26. ஆகாதவை
உள்ளன்
பிலாதவர் தித்திக்க வேபேசி
உறவாடும் உறவும் உறவோ?
உபசரித்து அன்புடன் பரிமா றிடாதசோறு
உண்டவர்க்கு அன்னம் ஆமோ?
தள்ளாது
இருந்துகொண்டு ஒருவர்போய்ப் பார்த்துவரு
தக்கபயிர் பயிர் ஆகுமோ?
தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்
தானையும் தானை ஆமோ?
விள்ளாத
போகம்இல் லாதபெண் மேல்வரு
விருப்பமும் விருப்பம் ஆமோ?
வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
மிக்கசீ வனம் ஆகுமோ?
அள்ளாத
இருங்கருணை யாளனே! தேவர்தொழும்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ----
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
அள்ளாத இரும் கருணையாளனே --- குறையாத
பேரருளாளனே!,
தேவர் தொழும் ஆதியே --- அமரர்
வணங்கும்
முதல்வனே!
உள் அன்பு இலாதவர் தித்திக்கவே பேசி
உறவாடும் உறவும் உறவோ --- உள்ளத்திலே அன்பு இல்லாதவர்கள், இனிமையாகப் பேசி உறவாடுகின்ற போலியான உறவும்
உறவு ஆகுமோ?,
அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு
உண்டவர்க்கு அன்னம் ஆமோ --- அன்போடு இனிய வார்த்தைகளைக் கூறிப் படைக்காத சோறு, உண்டவர்க்கு நலம் தரும் உணவு ஆகுமோ?,
தள்ளாது இருந்துகொண்டு ஒருவர் போய்ப்
பார்த்து வரு தக்க பயிர் பயிர் ஆகுமோ --- உள்ளத்தில் ஊக்கம் இல்லாமல் தன் வீட்டிலேயே
ஒருவன் இருந்துகொண்டு, மற்றொருவர் சென்று
பார்த்து வரும் நல்ல பயிர் ஆனது உரிய பயனைத் தருமோ?,
தள கர்த்தன் ஒருவன் இல்லாமல்
முன்சென்றிடும் தானையும் தானை ஆமோ --- படைத்தலைவன் ஒருவன் இல்லாமல்
முன்னோக்கிச் செல்லும் படையும் வெற்றி பெறும் படை ஆகுமோ?
விள்ளாத போகம் இல்லாத பெண் மேல் வரும்
விருப்பமும் விருப்பம் ஆமோ --- இன்பத்திற்கு விருப்பம் அற்ற பெண்ணின் மேல்
உண்டாகும் ஆசையும் மகிழ்ச்சியைத் தரும் ஆசை ஆகுமோ?
வெகு கடன்பட்ட பேர் செய்கின்ற சீவனமும்
மிக்க சீவனம் ஆகுமோ --- மிகுதியாகக் கடன் கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும்
இனிய வாழ்க்கை ஆகுமோ?
விளக்கம் --- தள்ளாமை --- மனதில் ஊக்கம்
இன்மை. தள்ளாத வயது என்பது உலக வழக்கு. அள்ளுதல் - எடுத்தல். அள்ளாத என்பது இங்கு, குறையாத என்னும் பொருளில்
வந்தது. இருமை + கருணை - இருங்கருணை. இருமை - பெருமை. பெருங்கருணை.
உள்ளன்பு இல்லாதார் இடும் உணவு, இனிமை தராது.
"ஒப்புடன்
முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி,
உப்பு
இல்லாக் கூழி உட்டாலும் உண்பதே அமுதம் ஆகும்.
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவரேனும்,
கப்பிய
பசியினோடு கடும் பசி ஆகும் தானே"
என்னும்
ஔவையார் பாடல் இங்கு வைத்து எண்ணத்தக்கது.
உள்ளத்தில் அன்பு இல்லாமல், உதட்டளவில் தித்திக்கப்
பேசுவது வழுவழுத்த உறவு ஆகும். "வழுவழுத்த உறவு அதனில் வயிரம் பற்றிய பகையே நன்மை ஆமே" என்னும் தண்டலையார் சதகப் பாடல் வரியினை அறிக.
கடன் படாத வாழ்க்கையே சிறந்தது ஆகும். செல்வம்
வரும் வழி சிறியது என்றாலும், செலவு ஆகும் வழி விரியாத நிலையில் அழிவு என்பது இல்லை.
"ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை, போகு ஆறு அகலாக் கடை"
என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள் வாக்கை எண்ணுக.
"ஆன
முதலில் அதிகம் செலவு ஆனால்,
மானம்
அழிந்து,
மதிகெட்டு, போன திசை
எல்லார்க்கும்
கள்ளனாய்,
எழுபிறப்பும்
தீயனாய்,
நல்லார்க்கும்
பொல்லானாம் நாடு".
என்னும்
ஔவையாரின் நல்வழிப் பாடல் கருத்தையும் எண்ணி உய்க.
No comments:
Post a Comment