அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இடம்அடு சுறவை
(திருவருணை)
முருகா!
உன் மீது காதல் கொண்ட
இப்பெண்ணை ஆண்டு அருள்
தனதன
தனன தனதன தனன
தனதன தனதன ...... தந்ததான
இடமடு
சுறவை முடுகிய மகர
மெறிகட லிடையெழு ...... திங்களாலே
இருவினை
மகளிர் மருவிய தெருவி
லெரியென வருசிறு ...... தென்றலாலே
தடநடு
வுடைய கடிபடு கொடிய
சரம்விடு தறுகண ...... நங்கனாலே
சரிவளை
கழல மயல்கொளு மரிவை
தனிமல ரணையின ...... லங்கலாமோ
வடகுல
சயில நெடுவுட லசுரர்
மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா
மறமக
ளமுத புளகித களப
வளரிள முலையைம ...... ணந்தமார்பா
அடலணி
விகட மரகத மயிலி
லழகுட னருணையி ...... னின்றகோவே
அருமறை
விததி முறைமுறை பகரும்
அரியர பிரமர்கள் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
இடம்
அடு சுறவை முடுகிய மகரம்
எறிகடல் இடை எழு ...... திங்களாலே,
இருவினை
மகளிர் மருவிய தெருவில்
எரி என வரு சிறு ...... தென்றலாலே,
தடநடு
உடைய கடிபடு கொடிய
சரம் விடு தறுகண் ...... அநங்கனாலே,
சரிவளை
கழல, மயல் கொளும் அரிவை
தனிமலர் அணையின் ...... நலங்கல் ஆமோ?
வடகுல
சயிலம், நெடு உடல் அசுரர்
மணிமுடி சிதற ...... எறிந்த வேலா!
மறமகள்
அமுத புளகித களப
வளர் இள முலையை ...... மணந்த மார்பா!
அடல்
அணி விகட மரகத மயிலில்
அழகுடன் அருணையில் ...... நின்ற கோவே!
அருமறை
விததி முறைமுறை பகரும்
அரி அர பிரமர்கள் ...... தம்பிரானே.
பதவுரை
வட குல சயிலம் ---- வடக்கே உள்ள
சிறந்த மேருமலை போன்ற,
நெடு உடல் அசுரர் --- உடலையுடைய
அசுரர்களின்,
மணிமுடி சிதற எறிந்த வேலா ---
மணிமுடிகள் பொடியாகும்படி செலுத்திய வேலாயுதரே!
மறமகள் --- வேடர் மகளாகிய
வள்ளிநாயகியின்,
அமுத புளகித களப -- அமுதமும்
பூரிப்பும் சந்தனக் கலவையும் உடைய
வளர் இள முலையை மணந்த மார்பா ---
வளர்ந்துள்ள இளங் கொங்கையைத் தழுவிய திருமார்பினரே!
அடல் அணி விகட மரகத
மயிலில்
--- ஆற்றலும் அலங்காரமும் அழகும் உடைய பச்சை நிற மயிலில்
அழகுடன் அருணையில் நின்ற கோவே ---
ஆழகாகத் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தலைவரே!
அருமறை விததி முறை முறை
பகரும்
--- அரிய வேதங்களின் தொகுதி முறை முறையாக ஓதுகின்ற
அரி அர பிரமர்கள் தம்பிரானே ---
திருமால் உருத்திரன் பிரமன் ஆகிய மூவர்க்கும் தனிப்பெரும் தலைவரே!
இடம் அடு சுறவை
முடுகிய மகரம்
--- இடத்திலிருந்து வருத்தும் சுறா மீனை விரட்டியடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும்,
எறி கடல் இடை எழு திங்களாலே --- அலைகள்
வீசுகின்றதும் ஆகிய கடலிடையே எழுகின்ற சந்திரனாலும்,
இருவினை மகளிர் மருவிய தெருவில் ---
நல்வினை தீவினை என்ற இரண்டிற்கும் ஏதுவான மாதர்கள் வாழும் தெருவில்,
எரி என வரு சிறு தென்றலாலே ---
நெருப்பைப் போல் வருகின்ற இளம் தென்றல் காற்றினாலும்,
தடம் நடு உடைய கடி படு கொடிய சரம் விடு
தறுகண் அநங்கனாலே --- குளத்தின் நடுவே இருப்பனவும் நறமணம் வீசுவனவும் கொடுமை
உள்ளனவும் ஆன தாமரை நீலோற்பலம் ஆகிய மலர்க் கணைகளை விடுகின்ற அஞ்சாத மன்மதனாலும்,
சரிவளை கழல மயல் கொளும் அரிவை ---
சரிகின்ற வளையல்கள் கழன்று விழுமாறு காதல் மயக்கத்தைக் கொள்ளும் இப்பெண்,
தனி மலர் அணையில் நலங்கல் ஆமோ ---
தனியாக மலர்ப்படுக்கையில் நொந்து படுதல் தகுமோ?
பொழிப்புரை
வடக்கே உள்ள சிறந்த மேருமலை போன்ற, உடலையுடைய
அசுரர்களின் மணிமுடிகள் பொடியாகும்படி செலுத்திய வேலாயுதரே!
வேடர் மகளீகிய வள்ளிநாயகியின் அமுதமும்
பூரிப்பும் சந்தனக் கலவையும் உடைய வளர்ந்துள்ள இளங் கொங்கையைத் தழுவிய
திருமார்பினரே!
ஆற்றலும் அலங்காரமும் அழகும் உடைய பச்சை
நிற மயிலில் ஆழகாகத் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தலைவரே!
அரிய வேதங்களின் தொகுதி முறை முறையாக
ஓதுகின்ற திருமால் உருத்திரன் பிரமன் ஆகிய மூவர்க்கும் தனிப் பெரும் தலைவரே!
இடத்திலிருந்து வருத்தும் சுறா மீனை
விரட்டியடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும், அலைகள்
வீசுகின்றதும் ஆகிய கடலிடையே எழுகின்ற சந்திரனாலும், நல்வினை தீவினை என்ற இரண்டிற்கும்
ஏதுவான மாதர்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல் வருகின்ற இளம் தென்றல்
காற்றினாலும், குளத்தின் நடுவே
இருப்பனவும் நறமணம் வீசுவனவும் கொடுமை உள்ளனவும் ஆன தாமரை நீலோற்பலம் ஆகிய மலர்க்
கணைகளை விடுகின்ற அஞ்சாத மன்மதனாலும் சரிகின்ற வளையல்கள் கழன்று விழுமாறு காதல்
மயக்கத்தைக் கொள்ளும் இப்பெண் தனியாக மலர்ப்படுக்கையில் நொந்து படுதல் தகுமோ?
விரிவுரை
இத்
திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.
கந்தவேளாகிய கணவனை அடையுமாறு ஆன்மா வருந்துகின்ற தன்மையை விளக்குகின்றார்
அடிகளார்.
இடம்அடு
சுறவை முடுகிய மகரம் எறி கடலிடை எழு திங்களாலே ---
தன்
இடத்தில் இருந்து துன்பம் செய்கின்ற சுறாமீன்களை ஆற்றலுடன் விரட்டி அடிக்கின்ற மகர
மீன்கள் வாழ்கின்ற கடல்.
இதனால்
பிறரைத் துன்புறுத்துகின்றவர் வாழும் கடல்.
ஆதலால், கடலில் எழும்
சந்திரனும் இப் பெண்மணியைத் துன்புறுத்துகின்றான் என்ற குறிப்புத் தோன்றுகின்றது.
தனித்திருக்கின்ற
காதலன் கதாலிக்கு சந்திரன் வெப்பமாக வேதனையத் தருகின்றான்.
வாரி
மீதே எழு திங்களாலே --- திருப்புகழ்.
இருவினை
மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே ---
பெண்களால்
நல்வினையும் எய்தும், தீவினையும்
எய்தும். இன்பமும் வரும் துன்பமும் வரும்.
ஆகவே இருவினைக்கும் காரணம் பெண்கள் என்றார்.
இத்தகைய
பெண்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல வருகின்ற இளந்தென்றல் காற்றினால் இவள்
வருந்துகின்றாள்.
எல்லோருக்கும்
இன்பத்தைத் தருகின்ற தென்றல் காற்று, காதல்
வயப்பட்டோர்க்குத் துன்பத்தைத் தரும்.
எல்லோர்க்கும்
நன்மை செய்கின்ற மழை உப்பளம் வியாபாரிக்கும், செங்கல் சுடுகின்ற வியாபாரிக்கும்
துன்பத்தைத் தருவது போல் என உணர்க.
தடநடு
உடைய கடிபடு கொடிய சரம் ---
குளத்தின்
நடுவிலே மலர்ந்து வாசனை வீசும் இனிய தாமரை, நீலோற்பலம் என்ற மலர்கள் காமனுடைய
கணைகளாம்.
தறுகண்
அனங்கனாலே ---
தறுகண்
- அஞ்சாமை. மன்மதன் எவர்க்கும் அஞ்சாதவன்.
காசிபர், விசுவாமித்திரர்
முதலிய மாமுனிவர்கள் மீதும் மலர்க்கணை ஏவி மயக்கியவன்.
அனங்கன்
- உடம்பு இல்லாதவன். சிவபெருமான் கனல்
கண்ணால் எரிந்தான். இரதி வேண்ட, அவனை அவளுக்கு மட்டும் அங்கனாகவும், ஏனையோர்க்கு அனங்கனாகவும் இருக்குமாறு
சிவபெருமான் கருணை புரிந்தருளினார்.
சரிவளை
கழல ---
கணவனைப்
பிரிந்த துன்பத்தால் உடம்பு இளைத்து வளையல்கள் கழன்று விடுகின்றன.
"சங்காட்டம் தவிர்த்து
என்னைத் தவிரா நோய் தந்தானே" என்கின்றார் திருஞானசம்பந்தர்.
கருத்துரை
அருணாபுரி
மேவிய ஆண்டவனே, உன்னை விரும்பும் இப்
பெண்மணியை ஆண்டு அருள்.
No comments:
Post a Comment