அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருணை சிறிதும்இல்
(திருவருணை)
திருவருணை முருகா!
சமய பேதங்களுக்கு எட்டாததும்,
அன்பு ஒன்றினாலேயே அறியப்படுவதும்
ஆகிய
உண்மைப் பொருளை உபதேசித்து
அருள்
தனன
தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கருணை
சிறிதுமில் பறிதலை நிசிசரர்
பிசித அசனம றவரிவர் முதலிய
கலக விபரித வெகுபர சமயிகள் ......
பலர்கூடிக்
கலக
லெனநெறி கெடமுறை முறைமுறை
கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை விழிபுனல் வரமொழி ......
குழறாவன்
புருகி
யுனதருள் பரவுகை வரில்விர
கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள
...... றதுபோக
உதறி
லெனதெனு மலமறி லறிவினி
லெளிது பெறலென மறைபறை யறைவதொ
ருதய மரணமில் பொருளினை யருளுவ .....தொருநாளே
தருண
சததள பரிமள பரிபுர
சரணி தமனிய தநுதரி திரிபுர
தகனி கவுரிப வதிபக வதிபயி ......
ரவிசூலி
சடில
தரியநு பவையுமை திரிபுரை
சகல புவனமு முதவிய பதிவ்ருதை
சமய முதல்வித னயபகி ரதிசுத ......
சதகோடி
அருண
ரவியினு மழகிய ப்ரபைவிடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி ......
புயவேளே
அடவி
சரர்குல மரகத வனிதையு
மமரர் குமரியு மனவர தமுமரு
கழகு பெறநிலை பெறவர மருளிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கருணை
சிறிதும் இல் பறிதலை நிசிசரர்,
பிசித அசன மறவர் இவர் முதலிய,
கலக விபரித வெகுபர சமயிகள் ......
பலர்கூடி,
கலகல
என நெறி கெட, முறை முறைமுறை
கதறி, வதறிய, குதறிய கலைகொடு
கருத அரியதை, விழிபுனல் வர, மொழி ..குழறா,அன்பு
உருகி
உனது அருள் பரவு கை வரில், விரகு
ஒழியில், உலகியல் பிணை விடில், உரை செயல்
உணர்வு கெடில், உயிர் புணர் இருவினை அளறு ......அது போக
உதறில், எனது எனும் மலம் அறில், அறிவினில்
எளிது பெறல் என, மறை பறை அறைவதொர்
உதய மரணம் இல் பொருளினை அருளுவது .....ஒருநாளே.
தருண
சததள பரிமள பரிபுர
சரணி, தமனிய தநுதரி, திரிபுர
தகனி, கவுரி, பவதி, பகவதி, பயி ...... ரவி, சூலி
சடில
தரி, அநுபவை, உமை, திரிபுரை,
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை,
சமய முதல்வி தனய! பகிரதி சுத! ...... சதகோடி
அருண
ரவியினும் அழகிய ப்ரபை விடு
கருணை வருணித! தனுபர! குருபர!
அருணை நகர் உறை சரவண! குரவு அணி ......புயவேளே!
அடவி
சரர் குல மரகத வனிதையும்,
அமரர் குமரியும் அனவரதமும் அருகு
அழகு பெற, நிலை பெற, வரம் அருளிய ....பெருமாளே.
பதவுரை
தருண --- இளமை
உடையவரும்,
சததள --- நூறு இதழ்களுடன் கூடிய தாமரை
போன்றதும்
பரிமள --- நறுமணம் கமழ்வதும்
பரிபுர --- சிலம்பினைத் தரித்து
உள்ளதும் ஆகிய
சரணி --- திருவடியை உடையவரும்,
தமனிய தநுதரி --- பொன் மயமான மேரு
மலையை வில்லாகத் தரித்தவரும்,
திரிபுர தகனி --- முப்புரங்களை எரித்தவரும்,
கவுரி ---
பொன்
நிறம் உடையவரும்,
பவதி --- பிறப்பை அறுப்பவரும்,
பகவதி --- ஆறு அருட்குணங்களை உடையவரும்,
பயிரவி --- பைரவியாகத் தோன்றியவரும்,
சூலி --- திரிசூலத்தை ஏந்தியவரும்,
சடில தரி --- சடைக்கற்றையை உடையவரும்,
அநுபவை ---
அழுந்தி
அறியப்படுபவரும்,
உமை ---
உமாதேவியாரும்,
திரிபுரை --- மூன்று உலகங்களுக்கும் தலைவி ஆனவளும்,
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை --- எல்லா புவனங்களையும்
ஈன்றருளிய அன்னையாரும், பதி வழிபாட்டையே
விரதமாகக் கொண்டவரும்,
சமய முதல்வி --- எல்லாச்
சமயங்களுக்கும் தலைவியானவளும் ஆகிய அம்பிகையின்
தனய --- புதல்வரே!
பகிரதி சுத --– கங்காதேவியின்
மைந்தரே!
சதகோடி அருண
ரவியினும் அழகிய ப்ரபைவிடு --- சிவந்த நிறம் உடைய நூறுகோடி
சூரியரினும் அழகின் மிக்க ஒளி வீசுகின்றதும்,
கருணை வருணித ---
கருணை
மயமானதும்,
தனு பர --- நல்ல நிறமுடைய திருமேனியை உடைய தலைவரே!
குருபர --- சிறந்த குருநாதரே!
அருணை நகர் உறை சரவண --- திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள
சரவணரே!
குரவு அணி புய ---- குரா மலரைத்
தரித்த பன்னிரு புயங்களை உடையவரே!
வேளே --- எல்லோராலும்
விரும்பப்படுபவரே!
அடவி சரர் குல மரகத
வனிதையும் --- வனத்தில் உலாவுகின்ற வேடர் குலத்தில்
வந்தவரும், பச்சை நிறம்
உடையவரும் ஆகிய வள்ளியம்மையாரும்,
அமரர் குமரியும் --- தேவர் மகளாகிய
தெய்வயானை அம்மையாரும்
அனவரதமும் அருகு அழகு பெற --- இடைவிடாது பக்கத்தில் அழகு பெறுமாறு
நிலை பெற ---
நிலைபேறுடன் வீற்றிருக்குமாறு
வரம் அருளிய பெருமாளே --- அவர்கட்கு
வரம் கொடுத்து அருளிய பெருமையின் மிக்கவரே!
கருணை சிறிதும் இல் --- கருணை
ஒரு சிறிதும் இல்லாதவரும்,
பறிதலை ---
தலைமயிரைப்
பறிப்பவரும்,
நிசிசரர் --- இரவிலே திரிபவரும்,
பிசித அசன --- புலாலை உண்பவரும்,
மறவர் --- கொலை புரிபவரும்
இவர் முதலிய --- இத்தன்மைய இழுக்கு
உடையவர் முதலிய,
கலக விபரித --- கலகமும் விபரீத
அறிவும் படைத்த,
வெகு பர சமயிகள் பலர்கூடி --- பலப்பல
பிரிவுகளாக உள்ள பரசமயவாதிகள் பலர் சேர்ந்து,
கலகல என --- கலகல என்று இரைந்து,
நெறி கெட --- நன்னெறியை விட்டு,
முறைமுறை முறை கதறி வதறிய குதறிய கலைகொடு
கருத அரியதை ---- தத்தம் சமயமே முறை என்றும், தமது சமய லட்சணமே முறை என்றும், தாம் கூறுவதே முறை என்றும், ஓ என்று வாதிட்டுப் பேசி, வாயாடி நெறிகெட்டுக் குலைகின்ற கலைகளைக்
கொண்டு கருத முடியாததை,
விழி புனல் வர --- கண்களில் இருந்து அன்பு நீர் பெருகி
வரவும்,
மொழி குழறா --- சொற்கள் குழறியும்,
அன்பு உருகி --- அன்பினால் உள்ளம் உருகியும்,
உனது அருள் பரவுகை
வரில் --- தேவரீரது திருவருளின்
பெருமையைச் சொல்லித் துதிக்கும் தன்மை உண்டாயின்,
விரகு ஒழியில் --- வஞ்சனை நீங்கினால்,
உலகியல் பிணை விடில் ---
உலகப்
பொருள்களில் உள்ள பற்று அற்ற இடத்தில்,
உரை செயல் உணர்வு கெடில் --- சொல்லும்
செயலும் பசுபோதமும் நீங்கினால்,
உயிர் புணர் இரு வினை அளறு அது போக
உதறில் --- உயிர் உடம்பொடு
கூடுதற்கு உரிய ஆன இருவினை என்னும் சேறு நீங்க உதறித் தள்ளினால்,
எனது எனும் மலம் அறில் --- எனது என்னும் மலம் அற்று ஒழிந்தால்,
அறிவினில் எளிது பெறல் என --- பதிஞானத்தால்
எளிதில் பெறலாம் என்று,
மறை பறை அறைவதொர் --- வேதங்கள் பறை
அறைவது போல் முழங்கிக் கூறுவதான,
ஒப்பற்ற,
உதயம் மரணம் இல் பொருளினை --- தோற்றமும்
ஒடுக்கமும் இல்லாத பொருளினை
அருளுவது ஒருநாளே --- அடியேனுக்கு
அருளுவதாகிய ஒருநாள் உளதோ?
பொழிப்புரை
இளமை உடையவரும், நூறு இதழ்களுடன் கூடிய தாமரை போன்றதும்
நறுமணம் கமழ்வதும் சிலம்பினைத் தரித்து உள்ளதும் ஆகிய திருவடியை உடையவரும், பொன் மயமான மேரு மலையை வில்லாகத்
தரித்தவரும், முப்புரங்களை
எரித்தவரும், பொன் நிறம் உடையவரும், பிறப்பைப் போக்குபவரும், ஆறுகுணங்களை உடையவரும், பைரவியாகத் தோன்றியவரும், திரிசூலத்தை ஏந்தியவரும், சடைக்கற்றையை உடையவரும், அழுந்தி அறியப்படுபவரும், உமாதேவியாரும், மூன்று உலகங்களுக்கும் தலைவி ஆனவளும், எல்லா புவனங்களையும் ஈன்றருளிய
அன்னையாரும், பதி வழிபாட்டையே
விரதமாகக் கொண்டவரும், எல்லாச்
சமயங்களுக்கும் தலைவியானவளும் ஆகிய அம்பிகையின் புதல்வரே!
கங்கா தேவியின் மைந்தரே!
சிவந்த நிறம் உடைய நூறுகோடி சூரியரினும்
அழகின் மிக்க ஒலி வீசுகின்றதும்,
கருணை
மயமானதும், நல்ல நிறமுடைய
திருமேனியை உடைய தலைவரே!
சிறந்த குருநாதரே!
திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள சரவணரே!
குரா மலரைத் தரித்த பன்னிரு புயங்களை
உடையவரே!
எல்லோராலும் விரும்பப்படுபவரே!
வனத்தில் உலாவுகின்ற வேடர் குலத்தில்
வந்தவரும், பச்சை நிறம்
உடையவரும் ஆகிய வள்ளியம்மையாரும்,
தேவர்
மகளாகிய தெய்வயானை அம்மையாரும் இடைவிடாது பக்கத்தில் அழகு பெறுமாறு நிலைபேறுடன்
வீற்றிருக்குமாறு அவர்கட்கு வரம் கொடுத்து அருளிய பெருமையின் மிக்கவரே!
கருணை ஒரு சிறிதும் இல்லாதவரும், தலைமயிரைப் பறிப்பவரும், இரவிலே திரிபவரும், புலாலை உண்பவரும், கொலை புரிபவரும் இத்தன்மைய இழுக்கு
உடையவர் முதலிய, கலகமும் விபரீத
அறிவும் படைத்த, பலப்பல பிரிவுகளாக
உள்ள பரசமயவாதிகள் பலர் சேர்ந்து, கலகல என்று இரைந்து, நன்னெறியை விட்டு, தத்தம் சமயமே முறை என்றும், தமது சமய லட்சணமே முறை என்றும், தாம் கூறுவதே முறை என்றும், ஓ என்று வாதிட்டுப் பேசி, வாயாடி நெறிகெட்டுக் குலைகின்ற கலைகளைக்
கொண்டு கருத முடியாததை,
கண்களில் இருந்து அன்பு நீர் பெருகி
வரவும், சொற்கள் குழறியும், அன்பினால் உள்ளம் உருகியும், தேவரீரது திருவருளின் பெருமையைச்
சொல்லித் துதிக்கும் தன்மை உண்டாயின், வஞ்சனை
நீங்கினால், உலகப் பொருள்களில்
உள்ள பற்று அற்ற இடத்தில், சொல்லும் செயலும்
பசுபோதமும் நீங்கினால், உயிர் உடம்பொடு
கூடுதற்கு உரிய ஆன இருவினை என்னும் சேறு நீங்க உதறித் தள்ளினால், எனது என்னும் மலம் அற்று ஒழிந்தால், பதிஞானத்தால் எளிதில் பெறலாம் என்று, வேதங்கள் பறை அறைவது போல் முழங்கிக்
கூறுவதான, ஒப்பற்ற, தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத பொருளினை
அடியேனுக்கு அருளுவதாகிய ஒருநாள் உளதோ?
விரிவுரை
கருணை
சிறிதுமில் …. வெகுபர சமயிகள் ---
பரசமயங்களைப்
பற்றி முதலடியாகிய இதில் கூறுகின்றனர்.
அச் சமயவாதிகள் நடுநிலை நீங்கியும் கொலைபுலை தாங்கியும், கலகமும் தர்க்கமும் விபரீத அறிவும்
மயக்கமும் உடையவராய் நின்று உழல்வர்.
அன்பு நெறி அறியாராய் மயங்குவர்.
பலர்கூடி
…. கலைகொடு கருத அரியதை ---
மேற்கூறிய
சமயவாதிகள் பலர் கூடி, ஒருவரை ஒருவர்
எதிர்த்து, தாம்தாம் கூறும்
சமயநெறியே உண்மை நெறி என்றும், தனது சமயமே
மெய்ச்சமயம் என்றும், ஏனைய சமய உண்மைகள்
பொருந்துவன அல்ல என்றும், கதறிக் குதர்க்கம்
செய்து கலகல என வாதிட்டு வம்புரை பேசி வறிது பேசுவர். அவ்வாறு பேசும் கலைகளைக் கொண்டு எண்ணறிய
முடியாதது என்கின்றார்.
ஏதுக்களாலும்
எடுத்த மொழியாலும் மிக்கு
சோதிக்க
வேண்டா …. ---
திருஞானசம்பந்தர்.
கலகல
கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு
சமயப் பங்கவாதிகள்
கதறிய
வெகுசொல் பங்கமாகிய பொங்குஅளாவும்
கலைகளும்
மொழியப் பஞ்சபூதமும்
ஒழியுற
மொழியில் துஞ்சுறாது என
கரணமும்
ஒழியத் தந்த ஞானம் இருந்தவாறென்...
---
(அலகிலவுணரை)
திருப்புகழ்.
உருஎனவும்
அருஎனவும் உளதுஎனவும் இலதுஎனவும்
உழலுவன பரசமய ......
கலைஆர வாரம்அற
உரைஅவிழ
உணர்வுஅவிழ உளம்அவிழ உயிர்அவிழ
உளபடியை உணரும்அவர் ......
அநுபூதி ஆனதுவும்.... ---
சீர்பாத
வகுப்பு.
விழி
புனல் வர, மொழி குழற, அன்பு உருகி......
வரில்---
சமயகலைகளுக்கு
எட்டாத தனிப்பெரும் பொருளை உணர்ந்து உய்தற்கு வழி கூறுகின்றனர். ஒரு மாடி மீது
ஏறுதற்குப் படி அமைப்பது போல் ஆறு படி அமைக்கின்றனர். கண்ணீர் மல்கி உரை குழறி அன்பினால்
உள்ளம் உருகி இறைவனருளை வியந்து நயந்து துதித்தல் முதல் படி. அன்பினால் அகம்
குழைந்து பாடிப் பரவுதலால் கற்பகோடி காலம் தவம் இழைத்தாலும் பெறமுடியாத
பெரும்பொருளை எளிதில் பெறலாம்.
விரகு
ஒழியில் ---
அங்ஙனம்
இறைவனைப் பரவுபவர் வஞ்சனை ஒழுக்கத்தை அறவே அகற்ற வேண்டும். மேலே தவவொழுக்கம் போலே காட்டி, உள்ளே பொய்யொழுக்கத்தை வைத்தவர்களைக்
காட்டிலும் வன்கணாளரில்லை.
பொக்கம்
மிக்கவர் பூவும் நீரும்கண்டு
நக்கு
நிற்கும் அவர்தம்மை நாணியே.. --- அப்பர்
விரகுஅற
நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்
விழிபுனல்
தேக்கிட அன்புமேன்மேல்
மிகவும்
இராப்பகல் பிறிது பராக்குஅற --- திருப்புகழ்.
உலகியல்
பிணை விடில் ---
உலகப்
பொருள்களில் பற்று வைத்து உழல்வதை விடவேண்டும்.
அற்றது பற்று எனில் உற்றது வீடு என்பது திருவாய்மொழி.
உரை
செயல் உணர்வு கெடில் ---
உரை
- வாக்கின் தொழில். செயல் - உடம்பின்
தொழில். உணர்வு - மனத்தின் தொழில். மனவாக்குக்காயம் என்ற மூன்று காரணங்களின்
தொழில் நீங்க வேண்டும்.
வினை
அளறு அது போக உதறில் ---
அளறு
- சேறு. வினையாகிய சேற்றை உதறித் தள்ளுதல்
வேண்டும். பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய
வழி விட்டவா என்று அலங்காரத்தில் உலக மயக்கத்தைச் சேறு என்றனர்.
எனது எனும்
மலம் அறில்
---
எனது
என்பது மமகாரம். புறப்பற்று. இது ஆணவ மலத்தின் ஒரு கூறு.
எளிது
பெறல் என …..... ஒருநாளே ---
உதய
மரணம் இல் பொருள் - நினைப்பு மறப்பு அற்ற இடத்தில் வெளிப்படும் செம்பொருள். அச்
செம்பொருள் கலையறிவினால் கிடைக்காது. மேலே சொன்ன ஆறு வழிகளால் பெறலாம்.
1. விழி புனல் வர
மொழிகுழறா அன்புருகி முருகனது அருள் பரவுதல்.
2. விரகு ஒழிதல்.
3. உலகியல் பிணை
விடுதல்.
4. உரை செயல் உணர்வு
கெடல்.
5. உயிர் புணர் இருவினை
அளறு அது போக உதறுதல்.
6. எனது எனும் மலம்
அறுதல்.
இந்த
ஆறு படிகள் மீது ஏறுவோர்க்கு அறிவினில் எளிது பெறலாம் என்று வேதங்கள் பறைபோல
முழங்கிக் கூறுகின்றன. ஆதலால், அப் பொருளினை அடியேனுக்கு விளக்கி
அருள்வீர் என்று சுவாமிகள் முறையிடுகின்றனர்.
கருத்துரை
உமாதேவியின்
திருக்குமாரரே! திருவருணையில் எழுந்தருளி இருப்பவரே! வல்லீதேவசேனா சமேதரே!
பரசமயிகள் கதறும் கலை அறிவுக்கு எட்டாததும், நினைப்பு மறப்பு அற்றதும் ஆகிய
செம்பொருளை அருள் புரிவீர்.
No comments:
Post a Comment