திருவண்ணாமலை - 0550. கீதவிநோத மெச்சு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கீதவிநோத மெச்சு (திருவருணை)

திருவருணை முருகா!
மாதர் மயல் தீர,
மயில் ஏறி வந்து ஆட்கொள்.


தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான


கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே

நீதி யிலாத ழித்து ...... முழலாதே
     நீமயி லேறி யுற்று ...... வரவேணும்

சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
     சோண கிரீயி லுற்ற ...... குமரேசா

ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கீத விநோத மெச்சு ......         குரலாலே.
     கீறு மை ஆர் முடித்த ...... குழலாலே,

நீதி இலாத அழித்தும் ......       உழலாதே,
     நீ மயில் ஏறி உற்று ......    வரவேணும்.

சூது அமர் சூரர் உட்க ......        பொருசூரா!
     சோண கிரீயில் உற்ற ...... குமரஈசா!

ஆதியர் காது ஒருச் சொல்......    அருள்வோனே!
     ஆனை முகார் கனிட்ட ...... பெருமாளே.


பதவுரை


            சூது அமர் சூரர் உட்க பொரு சூரா --- வஞ்சனை குடிகொண்ட சூரர்களை அஞ்சும்படி போர் செய்த சூரமூர்த்தியே!

            சோண கிரீயில் உற்ற குமர ஈசா --- திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

            ஆதியர் காது ஒருச் சொல் அருள்வோனே --- முதற் கடவுளாம் சிவபெருமானுடைய திருச் செவியில் ஒப்பற்ற சொல்லாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்தவரே!

          ஆனை முகார் கனிட்ட பெருமாளே --- ஆனை முகம் உடைய விநாயகப் பெருமானுக்கு இளையவராகிய பெருமையில் சிறந்தவரே!

         கீத விநோத மெச்சு குரலாலே --- இராக விநோதங்கள் அமைந்தமை பற்றி மெச்சத்தக்க குரலின் இனிமை கண்டும்,

          கீறு மையார் முடித்த குழலாலே --- வகிர்ந்து வாரப்பட்டதும், கருமை நிறைந்ததும், முடி போட்டதுமான கூந்தலைக் கண்டும் மயங்கி,

         நீதி இலாது அழித்தும் உழலாதே --- நீதி என்பதே இல்லாத வகையில் பொருளையும் நேரத்தையும் அழித்து அடியேன் உழன்று வீணாகாத வண்ணம்,

          நீ மயில் ஏறி உற்று வரவேணும் --- தேவரீர் மயிலின் மீது ஏறி திருவுள்ளம் பொருந்தி வந்து அருளவேண்டும்.

பொழிப்புரை

         வஞ்சனை குடிகொண்ட சூரர்களை அஞ்சும்படி போர் செய்த சூரமூர்த்தியே!

         திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

         முதற் கடவுலாம் சிவபெருமானுடைய திருச் செவியில் ஒப்பற்ற சொல்லாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்தவரே!

          ஆனை முகம் உடைய விநாயகப் பெருமானுக்கு இளையவராகிய பெருமையில் சிறந்தவரே!

         இராக விநோதங்கள் அமைந்தமை பற்றி மெச்சத்தக்க குரலின் இனிமை கண்டும், வகிர்ந்து வாரப்பட்டதும், கருமை நிறைந்ததும், முடிந்து போட்டதுமான கூந்தலைக் கண்டும் மயங்கி, நீதி என்பதே இல்லாத வகையில் பொருளையும் நேரத்தையும் அழித்து அடியேன் உழன்று வீணாகாத வண்ணம், தேவரீர் மயிலின் மீது ஏறி திருவுள்ளம் பொருந்தி வந்து அருளவேண்டும்.

விரிவுரை


கீத விநோத மெச்சு குரலாலே ---

கீதம் - இராகம்.  பண் என்ற இசை விநோதங்கள் அமைந்த இனிய குரல் உடையவர்கள் பொதுமகளிர்.

அந்த இனிய குரலைக் கேட்டு ஆடவர் மயங்குவர்.

கீறுமையார் முடித்த குழலாலே ---

கீறு - கூந்தலில் இடையில் உள்ள வகிர்.  மை ஆர் - கருமை நிறைந்த பெண்களின் கூந்தலுக்கு அடவரை மயக்கும் ஆற்றல் உண்டு.

நீதியிலாது அழித்தும் உழலாதே ---

பெண் மயலில் கட்டுண்டவர்க்கு நீதிநெறி விளங்காது. இன்பம் துன்பமாகவும், துன்பம் இன்பமாகவும், பகல் இரவாகவும், இரவு பகலாகவும் காட்சி அளிக்கும். அரிதில் தேடிய பொருளையும், விலைமதிக்க முடியாத வாழ்நாளையும் வறிதே செலவழித்து உழலுவர்.
  
சூது அமர் சூரர் உட்க ---

சூது - வஞ்சனை.  வஞாசனை குடியிருக்கும் சூரர்கள் அஞ்சுமாறு முருகவேள் போர் புரிந்து அழித்து அருளினார்.

சூது - சூதம், அமர் சூரர் - எனப் பிரித்து, மாமரமாய் நின்ற சூரபதுமன் என்றும் பொருள் கொள்ளலாம்.

சோணகிரீயில் உற்ற குமரேசா

சோணம் - சிவப்பு.  சிவந்த கிரி - அருணாசலம்.  இது நெருப்பு வடிவானது.

ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ---

ஆதி - முதல்.  சகல தேவர்கட்கும் முழுமுதல் சிவபெருமான் ஒருவரே ஆவார்.

தீதுஇலா மலை எடுத்த அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட
ஆதியான் ஆகிய அண்ணல் எங்கள்
மாதி தன் வளநகர் மாற்பேறே.           ---  திருஞானசம்பந்தர்.

முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை
வண்டுஉலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானைப்
பிண்டமே ஆயினானைப் பெருவேளூர் பேணினானை
அண்டமாம் ஆதியானை அறியுமாறு அறிகிலேனே.  ---  அப்பர்.

குருதி சோர ஆனையின் தோல்
         கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
         மால்அய னும்அறியாச்
சுருதி யார்க்கும் சொல்ல வொண்ணாச்
         சோதி எம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
         என்பது அடைவோமே.                       --- சுந்தரர்.

ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்று அருளாயே …..             ---  திருவாசகம்.

ஆனைமுகார் கனிட்ட ---

சிவகுமாரர்கள் நால்வர்.  விநாயகர், வீரபத்திரர், பைரவர், வேலவர்.  விநாயகராகிய மூத்த பிள்ளையாருடைய இளவல் முருகவேள்.

கருத்துரை
 

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள முருகவேளே, மாதர் மயக்கமுறாத வண்ணம் மயில்மீது வந்து அடியேனை ஆட்கொண்டு அருளும்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...