திரு நன்னிலத்துப்
பெருங்கோயில்
(நன்னிலம்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - நாகூர் சாலையில் நன்னிலம்
இருக்கிறது. மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் இருந்தும் நன்னிலம் வரலாம்.
நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் அரசு மருத்துவமனை
எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.
இறைவர்
: மதுவனேசுவரர், பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர்.
இறைவியார்
: மதுவனேசுவரி, தேவகாந்தார நாயகி.
தல
மரம் : வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்சபம்.
(தற்போது வில்வம் மட்டுமே உள்ளது)
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள்: சுந்தரர் - தண்ணியல் வெம்மையினான்.
கோச்செங்கட்சோழ நாயனார் யானை ஏற முடியாத
70 மாடக் கோயில்களைக் கட்டினார்
என்று வரலாறு கூறுகிறது. நன்னிலம் மதுவனேசுவரர் திருக்கோயிலும் அத்தகையது.
சுந்தரர் தனது பதிகத்தில் இக்கோயிலைப் பெருங்கோயில் என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். திருப்பதிகத்தின் இறுதிப்
பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழரால் கட்டப்பட்டது எனபதையும்
குறிப்பிட்டுள்ளார்.
முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில்
அமைந்துள்ள இத்திருக்கோயில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்டது. கோயிலின்
இராஜகோபுரம் 2 நிலைகளைக் கொண்டது.
கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து வெளிப் பிரகாரத்தை அடையலாம். நேர் எதிரில்
பிரமன் வழிபட்ட பிரம்ம்புரீசுவரர்
சந்நிதியும், பக்கத்தில் அகத்தியர்
வழிபட்ட அகத்தீசுவரர் சந்நிதியும் உள்ளன. இந்த பிரகாரம் வலம் வரும்போது சித்தி
விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேசுவரர், சனீசுவரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி
சன்னதிகள் உள்ளன. நன்னிலத்து துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தவளாகப்
போற்றப்படுகிறாள்.
மூலவர் சந்நிதி ஒரு கட்டுமலை மீது
அமைந்துள்ளது. படிகள் ஏறி மேலே செல்லவேண்டும். கட்டுமலை மீதுள்ள பிராகாரத்தில்
சோமாஸ்கந்தர் சந்நிதி அழகாகவுள்ளது. மூலவர் மதுவனேசுவரர் சதுர ஆவுடையார் மீது
சற்று உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறை கிழக்கு
நோக்கி உள்ளது. விசேஷ காலங்களில் குவளை, நாகாபரணம்
சார்த்தப்படுகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சூரியனின்
அருகில் பைரவர் அருள்பாலிப்பதும்,
அனைத்து
நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர்
பார்த்திருப்பதும், சனி பகவான் தனி
சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி
சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து
பூஜை செய்துள்ளார்கள். இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை
வழிபட்டுள்ளனர்.
பிருஹத்ராஜனின் கோரிக்கைக்கு இணங்கி, சிவபெருமான் ஆலயத்தின் வடக்கே தனது
சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன்
தலையில் உள்ள கங்கையை அதில் நிரப்பினாராம். இது சூலதீர்த்தம், பிருஹத் தீர்த்தம், மது தீர்த்தம் என்று பல பெயர்களால்
அழைக்கப்படுகிறது. ஜலந்திரன் என்ற அசுரனை எம்பெருமான் வதம் செய்தபோது வீசிய
சக்கரம், இத்தலத்தினருகில்
விழுந்ததாம். அங்கு உருவான தீர்த்தம் சக்கரக்குளம் என்று தற்போது
அழைக்கப்படுகிறது. இது ஆலயத்தின் கிழக்கே சற்று தொலைவில் உள்ளது.
துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற
அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் கொடுமைகளுக்கு பயந்த தேவர்கள்
சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக
மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களை கூடுகட்டி
வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும்படி கூறினார். தேவர்கள் தேனீக்கள் வடிவம்
கொண்டு வழிபட்டதால் இறைவன் "மதுவனேசுவரர்" என்றும் அம்மன் "மதுவன
நாயகி"' என்றும் பெயர்
பெற்றனர். தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால்
இத்தலம் மதுவனம் என்று பெயர் பெற்றது. இப்போதும் சுவாமியின் கர்ப்பகிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள
மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் தேனீக்கள் வசித்து வருகின்றன.
ஒருசமயம் தேவர்களின் சபையில்
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது.
ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க
முற்பட்டு பலத்த காற்றை வீசினார். வாயுபகவானால் மகா மேருவை அசைக்க முடியவில்லை.
இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி
ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். வாயு பகவான் மகா மேருவின் ஒரே ஒரு
சிகரத்தை பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும் போது அந்த
சிகரத்தின் சிறிய துளி இந்த தலத்தில் விழுந்ததாக தலபுராணம் கூறுகிறது. சமவெளியாக
இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி
விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன் மீது கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "ஆஞ்சி இலாது, இந்நிலத்தும், வான் ஆதி எந்நிலத்தும்
ஓங்கு பெரு நன்னிலத்து வாழ் ஞானநாடகனே" என்று போற்றி உள்ளார்.
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருப்புகலூரில் செங்கல் பொன்னாகப்
பெற்றுத் திருவாரூரை அடைந்து பெருமானை வணங்கிப் பலநாள் தங்கியிருந்து, அருகில் உள்ள பல பதிகளையும் வணங்கிய
பின்னர், திருவாரூரினின்றும்
புறப்பட்டு, திருநன்னிலத்துப்
பெருங்கோயிலை அடைந்து பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 56)
பெரிய
புராணப் பாடல் எண் : 56
பலநாள்
அமர்வார், பரமர்திரு
அருளால் அங்கு
நின்றும்போய்,
சிலைமா
மேரு வீரனார்
திருநன் னிலத்துச்
சென்றுஎய்தி,
வலமா
வந்து, கோயிலின்உள்
வணங்கி, மகிழ்ந்து பாடினார்
தலம்ஆர்கின்ற
"தண்ணியல்வெம்
மையினான்"
என்னும் தமிழ்மாலை.
பொழிப்புரை : பல நாள்கள்
திருவாரூரில் இவ்வாறு இருந்தருளிய நம்பிகள், பெருமானின் திருவருளால் அங்கிருந்து, பெருமலையான மேருவை வில்லாகக் கொண்டு
திரிபுரத்தை எரியச் செய்த வீரராகிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருநன்னிலப் பதியை
அடைந்து, அக்கோயிலை வலம்
கொண்டு, உட்புகுந்து, பெருமானை வணங்கி மகிழ்ந்து, `தண்ணியல் வெம்மையினான்' எனத் தொடங்கும் தமிழ் மாலையைப்
பாடினார்.
`தண்ணியல் வெம்மையினான்' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப்
பண்ணிலமைந்ததாகும். (தி.7 ப.98)
7. 098 திருநன்னிலத்துப்
பெருங்கோயில் பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தண்இயல்
வெம்மையினான்
தலை யில்கடை
தோறும்பலி
பண்இயல்
மென்மொழியார்
இடம் கொண்டுஉழல்
பண்டரங்கன்,
புண்ணிய
நான்மறையோர்
முறையால் அடிபோற்
றிசைப்ப
நண்ணிய
நன்னிலத்துப்
பெருங் கோயில்
நயந்தவனே
பொழிப்புரை : புண்ணியத்தைச்
செய்கின்ற , நான்கு வேதங்களையும்
உணர்ந்த அந்தணர்கள் , முறைப்படி தனது , திருவடிக்குப் போற்றி சொல்லி
வழிபடும்படி , பலரும் அடைந்து
வணங்கும் திருநன்னிலத் தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற
பெருமான் , தண்ணிய இயல்பினையும் , வெவ்விய இயல்பினையும் ஒருங்குடையவன் ; வாயில்கள்தோறும் சென்று , பண்போலும் இயல் பினையுடைய இனிய
மொழியையுடைய மகளிரிடம் தலையோட்டில் பிச்சை யேற்றுத்திரிகின்ற ` பாண்டரங்கம் ` என்னும் கூத்தினை யுடையவன் .
பாடல்
எண் : 2
வலங்கிளர்
மாதவஞ்செய்
மலை மங்கையொர்
பங்கினனாய்ச்
சலங்கிளர்
கங்கைதங்கச்
சடை ஒன்றுஇடை
யேதரித்தான்,
பலங்கிளர்
பைம்பொழில்தண்
பனி வெண்மதி யைத்தடவ
நலங்கிளர்
நன்னிலத்துப்
பெருங் கோயில்
நயந்தவனே
பொழிப்புரை : பயன் மிகுந்த , பசிய சோலைகள் , குளிர்ந்த , வெள்ளிய சந்திரனைத் தடவுதலால் அழகு
மிகுகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற
பெருமான் , வெற்றி மிக்க , பெரிய தவத்தைச் செய்த மலைமகளை
ஒருபாகத்தில் உடையவனாய் , வெள்ளம் மிகுந்த
கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றிலே தங்கும்படி தடுத்து வைத்துள்ளான் .
பாடல்
எண் : 3
கச்சியன், இன்கருப்பூர்
விருப் பன்,கரு திக்கசிவார்
உச்சியன், பிச்சைஉண்ணி ,
உல கங்கள்எல்
லாம்உடையான்
நொச்சிஅம்
பச்சிலையால்
நுரை தீர்புன
லால்தொழுவார்
நச்சிய
நன்னிலத்துப்
பெருங் கோயில்
நயந்தவனே
பொழிப்புரை : நொச்சியின்
பச்சிலையும் , நுரை இல்லாத தூய
நீரும் கொண்டு வழிபடுவோர் விரும்புகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை
விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் . கச்சிப் பதியில் எழுந்தருளியிருப்பவன் ; இனிய கரும்பின்கண் செல்லுகின்ற
விருப்பம்போலும் விருப்பம் செல்லுதற்கு இடமானவன் ; தன்னை நினைந்து உருகுபவரது தலைமேல்
இருப்பவன் ; பிச்சையேற்று உண்பவன்
; உலகங்கள்
எல்லாவற்றையும் உடையவன் .
பாடல்
எண் : 4
பாடிய
நான்மறையான், படு பல்பிணக்
காடுஅரங்கா
ஆடிய
மாநடத்தான், அடி போற்றிஎன்று அன்பினராய்ச்
சூடிய
செங்கையினார் பலர் தோத்திரம் வாய்த்தசொல்லி
நாடிய
நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
பொழிப்புரை : தலைமேற் குவித்த கையை
உடைய பலர் , மிக்க
அன்புடையவர்களாய் , ` திருவடி போற்றி ` என்று , பொருந்திய தோத்திரங்களைச் சொல்லி
அடைகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற
இறைவன் , தன்னால் பாடப்பட்ட
நான்கு வேதங்களை யுடையவன் ; இறந்த பல
பிணங்களையுடைய காடே அரங்கமாக ஆடுகின்ற , சிறந்த
நடனத்தையுடையவன் .
பாடல்
எண் : 5
பிலந்தரு
வாயினொடு பெரி தும்வலி மிக்குஉடைய
சலந்தரன்
ஆகம்இரு பிளவு ஆக்கிய சக்கரம்முன்
நிலந்தரு
மாமகள்கோன் நெடு மாற்குஅருள் செய்தபிரான்
நலந்தரு
நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
பொழிப்புரை : நன்மையைத் தருகின்ற
திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , பிலம் போன்ற வாயையும் , பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய
சலந்த ராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை , முன்பு , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய
திருமாலுக்கு அளித்த தலைவன் .
பாடல்
எண் : 6
வெண்பொடி
மேனியினான், கரு நீல மணிமிடற்றான்,
பெண்படி
செஞ்சடையான், பிர மன்சிரம்
பீடுஅழித்தான்,
பண்புடை
நான்மறையோர் பயின்று ஏத்திப்பல் கால்வணங்கும்
நண்புடை
நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
பொழிப்புரை : நல்ல பண்பினையுடைய
நான்கு வேதங்களை உணர்ந்தவர்களாகிய அந்தணர்கள் , பல மந்திரங்களையும் நன்கு பயின்று, பன்முறை துதித்து வணங்கும், நட்பாம் தன்மையுடைய திருநன்னிலத்தில்
உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக் கின்ற பெருமான் , வெண்பொடியைப் பூசிய மேனியை உடையவன் ; நீல மணிபோலும் கரிய கண்டத்தை யுடைவன் ; கங்கையாகிய பெண் பொருந்தியுள்ள சடையை
உடையவன்; பிரமதேவனது தலையை, பெருமை கெட அறுத்தவன் .
பாடல்
எண் : 7
தொடைமலி
கொன்றைதுன்றுஞ் சடை
யன்,சுடர் வெண்மழுவாள்
படைமலி
கையன்,மெய்யிற் பகட்டு
ஈர்உரிப்
போர்வையினான்,
மடைமலி
வண்கமலம் மலர்
மேல்மட அன்னம்மன்னி
நடைமலி
நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே
பொழிப்புரை : இளமையான அன்னப் பறவைகள்
, நீர்மடைகளில்
நிறைந்துள்ள , வளவிய தாமரை மலர்மேல்
தங்கிப் பின் அப்பாற் சென்று நடத்தல் நிறைந்த திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை
விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான் , மாலையாக நிறைந்த கொன்றைமலர் பொருந்திய
சடையை உடையவன் ; ஒளிவீசுகின்ற வெள்ளிய
மழுவாகிய ஆளும் படைக்கலம் நிறைந்த கையை உடைய வன் ; திருமேனியில் யானையினது உரித்த தோலாகிய
போர்வையை உடையவன் .
பாடல்
எண் : 8
குளிர்தரு
திங்கள்கங்கை குர வோடுஅரக் கூவிளமும்
மிளிர்தரு
புன்சடைமேல் உடை யான்,விடை யான்,விரைசேர்
தளிர்தரு
கோங்குவேங்கை தட மாதவி சண்பகமும்
நளிர்தரு
நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
பொழிப்புரை : நறுமணம் பொருந்திய , தளிர்களைத் தருகின்ற கோங்கு , வேங்கை, வளைவையுடைய குருக்கத்தி , சண்பகம் முதலிய பூமர வகைகள் பலவும்
குளிர்ச்சியைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி
எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ,
தனது
ஒளிவீசுகின்ற , புல்லிய சடையின்மேல் , குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரன் , கங்கை , பாம்பு , குராமலர் , கூவிள இலை முதலிய இவைகளை உடையவன் ; இடபத்தை ஊர்கின்றவன் ;
பாடல்
எண் : 9
கமர்பயில்
வெஞ்சுரத்துக் கடும் கேழல்பின் கானவனாய்
அமர்பயில்வு
எய்தி, அருச் சுனற்குஅருள்
செய்தபிரான்,
தமர்பயில்
தண்விழவில் தகு சைவர்த வத்தின்மிக்க
நமர்பயில்
நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
பொழிப்புரை : உலகத்தவர் மிக்குள்ள
தண்ணிய விழாக்களையுடைய , தகுதிவாய்ந்த
சைவர்களாகிய , தவத்திற் சிறந்த
நம்மவர் மிக்கு வாழ்கின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி
எழுந்தருளியிருக்கின்ற பெருமான் ,
நிலப்
பிளப்புக்கள் மிகுந்த கொடிய கற்சுரத்தில் , கொடிய பன்றியின்பின்னே வேடுவனாய்ச்
சென்று அருச்சுனனோடு போராடுதலைப் பொருந்தி , அவனுக்குத் திருவருள் செய்த தலைவனாவான்
.
பாடல்
எண் : 10
கருவரை
போல்அரக்கன், கயி லைம்மலைக்
கீழ்க்கதற
ஒருவிர
லால்அடர்த்து,இன் அருள் செய்த
உமாபதிதான்
திரைபொரு
பொன்னிநன்னீர்த் துறை வன்திகழ் செம்பியர்கோன்
நரபதி
நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே
பொழிப்புரை : அலை மோதுகின்ற
காவிரியாற்றினது நல்ல நீர்த்துறையை உடையவனும் , சோழர்கோமகனும் ஆகிய அரசன் செய்த , திருநன்னிலத்துப் பெருங்கோயிலை விரும்பி
எழுந்தருளி யிருக்கின்ற பெருமான் ,
அரக்கனாகிய
இராவணன் , கயிலாய மலையின்கீழ் , கரியமலைபோலக் கிடந்து கதறும்படி ஒரு
விரலால் நெருக்கிப் பின்பு அவனுக்கு அருள்புரிந்த உமை கணவனாகும் .
பாடல்
எண் : 11
கோடுஉயர்
வெங்களிற்றுத் திகழ் கோச்செங்க ணான்செய்கோயில்
நாடிய
நன்னிலத்துப் பெருங் கோயில்ந யந்தவனைச்
சேடுஇயல்
சிங்கிதந்தை, சடை யன்திரு வாரூரன்,
பாடிய
பத்தும்வல்லார் புகு வார்பர லோகத்துளே
பொழிப்புரை : தந்தங்கள் உயர்ந்து
காணப்படுகின்ற வெவ்விய யானையின்மேல் விளங்குகின்ற கோச்செங்கட்சோழ நாயனார் செய்த , யாவரும் விரும்புகின்ற , திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை
விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அழகு பொருந்திய சிங்கடிக்குத் தந்தையும்
, சடையனார்க்கு மகனும்
ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர்கள் , பரலோகத்துள் புகுவார்கள் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment