காட்டுக்கே எறித்த நிலா, கடற்கரையில் பெய்த மழை.




13. காட்டுக்கே எறித்த நிலா!

மேட்டுக்கே விதைத்த விதை, வீணருக்கே
     செய்த நன்றி, மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே
     தேடிஇட்ட வண்மை எல்லாம்,
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்
     வீதிதொறும் பரப்பி டாமல்,
காட்டுக்கே எறித்த நிலா, கானலுக்கே
     பெய்தமழை கடுக்கும் தானே!


     இதன் பொருள் ---

     மேட்டுக்கே விதைத்த  விதை --- மேட்டுப் பாங்கான நிலத்திலே விதைக்கப்பட்ட விதை,

     வீணருக்கே செய்த நன்றி --- சோம்பேறிகளுக்குச் செய்த நன்மை பயக்கும் செயல்,

     மேயும் பட்டி மாட்டுக்கே கொடுத்த விலை ---  கட்டுக்கு அடங்காமல், விளைகின்ற பயிரை எல்லாம் மேய்கின்ற மாட்டுக்குக் கொடுத்த விலை,

     பரத்தையர்க்கே தேடி இட்ட வண்மை --- விலைமாதருக்கு வழங்க என்று உழைத்துக் கொடுத்த செல்வம்,

     எல்லாம் --- ஆகிய இவை எல்லாம்,

     பாட்டுக்கே அருள் புரியும் தண்டலையார் வீதிதொறும் பரப்பிடாமல் --- தன்னை வாயாரப் பாடுபவருக்கே தண்ணருள் சுரக்கும் நீள்நெறி நாதர் எழுந்தருளி உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலத்தின் வீதிகள் தோறும் தண்ணொளியைப் பரப்பாமல்,

     காட்டுக்கே எறித்த நிலா --- ஒருவருக்கும் பயனில்லாமல் காட்டிலே ஒளி பரப்பிய நிலவையும்,

     கானலுக்கே பெய்த மழை --- (பரந்த நிலப்பரப்பிலே வளம் சிறக்கப் பெய்யாமல்) கடற்கரையிலே பெய்த மழையையும்,

     கடுக்கும் --- ஒக்கும்.

     விளக்கம் --- கடுக்கும் - ஒக்கும். கட்டுக்கு அடங்காத மாட்டைப் பட்டிமாடு என்பது வழக்கம். ‘காட்டுக்கு எறித்த நிலவும் கானலுக்குப் பெய்த மழையும்' என்பது பழமொழி.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...