பிள்ளை பெற்றவரைப் பார்த்துப் பெருமூச்சு விடல்

18.  பிள்ளை பெற்றார் தமைப் பார்த்து...

அள்ளித்தெள் நீறு அணியும் தண்டலையார்
      வளநாட்டில் ஆண்மை உள்ளோர்,
விள்ளுற்ற கல்வி உள்ளோர், செல்வம் உள்ளோர்,
      அழகு உடையோர் மேன்மை நோக்கி,
உள்ளத்தில் அழன்று அழன்று, நமக்கு இல்லை
      என உரைத்து இங்கு உழல்வார் எல்லாம்,
பிள்ளைபெற் றவர்தமைப் பார்த்து இருந்துபெரு
      மூச்சு எறியும் பெற்றி யாரே.

            இதன் பொருள் ---

     தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில் ---தூய திருநீற்றை அள்ளி எடுத்து அணிகின்ற திருத்தண்டலை நீள்நெறி நாதரின் வளப்பம் பொருந்திய நாட்டில்,

     ஆண்மை  உள்ளோர் --- வீரம்  உடையோர்,

     விள்ளுற்ற கல்வி உள்ளோர் --- விளக்கம் பெற்ற கல்வி அறிவு உள்ளோர்,

     செல்வம் உள்ளோர் --- செல்வம் உடையோர்,

     அழகு உடையோர் --- அழகு மிக்கவர்

     (ஆகிய இவர்களின்),

     மேன்மை நோக்கி --- உயர்வைக் கண்டு,

     நமக்கு இல்லை என உள்ளத்தில் அழன்று அழன்று இங்கு உழல்வார் எல்லாம் --- இந்த ஆண்மை, இந்த அறிவு, இந்த செல்வம், இந்த அழகு நமக்குக் கிடைக்க வில்லையே என்று மனத்தில் வெதும்பி வெதும்பித்  திரிபவர்கள் எல்லோரும்,

     பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து --- பிள்ளை பெற்றவர்களைப் பார்த்து,

     இருந்து பெருமூச்சு எறியும் பெற்றியார் --- இது போன்ற பிள்ளை நமக்கு வாய்க்கவில்லையே என்று பெருமூச்சு விடும் தன்மை உள்ளவர்கள் ஆவர்.
          
     கருத்து --- பொறாமை : பிறர் ஆக்கம் கண்டு மனம் வெதும்புதல். 


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...