அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சிலைநுதல் வைத்து
(திருவருணை)
திருவருணை முருகா!
மாதர் மயலில் முழுகினாலும்,
உன் பாதமலரை ஒருபோதும்
மறவேன்.
தனதன
தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
சிலைநுதல்
வைத்துச் சிறந்த குங்கும
திலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ்
...... தனிலேறிச்
செழுமணி
ரத்நத் திலங்கு பைங்குழை
தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ......
விழிசீறிப்
புலவிமி
குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட
...... அநுராகம்
புகழ்நல
மெத்தப் புரிந்து கொங்கையி
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
புணரினும் நிற்பொற் பதங்கள்
நெஞ்சினுள் ..மறவேனே
கலைமதி
வைத்துப் புனைந்து செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
கணகண கட்கட் கணின்க ணென்றிட ......
நடமாடுங்
கருணைய
னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ......
புயவீரா
அலைகடல்
புக்குப் பொரும்பெ ரும்படை
யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட
......வருவோனே
அடியவ
ரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சிலைநுதல்
வைத்துச் சிறந்த குங்கும
திலதமும் இட்டு, குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத்து அமர்ந்த மென்குமிழ்
...... தனில்ஏறிச்
செழுமணி
ரத்நத்து இலங்கு பைங்குழை
தனை முனிவுற்றுச் சிவந்து, நஞ்சுஅணி
செயலினை ஒத்துத் தயங்கு, வஞ்சக ...... விழிசீறி,
புலவி
மிகுத்திட்டு இருந்த வஞ்சியர்
பதமலருக்குள் பணிந்து, அணிந்து அணி
புரிவளை கைக்குள் கலின்கல் என்றிட, ...... அநுராகம்
புகழ்
நலம் மெத்தப் புரிந்து, கொங்கையில்
உருகி அணைத்து, பெரும் ப்ரியம் கொடு
புணரினும், நின்பொன் பதங்கள் நெஞ்சினுள் ......மறவேனே.
கலைமதி
வைத்துப் புனைந்து செஞ்சடை,
மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட,
கணகண கட்கட் கணின்கண் என்றிட ......
நடமாடும்
கருணையன்,
உற்றத் த்ரியம்பகன் தரு
முருக! புனத்தில் திரிந்த மென்கொடி
கனதன வெற்பில் கலந்து அணைந்துஅருள்
...... புயவீரா!
அலைகடல்
புக்குப் பொரும் பெரும் படை
அவுணரை வெட்டிக் களைந்து வென்று, உயர்
அமரர் தொழ, பொன் சதங்கை கொஞ்சிட .....வருவோனே.
அடியவர்
அச்சத்து அழுங்கிடும் துயர்
தனை ஒழிவித்து, ப்ரியங்கள் தந்திடும்,
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள்
...... பெருமாளே.
பதவுரை
கலைமதி வைத்துப்
புனைந்து செஞ்சடை --- கலையை உடைய பிறைச் சந்திரனைச் சூடி
அலங்கரித்த சிவந்த சடையுடன்,
மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட --- மலையரையன் மகளாகிய பார்வதியம்மை இடது
பாகத்தில் விரும்பி விளங்கிட,
கணகண கட்கட் கணின்கண் என்றிட நடமாடும்
--- கணகண கட்கட் கணின்கண் என்று ஒலிக்கின்ற
கருணையன் --- கருணைக்
கடவுளும்,
உற்றத் த்ரியம்பகன் தரு --- பொருந்திய
மூன்று கண்களை உடையவரும் ஆகிய சிவபெருமான் தந்தருளிய
முருக –-- முருகப் பெருமானே!
புனத்தில் திரிந்த
மென் கொடி
--- தினைப் புனத்தில் உலாவிய மெல்லிய கொடி போன்ற வள்ளி நாயகியின்
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா
--- பருத்த முலையாகிய மலையில் சேர்ந்து அணைந்து அருளிய புயங்களை உடைய
வீரமூர்த்தியே!
அலைகடல் புக்குப் பொரும்
-- அலைகளை உடைய கடலிலே புகுந்து போர் செய்த
பெரும் படை அவுணரை --- பெரிய அசுர
சேனையை உடைய அசுரர்களை
வெட்டிக் களைந்து --- வெட்டித்
தொலைத்து,
வென்று --- வெற்றி பெற்று,
உயர் அமரர் தொழ --- உயர்ந்த தேவர்கள்
வணங்க
பொற் சதங்கை கொஞ்சிட வருவோனே --- அழகிய
சதங்கை இனிய ஒலி செய்ய வருபவரே!
அடியவர் அச்சத்து அழுங்கிடும்
துயர் தனை ஒழிவித்து --- அடியார்கள் பயத்தினால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை
நீக்கி,
ப்ரியங்கள் தந்திடும் --- அவர்கட்கு
விருப்பமானவை யாவும் வழங்கி அருள்புரிந்து,
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள்
பெருமாளே --- திருவண்ணாமலையில் சிறப்புடன் வீற்றிருந்து அருளுகின்ற பெருமையில்
சிறந்தவரே!
சிலை நுதல் வைத்து --- வில்லைப் போன்ற
நெற்றியிலே
சிறந்த குங்கும திலதமும் இட்டு --- நல்ல
குங்குமப் பொட்டை இட்டு,
குளிர்ந்த பங்கய திருமுக வட்டத்து அமர்ந்த
மென்குமிழ் தனில் ஏறி --- குளிர்ந்த தாமரை மலர் போன்ற அழகிய முகவட்டத்தில்
உள்ள மெல்லிய குமிழம்பூ போன்ற மூக்கின்மேல் சார்ந்து,
செழுமணி ரத்நத்து
இலங்கு பைங்குழை தனை முனிவுற்று சிவந்து --- செழுமையான
இரத்தினமணி விளங்கும், அழகிய குழைகள்
தரித்துள்ள காதுகளைக் கோபித்துச் சிவந்து,
நஞ்சு அணி செயலினை ஒத்து --- நஞ்சை
உண்டதன் செயலுக்கு ஒப்ப
தயங்கு வஞ்சக விழி சீறி --- வஞ்சகம்
கொண்டு விளங்கும் கண்கள் கொண்டு சினந்து,
புலவி மிகுத்திட்டு இருந்த
வஞ்சியர் பதமலருக்குள் பணிந்து --- ஊடல் குணம் அதிகப்பட்டு இருந்த
வஞ்சிக்கொடி போன்ற பொதுமாதர்களின் பாதமலரில் வணங்கி,
அணிந்து அணி புரிவளை கைக்குள் கலின்கல்
என்றிட அநுராகம் --- அவர்கள் தரித்துள்ள அணிகலனான வளையல்கள் கையில் கலின்கல்
என்று ஒலிக்க, காமப் பற்றுடன்
புகழ் நலம் மெத்தப்
புரிந்து --- புகழ் நலச் செயல்களை
அதிகமாகச் செய்து,
கொங்கையில் உருகி அணைத்து --- அவர்களின்
முலைகளில் உருகித் தழுவி,
பெரும் ப்ரியம் கொடு புணரினும் --- மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும்,
நின் பொன் பதங்கள் நெஞ்சின் உள் மறவேனே
--- தேவரீருடைய அழகிய திருவடிகளை உள்ளத்தில் மறக்க மாட்டேன்.
பொழிப்புரை
கலையை உடைய பிறைச் சந்திரனைச் சூடி
அலங்கரித்த சிவந்த சடையுடன், மலையரையன் மகளாகிய
பார்வதியம்மை இடது பாகத்தில் விரும்பி விளங்கிய, கணகண கட்கட் கணின்கண் என்று ஒலிக்கின்ற
கருணைக் கடவுளும், பொருந்திய மூன்று
கண்களை உடையவரும் ஆகிய சிவபெருமான் தந்தருளிய முருகப் பெருமானே!
தினைப் புனத்தில் உலாவிய மெல்லிய கொடி
போன்ற வள்ளி நாயகியின் பருத்த கொங்கையாகிய மலையில் சேர்ந்து அணைந்து அருளிய
புயங்களை உடைய வீரமூர்த்தியே!
அலைகளை உடைய கடலிலே புகுந்து போர் செய்த
பெரிய அசுர சேனையை உடைய அசுரர்களை வெட்டித் தொலைத்து வெற்றி பெற்று, உயர்ந்த தேவர்கள் வணங்க அழகிய சதங்கை
இனிய ஒலி செய்ய வருபவரே!
அடியார்கள் பயத்தினால் துன்புற்று
ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அவர்கட்கு விருப்பமானவை
யாவும் வழங்கி அருள்புரிந்து, திருவண்ணாமலையில்
சிறப்புடன் வீற்றிருந்து அருளுகின்ற பெருமையில் சிறந்தவரே!
வில்லைப் போன்ற நெற்றியிலே நல்ல
குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த தாமரை மலர்
போன்ற அழகிய முகவட்டத்தில் உள்ள மெல்லிய குமிழம்பூ போன்ற மூக்கின்மேல் சார்ந்து, செழுமையான
இரத்தினமணி விளங்கும், அழகிய குழைகள்
தரித்துள்ள காதுகளைக் கோபித்துச் சிவந்து, நஞ்சை உண்டதன் செயலுக்கு ஒப்ப வஞ்சகம்
கொம்டு விளங்கும் கண்கள் கொண்டு சினந்து, ஊடல்
குணம் அதிகப்பட்டு இருந்த வஞ்சிக்கொடி போன்ற பொதுமாதர்களின் பாதமலரில் வணங்கி, அவர்கள் தரித்துள்ள அணிகலனான வளையல்கள்
கையில் கலின்கல் என்று ஒலிக்க, காமப் பற்றுடன் புகழ்
நலச் செயல்களை அதிகமாகச் செய்து,
அவர்களின்
தனங்களில் உருகித் தழுவி, மிக்க ஆசையுடன் கலவி
செய்தாலும், தேவரீருடைய அழகிய
திருவடிகளை உள்ளத்தில் மறக்க மாட்டேன்.
விரிவுரை
இந்தத்
திருப்புகழில் அருணகிரிநாதர்,
"ஆசை
மையலில் ஆழ்ந்து நின்றாலும், முருகன் திருவடியை
ஒருபோதும் மறவேன்" என்று தனக்கு உள்ள உறுதியை அறுதியிட்டுக் கூறுகின்றார்.
புணரினும்
நின் பொன்பதங்கள் நெஞ்சினுள் மறவேனே ---
மாதர்
கலவியில் ஈடுப்ட்ட நிற்பினும் முருகா, உன்
பாத மலரை மறவேன் என்கின்றார்.
இதே
கருத்தைச் சுவாமிகள் பல இடங்களில் கூறுகின்றார்....
கண்டுண்ட
சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுஉண்டு
அயர்கினும் வேல் மறவேன்.. --- கந்தர் அலங்காரம்.
பொன், பொருள், பெண், பதவி இவைகள் மயக்கத்தைத் தரும் அபினி
போன்றவை. இறைவனை மறக்கச் செய்யும் வன்மை உடையவை. "பதவி, செம்பொன் முதலிய எய்தினாலும், முருகா! என் உள்ளம் உன்னை மறவாது"
என்று அடிகளார் கூறும் உறுதித் திறன் கண்டுகளிக்கக் கூடியது.
இந்த
வகையில் அடியில் வரும் திருப்புகழை ஓதி இன்புறுக.
தோரண
கனக வாசலில் முழவு
தோல்முர சதிர ...... முதிராத
தோகையர்
கவரி வீசவ யிரியர்
தோள்வலி புகழ ...... மதகோப
வாரண
ரதப தாகினி துரக
மாதிர நிறைய ...... அரசாகி
வாழினும்
வறுமை கூரினு நினது
வார்கழ லொழிய ...... மொழியேனே
கலைமதி
வைத்துப் புனைந்த செஞ்சடை ---
இருளில்
கப்பலில் போகின்றவர்கள் கரையை அடைய விரும்புவார்கள். கரையைத் தெரிவிப்பது கலங்கரை
விளக்கு.
பிறவிப்
பெருங்கடலில் ஆணவ இருளில் முழுகித் தத்தளிக்கும் ஆன்மாக்கட்கு இறைவனுடைய
திருவடியாகிய கரையைக் காட்டும் கலங்கரை விளக்குப் போல், சிவபெருமானுடைய சென்னியில் சந்திரன் ஒளி
செய்து, உயிர்கட்கு உவகை
ஊட்டுகின்றான்.
அன்றித் தக்கன் சாபத்தால் தெய்ந்து
ஓய்ந்த சந்திரன் சிவபெருமான் திருவடியில் சரண் புகுந்தவுடன், அவனைத் திருமுடியில் சூடியருள்
புரிந்தார். எத்துணைக் கொடிய பாவங்கள்
புரிந்தோரும் இறைவனைச் சரண் புகுந்தால் உய்வு பெறுவார்கள் என்ற சிவன் கருணைத்
திறத்தைக் குறிக்கின்றது.
சிவபெருமான்
பரமயோகி. ஆதலால் அவருடைய சடை செக்கச்
செவேல் என்று விளங்குகின்றது.
கருணையன் ---
சிவபெருமான்
கருணையே உருவமானவர். பன்றிக்
குருளைகட்குப் பால் கொடுத்த பரம தயாளன். கரிக்குருவிக்கும், எச்சில் நூலால் பந்தர் இட்ட சிலந்திக்கும்
அருள்புரிந்த அருட்கடல். வில்வக் கிளை உதிர்த்த குரங்கை முசுகுந்தச்
சக்கரவர்த்தியாகப் பிறக்குமாறு கருணை புரிந்த கடவுள். நெய் அருந்த முயன்று, விளக்கினைத் தூண்டிய எலியைப் பலச்
சக்கரவர்த்தியாகச் செய்த பரங்கருணைத் தடங்கடல்.
அவனது
அளவற்ற கருணைத் திறத்தினை வள்ளல்பெருமான் பின்வருமாறு
பாடிமகிழ்கின்றார்...........
"மண்ணார்
உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி
உண்ணாக்
கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல்
வேய்த்த
வள வெற்புஎடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
வாய்த்த
வரம் எல்லாம் வழங்கினையே - சாய்த்தமன
வீம்புடைய
வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
பாம்பையெல்
லாந்தோளில் பரித்தனையே - நாம்பெரியர்
எஞ்சேம்
என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும்
அஞ்சேல்
என்று ஆட்கொண்டு அருளினையே - துஞ்சுபன்றித்
தோயாக்
குருளைகளின் துன்பம் பொறாது அன்று
தாயாய்
முலைப்பாலும் தந்தனையே - வாயிசைக்குப்
பாண்டியன்முன்
சொல்லிவந்த பாணன் பொருட்டுஅடிமை
வேண்டி
விறகு எடுத்து விற்றனையே - ஆண்டொருநாள்
வாய்முடியாத்
துன்பு கொண்ட வந்திக்குஓர் ஆளாகித்
தூய்முடிமேல்
மண்ணும் சுமந்தனையே - ஆய்துயர
மாவகஞ்சேர்
மாணிக்க வாசகருக் காய்க் குதிரைச்
சேவகன்போல்
வீதிதனில் சென்றனையே - மாவிசயன்
வில்
அடிக்கு நெஞ்சம் விரும்பியது, அல்லால் எறிந்த
கல்அடிக்கும்
உள்ளம் களித்தனையே - மல்லல்உறும்
வில்வக்
கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத்
துரைமகனாய்ச் செய்தனையே - சொல்அகலின்
நீளுகின்ற
நெய் அருந்த நேர்எலியை மூவுலகும்
ஆளுகின்ற
மன்னவனாய் ஆக்கினையே - கோளகல .
வாய்ச்சு
அங்கு நூல் இழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட்
சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல்
ஆறு
அடுத்த வாகீசர்க்கு ஆம்பசியைக் கண்டுகட்டுச்
சோறு
எடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற
தொன்மை
பெரும் சுந்தரர்க்குத் தோழன் என்று பெண்பரவை
நன்மனைக்குத்
தூது நடந்தனையே - நன்மைபெற
இற்றென்ற
இற்றென்னா எத்தனையோ பேர்கள் செய்த
குற்றங்
குணமாகக் கொண்டனையே - பற்று உலகில்
அன்புடைய
தாயர்கள் ஓர் ஆயிரம்பேர் ஆனாலும்
அன்புடையாய்
நின்னைப்போல் ஆவாரோ? - இன்பமுடன்
ஈண்டவரும்
தந்தையர்கள் எண்ணிலரே ஆயினும்என்
ஆண்டவனே
நின்னைப்போலு ஆவாரோ?...........
அடியவர்
அச்சத்து அழுங்கிடும் துயர் தனை ஒழிவித்து, ப்ரியங்கள் தந்திடும் ---
அடியார்கட்கு
அச்சத்தினால் ஒடுங்கி நடுங்கி எய்தும் துயரங்கள் எல்லாவற்றையும் விலக்கி, அவர்கள் விரும்பும் பொருள்கள் அனைத்தும்
வழங்க வல்ல கருணாமூர்த்தி கந்தவேள்.
பின்
வரும் திருப்புகழ் அமுத வாக்குகளை எண்ணி இன்புறுக...
வேண்டும்
அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டும்
அளவில் உதவும் பெருமாளே...
வேண்டிய
போதுஅடியர் வேண்டிய போகம்அதை
வேண்ட
வெறாது உதவும் பெருமாளே....
அடியவர்
இச்சையில் எவைஎவை உற்றன
அவை
தருவித்துஅருள் பெருமாளே...
கருத்துரை
அருணாசலம்
மேவிய அண்ணலே, மாதர் மையலில்
முழுகினாலும் உன் பாதமலரை மறவேன்.
No comments:
Post a Comment