திரு ஆனைக்கா - 0515. வேலைப் போல்விழி
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வேலைப் போல்விழி (திருவானைக்கா)

முருகா!
பொதுமாதர் வசப்படாமல் அடியேனைக் காத்து அருள்


தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான


வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை

மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ......களிகூருஞ்

சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்

தோயப் பாயல ழைக்கும வத்திகள்
     மோகப் போகமு யக்கிம யக்கிகள்
          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ

காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
          காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்
  
கானத் தாசிர மத்தினி லுத்தம
     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல்.....மருகோனே

ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
     பாயச் சாலித ழைத்திர தித்தமு
          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா

ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வேலைப் போல்விழி இட்டு மருட்டிகள்,
     காமக் ரோதம் விளைத்திடு துட்டிகள்,
          வீதிக்கே திரி பப்பர மட்டைகள், ...... முலையானை

மேல் இட்டே பொர விட்ட பொறிச்சிகள்,
     மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள்,
          வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் .....களிகூரும்

சோலைக் கிலம்கோ ஒத்த மொழிச்சிகள்,
     காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்,
          தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள், ...... எவரேனும்

தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள்,
     மோகப் போகம் முயக்கி மயக்கிகள்,
          சூறைக் காரிகள், துக்கவலைப் படல் .....ஒழிவேனோ?

காலைக்கே முழுகிக் குண திக்கினில்,
     ஆதித்யாய எனப் பகர் தர்ப்பண,
          காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செயும் .....முநிவோர்கள்

கானத்து ஆசிரமத்தினில் உத்தம
     வேள்விச் சாலை அளித்தல் பொருட்டு எதிர்
          காதத் தாடகையைக் கொல் க்ருபைக்கடல்.....மருகோனே!

ஆலைச் சாறு கொதித்து வயல் தலை
     பாய, சாலி தழைத்து, ரதித்து, முது
          ஆகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... உறைவேலா!

ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த்திரு
     நீறு இட்டான் மதிள் சுற்றிய பொன் திரு
          ஆனைக் காவினில் அப்பர் ப்ரியப்படு ...... பெருமாளே.


பதவுரை

         காலைக்கே முழுகிக் குண திக்கினில் --- காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி,

     ஆதித்யாய எனப் பகர் --- ஆதித்யாய என்று சூரிய மூர்த்தியின் மீது துதிமொழிகளைக் கூறி,

     தர்ப்பணம் காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும் முநிவோர்கள் --- நீர்க் கடன், காயத்திரி செபம், அர்ச்சனை முதலியன செய்யும் தவமுனிவர்கள் வாழும்  

         கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்விச் சாலை அளித்தல் பொருட்டு --- காட்டில் உள்ள ஆசிரமத்தில் நடைபெற்ற, உத்தமமான யாக சாலையை இடையூறு இன்றிக் காக்கும் பொருட்டு,

         எதிர் காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல் மருகோனே --- எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகையைக் கொன்று அருளிய கருணைக் கடலான திருமாலின் திருமருகரே!

         ஆலைச்சாறு கொதித்து வயல்தலை பாய --- கரும்பு ஆலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால்,

     சாலி தழைத்து இரதித்து அமுதாக --- நெற்பயிர் செழுமையாக வளர்ந்து சுவை மிகுந்து, அமுதம் போல் இனிமை உடையதாக விளங்க,

         தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா --- தேவர்கள் புகழ்ந்து போற்றும் வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுளே!

       ஆழித்தேர் மறுகில் பயில் --- சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் உலாவுகின்றதும்,

     மெய்த் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய --- திருநீறிட்டான் திருமதில்களால் சூழப் பெற்றதும் ஆகிய, 

         பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே --- அழகிய திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமையில் சிறந்தவரே!

         வேலைப் போல் விழி இட்டு மருட்டிகள் --- வேல் பாய்வது போல் கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள்,

         காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் --- காமம், கோபம் என்னும் தீக் குணங்களை உண்டு பண்ணும் துஷ்டைகள்,

         வீதிக்கே திரி பப்பர மட்டைகள் --- தெருக்களில் திரியும் பயனிலிகள்,

     முலை யானைமேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் --- யானையைப் போல விளங்கும் முலையை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள்,

         மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள் --- மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள்,

         வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் --- மன்மதனுக்கு வீரத்தைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள்,

         களிகூரும் சோலைக் கோகிலம் ஒத்த மோழிச்சிகள் --- மகிழ்ச்சி பொங்கும் சோலையில் வாழும் குயில்கள் போன்ற மொழிகளை உடையவர்கள்,

         காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் --- பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள்,

         தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள் --- உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி கண்ட ஆடவரின் மனத்தை உருக்குபவர்கள்,

         எவரேனும் தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள் --- யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள்,

         மோகப் போகம் முயக்கி மயக்கிகள் --- மோக அனுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள்,

         சூறைக்காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ --- இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக் கொள்ளுதலில் இருந்து அடியேன் நீங்கி உய்வேனோ?


பொழிப்புரை


         காலை நேரத்தில் குளித்து, கிழக்கு திசையை நோக்கி, ஆதித்யாய என்று சூரியமூர்த்தியின் மீது துதிமொழிகளைக் கூறி, நீர்க் கடன், காயத்திரி செபம், அர்ச்சனை முதலியன செய்யும் தவமுனிவர்கள் வாழும் காட்டில் உள்ள ஆசிரமத்தில் நடைபெற்ற, உத்தமமான யாக சாலையை இடையூறு இன்றிக் காக்கும் பொருட்டு, எதிர்த்து வந்த கொடியவளாகிய தாடகையைக் கொன்று அருளிய கருணைக் கடலான திருமாலின் திருமருகரே!

         கரும்பாலைகளின் சாறு கொதித்து, வயலிடத்தே பாய்வதால், நெற்பயிர் செழுமையாக வளர்ந்து சுவை மிகுந்து, அமுதம் போல் இனிமை உடையதாக விளங்க, தேவர்கள் புகழ்ந்து போற்றும் வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுளே!

         சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் உலாவுகின்றதும்,  திருநீறிட்டான் திருமதில்களால் சூழப் பெற்றதும் ஆகிய, அழகிய திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமையில் சிறந்தவரே!

         வேல் பாய்வது போல் கூர்மையான கண் கொண்டு மயக்குபவர்கள், காமம், கோபம் என்னும் தீக் குணங்களை உண்டு பண்ணும் துஷ்டைகள், தெருக்களில் திரியும் பயனிலிகள், யானையைப் போல விளங்கும் மார்பகத்தை மேலே எதிர்த்துப் போர் செய்ய விடுகின்ற தந்திரவாதிகள், மார்பையும், தோளையும் அசைத்து நடப்பவர்கள், மன்மதனுக்கு வீரத்தைத் தருகின்ற சாமர்த்தியசாலிகள், மகிழ்ச்சி பொங்கும் சோலையில் வாழும் குயில்கள் போன்ற மொழிகளை உடையவர்கள், பொருள் இல்லாதவர்களைப் பக்குவமாக நீக்குபவர்கள், உடலின் தோலைப் பொடியால் பூசி மினுக்கி கண்ட ஆடவரின் மனத்தை உருக்குபவர்கள்,  யாரோடும் சிற்றின்ப சுகத்துக்காக படுக்கைக்கு அழைக்கும் கேடு கெட்டவர்கள், மோக அனுபவத்தைத் தந்து இணைந்து மயங்க வைப்பவர்கள், இத்தகைய கொள்ளைக்காரிகளான விலைமாதருடைய துன்பம் தருவதான வலைக்குள் மாட்டிக்கொள்ளுதலில் இருந்து அடியேன் நீங்கி உய்வேனோ?

விரிவுரை


இத் திருப்புகழில் முதல் பகுதியாகிய நான்கு அடிகளும் விலைமகளிருடைய இழிவை உணர்த்துகின்றன.

காலைக்கே முழுகி ---

முனிவரர்கள் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் முழுகுவார்கள். சூரிய உதயத்துக்கு முன் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பவர்க்கு நோய் அணுகாது. இது சுகாதாரமானது.

குணத் திக்கினில் ---

குணத் திசை - கீழ்த் திசை.  சூரியன் உதிக்கின்ற கீழ்த்திசையை நோக்கி, முனிவர்கள் அதிகாலையில் வழிபாடு செய்வார்கள்.

ஆதித்யாய என ---

'ஆதித்யாய நம' என்பது சூரிய மந்திரம்.  அதிதி மைந்தர் ஆதலால், சூரிய பகவான் ஆதித்தன் என்று பேர் பெற்றார்.

தர்ப்பணம் ---

தர்ப்பணம் - உவப்பித்தல்.  சூரிய மூர்த்தியை மகிழச் செய்யும் பொருட்டு தர்ப்பணம் புரிதல் வேண்டும்.

காயத்ரீ செபம் ---

ஓம் பூர் புவ: சுவ: ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: ப்ரசோதயாத்.

பூ: --- சகல ஜீவனாதாரன் - உயிரினும் பிரியமானவன் - தன்னுள் தான் ஆனவன் பெயர் பூ என்பது.

புவ: ---  சகல துக்க ரகிதன் - எவனது சேர்க்கையால் ஜீவன் சகல துக்கங்களையும் நீக்கிக் கொள்ள முடியுமோ அவனாகிய கடவுளின் பெயர்.

சுவ: ---  எல்லா உலகங்களிலும் வியாபித்து அவைகளைத் தரித்திருப்பவன் எவனே அவன் பெயர் சுவ

இம்மூன்று வசனங்களும் தைத்திரீய ஆரண்யகத்தில் உள்ளது.

ய: ---  எது.

ந: --- நம்முடைய

திய ---  அறிவினை

ப்ரசோதயாத் --- உந்துகின்றதோ

தத் --- அந்த

ஸவிது: --- ஞாயிற்றின்கண் விளங்கும்

வரேண்யம் --- வணங்கற்பாலதான

பர்க்க: ---  பர்க்கன் என்னும் பேருடைய சிவபெருமானுடைய

தேவஸ்ய – அருள் ஒளியை

தீமஹி --- நாம் நினைக்கின்றோம்.

இது காயத்ரி மந்திரம்.  காயத்திரி மந்திரம் வேதத்திற்குத் தாய் போன்றது.

எவர் தன்னைக் கானம் பண்ணுகின்றார்களோ, அவர்களை ரட்சிப்பது என்பது காயத்திரி என்ற சொல்லுக்குப் பொருள்.

அர்ச்சனை ---

மலர்கள் இட்டு இறைவனை வணங்குவது அர்ச்சனை.  முனிவர்கள் இத்தகைய வழிபாடுகள் புரிகின்றார்கள்.

கானத்து ஆசிரமத்தினில் ---

விசுவாமித்திரர் தவம் செய்யும் இடம் சித்தாசிரமம்.  இது மிகப் புனிதமானது.  திதி முதலானவர்கள் தவம் செய்த இடம்.
  
உத்தம வேள்வி ---

வேள்விகள் மூன்று வகைப்படும்.

1.      தன் பகைவரை அழிப்பதற்காகச் செய்வது.  இது அபிசார வேள்வி.  தாருகவனத்து மகரிஷிகள் சிவபெருமான் மீது வெகுண்டு செய்த யாகம்.  இது அதமம்.

2.      சுவர்க்காதி புவன போகங்களை விரும்பியும், புத்திரப் பேறு வேண்டியும் செய்யும் அசுவநேதம், இராஜசூயம், புத்ரகாமம் என்பனவாதி யாகங்கள்.  இவை மத்திமம்.

3.      உலக நலன் கருதிப் பரமஞானிகள் புரிவது. இந்த வேள்வி உத்தமம்.

கலி நலியுமாறு அப்பூதி அடிகள் நாள் தோறும் யாகம் செய்தார் என்று அப்பரடிகள் கூறுகின்றார்.

வஞ்சித்துஎன் வளை கவர்ந்தான், வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகுஅன்னம் பரந்துஆர்க்கும் பழனத்தான்,
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய், கோடு இயையே.
  
வேள்விச் சாலை அளித்தல் ---

இவ்வாறு உலக நலன் பொருட்டு மாமுனிவர்கள் புரியும் சிறந்த வேள்வியைக் கொடிய அரக்கர்கள் அழித்து இடர் புரிவார்கள்.  அவ்வாறு இடர் புரிவதைத் தடுத்து, அவ் வேள்வியை இறைவன் காத்து அருள்வான்.

காசிபருடைய வேள்வியை முருகவேள் காத்தருளினார்.

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்.... ---  திருமுருகாற்றுப்படை.

அந்தண் மறை வேள்வி காவல்கார...   ---  (முந்துதமிழ்) திருப்புகழ்.

இங்கே விசுவாமித்திரருடைய யாகத்தை இராமமூர்த்தி காத்து அருளினார்.

காதத் தடாகையைக் கொல் க்ருபைக் கடல் ---

காதகம் என்ற சொல் காத என்று வந்தது.  காதகம் - கொடுமை.

சுகேது என்ற யட்சனுடைய தவத்தால் ஆயிரம் யானை பலத்துடன் பிறந்தவள் தாடகை.  சுந்தன் என்ற யட்சன் தாடகையை மணந்தான்.  சுபாகு, மாரீசன் என்ற புதல்வர்கள் பிறந்தார்கள்.

தாடகையின் கணவனான சுந்தன் அகத்தியர் ஆச்சிரமத்தில் இருந்த பூ மரங்களை அழித்தான். அகத்தியருடைய பார்வையால் அழிந்தான்.  அதனால் வெகுண்ட தாடகையும் அவளுடாய இரு புதல்வர்களும் கல்லும் மண்ணும் வீசி அகத்தியரை எதிர்த்தார்கள். நீங்கள் அசுரர்களாகக் கடவது என்று அகத்தியர் சாபம் இட்டார். பிறப்பால் யட்சர்களாகிய இவர்கள், சாபத்தால் அசுரர்களாக ஆனார்கள். அதனால், மிகுந்த தீமைகளைப் புரிந்து திரிந்தார்கள்.  சதா விசுவாமித்திரருக்குக் கொடுமை செய்தார்கள்.  இராமர் தாடகையைக் கொன்று யாகத்துக்கு உதவி புரிந்தார்.

அதனால், "கிருபைக் கடல்" என்றார்.

கம்பரும் இதனை, கடுமையார் கானத்தில் கருணையார் கலியேக என்கின்றார்.
  
ஆலைச்சாறு கொதித்து வயல் தலை பாயச் சாலி தழைத்து இரதத்து அமுதாக ---

வயலூரில் கரும்பாலையின் சாறு பாய்ந்து நெற்பயிர் விளைகின்றது.  அதனால் அந்த நெல்லரிசி அமுதம் போல் இனிமையாகத் திகழ்கின்றது என்று அருணகிரிப் பெருமான் வயலூரின் பெருமையை எடுத்து உரைக்கின்றார்.

தேவர்கள் மெச்சிய செய்ப்பதி.  செய் - வயல்.  பதி - ஊர்.  செய்ப்பதி - வயலூர்.

வயலூரின் பெருமையைத் தேவர்கள் புகழ்ந்து கொண்டாடுகின்றார்கள்.
  
ஆழித்தேர் மறுகில் பயில் ---

திருவானைக்காவின் வீதிகளில் தேரோடும் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.

திருநீறிட்டான் மதில் ---

திருவானைக்காவில் ஐந்தாவது பிரகாரச் சுற்றுமதிலை சிவபெருமானே சித்தராக நின்று புதுக்கியருளினார்.  வேலை செய்யும் ஆட்களுக்கு ஒரு இலையில் திருநீறு மடித்துத் தருவார்.  அவர்கள் அதைப் பெற்று வீட்டுக்கு வந்து பார்ப்பார்கள்.  அவரவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப அது பொன்னாக மாறி இருக்கும்.  இப்படி, திருநீறு தந்து புதுக்கிய மதில் ஆதலினால், இது திருநீறு இட்டான் மதில். விபூதிப் பிரகாரம் எனப் பேர் பெற்றது.  மிகவும் புனிதமானது.  மகிமை வாய்ந்தது.

கருத்துரை

முருகா, மாதர் வலைப்படாது அடியேனைக் காத்தருள்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...