திருவண்ணாமலை - 0524. இடருக்கு இடர்ஆகிய
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இடருக்கு இடர்ஆகிய (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை விரும்பித் தவிக்கும் இந்தப் 
பெண்ணைத் தழுவி அருள்


தனனத் தனதானன தனனத் தனதானன
     தனனத் தனதானன ...... தனதான


இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
     மிறுதிச் சிறுகால்வரு ...... மதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
     லெரியைத் தருமாமதி ...... நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
     தொலையத் தனிவீசிய ...... கடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
     துவளத் தகுமோதுயர் ...... தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுடஏவிய ...... வடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புனமேவிய ...... மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
     லருணைத் திருவீதியி ...... லுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
     அமரர்க் கரசாகிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும்
     இறுதிச் சிறுகால் வரும் ...... அதனாலே,

இயலைத் தரு கானக முயலைத் தருமேனியில்
     எரியைத் தரு மாமதி ...... நிலவாலே,

தொடரக் கொடு வாதையில் அடையக் கரைமேல் அலை
     தொலையத் தனி வீசிய ...... கடலாலே,

துணை அற்று அணி பூமலர் அணையில் தனியேன் உயிர்
     துவளத் தகுமோ? துயர் ...... தொலையாதோ?

வடபொன் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
     மடியச் சுட ஏவிய ...... வடிவேலா!

மறவக் குலமாம் ஒரு குறமெய்த் திருமாமகள்
     மகிழப் புன மேவிய ...... மயில்வீரா!

அடரப் படர் கேதகை மடலில் தழை சேர் வயல்
     அருணைத் திருவீதியில் ...... உறைவோனே!

அவனித் திருமாதொடு சிவனுக்கு இமையா விழி
     அமரர்க்கு அரசாகிய ...... பெருமாளே.


பதவுரை


      வட பொன் குல மேருவின் --- வடக்கே உள்ள சிறந்த பொண்மேரு மலைபோல

     முடுகிப் பொரு சூரனை மடியச் சுட ஏவிய வடிவேலா --- வேகமாகச் சென்று போர் செய்த சூரபன்மனை மாய்ந்து தீய்ந்து போகும்படி செலுத்திய கூரிய வேலாயுதத்தை உடையவரே!

      மறவக் குலமாம் --- வேடர் குலத்தவளாகிய

     ஒரு குறமெய்த் திருமாமகள் மகிழ --- ஒப்பற்ற குறப் பெண்ணான, மெய்ம்மை விளங்கும் இலக்குமிதேவியின் சிறந்த புதல்வியாகிய வள்ளிநாயகி மகிழுமாறு

     புனம் மேவிய மயில் வீரா --- தினைப்புனத்திற்கு விரும்பிச் சென்ற மயில்மீது வரும் மூர்த்தியே!

      அடரப் படர் கேதகை மடலில் --- நெருக்கமாக வளர்ந்துள்ள தாழையின் மடலின்

     தழை சேர் வயல் --- தழைகள் சேர்ந்துள்ள வயல்களை உடைய

     அருணைத் திருவீதியில் உறைவோனே --- திருவண்ணாமலைத் திருவீதியில் எழுந்தருளி இருப்பவரே!

      அவனித் திருமாதொடு --- பூதலத்துக்கும், இலக்குமிக்கும்,

     சிவனுக்கு --- சிவபெருமானுக்கும்,

     இமையாவிழி அமரர்க்கு --- இமையாத கண்களை உடைய தேவர்கட்கும்

     அரசாகிய பெருமாளே --- தலைவராக விளங்கும் பெருமையில் சிறந்தவரே!

      இடருக்கு இடர் ஆகிய --- துன்பத்துக்கும் மேல் துன்பம் தருவதாகிய

     கொடுமைக் கணை மேல்வரும் --- மன்மத பாணங்களின் மேலே வந்து,

     இறுதிச் சிறுகால் வரும் அதனாலே --- முடிவைச் செய்கின்ற தென்றல் காற்று வீசுவதனாலும்,

      இயலைத் தரு --- தகுதி உடையதும்,

     கானக முயலைத் தரு மேனியில் --- காட்டில் வாழும் முயல் போன்ற களங்கத்தை உடையதுமான உருவத்தில்

     எரியைத் தரு மாமதி நிலவாலே --- நெருப்பினை வீசும் அழகிய சந்திர ஒளியாலும்,

      தொடரக் கொடு வாதையில் அடைய --- தொடர்ந்து கொடிய வேதனையை நான் அடையுமாறு

     கரைமேல் அலை தொலையத் தனி வீசிய கடலாலே --- கரைமீது அலைகள் பட்டழிய ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலினாலும்,

      துணை அற்று அணி பூமலர் அணையில் --- துணை ஒருவரும் இல்லாமல், அழகிய மலர்ப்படுக்கையில்

     தனியேன் உயிர் துவளத் தகுமோ --- தனிமையேனாகிய என் உயிர் வாடுதல் தகுமோ?

     துயர் தொலையாதோ --- என் துன்பம் ஒழியாதோ?


பொழிப்புரை


         வடக்கே உள்ள சிறந்த பொன்மேரு மலைபோல வேகமாகச் சென்று போர் செய்த சூரபன்மனை மாய்ந்து தீய்ந்து போகும்படி செலுத்திய கூரிய வேலாயுதத்தை உடையவரே!

         வேடர் குலத்தவளாகிய ஒப்பற்ற குறப் பெண்ணான, மேயம்மை விளங்கும் இலக்குமிதேவியின் சிறந்த புதல்வியாகிய வள்ளிநாயகி மகிழுமாறு தினைப்புனத்திற்கு விரும்பிச் சென்ற மயில்மீது வரும் மூர்த்தியே!

         நெருக்கமாக வள்ரந்துள்ள தாழையின் மடலின் தழைகள் சேர்ந்துள்ள வயல்களை உடைய திருவண்ணாமலைத் திருவீதியில் எழுந்தருளி இருப்பவரே!

         பூதலத்துக்கும், இலக்குமிக்கும், சிவபெருமானுக்கும், இமையாத கண்களை உடைய தேவர்கட்கும் தலைவராக விளங்கும் பெருமையில் சிறந்தவரே!

         துன்பத்துக்கும் மேல் துன்பம் தருவதாகிய மன்மத பாணங்களின் மேலே வந்து, முடிவைச் செய்கின்ற தென்றல் காற்று வீசுவதனாலும், தகுதி உடையதும், காட்டில் வாழும் முயல் போன்ற களங்கத்தை உடையதுமான உருவத்தில் நெருப்பினை வீசும் அழகிய சந்திர ஒளியாலும், தொடர்ந்து கொடிய வேதனையை நான் அடையுமாறு கரைமீது அலைகள் பட்ட்ழிய ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலினாலும், துணை ஒருவரும் இல்லாமல், அழகிய மலர்ப்படுக்கையில் தனிமையேனாகிய என் உயிர் வாடுதல் தகுமோ? என் துன்பம் ஒழியாதோ?

விரிவுரை


இத் திருப்புகழ் அகப் பொருளில் அமைந்தது.  முருகவேளாகிய நாயகனை அடையும் பக்குவப்பட்ட ஆன்மா தனிமையில் வருந்துவதாகத் தெரிவிக்கின்றது.

இடருக்கு இடராகிய கொடுமைக் கணை ---

கணவனை விரும்பும் ஒரு பெண்ணுக்கு மென்மேலும் துன்பத்தைத் தர மன்மதன் பூங்கணை எடுத்துத் தொடுத்து விடுப்பான்.

இறுதிச் சிறுகால் வரும் அதனாலே ---

இறுதியைச் செய்யும் அத்துணைத் துன்பத்தைத் தரும் தென்றல்.

சிறுகால் - இளங்காற்று.

பரவையாரை விரும்பிய சுந்தரர் தென்றல் காற்றை நோக்கி, "ஏ தமிழ்த் தென்றலே! நீ பிறந்தது அகத்தியர் வாழுகின்றதும், சிவபிரானுக்கு உரியதுமான பொதியமலை. நீ வளர்ந்தது செந்தமிழ் நாட்டில். செந்தழல் வீசித் துயரத்தைத் தருகின்றாயே நீ இந்தக் கொடுமையை எங்கே கற்றுக் கொண்டாய்?” என்று கூறுகின்றார்.

பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை,
சிறந்து அணைந்தது தெய்வநீர் நாட்டினில்,
புறம்பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்.   ---   பெரியபுராணம்.

முயலைத் திருமேனி ---

சந்திர மண்டலத்தில் முயல் வடிவில் தோன்றும் களங்கம்.

எரியைத் தரு மாமதி நிலவாலே ---

பிரிந்திருக்கும் தலைவிக்கும்-தலைவனுக்கும் குளிர்ந்த நிலா நெருப்பைப் போல் வெம்மையைச் செய்யும்.

    ஊரைச் சுடுமோ உலகம் தனைச் சுடுமோ
    ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
    பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
    நெருப்புவட்ட மான நிலா.            ---  பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

கேதகை மடலின் தழைசேர் வயல் ---

கேதகை - தாழை.  தாழையின் மயலுடன் கூடிய இலைகள் உதிர்ந்து வயலில் உரமாகி வளம் செய்கின்றன.

அவனித் திருமாதொடு சிவனுக்கு இமையாவிழி அமரர்க்கராகிய

பூவுலகுக்கும், இலக்குமிதேவிக்கும், சிவபெருமானுக்கும், இமைய விழியை உடைய இமையவர்க்கும் தலைவன் முருகன்.
  
கருத்துரை

அருணை உறை அரசே, உன்னை விரும்பித் தவிக்கும் தலைவியாகிய என்னைத் தழுவித் துயரைக் களைந்து அருள்

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...