கங்கையிலே மூழ்கினாலும்
14. கங்கையிலே படர்ந்தாலும்....

சங்கை அறப் படித்தாலும், கேட்டாலும்,
     பிறர்க்கு உறுதி தனைச் சொன்னாலும்,
அங்கண் உலகினில் சிறியோர் தாம்அடங்கி
     நடந்து, கதி அடைய மாட்டார்.
திங்கள் அணி சடையாரே! தண்டலையா
     ரே! சொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய்
     நல்லசுரைக் காய் ஆகாதே!

          இதன் பொருள் ---

     திங்கள் அணி சடையாரே --- பிறைச் சந்திரனைத் தரித்துள்ள சடைமுடியை உடையவரே,

     தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரே!

     அங்கண்  உலகில் சிறியோர் சங்கை அறப் படித்தாலும் --- அழகிய இடத்தை இடைய இந்த உலகத்தில் அற்பர்கள் ஐயம் திரிபு அற நூல்களைப் படித்தாலும்

     கேட்டாலும் --- கற்ற பெரியோர் சொல்லக் கேட்டாலும்,

     பிறர்க்கு  உறுதிதனைச் சொன்னாலும் --- நலம் தருவனவற்றை மற்றவர்களுக்கு எடுத்து உரைத்தாலும்,

     தாம் அடங்கி நடந்து கதி அடைய மாட்டார் --- தாங்கள் மட்டும் மனமு அடங்கி வாழ்ந்து  நல்லகதியை அடைய மாட்டார்கள்,

     கங்கையிலே --- கங்கை நீரிலே,

     பேய்ச் சுரைக்காய் சிறிது  காலம் படர்ந்தாலும் --- பேய்ச்சுரைக்காய் கொஞ்ச காலம் வளர்ந்தாலும்

     நல்ல சுரைக்காய் ஆகாது --- அது இனிய சுரைக்காய் ஆகாது.

      விளக்கம் ---  பேய்ச்சுரை இயல்பாகக் கசக்கும் தன்மை உடையது.

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும், என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்!
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்
கைப்புஅறா பேய்ச்சுரையின் காய்.                 --- நாலடியார்.

     அழகிய விரிந்த கண்களை உடைய பெண்ணே! எவ்வளவு தான் ஞானநூல்களை விரிவாக ஒருவன் கற்றாலும், அவர் கீழோர் ஆயின், மன அடக்கம் கொண்டு இருக்கமாட்டார்கள். என்ன தான் உப்பும் நெய்யும் தயிரும் பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும், பேய்ச் சுரைக்காயின் கசப்புத் தன்மை நீங்காது.

     கங்கை நீர் புனிதமானது என்று பெரியோர் கருதுவர். ஆனாலும் அதில் முழுகியவர்கள் எல்லாரும் புனிதத் தன்மை அடைவது இல்லை. உணர்வோடு தன்னிடம் முழுகுவோரின் புற அழுக்கைப் போக்குவது அல்லாமல், அக அழுக்கையும் போக்குகின்ற கங்கை நீர்க்கு, அற்பர்களின் புற அழுக்கை மட்டுமை போக்கி, அக அழுக்கைப் போக்கும் ஆற்றல் இல்லாமல் போவது இயல்பு. தூய கங்கை நீருக்கு, பேய்ச்சுரைக் காயின் கசப்பை நீக்கும் ஆற்றல் இல்லாமல் போனது போல, அறிவு விளக்கம் தரும் கல்வியாலும் கேள்வியாலும் பிறர்க்குக் கூறுவதனாலும் மட்டும் அற்பர்களுக்கு இயல்பாகவே உள்ள தீய பண்பு விலகாது.

கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி
     எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் ,
     அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்.
சொல் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக
     வரும் எனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராது, அங்கு அவர் குணமே
     மேலாக நடக்கும் தானே.

என்பது விவேக சிந்தாமணி.

     "கங்கையிலே மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா" என்பது பழமொழி.

 

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...