திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்




                                        திருப் புகலூர் வர்த்தமானீச்சரம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         பாடல் பெற்ற திருத்தலம் திருப்புகலூர் அக்கினீசுவரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்திருத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

         மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ., தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள திருப்புகலூர் அக்னீசுவரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற் மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.


இறைவர்              : வர்த்தமானேச்சுரர்

இறைவியார்           : கருந்தார் குழலி, மனோன்மணி

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பட்டம் பால்நிற மதியம்

         மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு வலப்புறம் உள்ளது. இறைவன் வர்த்தமானேசுவரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதியுள் நுழைந்ததும் இடதுபுறம் முருகநாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேசுவரரை திருஞானசம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார். அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேசுவரர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் தரிசிக்க இயலாதவாறு இரு சந்நிதிகளும் இருட்டடித்து காணப்படுகின்றன. ஆலய நிர்வாகிகள் தகுந்த ஏற்பாடுகள் செய்து வெளிச்சம் வர விளக்குகள் பொருத்தி வைத்தால் நன்றாக இருக்கும்.

         திருப்புகலூர் அக்னீசுவரர் திருத்தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடி இருந்தாலும், அதே ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்திற்கு திருஞானசம்பந்தர் திருப்பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது.

         முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்குத் திருத்தொண்டு புரிந்து வந்ததைத்  திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தில் போற்றியுள்ளார்.

முருக நாயனார் வரலாறு

         முருக நாயனார் வேதியர் குலத்திலே தோன்றியவர். அவர் சிவபத்தியிலும் அடியார் பத்தியிலும் சிறந்தவர்.  நாள்தோறும் வைகறையில் எழுவார். காலைக் கடன்களை முடித்துக் கொள்வார்.  நீராடுவார். திருநந்தன வனம் புகுவார். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நால்வகைப் பூக்களைக் கொய்வார். அப் பூக்களால் இண்டை, தாமம், கண்ணி, பிணையல் முதலிய மாலைகளைக் கட்டுவார். அம் மாலைகளைச் சிவபிரானுக்குச் சூட்டுவார். நெஞ்சம் குழைந்து குழைந்து உருகுவார்.  திருவைந்தெழுத்து ஓதுவார்.  இந் முறையில் திருத்தொண்டு செய்து வந்த முருக நாயனார், திருஞானசம்பந்தப் பெருமானுக்கு நண்பர் ஆகி, அச் சுவாமிகளின் திருமணச் சிறப்பில் கலந்து, சிவபிரான் திருவடி நீழலை அடைந்தார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "இன்ப மறை அர்த்தமா நீக்க அரிய ஆதாரமா நின்ற வர்த்தமானேச்சரத்து வாய்ந்தவனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 490
புக்கு, எதிர் தாழ்ந்து, விழுந்து, எழுந்து,
         பூம்புக லூர்மன்னு புண்ணியரை,
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க,
         நிறைமலர்க் கண்ணீர் அருவி செய்ய,
மிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி,
         மேவிய ஏழிசை பாடிப் போந்து,
திக்கு நிறைசீர் முருகர் முன்பு
         செல்ல, அவர்மடம் சென்று புக்கார்.

         பொழிப்புரை : கோயிலுக்குள் புகுந்து இறைவரின் திருமுன்பு வணங்கி, நிலத்தில் விழுந்து எழுந்து, பூம்புகலூரில் நிலைபெற எழுந்தருளியிருக்கும் புண்ணியரான சிவபெருமானை நெகிழ்ந்து உருகும் உள்ளத்தில் அன்பானது பெருக, மலர்க் கண்களில் நிறைந்த நீர், அருவிபோல் வடிய, சொற்சுவையானும், பொருள் திறத்தானும் மிக்க தமிழ்த் திருப்பதிகத்தைப் பொருந்திய ஏழிசையுடன் பாடி, வெளியே வந்து, எண் திசையிலும் நிறையும் சிறப்பையுடைய முருக நாயனார் முன்னே அழைத்துச் செல்ல அவரது திருமடத்தில் சம்பந்தர் சென்று சேர்ந்தார்.

         இப்பதியில் அருளிய பதிகம் `வெங்கள் விம்மு' (தி.2 ப.115) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 491
ஆங்குஅவர் போற்றும் சிறப்பின் மேவி,
         அப்பதி தன்னில்அமரும் நாளில்,
வாங்கு மலைச்சிலையார் மகிழ்ந்த
         வர்த்தமா னீச்சரம் தான் வணங்கி,
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
         உயர்திருத் தொண்டு சிறப்பித்து, ஓங்கும்
பாங்குஉடை வண்தமிழ் பாடி, நாளும்
         பரமர்தம் பாதம் பணிந்து இருந்தார்.

         பொழிப்புரை : அத்திருமடத்தில் பிள்ளையார், அவர் வழிபட்டு விருந்தேற்கும் சிறப்பைப் பெற்றுத் தங்கியிருக்கும் நாள்களில், வளைத்த மலையான வில்லையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளுகின்ற வர்த்தமானீச்சரத்தை வணங்கி, பெருகிய அன்பினால் முருகநாயனார் அங்குச் செய்து வருகின்ற உயர்ந்த தொண்டைச் சிறப்பித்துப் பாராட்டி, ஓங்கிய பண்பையுடைய வளமான தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமான் திருவடிகளை வணங்கி மகிழ்ந்திருந்தார்.

         வர்த்தமானீச்சரம் - திருப்புகலூர்த் திருக்கோயிலில் உள்ள தனிக்கோயில். இவ்விடத்து அருளிய பதிகம் `பட்டம் பால்நிற' (தி.2 ப.92) எனத் தொடங்கும் பியந்தைக்காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். `குறிப்பறி முருகன் செய்கோலம்' (3) `முருகன் முப்போதும் செய்முடிமேல் வாசமாமலருடையார்' (5) என இப்பதிகத்து முருக நாயனார் இருமுறை பாராட்டப் பெறுகிறார்.



2.092 திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்  பண் - பியந்தைக்காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பட்டம் பால்நிற மதியம்
         படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்இருள் ஆடும்
         நாதன், நவின்றுஉறை கோயில்
புள்தன் பேடையொடு ஆடும்
         பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்து அடி பரவும்
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும் அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப் போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும் விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார் . அவர் கோயில் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும் .


பாடல் எண் : 2
முயல்வ ளாவிய திங்கள்
         வாண்முகத்து அரிவையில் தெரிவை
இயல்வ ளாவியது உடைய
         இன்னமுது எந்தைஎம் பெருமான்,
கயல்வ ளாவிய கழனிக்
         கருநிறக் குவளைகள் மலரும்
வயல்வ ளாவிய புகலூர்,
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக் குவளைகள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர் . எமக்குத் தந்தையாகவும் தலைவராகவும் விளங்குபவர் .


பாடல் எண் : 3
தொண்டர் தண்கயம் மூழ்கித்
         துணையலும் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டு அடி பரவிக்
         குறிப்புஅறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக்
         களிபரந்து ஒளிமல்கு கள்ஆர்
வண்டு பண்செயும் புகலூர்
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி மலர்மாலை, சாந்து, மணப்புகை கொண்டு திருவடிபரவி வழிபடக் கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும் அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும். வர்த்த மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார்


பாடல் எண் : 4
பண்ண வண்ணத்தர் ஆகி,
         பாடலொடு ஆடல் அறாத
விண்ண வண்ணத்தர் ஆய
         விரிபுக லூரர், ஒர் பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும்,
         பெற்றியொடு ஆண்இணை பிணைந்த
வண்ண வண்ணத்துஎம் பெருமான்,
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர், பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமான வரும், ஆகாய வடிவினராய் விளங்குபவரும், பெண்ணொர் பாகமான வடிவினரும், ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினருமானவர் .


பாடல் எண் : 5
ஈசன், ஏறுஅமர் கடவுள்,
         இன்அமுது, எந்தை,எம் பெருமான்,
பூசு மாசில்வெண் நீற்றர்,
         பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டுஅறை கொன்றை
         முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமலர் உடையார்,
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர் . விடையேறு உடையவர் . இனிய அமுதம் போன்றவர். எந்தை, எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர் .


பாடல் எண் : 6
தளிர் இளம்கொடி வளரத்
         தண்கயம் இரியவண்டு ஏறிக்
கிளர் இளம்முழை நுழையக்
         கிழிதரு பொழில்புக லூரில்
உளர் இளஞ்சுனை மலரும்
         ஒளிதரு சடைமுடி அதன்மேல்
வளர்இ ளம்பிறை யஉடையார்,
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும் இளங் கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து முழைகள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர் சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து  இறைவர்.


பாடல் எண் : 7
தென்சொல் விஞ்சுஅமர் வடசொல்
         திசைமொழி எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத்
         தொழுதுஎழு தொல்புக லூரில்,
அஞ்ச னம்பிதிர்ந்து அனைய
         அலைகடல் கடையஅன்று எழுந்த
வஞ்ச நஞ்சுஅணி கண்டர்,
         வர்த்தமா னீச்சரத் தாரே

         பொழிப்புரை :அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள் நீங்கப்பாடித் தொழும் புகலூரில் , அன்று அலைகடலைக் கடந்த போது, மை பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத் தினாராய் விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர் .


பாடல் எண் : 8
சாம வேதமொர் கீதம்
         ஓதிஅத் தசமுகன் பரவும்
நாம தேயமது உடையார்,
         நன்குணர்ந்து அடிகள்என்று ஏத்தக்
காம தேவனை வேவக்
         கனல்எரி கொளுவிய கண்ணார்,
வாம தேவர்,தண் புகலூர்
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :தண்மையான புகலூரில் விளங்கும் வர்த்தமானீச் சரத்து இறைவர் , இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும் உடையவர் . நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர் . காமதேவனை எரித்த கண்ணையுடையவர் .



பாடல் எண் : 9
சீர்அணங்கு உற நின்ற
         செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத்து அழிய
         நகைசெய்த சடைமுடி நம்பர்,
ஆர ணங்குஉறும் உமையை
         அஞ்சுவித்து அருளுதல் பொருட்டால்
வார ணத்துஉரி போர்த்தார்,
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :வர்த்தமானீச்சரத்து இறைவர் , சிறந்த தெய்வத் தன்மை உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர்களாய்த் தம்முட் செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே தோன்றி நகை செய்தவர் . உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள் எதிரே யானையை உரித்தவர் .


பாடல் எண் : 10
கையில் உண்டுஉழல் வாரும்,
         கமழ்துவர் ஆடையி னால்தம்
மெய்யைப் போர்த்துஉழல் வாரும்,
         உரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு
         செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்துஎம் பெருமான்
         வர்த்தமா னீச்சரத் தாரே.

         பொழிப்புரை :வாளைமீன்களோடு கயல்கள் குதித்து விளை யாடும் வயல்களைக் கொண்ட புகலூரில் நீல கண்டராய் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மையானவை . கையில் உணவு ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை மெய்யெனக் கருதேல் .


பாடல் எண் : 11
பொங்கு தண்புனல் சூழ்ந்து
         போதுஅணி பொழில்புக லூரில்
மங்குல் மாமதி தவழும்
         வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான
         சம்பந்தன் தண்தமிழ் பத்தும்
எங்கும் ஏத்தவல் லார்கள்
         எய்துவர் இமையவர் உலகே.

         பொழிப்புரை :மிகுதியான தண்ணிய நீராலும் , மலர்பூத்த பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும் பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர் .

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...