திருவண்ணாமலை - 0525. இமராஜன் நிலா
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இமராஜன் நிலாவது (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை நினைந்து வாடும் இப்பெண்ணைச் சேர்ந்து அருள்


தனதாதன தானன தத்தம் ...... தனதான
     தனதாதன தானன தத்தம் ...... தனதான


இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
     இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே

சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
     தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே

குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா
     குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா

அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே
     அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இம ராஜன் நிலா அது எறிக்கும் ...... கனலாலே
     இள வாடையும் ஊரும் ஒறுக்கும் ...... படியாலே,

சமர் ஆகிய மாரன் எடுக்கும் ...... கணையாலே,
     தனிமான் உயிர் சோரும், அதற்கு ஒன்று ...... அருள்வாயே.

குமரா! முருகா! சடில அத்தன் ...... குருநாதா!
     குறமாமகள் ஆசை தணிக்கும் ...... திருமார்பா!

அமராவதி வாழ்வு அமரர்க்கு அன்று ...... அருள்வோனே!
     அருணாபுரி வீதியில் நிற்கும் ...... பெருமாளே.

பதவுரை
 

          குமரா --- குமாரக் கடவுளே!

முருகா --- முருகப் பெருமானே!
  
சடிலத்தன் குருநாதா --- சடைமுடியை உடைய சிவமூர்த்திக்குக் குருநாதரே!
    
      குறமாமகள் ஆசை தணிக்கும் திருமார்பா --- குறவர் குலத்தில் வளர்ந்த பெருமை மிகுந்த வள்ளியம்மையின் விருப்பத்தை நிறைவேற்றும் அழகிய திருமார்பை உடையவரே!

      அமராவதி வாழ்வு --- இந்திரபுரியாகிய பொன்னகர வாழ்வை

     அமரர்க்கு அன்று அருள்வோனே --- தேவர்களுக்கு அன்று அருள் புரிந்தவரே!

      அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே --- திருவண்ணாமைலை வீதியில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே --- பனிக்கு அரசனாகிய சந்திரனானவன் வீசுகின்ற நெருப்பாலும்,

     இளவாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே --- தென்றல் காற்றும், ஊரவர்களும் வருத்துகின்ற தன்மையாலும்,

      சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே --- போர்க்கு என எழுந்த மன்மதன் தொடுக்கும் மலர்க் கணைகளாலும்,

     தனி மான் உயிர் சோரும் --- தனித்துக் கிடக்கும் மான் போன்ற இப் பெண்ணின் உயிரானது சோர்கின்றதே.

     அதற்கு ஒன்று அருள்வாயே --- அதற்கு ஒரு வழி கூறி அருளுவீராக.

விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.  முருகனை நாயகனாகக் கொண்ட பக்குவப்பட்ட ஆன்மா தனித்து வருந்துவதாக இப்பாடல் தெரிவிக்கின்றது.

இமராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே ---

இமம் - பனி.  சந்திரன் பனிக்கு அரசன்.  குளிர்ச்சியை உடையவன் என்பது பொருள். சந்திரன் வீசுகின்ற குளிர்ந்த அமுத கிரணம் காமுகர்க்கு அனல்போல் அல்லலைத் தரும்.

    ஊரைச் சுடுமோ உலகம் தனைச் சுடுமோ
    ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
    பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே யஇந்த
    நெருப்புவட்ட மான நிலா.        ---  பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

இள வாடையும் ---

இளம் தென்றல் காற்று காமுகர்க்கு வேதனையைத் தரும்.

", தென்றல் மாருதமே! நீ பிறந்தது எங்கள் சிவபெருமானுடாய சந்தனக் காடுகளை உடைய பொதியமலை. நீ சதா பழகுவது தெய்வ நீராகிய காவிரி பாயும் தமிழ்நாடு.  உயர்ந்த இடத்தில் பிறந்தும், குளிர்ந்த நாட்டில் பழகியும், எவ்வாறு இந்தக் கொடுமையை நீ பெற்றிருக்கின்றாய்?” என்று காதல் நோய் கொண்ட சுந்தரர் கூறுகின்றார்.  அந்த இனிய பாடல் பெரியபுராணத்திலிருந்து இது.

பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை,
சிறந்து அணைந்தது தெய்வநீர் நாட்டினில்,
புறம்பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ்மாருதம். ---  பெரியபுராணம்.


ஊரும் ஒறுக்கும் படியாலே ---

தனித்த ஒரு பெண்மணியைப் பற்றி ஊரில் உள்ளவர்கள் பலவாறு பேசி வசை கூறுவார்கள்.

தெருவினில் நடவா மடவார்
திரண்டு ஒறுக்கும் வசையாலே           --- திருப்புகழ்.

சரமாகிய மாரன் எடுக்கும் கணையாலே ---

போருக்கு என்று ஆயத்தமாக நிற்கும் மன்மதன் தனித்தவரிடம் நின்று மலர்க்கணைகளைச் சொரிந்து மோகத் தீயை மூட்டுவான்.

தனிமான் உயிர் சோரும் ---

முருகனைக் கணவனாக வரித்து அப் பெருமானை அடைய விரும்பி, அடையப் பெறாது தனிமையில் உயிர் துடித்து இப் பெண் சோர்கின்றாள்.

அதற்கு ஒன்று அருள்வாயே ---

இவ்வாறு இங்கும் இம் மடவரலுக்கு ஒருவழி செய்து, நீர் கணவனாக வந்து அருள் புரிவீராக என்று அருணகிரிநாதர் முறையிடுகின்றார்.  நாயக நாயகி பாவத்தில் இப் பாடல் மிக இனிமையாக விளங்குகின்றது.

குமரா ---

குமரன் - என்றும் இளமையுடன் இருப்பவன்.  முருகனுடைய திருநாமங்களில் சிறந்தது குமார நாமம்.  இப் பெருமானுடைய ஆகமம் குமார தந்திரம் என்று பேர் பெறும்.  எண்ணில்லாத நாமங்கள் முருகனுக்கு உள. அவற்றில் மூன்று நாமங்கள் சிறந்தவை. முருகன் குமரன் குகன் என்பவை.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து,
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்---  கந்தர் அநுபூதி.

குமார என்பது ஒரு சிறந்த மந்திரம்.  கு - உலகமாயை.  மரா - போக்குவது.  உலக மாயையை நீக்குவது.  இம் மந்திரத்தை இடையறாது சிந்திப்பவர்க்கு மலமாய கன்மங்கள் தொலையும்.  சிவபெருமான் பிரணவோபதேசம் கேட்கும்போது கூறிய மந்திரமும் இக் குமார மந்திரமே ஆம்.

நாதா குமரா நமஎன்று, அரனார்
ஓதாய் என, ஓதியது எப்பொருள்தான்.    ---  கந்தர் அநுபூதி.

ஆயிரம் மறைகளும் கூறும் மந்திரமும் இதுவே ஆம்.

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
   புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
      குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ..... திடுவோனே  --- (ஒருவரையும்) திருப்புகழ்.

குமரா சரணம் என்று அமரர்கள் எம்பெருமானிடம் அடைக்கலம் புகுந்து திரிவர். ஆதலின் அன்பர்கள் குமரா சரணம் என்ற இம் மந்திரத்தை அடிக்கடி கூறி உய்வு பெறுவார்களாக. 

குமரா சரணம் சரணம் என்று அண்டர் குழாம் துதிக்கும்
அமராவதியில் பெருமாள் திருமுகம் ஆறும் கண்ட
தமராகி வைகும் தனியான ஞானத் தபோதனர்க்கு, இங்கு
எமராசன் விட்ட கடையேடு வந்து இனி என்செயுமே.    ---  கந்தர் அலங்காரம்.

சுவாமிகள், தாம் பாடி அருளிய கந்தர் அந்தாதியில், தும்முகின்ற போது குமரா சரணம் என்று கூறுமாறு உபதேசிக்கின்றனர்.

சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதை உயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேல்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.    

இதன் பதவுரை -----

     செம் --- சிவந்த,

     தினைமேல் --- தினைப் புனத்தில் வாசம் செய்த,

     சிறுமிக்கு --- வள்ளிநாயகிக்கு,

     மரபு --- தமது மரபின் வழிகளை,

     உரைத்து --- எடுத்து உரைத்து,

     நின்றோன் --- குறையிரந்து நின்றவனும்,

     சிலை --- வில்லை உடைய,

     வேட்டுவன் --- வேடத் திருமேனியை உடைய கண்ணப்ப நாயனார்,

     எச்சில் --- ஊன் முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை,

     து --- உவப்புடனே உண்டவராகிய,

     மிக்கும் --- மேன்மையாக,

     அரவு --- பாம்பு ஆபரணத்தை,

     அணி --- தரித்த,

     முடியான் --- முடியை உடைய பரமசிவனது,

     மகன் --- மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது,

      சீறடிக்கு --- சிறிய திருவடியைக் கருதிக் கொண்டே.


       சிறு --- சிறிதான,

     உமிக்கும் --- குற்றுமியையாயினும்,

     பகிர மர நிகர்வீர் --- பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே,

     சிதை --- அழிந்து போவதும்,

     உயிர் --- பிராணனுக்கு,

     துச்சில் --- ஒதுக்கிடமும் ஆகிய இவ் உடலின்கண்,

     துமி --- ஒரு தும்மல் உண்டாகும் அக் காலையினும்,

     குமர --- குமரனே,

     சரணம் --- உனக்கு அடைக்கலம்,

     என்னீ்ர் --- என்று சொல்லுங்கள்,

     உய்விர் --- பிழைப்பீர்கள்,

     சிவந்த தினைப் புனத்தில் வாசம் செய்த வள்ளிநாயகிக்கு, தமது மரபின் வழிகளை எடுத்து உரைத்து, குறையிரந்து நின்றவனும், வில்லை உடைய, வேடத் திருமேனியை உடைய கண்ணப்ப நாயனார், ஊன் முதலியவற்றை முன் ருசி பார்த்து நிவேதித்த எச்சிலை உவப்புடனே உண்டவராகிய, மேன்மையாக, பாம்பு ஆபரணத்தைத் தரித்த, சடைமுடியை உடைய பரமசிவனது,  மைந்தனுமாகிய குமாரக் கடவுளினது சிறிய திருவடியைக் கருதிக் கொண்டே, சிறிதான குற்று உமியையாயினும், பிறர்க்கு இட்டு உண்ண மனம் கூடாமல் மரம் போன்று இருப்பவரே, அழிந்து போவதும், பிராணனுக்கு ஒதுக்கிடமும் ஆகிய இவ் உடலின்கண், ஒரு தும்மல் உண்டாகும் அக் காலையினும், குமரனே! உனக்கு அடைக்கலம்,  என்று சொல்லுங்கள். பிழைப்பீர்கள்,
      
முருகா ---

முருகன் என்ற திருநாமம் மகிச் சிறந்தது. "மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்" என்று கந்தர் அலங்காரத்தில் ஆசிரியர் கூறுகின்றார்.

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக    ---  திருமுருகாற்றுப்படை.

சடில அத்தன் ---

சடிலம் - சடைமுடி.  சிவபெருமான் சடைமுடி உடையவர்.  இது துறவு நிலையை உணர்த்துகின்றது. சிவமூர்த்தி பரமயோகி.
  
குறமாமகள் ஆசை தணிக்கும் திருமார்பா ---

திருமாலின் கண்ணில் பிறந்தவள் சுந்தரவல்லி.  முருகவேளின் ஆணையின்படி, வள்ளிமலையில் மான் வயிற்றில் பிறந்து, குறவர் குலத்தில் வளர்ந்தாள்.  அவருடைய விருப்பம் நிறைவேற முருகவேள் அவரைத் தழுவி அருள் புரிந்தார்.

கருத்துரை

அருணை மேவிய அண்ணலே, உன்னை நினைந்து வருந்தும் இப் பெண்ணை மருவி அருள் புரிக.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...