அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இரத சுரதமுலை
(திருவருணை)
திருவருணை முருகா!
பொதுமாதர் உறவு அற அருள்
தனன
தனதனன தனதான
தத்த தனனா தனந்த
தனன
தனதனன தனதான
தத்த தனனா தனந்த
தனன
தனதனன தனதான
தத்த தனனா தனந்த ...... தனதனத் தனதான
இரத
சுரதமுலை களுமார்பு
குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை
தைக்க மணிபோல் விளங்க
இசலி யிசலியுப ரிதலீலை
யுற்று
இடைநூல் நுடங்க ...... வுளமகிழ்ச் சியினோடே
இருவ
ருடலுமொரு வுருவாய்ந
யக்க முகமே லழுந்த
அளக மவிழவளை களுமேக
லிக்க நயனா ரவிந்த
லகரி பெருகஅத ரமுமேய
ருத்தி
முறையே யருந்த ...... உரையெழப் பரிவாலே
புருவ
நிமிரஇரு கணவாள்நி
மைக்க வுபசா ரமிஞ்ச
அவச கவசமள வியலேத
ரிக்க அதிலே யநந்த
புதுமை விளையஅது பரமாப
ரிக்க இணைதோ ளுமொன்றி...... அதிசுகக்
கலையாலே
புளக
முதிரவிர கமென்வாரி
தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயாத
ரிக்க வுயிர்போ லுகந்து
பொருள
தளவுமரு வுறுமாய
வித்தை விலைமா தர்சிங்கி..... விடஅருட்
புரிவாயே
பரவு
மகரமுக ரமுமேவ
லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக
ரத்ந சலரா சிகொண்ட
படியை முழுதுமொரு நொடியேம
தித்து வலமா கவந்து ...... சிவனிடத் தமர்சேயே
பழநி
மிசையிலிசை யிசையேர
கத்தில் திருவா வினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ்தி
ருத்த ணிகையூ டுமண்டர்
பதிய முதியகதி யதுநாயெ
னுக்கு முறவா கிநின்று ......கவிதையைப்
புனைவோனே
அரியு
மயனுமம ரருமாய
சிட்ட பரிபா லனன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற
துட்ட கொலைகா ரரென்ற
அசுரர் படையையடை யவும்வேர
றுத்த அபிரா மசெந்தி ...... லுரகவெற்
புடையோனே
அருண
கிரணகரு ணையபூர
ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுஞ்ர
னுட்க மயிலே றுகந்த
அருணை யிறையவர்பெ ரியகோபு
ரத்தில் வடபா லமர்ந்த...... அறுமுகப்
பெருமாளே.
பதம் பிரித்தல்
இரத
சுரத முலைகளும் மார்பு குத்த,
நுதல் வேர்வு அரும்ப,
அமுத நிலையில் விரல் உகிர் ரேகை
தைக்க, மணிபோல் விளங்க,
இசலி இசலி உபரித லீலை
உற்று, இடைநூல் நுடங்க, ...... உள மகிழ்ச்சியினோடே
இருவர்
உடலும் ஒரு உருவாய்
நயக்க, முகமேல் அழுந்த,
அளகம் அவிழ, வளைகளுமே
கலிக்க, நயன அரவிந்த
லகரி பெருக, அதரமுமே
அருத்தி
முறையே அருந்த,...... உரை எழப்
பரிவாலே
புருவம்
நிமிர, இரு கண வாள்
நிமைக்க, உபசாரம் மிஞ்ச,
அவச கவசம் அளவியலே
தரிக்க, அதிலே அநந்த
புதுமை விளைய, அது பரமாப-
ரிக்க இணை தோளும் ஒன்றி, .....அதி சுகக் கலையாலே
புளகம்
முதிர, விரகம் என் வாரி
தத்த, வரை நாண் மழுங்க,
மனமும் மனமும் உருகியெ, ஆத-
ரிக்க, உயிர் போல் உகந்து,
பொருளது
அளவு மரு உறும் மாய
வித்தை விலை மாதர் சிங்கி..... விட,அருள் புரிவாயே.
பரவு
மகரமும் முகரமும் மேவல்
உற்ற சகரால் விளைந்த,
தமர திமிர பிரபல மோக
ரத்ந சலராசி கொண்ட,
படியை முழுதும்ஒரு நொடியே
மதித்து வலமாக வந்து ...... சிவன்இடத்து
அமர்சேயே!
பழநி
மிசையில் இசை இசை, ஏர-
கத்தில், திருவா வினன்கு
டியினில், பிரமபுரம் அதில், வாழ்
திருத்தணிகை ஊடும் அண்டர்
பதிய முதிய கதியது நாயெ-
னுக்கும் உறவாகி நின்று ...கவிதையைப்
புனைவோனே!
அரியுமு
அயனும் அமரரும் ஆய
சிட்ட பரிபாலன அன்பர்
அடையும் இடரை முடுகியெ நூற,
துட்ட கொலைகாரர் என்ற
அசுரர் படையை அடையவும் வேர்
அறுத்த அபிராம! செந்தில்...உரக வெற்பு உடையோனே!
அருண
கிரண கருணைய! பூர-
ணச் சரணம் மேல் எழுந்த
இரண கரணம் முரண் உறுடு சுரன்
உட்க மயில் ஏறு கந்த!
அருணை இறையவர் பெரிய கோபு-
ரத்தில் வடபால் அமர்ந்த ...... அறுமுகப்
பெருமாளே.
பதவுரை
பரவும் மகரமும்
முகரமும் மேவல் உற்ற --- புகழப்படுவதும், மகர மீனும் சங்கும் உடையதும்,
சகரால் விளைந்த --- சகரரால் உண்டானதும்,
தமர --- பேரொலி உடையதும்,
திமிர --- இருள் நிறைந்ததும்,
பிரபல மோக --- பேர் பெற்றதும்,
ரத்ந சலராசி கொண்ட படியை முழுதும்
--- இரத்தின மணிகளை உடையதும் ஆன கடல் சூழ்ந்துள்ள பூமி முழுவதையும்
ஒரு நொடியே மதித்து வலமாக வந்து --- ஒரு நொடிப் போதில் வலம் வந்து,
சிவன் இடத்து அமர் சேயே ---
சிவபெருமானிடத்தில் அமர்ந்து இளம் பாலகரே!
பழநி மிசையில் --- பழநி மலை மீதும்,
இசை இசை ஏரகத்தில் --- புகழ்
பொருந்திய சுவாமி மலையிலும்,
திருவாவினன்குடியினில் --- திரு ஆவினன்குடியிலும்,
பிரமபுரம் அதில் --- சீகாழியிலும்,
வாழ் திருத்தணிகை ஊடும் --- என்றும்
நீர் மதித்து வாழ்கின்ற திருத்தணிகையிலும்,
அண்டர் பதிய --- தேவர்களின்
அமராவதியிலும் உறைகின்றவரே!
முதிய கதி அது
நாயெனுக்கும் உறவு ஆகி நின்று --- பழம்பொருளான வீட்டின்பமானது
அடியனுக்கும் கிட்டும்படியாக நின்று,
கவிதையைப் புனைவோனே --- அடியேனுடைய
பாமாலையை அணிந்து கொள்பவரே!
அரியும் அயனும்
அமரரும் ஆய
--- திருமாலும், பிரமனும், தேவர்களும் ஆன
சிட்ட பரிபாலன --- மேலோர்களைக் காத்து
அளிப்பவனாய்,
அன்பர் அடையும் இடரை முடுகியெ நூற --- அன்பர்களுக்கு
வரும் துன்பங்களை ஓட்டித் தூளாக்க,
துட்ட கொலைகாரர் என்ற அசுரர் படையை --- துட்டர்களும்
கொலைகாரர்களும் ஆன அசுரர்களின் சேனை
அடையவும் வேர் அறுத்த அபிராம ---
முழுவதையும் அடியோடு அழித்த பேரழகரே!
செந்தில் உரக வெற்பு
உடையோனே ---
திருச்செந்தூர், நாகமலை என்கின்ற
திருச்செங்கோடு என்னும் திருத்தலங்களை உடையவரே!
அருண கிரண கருணைய பூரண --- சிவந்த ஒளி
வீசுவதும், கருணை நிறைந்ததுமான
சரண மேல் எழுந்த இரண கரண முரண் உறும்
சூரன் உட்க --– உமது திருவடியைப் பகைத்து மேல் எதிர்த்து வந்து போரிட்டு
மாறுபட்ட சூரபன்மன் அஞ்சும்படி
மயில் ஏறு கந்த --- மயில் மீது ஏறி
வந்த கந்தக் கடவுளே!
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் --- திருவண்ணாமலையில்
சிவபெருமானுடைய பெரிய கோபுரத்தின்
வடபால் அமர்ந்த அறுமுகப் பெருமாளே ---
வடபுறத்தில் அமர்ந்துள்ள ஆறுமுகங்களை உடைய பெருமையில் சிறந்தவரே!
இரத சுரத முலைகளும்
மார்பு குத்த --- இனிமையானதும், கலவியில் இன்பம் தருவதும் ஆன முலைகள்
மார்பில் அழுந்த,
நுதல் வேர்வு அரும்ப --- நெற்றியில் வேர்வை துளிர்க்க,
அமுத நிலையில் --- விருப்பம் மேலிடும்
விதத்தில்
விரல் உகிர் ரேகை தைக்க --- விரல்களில் உள்ள நகக்குறி தைக்க,
மணி போல் விளங்க –-- இரத்தினம் போல்
ஒளி பெருக,
இசலி இசலி --- அடிக்கடி ஊடல்
கொண்டு,
உபரித லீலை உற்று --- மேல் விழும் கலவி
விளையாடல் புரிந்து,
இடைநூல் நுடங்க --- நூல் போன்ற இடை
துவள,
உள மகிழ்ச்சியினோடே --- உள்ளத்தில்
மகிழ்ச்சியுடனே,
இருவர் உடலும் ஒரு
உருவாய் நயக்க --- இருவர் உடல்களும்
ஒன்றுபட்டு இன்பம் தர,
முகமேல் அழுந்த --- முகத்தின் மேல் முகம் அழுந்த,
அளகம் அவிழ --- கூந்தலானது அவிழ்ந்து
விழ,
வளைகளுமே கலிக்க --- வளையல்கள் ஒலிக்க,
நயன அரவிந்த லகரி பெருக --- கண் என்னும் தாமரையில் மயக்கம் பெருக,
அதரமுமே அருத்தி முறையே அருந்த --- வாயிதழ் ஊறலை முறைப்படி உண்ண,
உரை எழப் பரிவாலே --- அன்பினாலே சில
சொற்களைப் பேச,
புருவம் நிமிர --- புருவம் மேலெழ,
இரு கணவாள் நிமைக்க --- கண்களில் ஒளி வீசி
இமைக்க,
உபசாரம் மிஞ்ச --- உபசாரங்கள் அதிகரிக்க,
அவச கவசம் அளவு இயலே தரிக்க --- ஒருவித மயக்கமானது
போர்வை போன்று அளவான தன்மையில் உண்டாக,
அதிலே அநந்த புதுமை விளைய --- அந்த
இன்ப நிலையிலே அளவில்லாத புதிய உணர்ச்சிகள் தோன்ற,
அது பரமா பரிக்க --- அந்த உணர்வை நன்றாக அனுபவிக்க,
இணை தோளும் ஒன்றி --- இரு தோள்களும் ஒன்றிக் கலந்து,
அதி சுகக் கலையாலே --- மிகுந்த சுகமாகிய நிலையிலே,
புளகம் முதிர --- புளகாங்கிதம்
மிகுந்து,
விரகம் என் வாரி தத்த --- காமம் என்னும் கடலானது ததும்பிப் பரவ,
அரைநாண் மழுங்க --- அரைநாண் மழுங்கி விலக,
மனமும் மனமும் உருகியெ ஆதரிக்க --- இருவர் மனமும் உருகி, அன்பு கொள்ள,
உயிர்போல் உகந்து --- உயிரைப் போல் பாவித்து மகிழ்ந்து,
பொருள் அது அளவு மருவுறும் --- பொருள்
கிட்டும் வரையில் கலந்து களிக்கும்,
மாய வித்தை விலைமாதர் சிங்கி விட --- மாய வித்தைகளில் வல்ல விலைமாதர்களின்
நஞ்சினை விட்டொழிக்க
அருள் புரிவாயே --- அருள் புரிவீராக.
பொழிப்புரை
புகழப்படுவதும், மகர மீனும் சங்கும் உடையதும், சகரரால் உண்டானதும், பேரொலி உடையதும், இருள் நிறைந்ததும், பேர் பெற்றதும், இரத்தின மணிகளை உடையதும் ஆன கடல்
சூழ்ந்துள்ள பூமி முழுவதையும் ஒரு நொடிப் போதில் வலம் வந்து, சிவபெருமானிடத்தில் அமர்ந்து இளம்
பாலகரே!
பழநி மலை மீதும், புகழ் பொருந்திய சுவாமி மலையிலும், திருவாவினன்குடியிலும், சீகாழியிலும், என்றும் நீர் மதித்து வாழ்கின்ற
திருத்தணிகையிலும், தேவர்களின்
அமராவதியிலும் உறைகின்றவரே!
பழம்பொருளான வீட்டின்பமானது
அடியனுக்கும் கிட்டும்படியாக நின்று, அடியேனுடைய
பாமாலையைய அணிந்து கொள்பவரே!
திருமாலும், பிரமனும், தேவர்களும் ஆன மேலோர்களைக் காத்து
அளிப்பவனாய், அன்பர்களுக்கு வரும்
துன்பங்களை ஓட்டித் தூளாக்க, துட்டர்களும்
கொலைகாரர்களும் ஆன அசுரர்களின் சேனை முழுவதையும் அடியோடு அழித்த, பேரழகரே!
திருச்செந்தூர், நாகமலை என்கின்ற திருச்செங்கோடு என்னும்
திருத்தலங்களை உடையவரே!
சிவந்த ஒளி வீசுவதும், கருணை நிறைந்ததுமான உமது திருவடியைப்
பகைத்து மேல் எதிர்த்து வந்து போரிட்டு மாறுபட்ட சுரபன்மன் அஞ்சும்படி மயில் மீது
ஏறி வந்த கந்தக் கடவுளே!
திருவண்ணாமலையில் சிவபெருமானுடைய பெரிய
கோபுரத்தின் வடபுறத்தில் அமர்ந்துள்ள ஆறுமுகங்களை உடைய பெருமையில் சிறந்தவரே!
இனிமையானதும், கலவியில் இன்பம் தருவதும் ஆன கொங்கைகள்
மார்பில் அழுந்த, நெற்றியில் வேர்வை
துளிர்க்க, விருப்பம் மேலிடும்
விதத்தில் விரல்களில் உள்ள நகக்குறி தைக்க, இரத்தினம் போல் ஒளி பெருக, அடிக்கடி ஊடல் கொண்டு, மேல் விழும் கலவி விளையாடல் புரிந்து, நூல் போன்ற இடை துவள, உள்ளத்தில் மகிழ்ச்சியுடனே, இருவர் உடல்களும் ஒன்றுபட்டு இன்பம் தர, முகத்தின் மேல் முகம் அழுந்த, கூந்தலானது அவிழ்ந்து விழ, வளையல்கள் ஒலிக்க, கண் என்னும் தாமரையில் மயக்கம் பெருக, வாயிதழ் ஊறலை முறைப்படி உண்ண, அன்பினாலே சில சொற்களைப் பேச, புருவம் மேலெழ, கண்களில் ஒளி வீசி இமைக்க, உபசாரங்கள் அதிகரிக்க, ஒருவித மயக்கமானது போர்வை போன்று அளவான
தன்மையில் உண்டாக, அந்த இன்ப நிலையிலே
அளவில்லாத புதிய உணர்ச்சிகள் தோன்ற,
அந்த
உணர்வை நன்றாக அனுபவிக்க, இரு தோள்களும்
ஒன்றிக் கலந்து, இரு தோள்களும்
ஒன்றிக் கலந்து, மிகுந்த சுகமாகிய
நிலையிலே, புளகாங்கிதம்
மிகுந்து, காமம் என்னும்
கடலானது ததும்பிப் பரவ, அரைநாண் மழுங்கி விலக, இருவர் மனமும் உருகி, அன்பு கொள்ள, உயிரைப் போல் பாவித்து மகிழ்ந்து, பொருள் கிட்டும் வரையில் கலந்து
களிக்கும் மாயவித்தைகளில் வல்ல விலைமாதர்களின் நஞ்சினை விட்டொழிக்க அருள்
புரிவீராக.
விரிவுரை
இப்
பாடலில் முதல் நான்கு அடிகள் கலவி இன்பத்தைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது.
புல்லுதல், சுவைத்திடல், புணர்நகக் குறி,
பல்உறல், மத்தளம் பயிலும் தாடனம்,
ஒல்ஒலி, கரணமோடு, உவகை ஆகிய
எல்லையில்
புணர்நிலைக்கு இயைந்த என்பவே. ---
கந்தபுராணம்.
கணவாள் ---
கண்
வாள் என்பது கணவாள் என வந்தது.
நிமைக்க ---
இமைக்க
என்ற சொல் நிமைக்க என வந்தது.
சிங்கி ---
குளிர்ந்து
கொல்லும் நஞ்சு.
சகரால்
விளைந்த கடல்
---
சகரர்
என்ற சொல் சகர் என வந்தது.
சூரியகுல
வேந்தனாகிய சகரனுக்கு இரண்டாவது மனைவியாகியய சுமதியிடம் பிறந்த புதல்வர்கள்
சகரர்கள் அறுபதினாயிரவர்.
சகர
மன்னன் அசுவமேதப் புரவியை பூமண்டலத்தை வலம் வர விடுத்தான். இந்திரன் அக் குதிரையைப் பாதலத்தில் தவம்
செய்து கொண்டு இருந்த கபில முனிவருடைய பின்புறத்தில் கட்ட மறைந்தான். குதிரையைத் தேடிக்கொண்டு சென்ற சகரர்கள்
பூமியைச் சுற்றித் தோண்டினார்கள். கபிலரது
பின்புறம் குதிரையைக் கண்டு இவர் தான் ஒளித்துவைத்தார் என்று கருதிக் கபிலரைத்
துன்புறுத்தினார்கள். கபிலரது கோபாக்கினியால்
அறுபதினாயிரம் சகரர்களும் சாம்பலாயினார்கள்.
பகீரதன் தவம் செய்து கங்கையைக் கொணர்ந்து அவர்களுக்கு நற்கதி
நல்கினான். சகரர் தோண்டியதால் சாகரம் எனப்
பேர் பெற்றது கடல்.
படியை
முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர்ந்த
சேயே ---
கனி
காரணமாக எந்தை கந்தவேள் உலக முழுவதையும் ஒரு நொடியில் வலமாக வந்தார்.
நாரத
முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத்தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு
மாதுளங் கனியைத் தந்தனர். அக் கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில்
வைத்து வணங்கினார்.
விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி
அக் கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம்
வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.
முருகவேள்
மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம்
வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும்
சிவத்துக்குள் அடங்கி நிற்றலால்,
சிவமூர்த்தியை
வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார்.
பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.
உலகங்களை
வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக
நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை
எடுத்து அணைத்து, “கண்மணி!
அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய
பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.
இந்த
வரலாற்றின் உட்பொருள்
(1) கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.
(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர்
தானே சிவபெருமான்.
(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.
(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள்
ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை
ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.
ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை தான் யாது? சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று
எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும்
சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.
இந்த
இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும்
பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.
இதனையே
தாயுமானவர் முதற் பாடலில் கூறுகின்றார்.
“அங்கிங்கெனாதபடி
எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்ததெது?”
இது
எங்கும் நிறைந்த தன்மை.
“தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடி யெல்லாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது?”
இது
எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு
உணர்த்துகின்றது. இந்த இனிய கருத்தை நன்கு சிந்தித்துத் தெளிக.
அரியுமயனும்
அமரருமாய சிட்ட பரிபாலன் ---
துட்ட
நிக்கிரக, சிட்ட பரிபாலன். புல்லைக் களைந்து நெல்லை வளர்ப்பது போல், தீயவரை நீக்கித் தூயவரைக் காக்கும்
தயாநிதி முருகன்.
அருணை
இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த ---
திருவண்ணாமலை
வல்லாள மன்னர் புதுக்கிய இரண்டாவது கோபுரத்தின் வடபுறத்தில் எழுந்தருளிய முருகப்
பெருமான். இந்த மூர்த்திதான்
அருணகிரிநாதரை ஆட்கொண்டு அருளியவர்.
அடல்அருணைத்
திருக் கோபுரத்தே, அந்த வாயிலுக்கு
வடஅருகில்
சென்று கண்டுகொண்டேன்.. --- கந்தர் அலங்காரம்.
கருத்துரை
அருணை
மேவிய ஐயனே, பொதுமாதருடைய உறவாகிய
நஞ்சு ஒழிய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment