கூடி வாழ்ந்தால் கோடி நன்மை





32. கூடினால் பயன்படுவது

செத்தைபல கூடிஒரு கயிறுஆயின் அதுகொண்டு
     திண்கரியை யும்கட் டலாம்!
  திகழ்ந்தபல துளிகூடி ஆறுஆயின் வாவியொடு
     திரள்ஏறி நிறைவிக் கலாம்!

ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்
     உடுத்திடும் கலைஆக் கலாம்!
  ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்
     உயர்கவிகை யாக்கொள் ளலாம்!

மற்றும்,உயர் தண்டுலத் தோடுதவிடு உமிகூடின்
     மல்கும்முளை விளைவிக் கலாம்!
  மனம்ஒத்த நேயமொடு கூடிஒருவர்க்குஒருவர்
     வாழின்வெகு வெற்றி பெறலாம்!

அற்றகனி யைப்பொருத்து அரி,பிரமர் தேடரிய
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன்பொருள் ---

     அற்ற கனியைப் பொருத்து அரி --- மரத்திலிருந்து அறுபட்ட பழத்தைத் திரும்பவும் மரத்திலே பொருத்திய திருமாலும்

     பிரமர் தேட அரிய அமலனே --- பிரமனும் தேடியும் காண்பதற்கு அருமையான தூயவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     செத்தை பல கூடி ஒரு கயிறு ஆயின், அதுகொண்டு திண் கரியையும் கட்டலாம் --- பல வைக்கோல் தாள்கள் சேர்ந்து ஒரு கயிறு திரிக்கப்பட்டால், அக் கயிற்றைக் கொண்டு வலிய யானையையும் கட்ட இயலும்,

     திகழ்ந்த பல துளி கூடி ஆறு ஆயின், வாவியொடு திரள் ஏரி நிறைவிக்கலாம் --- விளங்கும் பல மழைத் துளிகள் திரண்டு ஒரு நதியாகப் பெருகினால், குளத்தையும் திரண்ட பல ஏரிகளையும் நிறையச் செய்யலாம்,

     ஒத்த நுண்பல பஞ்சு சேர்ந்து நூல் ஆயிடின், உடுத்திடும் கலை ஆக்கலாம் --- சமமான நுண்ணிய பல பஞ்சு கூடி நூல் ஆகுமானால், உடுத்திக் கொள்ள ஆடையை ஆக்கலாம்,

     ஓங்கி வரு கோலுடன் சீலையும் கூடினால், உயர்கவிகை ஆ கொள்ளலாம் --- உயர்ந்து வளர்ந்த ஒரு கோலோடு, துணியும் சேர்ந்தால் உயர்ந்த குடையாகக் கொள்ள முடியும்,

     மற்றும் - மேலும்,

     உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின், பல்கும் முளை விளைவிக்கலாம் --- உயர்ந்த அரிசியும் தவிடும் உமியும் கூடியிருந்தால் வளம் மிகுந்த முளையைத் தோற்றுவிக்கலாம்,

     மனம் ஒத்த நேயமொடு ஒருவர்க்கு ஒருவர் கூடி வாழின், வெகு வெற்றி பெறலாம் --- உள்ளம் கலந்த அன்புடன் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்ந்தால் பெரு வெற்றியைப் பெறலாம்.

          அற்ற கனியைப் பொருத்துதல் : பாண்டவர்கள் காட்டில் வாழும்போது முனிவர்க்குப் பயன்படும் நெல்லிக்கனி ஒன்றை அருச்சுனன் பாஞ்சாலிக்காக அறுத்துவிட்டான். பிறகு, உண்மை உணர்ந்து கண்ணனை வேண்ட, அவர் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் உண்மையான மனத்தில், ‘உற்றது கூறின் அற்றது பொருந்தும்' என்றார். அவர்கள் அவ்வாறே கூறியவுடன் அப் பழம் மரத்தில் பொருந்தியது.

     கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...