திருவண்ணாமலை - 0549. காரும் மருவும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காரும் மருவும் (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னையே விரும்பும் இந்தப் பெண்ணை அணைந்து கூடி,
உனது கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்.

தானதன தந்ததன தானதன தந்ததன
     தானதன தந்ததன ...... தந்த தனதான


காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
     காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே

காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
     காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே

ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
     ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே

ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
     லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே

ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
     ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா

ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
     யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே

மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
     வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா

மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
     வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.


பதம் பிரித்தல்


காரும் மருவும் பெருகு சோலை மருவும், கொடிய
     காகளம் அடங்கவும் ...... முழங்கும் அதனாலே,

கால் அடர, வம்பு அமளி மேல் அடர வந்து, பொரு
     காமன் விடு, விஞ்சு கணை ...... அஞ்சு மலராலே,

ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என,
     ஓர் இரவு வந்து எனது ...... சிந்தை அழியாதே,

ஊடி, இரு கொங்கை மிசை கூடி, வரி வண்டு இனம்
     உலாவிய கடம்ப மலர் ...... தந்து அருளுவாயே.

ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர்,
     ஆதி பரவும்படி  ..... நினைந்த குருநாதா!

ஆறுமுகமும், குரவும், ஏறு மயிலும், குறவி-
     யாளும், உரமும், திருவும், ...... அன்பும் உடையோனே!

மேரு மலையும், பெரிய சூரும், லையும், கரிய
     வேலை அலையும், பகையும், ...... அஞ்ச விடும்வேலா!

மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கு திரு
     வீதியில் எழுந்தருளி ...... நின்ற பெருமாளே.

பதவுரை 

      ஆரும் --- ஆத்தி மலரையும்,

     அரவும் --- பாம்பையும்,

     பிறையும் --- பிறைச் சந்திரனையும்,

     நீரும் அணியும் --- கங்கா நதியையும் தரித்துள்ள

     சடையர் --- சடைமுடியை உடையவர் ஆகிய,

     ஆதி --- ஆதி முதற்கடவுளாகிய சிவபெருமான்

     பரவும் படி நினைந்த குருநாதா ---- புகழ்ந்து தியானித்த குருநாதரே!

      ஆறுமுகமும் --- ஆறு திருமுகங்களும்,

     குரவும் --- குரா மலரும்,

     ஏறு மயிலும் --- வாகனமாகிய மயிலும்,

     குறவியாளும் --- வள்ளி நாயகியும்,

     உரமும் --- அணைத்து ஆட்சி கொள்ளும் திருமார்பும்,

     திருவும் --- செல்வமும்

     அன்பும் உடையோனே --- அன்பும் உடையவரே!

     மேருமலையும் --- மேரு மலையும்,

     பெரிய சூரும் --- பெரிய சூரபன்மனும்,

     மலையும் --- ஏழு கிரிகளும்,

     கரிய வேலை அலையும் --- கரு நிறமும் அலைகளையும் உடைய கடலும்,

     பகையும் --- பகைவர்களும்

     அஞ்ச விடும் வேலா --- அஞ்சுமாறு செலுத்திய வேலாயுதரே!

      மேதினி இறைஞ்சும் --- உலகம் வணங்கும்

     அருணாபுரி விளங்கு --- திருவண்ணாமலையில் விளங்குகின்ற

     திருவீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே --- திருவீதியில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      காரும் --- மேகமும்,

     மருவும் ---  வாசனையும்,

     பெருகும் --- மிகுந்து எழுகின்ற

     கொடிய காகளம் அடங்கவும் --- பொல்லாதனவாம் குயில் என்ற எக்காளம் எல்லாம் ஒன்று சேர்ந்து

     முழங்கும் அதனாலே ---- ஒலிக்கின்ற அந்தக் காரணத்தினாலும்,

     கால் அடர --- தென்றல் காற்று நெருங்கி

     வம்பு அமளி மேல் அடர --- நறுமணம் வீசும் படுக்கையின் மீது செறிந்து வர,

     வந்து பொரு காமன் --- போருக்கு வந்த மன்மதன்

     விடு விஞ்சு கணை --- செலுத்த மேலே வந்த பாணங்களாம்

     அஞ்சு மலராலே ---- ஐந்து மலர்களாலும்,

      ஊரும் --- ஊரவரும்,

     உலகும் --- உலகத்தவரும்,

     பழைய பேர் உகம் விளைந்தது என --- பழமையான பெரிய உகாந்த காலம் வந்தது போல ஆரவாரம் செய்வதனாலும்,

(தேவரீர் திருவுளம் இரங்கி)

     ஓர் இரவு வந்து ---  ஒரு இராப் பொழுதேனும் என்முன் எழுந்தருளி,

     எனது சிந்தை அழியாதே ---- என் மனம் நைந்து அழியாதபடி,

      ஊடி --- பிணங்கியும்,

     இரு கொங்கை மிசை கூடி --- எனது இரு கொங்கைகளின் மீது கூடி இணங்கியும்,

     வரி வண்டினம் உலாவிய --- இசைப் பாட்டுக்களைப் பாடுகின்ற வண்டின் கூட்டங்கள் உலாவுகின்ற

     கடம்ப மலர் தந்து அருளுவாயே ---- கடப்ப மலர் மாலையைத் தந்து அருளுவீராக.


பொழிப்புரை


         ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கா நதியையும் தரித்துள்ள சடைமுடியை உடையவர் ஆகிய, ஆதி முதற்கடவுளாகிய சிவபெருமான் புகழ்ந்து தியானித்த குருநாதரே!

         ஆறு முகங்களும், குரா மலரும், வாகனமாகிய மயிலும், வள்ளி நாயகியும், அணைத்து ஆட்சி கொள்ளும் திருமார்பும், செல்வமும் அன்பும் உடையவரே!

         மேரு மலையும், பெரிய சூரபன்மனும், ஏழு கிரிகளும், கரு நிறமும் அலைகளையும் உடைய கடலும், பகைவர்களும் அஞ்சுமாறு செலுத்திய வேலாயுதரே!

         உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் விளங்குகின்ற திருவீதியில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         மேகமும் வாசனையும் மிகுந்து எழுகின்ற சோலையில் வாழுகின்ற பொல்லாதனவாம் குயில் என்ற எக்காளம் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒலிக்கின்ற அந்தக் காரணத்தினாலும், தென்றல் காற்று நெருங்கி நறுமணம் வீசும் படுக்கையின் மீது செறிந்து வர, போருக்கு வந்த மன்மதன் செலுத்த, மேலே வந்த பாணங்களாம் ஐந்து மலர்களாலும், ஊரவரும் உலகத்தவரும் பழமையான பெரிய உகாந்த காலம் வந்தது போல ஆரவாரம் செய்வதனாலும், (தேவரீர் திருவுளம் இரங்கி) ஒரு இராப் பொழுதேனும் என்முன் எழுந்தருளி, என் மனம் நைந்து அழியாதபடி, பிணங்கியும், எனது இரு கொங்கைகளின் மீது கூடி இணங்கியும், இசைப் பாட்டுக்களைப் பாடுகின்ற வண்டின் கூட்டங்கள் உலாவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருளுவீராக.


விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.  முருகன் மீது காதல் கொண்ட தலைவி அப்பெருமானிடம் கடப்ப மலர்மாலையை யாசிக்கின்றாள்.

காரு மருவும் பெருகு சோலை ---

கார் - கருமை. மரு - வாசனை.  மரங்கலள் நெருங்கி விண்ணளவு ஓங்கி வளர்ந்திருப்பதனால் சோலை இருண்டுள்ளது.  நல்ல மலர்களினால் நறுமணம் நிறைந்து விளங்குகின்றது.

மருவும் கொடிய காகளம் ---

காகளம் - எக்காளம்.  எக்காளம் என்பது ஒருவகை வாத்தியம்.  குயில் மன்மதனுடைய எக்காளம்.

மன்மதனுக்கு, வில் - கரும்பு, கணை - மலர், நாண் - வண்டு, குதிரை - கிளி, தேர் - தென்றல், முரசம் - கடல், யானை - உரவு. எக்காளம் (ஊதுகொம்பு) - குயில், கொடி - மீன், குடை - திங்கள்.

ஆலைக் கரும்புசிலை, ஐங்கணைபூ, நாண்சுரும்பு,
மாலைக் கிளிபுரவி, மாருதம்தேர் – வேலை
கடிமுரசம், கங்குல் களிறு, குயில்காளம்,
கொடிமகரம், திங்கள் குடை.          ---  இரத்தினச் சுருக்கம்.

காகளம் அடங்கவும் முழங்கு மதனாலே ---

மன்மதனுடைய எக்காளமாகிய குயில்கள் யாவும் சோலையில் கூவுவதனால், முருகா, என் சிந்தை வெந்து நொந்து அழிகின்றது.

கால் அடர வம்பு அமளி மேல் அடர ---

கால் - காற்று.  வம்பு - வாசனை.  அமளி - படுக்கை.  வாசனை மிகுந்த படுக்கை மீதி தென்றல் காற்று செறிந்து வருவதனாலும் என் சிந்தை அழிகின்றது.

அடர்தல் - நெருங்குதல்.

வந்து பொரு காமன் விடு விஞ்சுகணை அஞ்சு மலராலே ---

என்னிடம் வந்து போர் புரிகின்ற மன்மதன் விடுகின்ற அதிகமான மலர்க்கணைகள் ஐந்தினாலும் மனம் அழிகின்றேன்.

ஊரும் உலகும் பழைய பேருகம் விளைந்தது என ---

தலைவி தலைவன் மீதி காதல் கொண்டு, பித்துப் பிடித்தவள் போல், உண்ணாமலும், உறங்காமலும் இருப்பாள்.  இந்த நிலையைக் கண்ட ஊராரும் உலகத்தாரும், இரங்காமல் ஆங்காங்கு கூடி பலவாறு வசை பேசுவார்கள்.  இது அலர் எனப்படும்.  இவ்வாறு இவர்கள் பேசுவது பெரிய உகாந்த காலம் போல் ஒலி எழுகின்றது.  ஆதலால், முருகா என் சிந்தை அழிகின்றேன்.

ஓர் இரவு வந்து ---

முருகா, இவ்வாறு உன்னை விரும்பிய நான் சிந்தை நொந்து அழிகின்றேன். என் மீது நீர் சிறிது திருவுள்ளம் இரங்கி, ஒரு இரவுப் பொழுதேனும் வந்து அருள் புரிக.

ஊடி ---

ஊடுவது - பிணங்குவது.  தலைவன் தலைவியர் முதலில் ஊடி, பிறகுக் கூடுவர். ஊடுவது கூடுவதற்கு மிகுந்த இன்பம் பயக்கும்.

திருவள்ளுவர் ஊடல் உவகை என்ற அதிகாரத்தில் ஊடலை அதிமதுரமாக உரைக்கின்றார்.

உணலினும் உண்டது அறல் இனிது, காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்.

வரி வண்டினம் உலாவிய கடம்ப மலர் ---

வரி - இசைப்பாட்டு.

வண்டுகள் தேனை உண்டு இசைப் பாடல்களைப் பாடும் இயல்பு உடையன.

தெனத்தெ னந்தன எனவரி அளிநிறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில்திகழ்
திருப்பரங்கிரி தனில் உறை சரவண   பெருமாளே.        --- (உனைத்தினம்) திருப்புகழ்.

கடம்ப மலர் தந்தருளுவாயே ---

முருகவேளுக்கு மிகவும் உகந்த மலர் கடப்ப மலர்.

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடம்காண் இரங்காய் இனி.....

தலைவிக்குத் தலைவன் தன் மீர்பின் மலர்மாலையைத் தந்து அருளுவான்.  தலைவியாகிய அருணகிரியார், முருகனுடைய மலர்மாலையைத் தந்து அருளுமாறு வேண்டுகின்றார்.

குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ …    ---  (விறல்மாரன்) திருப்புகழ்.

ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ---

ஆர் - ஆத்தி.  சிவபெருமானுக்கு ஆத்தி மலர் உகந்தது.

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே        --- ஔவையார்.

பெரியவர்கள் பகைவரை ஒற்றுமைப்படுத்தி வைப்பார்கள்.  சந்திரனுக்கும் பாம்புக்கும் தீராப்பகை.  சிவபெருமான் பகைமையுடைய சந்திரனையும் பாம்பையும் ஒற்றுமைப்படுத்தி சடையிலே சூடியுள்ளார்.

சிவபெருமான் கங்காநதியை அணிந்திருப்பது, அவருடைய அளவில்லாத ஆற்றலையும், தூய்மையையும் உணர்த்துவது ஆகும்.

குரவு ---

குராமலர் முருகனுக்கு உகந்த மலர்.

விழைவு குராப் புனையும் குமார     ---  (விரகற) திருப்புகழ்.

அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டும்...   ---  கந்தர் அலங்காரம்.

குறவி ---

குறவன் என்ற சொல்லின் பெண்பால் குறவி. குறவர் குலத்தில் வளர்ந்தமையால் வள்ளிநாயகி குறவி எனப்பட்டாள்.

சூரும் மலையும் ---

சூர் - சூரபன்மன்.  சூரபன்மன் முருகருடன் போர் புரிந்தபோது, மாயையில் வல்ல அசுரர் அவனைச் சுற்றி எழு மலைகளாக நின்றார்கள்.  முருகப் பெருமான் சூரனுடன் அந்த அசுரமலைகளையும் வேலினால் அழித்தருளினார்.

மேதினி ---

இந்திரன் வலாசுரனைக் கொன்றபோது, அவனுடைய உடம்பில் உள்ள மேதை (கொழுப்பு) எங்கும் நிறைந்தபடியால், இப் பூதலம் மேதினி எனப் பேர் பெற்றது.

கருத்துரை 

அருணை மேவும் ஐயனே, உன்னை விரும்பும் எனக்கு உன் கடப்பமலர் மாலையைத் தந்தருள்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...