் --- எல்லோரும் தீமை பயக்கின்ற விதத்தில் விகடமாகப் பாடல் புனையும் கவிஞனைப் புகழ்வார்கள்,

     சொல்லும் நல் கவியை மெச்சார் --- புகழ்ந்து கூறத்தக்க நல்ல கவிஞனைப் புகழமாட்டார்கள்,

     துர்ச்சனருக்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் --- தீயவருக்கு மனமகிழ்ச்சியுடன் வேண்டிய உபசாரங்களைச் செய்வார்,

     தூயரைத் தள்ளி விடுவார் --- நல்லோரைத் தள்ளி வைப்பார்கள்,

     இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார் --- விருப்பமான தெய்வத்தை நினைந்து வழிபட மாட்டார்கள்,

     கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் --- பேய் என்றால் சென்று வணங்குவர்,

     ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் --- தன்னைப் பெற்றெடுத்த தாய்தந்தையரைச் சிறிதும் மதிக்க மாட்டார்கள்,

     வேசை என்னிலோ காலில் வீழ்வார் --- விலைமகள் என்றால் அவள் காலில் விழுந்து வணங்குவார்,

     நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே பேசிடார் --- இன்ப துன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம் விட்டுப் பேசமாட்டார்,

     ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல நன்மை செய்வார் --- ஒப்புக்கு என்று வந்த புதிய உறவினர்க்கு எப்போதும் பல நன்மைகளையும் செய்வார்,

     அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை --- எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகத்தின் கலிகாலப் பெருமை இது ஆகும்.

     கருத்து --- மதிக்க வேண்டியவற்றை மதித்துப் போற்றிப் பயன் பெற வேண்டும் என்பது அறியாத அறியாமை மிகுந்தது கலிகாலத்தின் போக்கு ஆகும். குணத்தை விட்டு, குற்றத்தை ஏற்பது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...