திருவண்ணாமலை - 0528. இரவுபகல் பலகாலும்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரவுபகற் பலகாலும் (திருவருணை)

திருவருணை முருகா!
நிலைத்த பொருளாகிய உனது திருவடியை அடையத்
திருவருள் புரிவாய்.


தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதான தனதனனத் ...... தனதான


இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
     அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இரவுபகல் பலகாலும் இயல் இசை முத் ...... தமிழ் கூறி,
     திரம் அதனைத் தெளிவு ஆகத் திருவருளைத் ...தருவாயே.

பரகருணைப் பெருவாழ்வே! பரசிவ தத் ...... துவ ஞானா!
     அரன் அருள் சற் புதல்வோனே! அருணகிரிப் ....பெருமாளே.
  

பதவுரை

         பர கருணைப் பெருவாழ்வே --- மேலான கருனையுடன் விளங்கும் பெரிய வாழ்வானவரே!

         பர சிவதத்துவ ஞானா --- மேலான சிவமயமான உண்மைப் பொருளே!

         அரன் அருள் சற் புதல்வோனே --- சிவபெருமான் அருளிய நல்ல புதல்வரே!

         அருணகிரிப் பெருமாளே --- திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         இரவுபகல் பலகாலும் இயல் இசை முத்தமிழ் கூறி --- இரவும் பகலும் பலமுறையும் இயல், இசை (நாடகம்) என்ற மூன்று தமிழாலும் உம்மைப் புகழ்ந்து பாடி,

         திரம் அதனை --- நிலையான பொருள் எதுவோ அதனை,

     தெளிவாகத் திருவருளைத் தருவாயே --- அடியேனுக்குத் தெளிவாக விளங்க தேவரீருடைய திருவருளைத் தருவீராக.


பொழிப்புரை


         மேலான கருனையுடன் விளங்கும் பெரிய வாழ்வானவரே!

மேலான சிவமயமான உண்மைப் பொருளே!

சிவபெருமான் அருளிய நல்ல புதல்வரே!

திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         இரவும் பகலும் பலமுறையும் இயல், இசை (நாடகம்) என்ற மூன்று தமிழாலும் உம்மைப் புகழ்ந்து பாடி, நிலையான பொருள் இன்னதென்று அடியேனுக்குத் தெளிவாக விளங்க தேவரீருடைய திருவருளைத் தருவீராக.


விரிவுரை 

இரவு பகல் பலகாலும் ---

இறைவனுடைய புகழை இரவிலும் பகலிலும் மற்ற எந் நேரங்களிலும் மறவாமல் கூறிப் பாடித் துதி செய்ய வேண்டும்.

இயல் இசை முத்தமிழ் கூறி ---

இயலிசை முத்தமிழ் என்றதனில் இனம் பற்ற நாடகத் தமிழும் உடன் கூட்டிக் கொள்ளவேண்டும்.

முத்தமிழாலும் முருகவேளை ஏத்திப் போற்ற வேண்டும்.

திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே ---

திரம் - நிலையானது.

மண், மலை, கசல், மதி, கதிர் முதலியன அனைத்தும் நிலையில்லாதவை.  நிலையில்லாத பொருளை நிலைத்ததாகக் கருதுவது அறிவின்மையாகும்.

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறி வாண்மை கடை                     ---   திருக்குறள்.

உடம்பு, பதவி, செல்வம், ஆண்மை, வீரம் முதலியன இன்று இருந்து, நாளை மறையக் கூடியவை. இவைகளைக் கொண்டு, இவை என்றும் இருக்கக் கூடியவை என்று கருதக் கூடாது.  நிலையாயப் பொருள் பரம்பொருள் ஒன்றே ஆகும். அப் பொருளைப் பெறும்பொருட்டுத் திருவருளை வேண்டுதல் வேண்டும்.

கருத்துரை


அருணை மேவும் அரசே, நிலைத்த பொருளை அடையத் திருவருள் புரிவாய்.No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...