திருவண்ணாமலை - 0537. கமரி மலர்குழல்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கமரி மலர்குழல் (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேனுடைய குற்றங்கள் நீங்கத் திருவருள் புரிவாய்


தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான


கமரி மலர்குழல் சரிய புளகித
     கனக தனகிரி யசைய பொருவிழி
          கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர்

கரிய மணிபுர ளரிய கதிரொளி
     பரவ இணைகுழை யசைய நகைகதிர்
          கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத்

திமிரு மதபுழு கொழுக தெருவினி
     லலைய விலைமுலை தெரிய மயல்கொடு
          திலத மணிமுக அழகு சுழலிக ......      ளிதழூறல்

திரையி லமுதென கழைகள் பலசுளை
     யெனவு மவர்மயல் தழுவு மசடனை
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ......அருள்தாராய்

குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ......           எனதாளங்

குரைசெய் முரசமொ டரிய விருதொலி
     டமட டமடம டமட டமவென
          குமுற திமிலைச லரிகி னரிமுத ......     லிவைபாட

அமரர் முநிவரு மயனு மனைவரு
     மதுகை மலர்கொடு தொழுது பதமுற
          அசுரர் பரிகரி யிரத முடைபட ......       விடும்வேலா

அகில புவனமொ டடைய வொளிபெற
     அழகு சரண்மயில் புறம தருளியொ
          ரருண கிரிகுற மகளை மருவிய ......     பெருமாளே.


பதம் பிரித்தல்


கம அரி மலர் குழல் சரிய, புளகித
     கனக தனகிரி அசைய, பொருவிழி
          கணைகள் என, நுதல் புரள, துகில் அதை ...... நெகிழ் மாதர்

கரிய மணி புரள, ரிய கதிர் ஒளி
     பரவ, இணை குழை அசைய, நகை கதிர்
          கனக வளை கல, நடைகள் பழகிகள் ......மயில் போலத்

திமிரு மத புழுகு ஒழுக, தெருவினில்
     அலைய, விலைமுலை தெரிய, மயல்கொடு
          திலதம் அணிமுக அழகு சுழலிகள், ......இதழ் ஊறல்

திரையில் அமுது என, கழைகள் பல சுளை
     எனவும், அவர்மயல் தழுவும் அசடனை,
          திருகு புலைகொலை கலிகள் சிதறிட ......அருள்தாராய்.

குமர குருபர குமர குருபர
     குமர குருபர குமர குருபர
          குமர குருபர குமர குருபர ......           எனதாளம்

குரைசெய் முரசமொடு, அரிய விருது ஒலி
     டமட டமடம டமட டம என
          குமுற, திமிலை சலரி கினரி முதல் ......இவைபாட,

அமரர் முநிவரும் அயனும் அனைவரும்
     மதுகை மலர் கொடு தொழுது பதம் உற,
          அசுரர் பரிகரி இரதம் உடைபட ......       விடும்வேலா!

அகில புவனமொடு அடைய ஒளி பெற,
     அழகு சரண்மயில் புறம் அது அருளிஒர்
          அருணகிரி குற மகளை மருவிய ......    பெருமாளே.


பதவுரை 

      குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர என –-- குமர குருபர என்ற ஒலியுடன்,

      தாளம்  குரைசெய் முரசமொடு --- தாளங்கள் ஒலி செய்கின்ற போர்ப் பறையுடன்,

     அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற ---  வெற்றி ஒலிகள், டமட டமடம டம என்று முழங்கவும்,

     திமிலை சலரி கினரி முதல் இவை பாட --– திமிலை என்ற பறையும், சல்லரி என்ற வாத்தியமும், கின்னர் என்ற யாழ் முதலிய வாத்தியங்களும் பாடவும்,

      அமரர் முநிவரும் அயனும் அனைவரும் --- தேவர்களும் முனிவர்களும் பிரமனும் மற்றும் உள்ள எல்லோரும்

     மதுகை மலர்கொடு தொழுது --- கையில் தேன் துளிர்க்கின்ற மலர்களைக் கொண்டு அருச்சித்து வணங்கி,

     பதம் உற --- தத்தம் பதவிகளைப் பெறவும்,

     அசுரர் பரி கரி இரதம் உடைபட விடும் வேலா --- அசுரர்களின் குதிரை, யானை, தேர் இவைகள் உடைபட்டு அழியவும் விடுத்த வேலாயுதத்தை உடையவரே!

      அகில புவனமொடு அடைய ஒளி பெற --- எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெற

     அழகு சரண் மயில் புறம் அது அருளி --- அழகிய திருவடிகளை மயிலின் முதுகில் வைத்து அருளி,

     ஓர் அருணகிரி குறமகளை மருவிய பெருமாளே ---  ஒப்பற்ற திருவண்ணாமலையில் வள்ளிபிராட்டியைச் சேர்ந்த பெருமையில் சிறந்தவரே!

      கம அரி மலர் குழல் சரிய --- நிறைந்த வண்டுகளுடன் கூடிய பூக்களை முடித்த கூந்தல் சரியவும்,

     புளகித கனக தன கிரி அசைய --- பூரித்துள்ள பொன் மயமான கொங்கை மலைகள் அசையவும்,

     பொருவிழி கணைகள் என --- போர் புரிகின்ற கண்கள் அம்புகள் போல் கூர்மையாக விளங்கவும்,

     நுதல் புரள --– நெற்றி புரளவும்,

      துகில் அதை நெகிழ் மாதர் --- ஆடையை நெகிழ்க்கின்ற மாதர்களின்

     கரிய மணி புரள ---  கழுத்தில் கரிய மணிமாலை புரள்வதால்

     அரிய கதிர் ஒளி பரவ --- அருமையான ஒளி பரவவும்,

     இணை குழை அசைய ---  இரண்டு குழைகளும் அசையவும்,

     நகை கதிர் கனக வளை கல என ---  ஒளி விளங்குகின்ற பொன்வளைகள் கல கல என்று ஒலிக்கவும்,

     மயில் போல நடைகள் பழகிகள் --- மயில் போல் நடை பயில்கின்ற அப் பொதுமகளிர்,

      திமிரு மத புழுகு ஒழுக --- பூசியுள்ள சாரமான புனுகுசட்டம் ஒழுகவும்,

     தெருவினில் அலைய --- வீதியில் அலைய,

     விலை முலை தெரிய --- விலைக்கு விற்கப்படுகின்ற முலைகள் வெளிப்பட்டுத் தெரிய,

     மயல் கொடு திலதம் அணிமுக அழகு சுழலிகள் --- காம மயக்கம் கொண்டு, பொட்டு அணிந்த முக அழகுடன் அங்கும் இங்கும் சுழலுகின்ற அவர்களின், 

       இதழ் ஊறல் திரையில் அமுது என --- வாயிதழ் ஊறலை கடலில் பிறந்த அமுதம் என்றும்,

     கழை கள் பல சுளை எனவும் --- கரும்பு என்றும், தேன் என்றும், பலாப்பழத்தின் சுளை என்றும்,

     அவர் மயல் தழுவும் அசடனை --- அம் மாதர்களின் மோகத்தில் தழுவுகின்ற மூடனது,

     திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய் --- குற்றங்களும், புலால் உண்ணும் தன்மையும், கொலைத் தன்மையும் துன்பமும் விட்டு நீங்குமாறு திருவருள் புரிவீராக.

பொழிப்புரை

          குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர என்ற ஒலியுடன், தாளங்கள் ஒலி செய்கின்ற போர்ப் பறையுடன், வெற்றி ஒலிகள், டமட டமடம டம என்று முழங்கவும், திமிலை என்ற பறையும், சல்லரி என்ற வாத்தியமும், கின்னர் என்ற யாழ் முதலிய வாத்தியங்களும் பாடவும், தேவர்களும் முனிவர்களும் பிரமனும் மற்றும் உள்ள எல்லோரும் கையில் தேன் துளிர்க்கின்ற மலர்களைக் கொண்டு அருச்சித்து வணங்கி, தத்தம் பதவிகளைப் பெறவும், அசுரர்களின் குதிரை, யானை, தேர் இவைகள் உடைபட்டு அழியவும் விடுத்த வேலாயுதத்தை உடையவரே!

         எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெற அழகிய திருவடிகளை மயிலின் முதுகில் வைத்து, ஒப்பற்ற திருவண்ணாமலையில் வள்ளிபிராட்டியைச் சேர்ந்த பெருமையில் சிறந்தவரே!

         நிறைந்த வண்டுகளுடன் கூடிய பூக்களை முடித்த கூந்தல் சரியவும், பூரித்துள்ள பொன் மயமான கொங்கை மலைகள் அசையவும், போர் புரிகின்ற கண்கள் அம்புகள் போல் கூர்மையாக விளங்கவும், நெற்றி புரளவும், ஆடையை நெகிழ்க்கின்ற மாதர்களின் கழுத்தில் கரிய மணிமாலை புரள்வதால் அருமையான ஒளி பரவவும், இரண்டு குழைகளும் அசையவும், ஒளி விளங்குகின்ற பொன்வளைகள் கல கல என்று ஒலிக்கவும், மயில் போல் நடை பயில்கின்ற அப் பொதுமகளிர், பூசியுள்ள சாரமான புனுகுசட்டம் ஒழுகவும், விதியில் அலைய, விலைக்கு விற்கப்படுகின்ற தனங்கள் வெளிப்பட்டுத் தெரிய, காம மயக்கம் கொண்டு, பொட்டு அணிந்த முக அழகுடன் அங்கும் இங்கும் சுழலுகின்ற அவர்களின்,  வாயிதழ் ஊறலை கடலில் பிறந்த அமுதம் என்றும், கரும்பு என்றும், தேன் என்றும், பலாப்பழத்தின் சுளை என்றும், அம் மாதர்களின் மோகத்தில் தழுவுகின்ற மூடனது, குற்றங்களும், புலால் உண்ணும் தன்மையும், கொலைத் தன்மையும் துன்பமும் விட்டு நீங்குமாறு திருவருள் புரிவீராக.


விரிவுரை


கம அரி மலர் குழல் சரிய ---

கம அரி.  கமம் - நிறைவு.  அரி - வண்டு.

நிறைந்த வண்டுகள் மொய்க்கும் நறுமலர்கள் சூடிய கூந்தல் சரிய நிற்பார்கள் பொதுமாதர்கள்.

நுதல் புரள ---

பொதுமகளிர் ஆடவர்களின் மனம் மருளுமாறு அடிக்கடி நெற்றியைப் புரட்டுவர்.

துகில் அதை நெகிழ் மாதர் ---

பொதுமகளிர் ஆடவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தமது ஆடையை நெகிழ்ப்பவர்கள்.

இதழ் ஊறல் திரையில் அமுது என, கழைகள், பலசுளை எனவும் ---

காம விகாரம் உற்றவர்கள், மாதர்களின் இதழில் ஊறுகின்ற எச்சிலை, கடலில் பிறந்த அமுதமே இது என்றும், கரும்பு இது என்றும், தேன் இது என்றும், பலாப்பழத்தின் இனிய சுளை இது என்றும் புகழ்ந்து கூறுவர்.

திருகு புலை கொலை கலிகள் சிதறிட ---

திருகு - கோணல் பட்ட மனம். புலை - புலால் உண்ணும் பாவம்.
கொலை  உயிர்க் கொலை, கலிகள் - துன்பங்கள்.

இவைகள் துகள்பட்டு ஒழியுமாறு ஆம்டவனே அருள் புரிக.

குமர குருபர, குமர குருபர.......... என தாளம் குரை செய் ---

போர்க்களத்தில் தாளங்கள் ஒலிக்கின்றன.  அத் தாள ஒலிகள், அருணகிரிநாதருக்கு குமர குருபர என்று கேட்கின்றது.  இது அவருடைய முருக பத்தியைத் தெரிவிக்கின்றது.

திருவிடைமருதூரில் வயல்களில் தவளைகள் சத்தம் செய்தன.  சிவபத்தி உடைய வரகுண தேவருக்கு, அந்த ஒலி ஹர ஹர என்று கேட்டது.  இது அவருக்கு இருந்த சிவபத்தியைக் காட்டுகின்றது.

குவளை புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்றும்,
காசும் பொன்னும் கலந்து தூவியும்    ---   பட்டினத்தார்.

குமர குருபர என்பது எழு அட்சரங்கள்.  இது மிஸ்ர ஜாதி தாளம்.  குரை செய் - ஒலிக்கின்ற.

திமிலை தலரி கினரி ---

திமிலை - ஒரு வகையான போர்ப்பறை,
சலரி - ஒரு வகையான பறை.
கினரி - ஒரு வகையான வீணை.

ஆடல் புரிவான் அரன் என்றும், மூவர்தமிழ்ப்
பாடல் உவந்தான் பரன்என்றும் – கூடலிலே
நல்நரி வாசிக்கு நடைபயிற்றி னான்என்றும்
கின்னரி வாசிக்கும் கிளி.             --- காளமேகப் புலவர்.


கருத்துரை

திருவண்ணாமலையில் வாழும் திருமுருகா, அடியேனுடைய புலை கொலை முதலிய இடர்கள் நீங்கத் திருவருள் புரிவாய்.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...