திரு ஆனைக்கா - 0511. குருதி புலால் என்பு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குருதி புலால் என்பு (திருவானைக்கா)

முருகா!
ஐம்புல வேடரால் வளர்ந்து அழியாமல்,
பேரின்ப வீட்டினை அடைய அருள்.


தனதன தானந்த தான தந்தன
     தனதன தானந்த தான தந்தன
          தனதன தானந்த தான தந்தன ...... தனதான


குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
     கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
          குடர்நிணம் போமங்கள் மூளை யென்பன ......பொதிகாயக்

குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
     அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
          கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே

சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
     சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
          துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
     திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
          துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே

ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
     நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
          உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா

உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
     அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
          உளமதில் நாளுங்கு லாவி யின்புற ...... வுறைவோனே

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
     அரிகரி கோவிந்த கேச வென்றிரு
          கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே

கமலனு மாகண்ட லாதி யண்டரு
     மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
          கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குருதி புலால் என்பு தோல் நரம்புகள்
     கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய
          குடர், நிணம், ரோமங்கள், மூளை, என்பன ......பொதிகாயக்
 
குடில் இடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல
     அடவியில் ஓடும் துராசை வஞ்சகர்
          கொடியவர் மா பஞ்ச பாதகம் செய, ...... அதனாலே

சுருதி புராணங்கள் ஆகமம் பகர்
     சரியை க்ரியா அண்டர் பூசை, வந்தனை,
          துதியொடு நாடும் தியானம் ஒன்றையும்......முயலாதே

சுமடம் அது ஆய், வம்பு மால் கொளுந்திய
     திமிரரொடே பந்தமாய் வருந்திய
          துரிசு அற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே.

ஒருதனி வேல்கொண்டு, நீள் க்ர வுஞ்சமும்
     நிருதரும், மாவும், கலோல சிந்துவும்,
          உடைபட மோதும் குமார! பங்கய ...... கரவீரா!

உயர் தவர், மா உம்பர் ஆன அண்டர்கள்,
     அடிதொழுதே மன் பராவு தொண்டர்கள்,
          உளம் அதில் நாளும் குலாவி இன்புற....உறைவோனே!

கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர்
     அரி அரி கோவிந்த கேசவ என்றுஇரு
          கழல்தொழு சீரங்கராசன் நண்புஉறு ...... மருகோனே!

கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும்
     எமது பிரான் என்று தாள்வ ணங்கிய
          கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்துஅருள் ...... பெருமாளே.


பதவுரை


         ஒருதனி வேல் கொண்டு நீள்க்ர வுஞ்சமும் --- ஒப்பற்ற வேலைக் கொண்டு,  மாயையினால் நீண்ட கிரெளஞ்சமலையும்,

         நிருதரும் மாவும் கலோல சிந்துவும் --- தாரகாதி அசுரர்களும், மாமரமாய் முளைத்த சூரபதுமனும்,  ஒலிக்கின்ற கடலும்

         உடைபட மோதும் குமார --- உடைபட்டு ஒழிய மோதிய குமாரக் கடவுளே!

         பங்கய கர வீரா --- தாமரை மலர் போன்ற திருக்கரங்களை உடைய வீரரே!

         உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் --- உயர்ந்த தவ சீலர்கள்,  பெருமை தங்கிய தேவர்களான வானவர்கள்,

         அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள் --- உமது திருவடிகளைத் தொழுது நிலைபேறுடன் நன்கு துதிக்கின்ற அடியார்கள் என்னும் இவர்களின்

         உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே ---  உள்ளமாகிய திருக்கோயிலில் பிரியாமல் என்றும் கலந்து இன்பம் அடைய வாழ்பவரே!

         கருதிய ஆறங்க வேள்வி அந்தணர் --- ஆன்றோர்கள் எண்ணி நிச்சயித்த வேதத்தின் ஆறு அங்கங்களை உணர்ந்தவரும், தழல் ஓம்புபவரும் தணிந்த சிந்தை உடையவருமாகிய உத்தமர்கள்

         அரி அரி கோவிந்த கேசவ என்று --- அரி அரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து,

         இருகழல் தொழு சீரங்கராசன் நண்பு உறு மருகோனே --- இரு திருவடிக் கமலங்களையும் தொழுகின்ற ஸ்ரீரங்க ராஜராகிய திருமால் நட்பு கொள்ளுகின்ற மருகரே!

         கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் --- பிரமதேவனும், தேவேந்திரன் முதலான மற்ற தேவர்களும்

         எமது பிரான் என்று தாள் வணங்கிய --- எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற

         கரிவனம் வாழ் சம்புநாதர் தந்தருள் பெருமாளே --- திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் வாழ்கின்றவரும் வெண்ணாவலின் கீழ் எழுந்தருளியவருமான சிவபெருமான் தந்தருளிய பெருமையில் சிறந்தவரே!

         குருதி புலால் என்பு தோல் நரம்புகள் --- இரத்தமும், தசைகளும், எலும்புகளும், தோலும், நரம்புகளும்,

         கிருமிகள் மால் அம் பிசீத மண்டிய குடர் --- கிருமிகள், மயக்கம் நிறைந்த கூடை போல் குளிர்ச்சியாகிய நோய் நெருங்கிட குடல்,

         நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி --- கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த

         காயக் குடிலிடை ஐம்புல ஓர் ஐந்து வேடர் --- உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்களானவர்,

         அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர் --- ஆணவக் காட்டிலே ஓடித் திரிந்து,  கெட்ட ஆசையும் வஞ்சனையும் உடையவர்கள்,

         கொடியவர் மாபஞ்ச பாதகஞ்செய அதனாலே ---  கொடுமையானவர்களாகிய அந்த ஐவர்கள் பெரிய ஐந்து பாதகங்களைச் செய்ய, அதனாலே,

         சுருதி புராணங்கள் ஆகமம் பகர் --- வேதங்கள், புராணங்கள்  ஆகம நூல்கள் வகுத்துக் கூறுகின்ற

         சரியை க்ரியா அண்டர் பூசை வந்தனை --- சரியை, கிரியை என்ற வழிகள்,  தேவபூசை, வழிபாடு

         துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே --- தோத்திரம், தனது ஊடு நாடுகின்ற தியானம் ஆகிய இவற்றுள் ஒன்றையும் முயன்று அனுசரியாமல்,

         சுமடம் அது ஆய் வம்பு மால் கொளுந்திய திமிரரொடே --- அறிவின்மை உடையவனாய்,வம்பும் மயக்கமும் பற்றிய அக இருளருடன் கூடிக் கட்டுப்பாடு உற்று பயனில்லாது,

         பந்தமாய் வருந்திய --- கூட்டுறவில் பிறப்பு இறப்பில் ஆழ்ந்து வருந்திய

         துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே --- குற்றம் அறவே நீங்கவும், ஆனந்த மயமாகிய முத்தி வீட்டை யான் பெற்று உய்யவும் அருள் புரிவீராக.


பொழிப்புரை


         ஒப்பற்ற வேலைக் கொண்டு,  மாயையினால் நீண்ட கிரெளஞ்சமலையும், தாரகாதி அசுரர்களும், மாமரமாய் முளைத்த சூரபதுமனும், ஒலிக்கின்ற கடலும் உடைபட்டு ஒழிய மோதிய குமாரக் கடவுளே!

         தாமரை மலர் போன்ற திருக்கரங்களை உடைய வீரரே!

         உயர்ந்த தவ சீலர்கள்,  பெருமை தங்கிய தேவர்களான வானவர்கள், உமது திருவடிகளைத் தொழுது நிலைபேறுடன் நன்கு துதிக்கின்ற அடியார்கள் என்னும் இவர்களின் உள்ளமாகிய திருக்கோயிலில் பிரியாமல் என்றும் கலந்து இன்பம் அடைய வாழ்பவரே!

         ஆன்றோர்கள் எண்ணி நிச்சயித்த வேதத்தின் ஆறு அங்கங்களை உணர்ந்தவரும், தழல் ஓம்புபவரும் தணிந்த சிந்தை உடையவருமாகிய உத்தமர்கள், அரி அரி, கோவிந்தா, கேசவா என்று துதிசெய்து, இரு திருவடிக் கமலங்களையும் தொழுகின்ற ஸ்ரீரங்க ராஜராகிய திருமால் நட்பு கொள்ளுகின்ற மருகரே!

         பிரமதேவனும், தேவேந்திரன் முதலான மற்ற தேவர்களும் எங்கள் தலைவன் எனக் கூறி அடிபணிந்திடப் பெற்ற திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் வாழ்கின்றவரும் வெண்ணாவலின் கீழ் எழுந்தருளியவருமான சிவபெருமான் தந்தருளிய பெருமையில் சிறந்தவரே!

         இரத்தமும், தசைகளும், எலும்புகளும், தோலும், நரம்புகளும், கிருமிகள்,  மயக்கம் நிறைந்த கூடை போல் குளிர்ச்சியாகிய நோய் நெருங்கிட குடல், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த, உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்களானவர்,  ஆணவக் காட்டிலே ஓடித் திரிந்து,  கெட்ட ஆசையும் வஞ்சனையும் உடையவர்கள், கொடுமையானவர்களாகிய அந்த ஐவர்கள் பெரிய ஐந்து பாதகங்களைச் செய்ய, அதனாலே, வேதங்கள், புராணங்கள்  ஆகம நூல்கள் வகுத்துக் கூறுகின்ற சரியை, கிரியை என்ற வழிகள்,  தேவபூசை, வழிபாடு, தோத்திரம், தனது ஊடு நாடுகின்ற தியானம் ஆகிய இவற்றுள் ஒன்றையும் முயன்று அனுசரியாமல், அறிவின்மை உடையவனாய்,வம்பும் மயக்கமும் பற்றிய அக இருளருடன் கூடிக் கட்டுப்பாடு உற்று பயனில்லாது, பிறப்பு இறப்பில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அறவே நீங்கவும், ஆனந்தமயமாகிய முத்தி வீட்டை யான் பெற்று உய்யவும் அருள் புரிவீராக.

விரிவுரை


குருதி புலால் என்பு …........ பொதி காயம் ---

இவ்வுடம்பை நிலைபேறு உள்ளதாகவும், மிகச் சிறந்த பொருளாகவும், அழகிய அற்புதப் பிண்டமாகவும் கருதி, உடம்பைப் பேணுவதிலேயே வாழ்நாள் முழுவதும் கழித்து, அவமே அழியும் அறிவிலிகள், தெளிந்து தேறி உடம்பின் அசுத்தத்தையும், நிலையின்மையையும் உணர்ந்து, உடம்பு உள்ள போதே உடம்புக்குள் உறையும் உத்தமனைக் காண முயற்சிக்க வேண்டும் என்ற குறிப்பில் நமது சுவாமிகள் உடம்பின் அருவருப்பைக் கூறுகின்றார்.

உதிரம், தசை, எலும்பு, தோல், நரம்பு, புழு, சீதம், குடல், கொழுப்பு, மயிர், மூளை முதலியவைகள் சேர்ந்து ஒரு உடம்பாக அமைந்துள்ளது.

இதன் அருவருப்பை நமது இராமலிங்க அடிகள் கூறுமாறு காண்க.

புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில் புகுந்து
     நான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே, எண்ணிநான் எண்ணி
     ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
     மயங்கிஉள் நடுங்கி ஆற்றாமல்,
என்பெலாம் கருக இளைத்தனன், அந்த
     இளைப்பையும் ஐய நீ அறிவாய்.         ---  திருவருட்பா.


இதில் தந்தையின் கூறு ---

நாடியும் நாளமும் நவில் இள எலும்பும்
வெள்ளை நீரும் வெள்ளிய பற்களும்
தலைமயிர் நகமும் தந்தையின் கூறாம்.

தாயின் கூறு ---

சிறிய குடலும் சிவப்பு நீரும்
மருவிய கொழுப்பும் மன்னும் ஈரலும்
நுவல் நுரையீரலும் நோக்கும் இதயமும்
தசையும் நிணமும் தாயின் கூறாம்.

உயிர்க்குணம்  ---

அறிவும் ஆக்கமும் ஆழ்ந்த நோக்கமும்
இன்பமும் துன்பமும் இனிய வாழ்க்கையும்
உயிரின் குணம்என உரைப்பர் நூல்வலோர்.

உணவின் சாரம்  ---

உடலின் அமைப்பும் ஒள்ளிய நிறமும்
ஆடலும் ஆண்மையும் அமைந்த நிலையும்
நாணமும் மடமும் நான்ற கொள்கையும்
உணவின் சாரம் என்று உரைப்பர் நூல்வலோர். --- உடல்நூல்.

  
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ---

இந்த உடம்பாகிய வீட்டில் ஐம்புல வேடர் வாழ்கின்றனர்.  அவர்கள் செய்யும் அநியாயம் அளப்பில. புலன்களை வேடர் என்பது தொன்றுதொட்டு வந்த ஆன்றோர் வழக்கு.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து என,
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு,
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.          ---  சிவஞானபோதம்.

சுருதி புராணங்கள் …....  ஒன்றையும் முயலாதே ---

ஆவி ஈடேறுதற்குரிய நெறிகள், வேதாகமங்களைக் கற்றல், அதன் வழி நிற்றல். சரியை, கிரியை நெறிகளில் வழுவாது சிவபூசை செய்தல். உள்ளம் குழைந்து துதித்தல், தியானம் புரிதல் முதலியன. இவற்றுள் ஒன்றையேனும் பின்பற்றி, அதனை மேற்கொண்டு முயன்று சாதித்தல் வேண்டும். முத்தி அடைதல் வேண்டும்.

சுமடம் அதுஆய் ….....  திமிரர் ---

அறிவு என்பது அணு அளவும் இன்றி, உலக வாழ்வில் மயங்கி, உள்ளம் இருண்டு, உணர்வு மருண்டு கெடுமா தீயோருடன் கலப்பது மிகப் பெரிய கேட்டைத் தரும். தீயோர் நட்பே தீவினைகட்கு எல்லாம் முதல் காரணம்.

ஒவ்வொரு அறத்திற்கும் ஒவ்வொரு அதிகாரம் சொல்லிய தெய்வப்புலவர் "நட்பு" என்ற அறம் ஒரு அதிகாரத்தில் அடங்காமை கண்டு, "நட்பு", "நட்பு ஆராய்தல்", "பழைமை", "தீநட்பு", "கூடாநட்பு" என்று ஐந்து அதிகாரங்களால் விளக்கினர்.  ஆதலினால் தீ நட்பை விட்டு, நல்லார் இணக்கம் உற்று, நன்மை பெறவேண்டும்.


ஆனந்த வீடு கண்டிட அருள்வாயே ---

துன்பம் என்பது ஒரு சிறிதும் இல்லாததும், இன்ப மயமாக விளங்குவதும் ஆகிய பரகதியைத் தருமாறு முருகனை வேண்டுகின்றனர். அப் பரமபதி பரகதியாகவும், பரகதிக்குத் தலைனாகவும் விளங்குகின்றனர்.


கருதிய ஆறங்கம் ---

அங்கம் ஆறு என்ப.  வேதாங்கம் எனப்படும்.  நமது உடம்புக்கு காது, கண், நாசி, வாய், கை, கால் என் ஆறு அங்கங்கள் உள்ளது போல், வேதபுருஷனுக்கும் நிருத்தம், ஜோதிஷம், சிட்சை, வியாகரணம், கல்பம், சந்தசு என்ற ஆறு அங்கங்களும் ஆறு உறுப்புக்களாம்.

1. நிருத்தம் --- காது.  இது நிகண்டு.  ஏன் இந்தப் பதம் இங்கு     வந்தது என்பதை விளக்குவது.  உதாரணமாக, ஹ்ருதயம்ஹ்ருதி - அயம். இருதயத்தில் இவன் இருக்கின்றான்    என்பது பொருள்.  பரமாத்மா நிவசிப்பது என்பது போன்ற      காரணங்களை விளக்குவது.

2. ஜோதிஷம் ---  கண், கண் சேய்மையில் உள்ளதைத்   தெரிவிப்பது போல் ஜோதிஷம் மேல் விளைவிப்பதைத்     தெரிவிக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வரும் சூரிய சந்திர கிரகணங்களை இப்போதே தெரிவிக்கும்.

3. சிட்சை --- நாசி.  இது எழுத்துக்களின் உச்சாரணம், மாத்திரை,     உற்பத்தி முதலியவைகளை வரையறுத்துக் கூறுவது.

4. வியாகரணம் --- வாய்.  இது இலக்கணம் போல்வது.  நடராஜப் பெருமானது நிருத்த முடிவில் டமருகத்தில்  எழுந்து 14 சப்தங்களையே 14 சூத்திரங்களாகப் பாணினி எழுதினார். அதுவே வியாகணத்திற்கு மூலம்.  பாணினி   சூத்திரத்திற்குப் பதஞ்சலி பாஷ்யம் எழுதினார்.  பதஞ்சலி சிவபெருமான் திருவடியில் இருப்பவர். எனவேசிவபெருமானுடைய மூச்சுக்காற்று வேதம். கைக் காற்று     வியாகரணம். கால் காற்று பாஷ்யம்.

5. கல்பம் --- கை.  கருமங்களைச் செய்வதற்குக் கரம் என்று பெயர். நல்ல கருமங்களை இது வரையறுத்துக் கூறுகின்றது. இன்ன இன்ன கருமங்கட்கு இன்னார் உரியவர். இன்ன கருமத்திற்கு இன்ன மந்திரம்.  இன்ன  திரவியம். ரித்விக்குகளின் இலக்கணம், பாத்திரங்களின்  அமைப்பு இவைகளை விளக்குவது.

6. சந்தசு --- கால்.  யாப்பு போல்வது. இன்ன இன்ன பாடலுக்கு இத்தனை அட்சரம்.  இத்தனை அடி.  இத்தனை மாத்திரை என்று வரையறுப்பது.  இவையில்லாமல் நிற்கமுடியாது. ஆதலினால், இது கால் எனப்படும்.

வேள்வி அந்தணர் ---

கொலை புலைகள் இல்லாத தவவேள்விகளைப் புரியும் அந்தணாளர். அந்தணர் - தணிந்த சிந்தையை உடையவர்.  இன்னும் வேதத்தின் அந்தத்தை அணவுவோர் (பொருந்துபவர்) என்றும் பொருள்படும். இத்தகைய சிறந்த அந்தணர்களால் பணியப்படுகின்ற திருவரங்கம் மேவும் தெய்வமாகிய நாராயணமூர்த்தி நண்பு கொள்கின்ற மருகர் முருகர்.

கருத்துரை
  
வேலாயுதரே, அடியார் உள்ளத்தில் உறைபவரே, திருமால் மருகரே, திருவானைக்காவில் வாழ்பவரே, ஐம்புல வேடரால் அயர்ந்து வீண்போகாமல், அடியேனுக்கு இன்ப வீடாகிய பரகதியை அருள் புரிவீர்.




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...