திருவண்ணாமலை - 0536. கடல்பரவு தரங்க





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கடல்பரவு தரங்க (திருவருணை)

திருவருணை முருகா!
திருவருணையில் உன்னை நினைந்து வாடும்
இந்தப் பெண் வருந்தா வகை அருள்.


தனதனன தனந்த தானன ...... தந்ததான
     தனதனன தனந்த தானன ...... தந்ததான


கடல்பரவு தரங்க மீதெழு ......             திங்களாலே
     கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே

வடவனலை முனிந்து வீசிய ......          தென்றலாலே
     வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ

இடமுமையை மணந்த நாதரி ......         றைஞ்சும்வீரா
     எழுகிரிகள் பிளந்து வீழஎ ......       றிந்தவேலா

அடலசுரர் கலங்கி யோடமு ......      னிந்தகோவே
     அரிபிரம புரந்த ராதியர் ......          தம்பிரானே.


பதம் பிரித்தல்


கடல்பரவு தரங்கம் மீது எழு ......          திங்களாலே,
     கருதி மிக மடந்தைமார் சொல் ......  வதந்தியாலே,

வடஅனலை முனிந்து வீசிய ......          தென்றலாலே,
     வயல் அருணையில் வஞ்சி போத ......நலங்கல்ஆமோ?

இடம் உமையை மணந்த நாதர் ......  இறைஞ்சும் வீரா!
     எழுகிரிகள் பிளந்து வீழ ......     எறிந்த வேலா!

அடல் அசுரர் கலங்கி ஓட  ......           முனிந்த கோவே!
     அரிபிரம புரந்தர ஆதியர் ......         தம்பிரானே.


பதவுரை


         இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா --- இடப் பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துக் கொண்ட சிவபெருமான் வணங்குகின்ற வீரரே!
    
         எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா --- எழு மலைகளும் பிளந்து வீழும்படி எறிந்த வேலாயுதரே!

         அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே --- வலிமை மிக்க அசுரர்கள் கலங்கி ஓடுமாறு சீறிய தலைவரே!
    
         அரி பிரம புரந்தர ஆதியர் தம்பிரானே --- திருமால் பிரமன் இந்திரன் முதலிய இமையவர்கட்கு தனிப்பெரும் தலைவரே!

         கடல் பரவு தரங்கம் மீது எழு திங்களாலே --- கடலில் பரந்து வரும் அலைகளின் மீது தோன்றி வருகின்ற சந்திரனாலும்,
    
         கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே --- மிகவும் நினைந்து பெண்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் ஊர்ப் பேச்சாலும்,

         வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே --- வடவைத் தீயை கோபித்து வீசுகின்ற தென்றல் காற்றினாலும்,
    
         வயல் அருணையில் வஞ்சி போத நலங்கல் ஆமோ --- வயல்கள் சூழ்ந்த திருவண்ணாமலையில் கொடி போன்ற இந்தப் பெண்ணின் அறிவு கலங்கி வருந்தல் ஆகுமா?

பொழிப்புரை


         இடப் பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துக் கொண்ட சிவபெருமான் வணங்குகின்ற வீரரே!
    
         எழு மலைகளும் பிளந்து வீழும்படி எறிந்த வேலாயுதரே!

         வலிமை மிக்க அசுரர்கள் கலங்கி ஓடுமாறு சீறிய தலைவரே!
    
         திருமால் பிரமன் இந்திரன் முதலிய இமையவர்கட்கு தனிப்பெரும் தலைவரே!

         கடலில் பரந்து வரும் அலைகளின் மீது தோன்றி வருகின்ற சந்திரனாலும், மிகவும் நினைந்து பெண்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் ஊர்ப் பேச்சாலும், வடவைத் தீயை கோபித்து வீசுகின்ற தென்றல் காற்றினாலும், வயல்கள் சூழ்ந்த திருவண்ணாமலையில் கொடி போன்ற இந்தப் பெண்ணின் அறிவு கலங்கி வருந்தலாமோ?


விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

கடல் பரவு தரங்கம் மீது எழு திங்களாலே ---

குளிர்ந்த கடலின் அலைமீது தோன்றி தண்ணமுதம் போன்ற கிரணங்களைப் பொழிகிகன்ற சந்திரனுடைய நிலவு தலைவனை விரும்பித் தனித்துள்ள நாயகிக்கு வெப்பத்தைச் செய்து வெதுப்பும்.

வாரிமீதே எழு திங்களாலே               ---  திருப்புகழ்.

கருதிமிக மடந்தைமார் சொல் வதந்தியாலே ---

ஊரில் உள்ள பெண்கள் தமக்குள் காதல் நோயால் கலங்குகின்ற கன்னியைப் பற்றிப் பலப்பல விதமாக உரையாடுவார்கள்.

தெருவினில் நடவா மடவார்
திரண்டொறுக்கும் வசையாலே           ---  திருப்புகழ்.

வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே ---

மிகக் கொடிய வடவைத் தீயையும் கோபித்து, அதனினும் கொடுமையாகத் தென்றல் வீசுமாம். எல்லோருக்கும் இனிதாக இருக்கும் தென்றல், பிரிவுத் துயரால் பெரிதும் வருந்துவோர்க்குப் பெருந்துயரத்தை விளைவிக்கும்.

வயலருணையில் வஞ்சி போத நலங்கலாமோ ---

திருவண்ணாமலையில் வாழும் இப் பெண்ணின் அறிவு உம்மை அடையாமல் கலங்குவது முறையோ

அருணகிரியார் தன்னை நாயகியாக வைத்து, முருகனை நாயகனாகக் கொண்டு இவ்வண்ணம் இயம்புகின்றார்.

தீது உற்றே எழு       திங்களாலே
தீயைத் தூவிய        தென்றலாலே
போது உற்று ஆடும்    அநங்கனாலே
போதப் பேதை         நலங்கல்ஆமோ.       ---  திருப்புகழ்.

இடம் உமையை மணந்த நாதர் ---

பிருங்கி முனிவர் உமையம்மையை விடுத்து சிவத்தை மட்டும் வலம் வந்த காரணத்தால், எம்பிராட்டி திருவண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார்.

இமயத்து மயிற்கு ஒருபக்கம் அளித்த
அவருக்கு இசையைப் புகல்வோனே. --- (அமைவுற்று) திருப்புகழ்.

அங்கம் யாவும்நம் பொருட்டுவிட்டு இமயவெற்பு அடைந்தாய்,
இங்கு நாம் உனக்கு இடப்புறம் அளிப்பதே இயற்கை,
மங்கையே, நமது இடப்புறத்து உறை என, மகிழ்வுற்று
அங்கையால் அணைத்து அருளினன், உருகி ஒன்றானார்.

அடுத்த செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம்,
தொடுத்த கொன்றை ஓர் புறம், ஒருபுறம் நறுந்தொடையல்,
வடித்த சூலம் ஓர் புறம், ஒரு புறம் மலர்க்குவளை,
திடத்தில் ஆர்கழல் ஒருபுறம், ஒருபுறம் சிலம்பு.

பச்சை வன்னம் மற்றொரு புறம், ஒருபுறம் பவளம்,
கச்சுஉலைமுலை ஒருபுறம், ஒருபுறம் கவின்மார்,
அச்சம் நீக்கிய வரதம் ஒன்று, அபயம் ஒன்று அங்கை,
இச்சையாம் அவர் உறுதல் கண்டு இறைஞ்சினார் இமையோர். --- அருணாசல புராணம்.


அரிபிரம் புரந்தராதியர் தம்பிரானே ---

முருகப் பெருமான் மூவர்க்கும் தேவர்க்கும் முழுமுதல் கடவுள்.

முருகனுக்கு மேல் ஒரு பொருள் இல்லை.  சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.  சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

எந்தக் கடவுளும் என்கோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே.          ---  பாம்பன் சுவாமிகள்.

படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே. 
                                                                 ---  (கனைத்ததிர்க்கும்) திருப்புகழ்.

அரி அர பிரம புரந்தர ஆதியர் தம்பிரானே    ---  (கரியுரி) திருப்புகழ்.

வகைவகை புகழ்ந்து வாசவன்
அரி பிரமர் சந்த்ர சூரியர்
வழிபடுதல் கண்டு வாழ்வருள் பெருமாளே.         ---  (கடினதட) திருப்புகழ்.


கருத்துரை


மூவர் போற்றும் முருகவேளே, அருணையில் வாழும் பெண்ணாகிய என்னை மருவி அருள்வாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...