திரு விற்குடி வீரட்டம்



திரு விற்குடி வீரட்டம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         (1) திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில் வலதுபக்கம் திரும்பி விற்குடி இரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி வீரட்டேசம்" என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (வளப்பாறு பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

     (2) நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து, கார் செல்லும். திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர்               : வீரட்டானேசுவரர்

இறைவியார்           : ஏலவார் குழலி, பரிமள நாயகி

தல மரம்                : துளசி

தீர்த்தம்                : சக்கரதீர்த்தம், சங்கு தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - வடிகொள் மேனியர்

         சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும். சலந்தராசுரன் என்பவன் பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான். பிரமா அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன் "தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான். தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். அதற்கு முன்பு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கம் அடைந்தது. இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

         சலந்தாசுரன் மனைவி தன் கணவர் இறக்கக் காரணமாக இருந்த மகாவிஷ்ணுவைப் பார்த்து "நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்" என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்து, மனைவியைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற அவரின் பித்து விலகுகிறது. துளசி தான் இங்கு தல விருட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.

         இராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்ல படித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். குளத்தின் கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச் சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி, மாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சங்கரித்த மூர்த்தியின் உற்சவத் திருமேனி தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான், மழு ஏந்தி, ஒரு கை ஆயுத முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து துவார பாலகரைத் தொழுது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் மீதுள்ள மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

         முன்னால் இடப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது. மண்டபத்தின் இடதுபுறம் நடராச சபையும், எதிரில் தெற்கு வாயிலும் சாளரமும் உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் தீர்த்தங்கள் இரண்டு. சக்கரதீர்த்தம் கோயிலின் முன்னாலும், சங்குதீர்த்தம் கோயிலின் பின்புறமும் உள்ளது.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
         
அட்ட வீரட்டத் தலங்கள்

திருக்கண்டியூர் - பிரமன் சிரம் கொய்தது.
திருக்கோவலூர் - அந்தகாசூரனை வதைத்தது.
திருவதிகை - திருபுரங்களை எரித்தது.
திருப்புறியலூர் - தக்கன் சிரம் கொய்தது.
திருவிற்குடி - சலந்தராசுரனை வதைத்தது.
திருவழுவூர் - யானையை உரித்தது.
திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது.
திருக்கடவூர் - எமனை உதைத்தது.

         காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான்தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பண்புடனே எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த விற்குடியின் வீரட்டம் மேயவனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

         திருஞானசம்பந்தப் பெருமான் திருப்புகலூரில் திருமுருகனார் திருமடத்தில் எழுந்தருளி இருந்த காலத்தில், அப்பர் பெருமான் திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி, திருப்புகலூருக்கு எழுந்தருளுகின்றார்.  அப்பர் பெருமான் வரவை அறிந்த திருஞானசம்பந்தப் பெருமான் அடியவர்களோடும் திருப்புகலூர் எல்லை கடந்து வந்து அப்பர் பெருமானை வரவேற்கிறார்.  அப்பர் பெருமானைப் பார்த்து மகிழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான், "அப்பரை இங்கு அணை யப்பெறும் பேரருள் உடையோம் யாம், அந்தண் ஆரூர் எப்பரிசால் தொழுது உய்ந்தது" என்று வினவிட, முடிவில்லாத பெருந்தவத்தோர் ஆகிய அப்பர் பெருமான், முத்து விதானம் என்னும் திருப்பதிகத்தின் வாயிலாகத் திருவாரூர் நிகழ் செல்வத்தைச் சொன்னார். திருவாரூர்ச் சிறப்பைக் கேள்வியுற்றதும், திருவாரூருக்குச் செல்ல எழுந்தார் திருஞானசம்பந்தப் பெருமான். "திருவாரூர்ப் பெருமானை வணங்கி மீண்டு வந்து உம்முடன் இருப்பேன்" என்று சொல்லி, திருப்புகலூரை அகன்று, திருவாரூர்ச் செல்லும் வழியில் விற்குடி வீரட்டத்தை வணங்கித் திருப்பதிகம் பாடினார்.  அப்பர் பெருமான் திருப்புகலூருக்கு எழுந்தருளினார்.


பெரிய புராணப் பாடல் எண் : 497
சொல்பெரு வேந்தரும் தோணி மூதூர்த்
         தோன்றல்பின் காதல் தொடரத் தாமும்
பொற்புக லூர்தொழச் சென்று அணைந்தார்,
         புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி,
         விடையவர் பாதம் பணிந்து போற்றி,
பற்பல ஆயிரம் தொண்ட ரோடும்
         "பாடல னான்மறை" பாடிப் போந்தார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசரும் சீகாழிப் பதியில் தோன்றிய பெருந்தகையாரான சம்பந்தரின் பின்னால் தம் காதல் தொடர்ந்து செல்லத் திருப்புகலூரில் தொழுவதற்குச் சென்று சேர்ந்தார். சீகாழித் தலைவரான பிள்ளையாரும் இடைவிடாத நினைவுடைய மனத்துடன் திருவிற்குடி வீரட்டானத்தை அடைந்து, ஆனேற்று ஊர்தியையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கிய பின்பு, பற்பல ஆயிரம் தொண்டர்களுடனே `பாடலன்நா மறை' (தி.1 ப.104) எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு திருவாரூரை நோக்கிச் சென்றார்.

         பிள்ளையார் விடைபெற்றுச் சென்றதும், நாவரசரின் மனம் அவர்பின் தொடர, அவர் திருப்புகலூர் தொழச் சென்றார். பிள்ளையாரிடத்தும் பெருமானிடத்தும் அரசர் கொண்டிருந்த அன்பு மீதூர்வை விளக்கியவாறு. திருவிற்குடி வீரட்டத்தில் அருளிய பதிகம் `வடிகொள் மேனியர்' (தி.2 ப.108)எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


2.108 திருவிற்குடி வீரட்டம்           பண் - நட்டராகம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வடிகொள் மேனியர், வானமா மதியினர்,
         நதியினர், மதுவார்ந்த
கடிகொள் கொன்றைஅம் சடையினர், கொடியினர்,
         உடைபுலி அதள்ஆர்ப்பர்,
விடைஅது ஏறும்எம் மான்அமர்ந்து இனிதுஉறை
         விற்குடி வீரட்டம்
அடியர் ஆகிநின்று ஏத்தவல் லார்தமை
         அருவினை அடையாவே.

         பொழிப்புரை :தெளிவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியவரும், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மண முடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புவித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா.


பாடல் எண் : 2
களங்கொள் கொன்றையும் கதிர்விரி மதியமும்
         கடிகமழ் சடைக்குஏற்றி,
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்,
         பொருகரி உரிபோர்த்து
விளங்கு மேனியர், எம்பெரு மான்உறை
         விற்குடி வீரட்டம்,
வளங்கொள் மாமல ரால்நினைந்து ஏத்துவார்
         வருத்தம் அதுஅறியாரே.

         பொழிப்புரை :களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமை யரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார்.


பாடல் எண் : 3
கரிய கண்டத்தர், வெளியவெண் பொடிஅணி
         மார்பினர், வலங்கையில்
எரியர், புன்சடை இடம்பெறக் காட்டுஅகத்து 
         ஆடிய வேடத்தர்,
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
         விற்குடி வீரட்டம்,
பிரிவு இலாதவர் பெருந்தவத் தோர்எனப்
         பேணுவர் உலகத்தே.

         பொழிப்புரை :கரிய கண்டத்தினரும், வெண்மையான திரு நீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத் தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கை சூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர்.


பாடல் எண் : 4
பூதம் சேர்ந்துஇசை பாடலர், ஆடலர்,
         பொலிதர நலம்ஆர்ந்த
பாதஞ் சேர்இணைச் சிலம்பினர், கலம்பெறு
         கடல்எழு விடம்உண்டார்,
வேதம் ஓதிய நாவுடை யான்இடம்
         விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க்கு அல்லதுஉண் டோபிணி
         தீவினை கெடும்ஆறே.

         பொழிப்புரை :பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ?

 
பாடல் எண் : 5
கடிய ஏற்றினர், கனல்அன மேனியர்,
         அனல்எழ ஊர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்,தனது
         அடியவர் மேல்உள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பான்,இறை
         விற்குடி வீரட்டம்,
படிஅது ஆகவே பரவுமின், பரவினால்
         பற்றுஅறும் அருநோயே.

         பொழிப்புரை :விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின். பரவினால் அரிய நோய்கள் பற்றறும்.


பாடல் எண் : 6
பெண்ஒர் கூறினர், பெருமையர், சிறுமறிக்
         கையினர், மெய்ஆர்ந்த
அண்ணல், அன்புசெய் வார்அவர்க்கு எளியவர்,
         அரியவர் அல்லார்க்கு,
விண்ணில் ஆர்பொழில் மல்கிய மலர்விரி 
         விற்குடி வீரட்டம்,
எண் நிலாவிய சிந்தையி னார்தமக்கு 
         இடர்கள்வந்து அடையாவே.

         பொழிப்புரை :மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.


பாடல் எண் : 7
* * * * *
பாடல் எண் : 8
இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை
         இகல்அழி தரஊன்று
திடங்கொள் மால்வரை யான்,உரை ஆர்தரு
         பொருளினன், இருள்ஆர்ந்த
விடங்கொள் மாமிடறு உடையவன், உறைபதி
         விற்குடி வீரட்டம்,
தொடங்கு மாறுஇசை பாடிநின் றார்தமைத் 
         துன்பநோய் அடையாவே.

         பொழிப்புரை :இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா.


பாடல் எண் : 9
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும்
         திருவடி அயறியாமை
எங்கும் ஆர்எரி ஆகிய இறைவனை, 
         அறைபுனல் முடிஆர்ந்த
வெங்கண் மால்வரைக் கரிஉரித்து உகந்தவன்
         விற்குடி வீரட்டம்,
தங்கை யால்தொழுது ஏத்தவல் லார்அவர்
         தவமல்கு குணத்தாரே.

         பொழிப்புரை :திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப்போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர்.


பாடல் எண் : 10
பிண்டம் உண்டுஉழல் வார்களும், பிரிதுவர்
         ஆடையர் அவர்வார்த்தை
பண்டும் இன்றும்ஓர் பொருள்எனக் கருதன்மின்,
         பரிவுஉறு வீர்கேண்மின்,
விண்ட மாமலர்ச் சடையவன் இடம்எனில் 
         விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டுஅடி காதல்செய் வார்அவர்
         கருத்துறும் குணத்தாரே.

         பொழிப்புரை :அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர்.


பாடல் எண் : 11
விலங்க லேசிலை இடம்என உடையவன்,
         விற்குடி வீரட்டத்து
இலங்கு சோதியை, எம்பெரு மான்தனை,
         எழில்திகழ் கழல்பேணி,
நலங்கொள் வார்பொழில் காழியுள் ஞானசம்
         பந்தன்நல் தமிழ்மாலை
வலங்கொ டேஇசை மொழியுமின், மொழிந்தக்கால்,
         மற்றுஅது வரமாமே.

         பொழிப்புரை :மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள். மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும்.

                                             திருச்சிற்றம்பலம்






No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...