கடவுளாக மதிக்கலாம்

மயில்குயில் செங்கால் அன்னம்
     வண்டுகண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள்
     ஆதவன் ஆழி கொக்கோடு
உயரும் விண் கமலப் பன்மூன்று
     உறுகுணம் உடையோர் தம்மை
இயல் உறு புவியோர் போற்றும்
     ஈசன் என்று எண்ணலாமே. 

இதன் பொருள் ---

     1.    மயில் --- மயிலைப் போல் முறைமை தவறாதவர்களையும்,

     2.    குயில் ---  குயிலைப் போல் இனத்தைத் தழுவிக் கொள்ளுபவர்களையும்,

     3.    செங்கால் அன்னம் --- சிவந்த கால்களை உடைய அன்னப் பறவையைப் போல் கொள்ளவேண்டிதைக் கொண்டு, தள்ளவேண்டிதைத் தள்ளுபவர்களையும்,

     4.    வண்டு --- வண்டினைப் போல உயர்ந்த பொருளையே நாடுகின்றவர்களையும்,

     5.    கண்ணாடி --- கண்ணாடி போலத் தாம் கண்டதை ஓளிக்காமல் வெளிப்படுத்துகின்ற உண்மைத் தன்மை உடையவர்களையும்,

     6.    பன்றி --- எந்தத் தடை நேர்ந்தாலும், தாம் செல்லக் குறித்த இடத்தைச் சென்று அடைகின்ற பன்றியைப் போலச் சோர்வு அற்றவர்களையும்,

     7.    அயில் எயிற்று அரவு --- கூர்மையான பற்களைக் கொண்ட பாம்பினைப் போல நல்லவற்றிற்குக் கட்டுப்படுகின்றவர்களையும்,

     8.    திங்கள் --- சந்திரனைப் போல ஒல்லோரையும் மகிழ்வித்து இனிமை தருவோரையும்,

     9.    ஆதவன் --- சூரியனைப் போலத் தமக்கு உரியவர்களை உள்ளம் மகிழச் செய்தும், உலகத்தவரை அஞ்ஞானமாகிய இருளில் இருந்து விழிப்படையச் செய்து, அருள் ஒளியை அடையச் செய்பவர்களையும்

     10.   ஆழி --- கடலைப் போலச் சுற்றம் தழுவுதலும், ஆணை கடவாத தன்மை உடையவர்களையும்,

     11.   கொக்கு --- கொக்கினைப் போலப் பொறுமை காத்து, பெருங் காரியத்தை முடிக்கின்ற அறிவு நுட்பம் உடையவர்களையும்,

     12.   உயரும் விண் --- வானத்தைப் போல அளந்து அறிய முடியாத அறிவும், களங்கமற்ற தன்மையை உடையவர்களையும்,

     13.   கமலம் --- தாமரை மலரைப் போலத் தமக்கு உரியாருக்கே முகம் மலரும் தன்மை உடையவர்களையும்,

     பன்மூன்று  உறுகுணம் உடையோர் தம்மை --- ஆக, இந்தப் பதின்மூன்று பொருள்களிடத்தே உள்ள குணங்களும் அறிவும் பொருந்தியவர்களை,

     இயல் உறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணல் ஆமே --- உலகத்தில் உள்ளவர்கள் தாம் வணங்கும் கடவுள் என்று எண்ணுதல் தகும்.

     விளக்கம் --- மயிலானது, மழை மேகத்தைக் கண்டால்தான் தனது தோகையை விரித்து ஆடி மகிழும்.மயிலுக்கு உள்ள முறைமை இது. மனிதனும் தான் வாழவேண்டிய முறையிலே வாழவேண்டும்.

     குயிலானது, தனது இனமான காக்கையின் முட்டையையும் அடை காத்து, அதன் குஞ்சுக்கும் உணவு அளித்து, அது தானாக இரை தேடிக் கொள்ளும் வரை காக்கும். மனிதனும் தன் இனத்திற்கு மட்டுமல்லாது பிற உயிர்களிடத்தும் தயவு வைக்க வேண்டும்.

     அன்னப் பறவையானது, பாலையும் நீரையும் சேர்த்து வைத்தால், தேவையற்ற நீரை நீக்கி, தேவையான பாலைக் கொள்ளும். நன்மை தீமைகளைப் பகுத்து அறியும் பண்பு வாய்த்திருக்கவேண்டும் என்பதை இது உணர்த்துகின்றது.

     வண்டு ஆனது, தன் விரும்பும் தேன் உள்ள மலர்களையே எப்போதும் நாடி இருக்கும். தேன் இல்லாத மற்ற மலர்களை ஒருபோதும் விரும்பிச் செல்லாது. புற அழகைக் கண்டு மயங்காமல், நன்மை தருவனவற்றிலையே மனதைச் செலுத்தவேண்டும்.

     கண்ணாடி போல, கண்டதை ஒளிக்காமல் வெளிப்படுத்தக் கூடிய பண்பு வாய்த்து இருக்கவேண்டும்.

     தான் செல்லும் திசையில் என்ன தடை நேர்ந்தாலும், அவற்றை விலக்கி, அடைய வேண்டிய இடத்தை அடையும் பன்றியின் பண்பு இருக்கவேண்டும்.

     பாம்பு மகுடிக்கு மயங்குவது போல, மனிதனும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும்.  

     சந்திரனைப் போல தமக்கு உரியாரையும் மகிழ்வித்து, உலகினர்க்கும் இனிமை தரவேண்டும்.

     சூரியனைப் போல, அஞ்ஞான இருளை நீக்கி, அருள் ஒளியைப் பரப்ப வேண்டும்.

     கடலைப் போலத் தம்மிடம் வந்தவரை எல்லாம் ஏற்றுக் கொள்ளுகின்ற பண்பு இருக்கவேண்டும். 

      கொக்கினைப் போல, பொறுமை காத்து, பெரும் காரியத்தை முடிக்க வேண்டும். (கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று, அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து என்பார் திருவள்ளுவ நாயனார்.)

     வானத்தைப் போலக் களங்கம் அற்ற தன்மையும், அளவற்ற அறிவையும் கொண்டு விளங்கவேண்டும்.

     தாமரை மலரைப் போல, தமக்கு உரியாருக்கே முகம் மலரும் கற்பு வாய்ந்து இருக்கவேண்டும்.

     ஆக, இந்தப் பதின்மூன்று குணங்களும் வாய்க்கப் பெற்றோரை, கடவுளாகவே மதித்துப் போற்றலாம்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...