நரகத்தில் விழுவோர்
18. நரகில் வீழ்வோர்

மன்னரைச் சமரில்விட்டு ஓடினவர், குருமொழி
     மறந்தவர், கொலைப்பாதகர்
மாதா பிதாவைநிந் தித்தவர்கள் பரதாரம்
     மருவித் திரிந்தபேர்கள்

அன்னம் கொடுத்தபே ருக்கு அழிவை எண்ணினோர்,
     அரசு அடக்கிய அமைச்சர்,
ஆலயம் இகழ்ந்தவர்கள், விசுவாச காதகர்,
     அருந்தவர் தமைப்பழித்தோர்,

முன்உதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்,
     முகத்துதி வழக்கு உரைப்போர்,
முற்றுசிவ பத்தரை நடுங்கச்சி னந்தவர்கள்,
     முழுதும்பொய் உரைசொல்லுவோர்,

மன்ஒருவர் வைத்தபொருள் அபகரித்தோர், இவர்கள்
     மாநரகில் வீழ்வர் அன்றோ?
மயில் ஏறி விளையாடு குகனே!புல் வயல் நீடு
     மலைமேவு குமரஈசனே.

     இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
     மன்னரைச் சமரில் விட்டு ஓடினவர் --- அரசரைப் போரிலே கைவிட்டு ஓடிய கோழைகளும்,

     குருமொழி மறந்தவர் --- குருநாதன் சொன்ன சீலத்தை மறந்தவர்களும்,

     கொலைப் பாதகர் --- கொலை செய்த பாவிகளும்,

     மாதா பிதாவை நிந்தித்தவர்கள் --- தாய் தந்தையரைப் பழித்தவர்களும்,

     பரதாரம் மருவித் திரிந்த பேர்கள் --- அயலார் மனைவியைக் கலந்து திரிகின்றவர்களும்,

     அன்னம் கொடுத்த பேருக்கு அழிவை எண்ணினோர் - உணவு அளித்துக் காத்தவர்க்குக் கெடுதி நினைத்தவர்களும்,

     அரசு அடக்கிய அமைச்சர் --- அரசர்களை மிஞ்சி, அவரு ஆணை தவறிய அமைச்சர்களும்,

     ஆலயம் இகழ்ந்தவர்கள் --- திருக்கோயிலைப் பழித்தவர்களும்,

     விசுவாச காதகர் --- நம்பிக்கையைக் கெடுத்தவர்களும்,

     அருந்தவர் தமைப் பழித்தோர் --- உயர்ந்த துறவிகளைப் பழித்தவர்களும்,

     முன் உதவியாய்ச் செய்த நன்றியை மறந்தவர் --- முன்னர் தான் துன்புற்று இருந்த காலத்திலே ஒருவர் செய்த உதவியை மறந்த நன்றி அறிவு இல்லாதவர்களும்,

     முகத்துதி வழக்கு உரைப்போர் --- தம்மைப் புகழ்ந்து கூறுவோர் சார்பாக வழக்குக் கூறுகின்றவர்களும்,

     முற்று சிவபத்தரை நடுங்கச் சினந்தவர்கள் --- முதிர்ந்த சிவன் அடியவரை மனம் கலங்கக் கோபித்தவர்களும்,

     முழுதும் பொய் உரை சொல்லுவோர் --- முழுதும் பொய்யையே கூறுவோர்களும்,

     மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் --- தம்மிடம் ஒருவர் கொடுத்து வைத்த பொருளைக் கவர்ந்தவர்களும்,

     இவர்கள் --- ஆகிய இவர்கள் எல்லாம்,

     மாநரகில் வீழ்வர் அன்றோ --- கொடிய நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்கள் அல்லவா?No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...