திருவண்ணாமலை - 0532. இருள்அளகம் அவிழ





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருள்அளகம் அவிழ (திருவருணை)

திருவருணை முருகா!
உனது திருவடித் தாமரையை என்றும் மறவேன்


தனதனன தனதனன தான தத்த தந்த
     தனதனன தனதனன தான தத்த தந்த
     தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான


இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
     இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
     இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும்

எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
     யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
     இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி

முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
     முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
     மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ......விடுபோதும்

முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
     பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
     முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே

ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
     உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ....சபையூடே

ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
     உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
     உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ......சிறியோனே

அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
     டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
     அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக

அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
     அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
     அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருள் அளகம் அவிழ, மதி போத முத்து அரும்ப,
     இலகு கயல் புரள, இரு பார பொன் தனங்கள்
     இளக, இடை துவள, வளை பூசல் இட்டு இரங்க, ...எவராலும்

எழுத அரிய கலை நெகிழ, ஆசை மெத்த, உந்தி
     இனிய சுழி மடுவின் இடை மூழ்கி, நட்பொடு அந்த
     இதழ் அமுது பருகி, உயிர் தேகம் ஒத்து இருந்து .....முனிவு ஆறி,

முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து,
     முக வனச மலர் குவிய, மோகம் உற்று அழிந்து,
     மொழி பதற, வசம் அழிய, ஆசையில் கவிழ்ந்து ......விடுபோதும்,

முழுது உணர உடைய முது மாதவத்து உயர்ந்த
     பழுதில் மறை பயிலுவ என ஆதரித்து நின்று
     முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் ......  மறவேனே.

ஒருசிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து,
     கிழ வடிவு கொடு முடுகி, வாசலில் புகுந்து,
     உலகு அறிய இவன் அடிமையாம் எனக் கொணர்ந்து ....சபை ஊடே

ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று,
     உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று,
     உதறி முறையிடு பழைய வேத வித்தர் தந்த ......சிறியோனே!

அரிய உடுபதி கடவி, ஆடகச் சிலம்பொடு
     அழகுவட மணிமுடி வியாளம் இட்டு அழுந்த,
     அமரரொடு பலர் முடுகி ஆழியைக் கடைந்து, ...... அமுதாக

அருளும் அரி திருமருக! வாரணத்தை அன்று
     அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த,
     அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


      ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் --- ஒப்பற்ற சிறுவனாகிய நம்பியாரூரரின் திருமணச் சடங்கு நடக்கும்போது,

     எய்த்து வந்து, கிழ வடிவு கொடு முடுகி --- இளைப்புடன் அங்கு கிழ வடிவம் கொண்டு எழுந்தருளி, வேகமாக வந்து,

     வாசலில் புகுந்து --- திருமண வாசலில் புகுந்து,

     உலகு அறிய --- உலகோர் யாவரும் அறியுமாறு,

     இவன் அடிமையாம் என --- இந்தச் சிறுவன் எனக்கு அடிமையாம் என,

      ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை சபையூடே கொணர்ந்து --- ஒரு சீட்டை எடுத்து வந்த பழமையான ஓலைச் சுருளாகிய அந்த பத்திரத்தை, சபையோர்களின் நடுவில்,

     அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று -- அந்நாளில் வலிமை பொருந்திய அந்தச் சிறுவன் அதனை வலிதில் பற்றிக் கிழித்து எறியவும்,

     உதறி முறையிடு --- அங்கு நின்று கை கால்களை உதறிக்கொண்டு முறையோ என்று ஓலமிட்ட

     பழைய வேத வித்தர் தந்த சிறியோனே --- பழையவரும், வேதத்தை நன்கறிந்தவரும் ஆகிய சிவபெருமான் பெற்ற இளம் புதல்வரே!

      அரிய உடுபதி கடவி --- அருமையான சந்திரனைத் தூணாக இருக்கும்படி வைத்து,

     ஆடகச் சிலம்பொடு --- பொன்மலையாகிய மேருமலை என்னும் மத்துடன்,

     அழகு வட மணிமுடி வியாளம் இட்டு அழுந்த --- அழகிய கயிறாக இரத்தின முடிகளை உடைய ஆதிசேடனைப் பூட்டி, அழுத்தமாகவும்,

     அமரரொடு பலர் முடுகி ஆழியைக் கடைந்து --- வேகமாகவும் தேவர்களூடன் பலரும் கடலைக் கடைந்து,

     அமுதாக அருளும் அரி திருமருக --– அமுது வரச் செய்து, அதை தேவர்களுக்குப் பகிர்ந்து அளித்த திருமாலின் அழகிய மருகரே!

     வாரணத்தை அன்று அறிவினுடன் --- சேவலை அந்நாள் நல்ல யோசனையுடனே

     ஒரு கொடியிலே தரித்து உகந்த --- ஒரு கொடியிலே நிறுத்தித் தரித்து மகிழ்ந்தவரே!

     அருணகிரி நகரில் --- திருவண்ணாமலை நகரத்தில்

     எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே --- எழு நிலை உள்ள கோபுர வாயிலில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      இருள் அளகம் அவிழ --- கரிய கூந்தல் அவிழவும்,

     மதி போத முத்து அரும்ப --- சந்திரனைப் போன்ற முத்தில் உண்டான முத்துப் போன்ற வியர்வை வெளித் தோன்றவும்,

     இலகு கயல் புரள --- விளங்குகின்ற கயல் மீன் போன்ற கண்கள் புரளவும்,

     இரு பார பொன் தனங்கள் இளக --- பாரமான ழகிய இரு கொங்கைகளும் நெகிழ்ச்சி உறவும்,

     இடை துவள ---  இடையானது துவளவும்,

     வளை பூசல் இட்டு இரங்க --- கைவளைகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலிக்கவும்,

      எவராலும் எழுத அரிய கலை நெகிழ --- யாராலும் எழுத முடியாததான ஆடை தளர்ச்சி அடையவும்,

     ஆசை மெத்த ---  ஆசை அதிகரிக்கவும்,

     உந்தி இனிய சுழி மடுவின் இடை மூழ்கி --- கொப்பூழாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவின் நடுவில் முழுகி,

     நட்பொடு அந்த இதழ் அமுது பருகி --- நட்பு பூண்டு வாயிதழ்களின் அமுதத்தை உண்டு,

      உயிர் தேகம் ஒத்து இருந்து --- உயிரும் உடம்பும் ஒத்து இருந்து,

     முனிவு ஆறி --- கோபம் தணிந்து,

      முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து --- நறுமணம் வீசுகின்ற மலர்ப் படுக்கையில் படுத்து,

     முக வனச மலர் குவிய --- முகமாகிய தாமரை மலர் சுருங்க,

     மோகம் உற்று அழிந்து --- மோகவிடாய் கொண்டு அதில் அழிந்து,

     மொழி பதற --- சொற்கள் தடுமாறவும்,

     வசம் அழிய --- தன் வசம் கெட்டு அழியவும்,

     ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் --- ஆசையிலேயே கவிழ்ந்து முழுகிவிட்ட போதிலும் கூட,

      முழுது உணர உடைய --- எல்லாரும் உணரும்படியாகவும் அமைந்துள்ள,

     முது மாதவத்து --- முதிர்ந்த மாதவ நிலையிலும்,

     உயர்ந்த பழுதில் மறை பயிலுவ என ஆதரித்து நின்று --- உயர்ந்ததும், குற்றமில்லாததும் ஆன, வேதத்திலும் பயிலப்படுவது என்று விரும்பிப் போற்றி செய்து நின்று,

     முநிவர் சுரர் தொழுது உருகு பாதபத்மம் என்றும் மறவேனே --- முனிவர்களும், தேவர்களும் வணங்கி உருகுகின்ற உமது பாத தாமரைகளை அடியேன் என்றும் மறக்கமாட்டேன்.


பொழிப்புரை


         ஒப்பற்ற சிறுவனாகிய நம்பியாரூரரின் திருமணச் சடங்கு நடக்கும்போது, இளைப்புடன் அங்கு கிழ வடிவம் கொண்டு எழுந்தருளி, வேகமாக வந்து, திருமண வாசலில் புகுந்து, உலகோர் யாவரும் அறியுமாறு, "இந்தச் சிறுவன் எனக்கு அடிமையாம்" என ஒரு சீட்டை எடுத்து வந்த பழமையான ஓலைச் சுருளாகிய அந்த பத்திரத்தை, சபையோர்களின் நடுவில், அந்நாளில் வலிமை பொருந்திய அந்தச் சிறுவன் அதனை வலிதில் பற்றிக் கிழித்து எறியவும், அங்கு நின்று கை கால்களை உதறிக்கொண்டு "முறையோ" என்று ஓலமிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்தவரும் ஆகிய சிவபெருமான் பெற்ற இளம் புதல்வரே!

          அருமையான சந்திரனைத் தூணாக இருக்கும்படி வைத்து, பொன்மலையாகிய மேருமலை என்னும் மத்துடன், அழகிய கயிறாக இரத்தின முடிகளை உடைய ஆதிசேடனைப் பூட்டி, அழுத்தமாகவும், வேகமாகவும் தேவர்களூடன் பலரும் கடலைக் கடைந்து, அமுது வரச் செய்து, அதை தேவர்களுக்குப் பகிர்ந்து அளித்த திருமாலின் அழகிய மருகரே!

          சேவலை அந்நாள் நல்ல யோசனையுடனே ஒரு கொடியிலே நிறுத்தித் தரித்து மகிழ்ந்தவரே!

         திருவண்ணாமலை நகரத்தில் எழு நிலை உள்ள கோபுர வாயிலில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         கரிய கூந்தல் அவிழவும், சந்திரனைப் போன்ற முத்தில் உண்டான முத்துப் போன்ற வியர்வை வெளித் தோன்றவும், விளங்குகின்ற கயல் மீன் போன்ற கண்கள் புரளவும், பாரமான இரு கொங்கைகளும் நெகிழ்ச்சி உறவும், இடையானது துவட்சி அடையவும், கைவளைகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலிக்கவும்,

         யாராலும் எழுத முடியாததான ஆடை தளர்ச்சி அடையவும், ஆசை அதிகரிக்கவும், கொப்பூழாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவின் நடுவில் முழுகி, நட்பு பூண்டு, வாயிதழ்களின் அமுதத்தை உண்டு, உயிரும் உடம்பும் ஒத்து இருந்து, கோபம் தணிந்து,

         நறுமண் வீசுகின்ற மலர்ப் படுக்கையில் படுத்து, முகமாகிய தாமரை மலர் சுருங்க, மோகவிடாய் கொண்டு அதில் அழிந்து, சொற்கள் தடுமாறவும், தன் வசம் கெட்டு அழியவும், ஆசையிலேயே கவிழ்ந்து முழுகிவிட்ட போதிலும் கூட,

         எல்லாரும் உணரும்படியாகவும் அமைந்துள்ள, முதிர்ந்த மாதவ நிலையிலும், உயர்ந்ததும், குற்றமில்லாததும் ஆன, வேதத்திலும் பயிலப்படுவது என்று விரும்பிப் போற்றி செய்து நின்று, முனிவர்களும், தேவர்களும் வணங்கி உருகுகின்ற உமது பாத தாமரைகளை அடியேன் என்றும் மறக்கமாட்டேன்.


விரிவுரை

இத் திருப்புகழில் முற்பகுதி மூன்று அடிகள் கலவி நலத்தை விரித்துக் கூறுகின்றன.

ஆசையில் கவிழ்ந்து விடுபோதும்..... பாதமத்மம் என்றும் மறவேனே ---

முருகா, ஆசைக் கடலில் கவிழ்ந்து மூழ்கினாலும் தேவரீருடைய திருவடித் தாமரையை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று அருணகிரிப் பெருமான், தமக்குள்ள உறுதியை நன்கு நவில்கின்றார்.

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல் மறவேன்..          --- கந்தர் அலங்காரம்.

முழுதுணர உடைய முது மாதவத்து ---

எல்லாவற்றையும் ஒருங்கே உணரும் ஆற்றலைத் தருவது தவம்.  இத்தகைய மாதவத்தில் விளங்குவது முருகன் திருவடி.

ஒரு சிறுவன் மணம் அது செய்போதில் எய்த்து வந்து, கிழ வடிவு கொடு முடுகி, வாசலில் புகுந்து, உலகு அறிய இவன் அடிமையாம் எனக் கொணர்ந்து,  சபையூடே ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று, உதறி முறையிடு பழைய வேத வித்தர் ---

இந்த வரிகளில் அடிகளார் தடுத்தாட்கொண்ட புராணத்தை, இரத்தினச் சுருக்கமாக, வெகு அழகாக உரைக்கின்றார்.

வரலாறு

திருநாவலூரில் ஆதிசைவர் குலத்திலே சடையனாரும் இசைஞானியாரும் செய்த மாதவத்தின் பயனாக நம்பியாரூரர் அவதரித்தார்.

நரசிங்கமுனையர் என்ற மன்னர் இவரை மகனாகக் கொண்டு வளர்த்தார்.  சகல கலைகளிலும் வல்லவரானார்.  நாவலர்கோன் என்று பேர் பெற்றார்.

மணம்வந்தபுத்தூரில் சடங்கவி சிவாச்சாரியருடைய புதல்வியை மணம் பேசி, மிகுந்த சிறப்புடன் திருமணச் சடங்கு தொடங்கப் பெற்றது.

சிவபெருமான் தாம் முன் தந்த வரத்தின்படி அவரைத் தடுத்து ஆட்கொள்ளும் பொருட்டு, அழகு திரண்டு ஒரு கிழ உருக் கொண்டதுபோல் திருமணப் பந்தலில் வந்து, "இவன் என் அடிமை" என்று கூறி வாதிட்டார்.

நம்பியாரூரர் "ஒரு அந்தணன் மற்றொறு அந்தணனுக்கு அடிமை என்பது எங்கும் இல்லாதது.  நீ பித்தனோ?” என்று கூறினார்.

கிழ வேதியர், "சிறுவனே! என்னைப் பித்தன் என்றும் பேயன் என்றும் இகழ்கின்றனை.  அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். அந்தக் காலத்தில் உன் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை இருக்கின்றது. இது என்ன பொய் வழக்கா?" என்றார்.

சுந்தரர் கிழவரைத் தொடர்ந்து சென்று அந்த ஓலையை வலிதில் பிடுங்கிக் கிழித்து எறிந்தார்.

பிறகு திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அம்பலத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.  பெரியோர்கள் "ஆரூரன் உமக்கு அடிமை என்பதற்கு என்ன சான்றுளது" என்று கேட்டார்கள்.

கிழவேதியர், "இவன் முன் கிழித்த ஓலை நகல்.  மூல ஓலை வேறு உளது" என்று கூறி மற்றொரு ஓலையை எடுத்துக் கொடுத்தார்.

அருமறை நாவல்ஆதி சைவன் ஆரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு, யானும் என்பால்
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்கு ஓலை,
இருமையால் எழுதி நேர்ந்தேன், இதற்கு இவை என் எழுத்து.

இந்த ஓலையின் எழுத்து ஒப்புமையைப் பார்த்து நம்பியாரூரர் அடிமை என்பதை ஒப்புக்கொண்டார்.  ஓலையைப் பிடுங்கிக் கிழித்தபோது இறைவன் முறையிட்டதைச் சேக்கிழார் பெருமான் கூறும் அழகிய செந்தமிழ்ப் பாடல் இது.

மறைகள்ஆயின் முன்போற்றி மலரப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்துபற்றி எழுதம் ஆள்ஓலை வாங்கி
அறைகழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறைஎனக் கீறியிட்டான், முறையிட்டான் முடிவிலாதான்.

எல்லா உயிர்களும் ஈசனுக்கு என்றும் அடிமைகள்.  அன்றே அடிமைப் பத்திரம் எழுதப்பட்டுள்ளது.  இதனைத் திருமந்திரம் கூறுமாறு காண்க.

என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர் எழுத்தாயே.

அரிய உடுபதி கடவி ஆடகச் சிலம்பொடு அழகுவட மணிமுடி வியாளமிட்டழுந்த அமரரொடு பலர் முடுகி ஆழியைக் கடைந்து அமுதாக ---

நரை திரை மூப்பு முதலிய துன்பம் தொலைய அமுதம் உண்ணவேண்டும் என்று அமரர்கள் கருதினார்கள்.  சந்திரனைத் தூணாக நிறுத்தி, பொன் மேரு மலையை மத்தாகக் கொண்டு, ஆதிசேடனைத் தாம்புக் கயிறாகக் கொண்டு கடைந்தார்கள்.

மந்தர நெடுவரை மத்து வாசுகி
அந்தமில் கடைகயிறு அடைகல் ஆழியான்
சந்திரன் தூண்எதிர் தருக்கி வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்.    ---  கம்பராமாயணம்.

வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்துகந்த ---

வாரணம் - கோழி.

சிவபெருமானுக்கு இடபக் கொடி.  திருமாலுக்குக் கருடக் கொடி. பிரமனுக்கு வேதக் கொடி. இந்திரனுக்கு இடிக் கொடி. மன்மதனுக்கு மீனக் கொடி.  இடபம், கருடன் ஆகிய இவைகள் கொடிகளில் எழுதிய வடிவங்கள் தான்.  முருகப் பெருமானுடைய கொடி ஒன்றுதான் கூவி ஒலிப்பது.  மேலும், சேவல் '' என்று பிரணவ நாதத்தை எழுப்புவது.  அதனால், அதனை முருகவேள் தன் கொடியில் நிறுத்தியருளினார்.

ஆரணங்கள் தாளைநாட வாரணங்கை மேவும் ஆதி
ஆன செந்தில் வாழ்வதான பெருமாளே.         --- (நாலுமைந்து) திருப்புகழ்.


கருத்துரை


அருணை மேவும் அண்ணலே, எப்போதும் உன் திருவடியை மறவேன்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...