வெற்றிக்கு இடம் தருவது





33. வெற்றிக்கு இடம் ஆவது.

கலைவலா ருக்குஅதிக சயம் மதுரவாக்கிலே;
     காமுகர்க்கு அதிக சயமோ
  கைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்
     கைவிசே டந்தன் னிலே;

நலமுடைய வேசையர்க்கு அழகிலே! அரசர்க்கு
     நாளும்ரண சூரத் திலே;
  நற்றவர்க்கு அதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;
     ஞானவே தியர்த மக்கோ

குலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்
     கூடிய துலாக்கோ லிலே;
  குற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்
     குறையாத கொழுமு னையிலே;

அலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்
     ஆம்என்பர்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


          இதன் பொருள் ---

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     கலை வலாருக்கு மதுர வாக்கில் அதிக சயம் --- கலையில் சிறந்தவர்களுக்கு இனிய மொழியிலே மிகுந்த வெற்றி,

     காமுகர்க்குக் கைப் பொருளிலே அதிக சயம் --- காமத்திலே விருப்பம் உடையவருக்குக் கைப் பொருளாலே மிகுந்த வெற்றி,

     வரும் மருத்துவர்க்குக் கைவிசேடம் தன்னில் சயம் --- தொழிலில் வளர்ந்து வரும் மருத்துவர்களுக்குக் கை ராசியால் வெற்றி,

     நலம் உடைய வேசையர்க்கு அழகிலே --- அழகு நலம் உடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே வெற்றி,

     அரசர்க்கு நாளும் ரண சூரத்திலே --- அரசருக்கு எப்போதும் போர்க்களத்திலே மிகுந்த வெற்றி உண்டாகும்,

     நல் தவர்க்கு உலகு புகழ் பொறையிலே அதிக சயம் --- நல்ல தவத்தினைப் புரிபவருக்கு உலகம் புகழும் பொறுமையினாலே மிகுந்த வெற்றி,

     ஞான வேதியர் தமக்கோ குலமகிமை தன்னிலே --- ஞானம் பொருந்திய அந்தணர்களுக்கு தமது குலத்திற்கு உரிய
பெருமையினாலே வெற்றி,

     வைசியர்க்கோ கூடிய துலாக் கோலிலே சயம் --- வணிகர்களுக்கோ புகழ் பெற்ற தராசுக் கோலை ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி,

     குற்றம் இல்லாத வேளாளருக்கோ குறையாத கொழுமுனையிலே சயம் --- குற்றம் அற்றவர்களான வேளாளர்க்கு குறையாத ஏர் முனையினாலே உழுது பயிரிடுவதால் வெற்றி,

     அலைவு இல் குதிரைக்கு நடைவேகத்தில் அதிக சயம் --- வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய வேகம் பொருந்திய நடையினால் மிகுந்த வெற்றி,

     ஆம் என்பர்  --- உண்டாகும் என்று அறிந்தோர் கூறுவர்.

     கருத்து --- அவரவருக்கு உரிய தொழிலைச் செவ்வையாகச் செய்வதனால் வெற்றி உண்டாகும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...