நற்பண்பு இல்லாதவர்.





27. நற்பண்புக்கு இடம் இல்லாதவர்.

வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு
     வெங்காஞ் சொறிப்பு தலிலே
  வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்
     மேவுமோ? மேவா துபோல்,

குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
     கூடவே இளமை உண்டாய்க்,
  கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க
     குவலயந் தனில்அ வர்க்கு,

நிறைகின்ற பத்தியும், சீலமும், மேன்மையும்,
     நிதானமும், பெரியோர் கள்மேல்
  நேசமும், ஈகையும், இவையெலாம் கனவிலும்
     நினைவிலும் வராது கண்டாய்;

அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
     அண்ணலே ! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     இதன் பொருள் ---

     அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே --- புகழ்ந்து கூறப்படுகின்ற வேதங்களின் உட்பொருளாக உள்ள, வள்ளல் தன்மை வாழ்ந்தவனே!

     அண்ணலே --- தலைவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     வெறி கொண்ட மற்கடம் --- வெறி பிடித்த ஒரு குரங்கானது,

     பேய் கொண்டு --- பேயால் பிடிக்கப்பட்டு,

     கள் உண்டு --- அதற்கு மேல் கள்ளையும் குடித்து,

     வெம் காஞ்சொறிப் புதரில் வீழ்ந்து ---  அதற்கும் மேலும் கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து,

     தேள் கொட்டிட --- அதற்கு மேலா, ஒரு தேளாலும் கொட்டப் பெற்றால்,

     எள்ளளவும் சன்மார்க்கம் மேவுமோ --- கொஞ்சமாவது அந்தக் குரங்குக்கு நன்னெறியிலே செல்லும் நிலை உண்டாகுமோ?

     மேவாது போல் --- அந்த நிலையில் குரங்குக்கு நன்னெறியானது ஒன்றும் தோன்றாதது போல்,

     குறைகின்ற புத்தியாய் --- சிற்றறிவு மிகுந்து இருந்து,

     அதில் அற்ப சாதியாய் --- மேலும் இழிசெயல் செய்யும் குலத்தில் பிறந்தவனாய்,

     கூடவே இளமை உண்டாய் --- அத்தோடு இளமைப் பருவமும் உடையவனாய் இருந்து,

     அவர்க்கு --- அத் தகையவனுக்கு,

     கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் --- சிறிது அதிகாரம் செய்கின்ற தலைமைப் பொறுப்பு கிடைத்தாலும்,

     குவலயம் தனில் --- உலகத்தில்,  (அப்படிப்பட்டவனுக்கு)

     நிறைகின்ற பத்தியும் --- நிறைந்த கடவுள் அன்பும்,

     சீலமும் --- ஒழுக்கமும்,

     மேன்மையும் --- பெருந்தன்மையும்,

     நிதானமும் --- அமைதியும்,

     பெரியோர்கள் மேல் நேசமும் --- பெரியவர்கள் இடத்திலே அன்பும்,

     ஈகையும் --- கொடைப்பண்பும்,

     இவை எலாம் நினைவிலும் கனவிலும் வராது --- ஆகிய இந்தபு பண்புகள் யாவும் நினைவிலே மட்டும் அன்றிக் கனவிலும் உண்டாகாது.

        விளக்கம் --- சுருதி -  ஓசை நயம். அது காதால் கேட்டு மட்டுமே அறியக் கூடியது. காதாற் கேட்கப்படுவதால் வேதம் என்று வழங்கப்பட்டது. காஞ்சொறி - உடம்பில் பட்டவுடன், தோலில் தடிப்பையும், தினவையும் உண்டாக்கும் ஒரு வகைச் செடி. அற்பசாதி -- பிறருக்குப் பயன்படாமலும், தீமை செய்துகொண்டும், மற்றவரைத் துன்புறுத்தியும் உயர்ந்த பண்பு பதியப் பெறாத பரம்பரை.

     குரங்கு ஆனது இயல்பாகவே குறும்பு செய்யும் தன்மை உடையது. அது வெறிகொண்டு பேய் பிடித்துக், கள்ளைக் குடித்துத் தினவு எடுத்துத் தேள் கொட்டுதலையும் பெற்றால், அது செய்யும் குறும்புகள் மேலும் பெருகும். அது போலவே, இயல்பாகவே சிற்றறிவுடைய பரம்பரையிலே பிறந்தவர்க்கு இளமையும் தலைமைப் பதவியும் கிடைத்தால் தவறுகள் செய்வார்களே அன்றி, தன்மை தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.

 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...