திருவண்ணாமலை - 0517. அருக்கார் நலத்தை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருக்கார் நலத்தை (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேனுக்குக் கலைஞானத்தைத் தந்து அருள்.


தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
     தனத்தா தனத்தத் ...... தனதான


அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
     கடுத்தாசை பற்றித் ...... தளராதே

அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
     டறப்பே தகப்பட் ...... டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
     கலிச்சா கரத்திற் ...... பிறவாதே

கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
     கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே

ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
     டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே

உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
     டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா

திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
     றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருக்கார் நலத்தைத் திரிப்பார், மனத்துக்கு
     அடுத்த ஆசை பற்றித் ...... தளராதே,

அடல் காலனுக்குக் கடைக்கால் மிதித்திட்டு,
     அறப் பேதகப்பட்டு ...... அழியாதே,

கருக்காரர் நட்பைப் பெருக்க ஆசரித்துக்
     கலிச் சாகரத்தில் ...... பிறவாதே,

கருத்தால் எனக்குத் திருத்தாள் அளித்துக்
     கலைப் போதகத்தைப் ...... புகல்வாயே.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
     உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!

உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,
     ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா!

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில்
     திருக் கோபுரத்தில் ...... பெருமாளே.


பதவுரை

      ஒருக்கால் நினைத்திட்டு --- ஒருமுறை தேவரீரை நினைத்து,

     இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே --- இரு திருவடிகளையும் மிகுதியாகத் துதிப்பவர்களுடைய உள்ளத்தில் உறைபவரே!

         உரத் தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு --- வலிமை மிகுந்த திருத்தோள்களில் தேன் போன்ற வள்ளிநாயகியை எடுத்துக்கொண்டு

     ஒளித்து ஓடும் வெற்றிக் குமர ஈசா --- ஒளிந்து ஓடிய வெற்றி பொருந்திய குமாரக் கடவுளே!

      செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்க --- ஆணவம் கொண்டு கர்வம் பூண்டு, தேவர்களாகிய தெய்வத்தன்மை உடையோரை ஒடுக்கிய,

     செருச்சூர் மரிக்கப் பொரும் வேலா ---- போருக்கு வந்த அந்த சூரபன்மன் இறக்க, போர் செய்த வேலாயுதரே!

      திறப் பூதலத்தில் திரள் --- நிலைபெற்ற இந்த உலகத்தில் திரண்டு நிற்கும்

     சோண வெற்பில் திருக்கோபுரத்தில் பெருமாளே ---- திருவண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      அருக்கார் நலத்தைத் திரிப்பார் --- அருமை வாய்ந்த உடல் நலத்தைக் கெடுப்பவர்களாகிய பொது மாதர்களின்

     மனத்துக்கு அடுத்த ஆசை பற்றித் தளராதே --- மனத்துக்கு வேண்டியபடி ஆசைகொண்டு தளர்ச்சி அடையாமலும்,

      அடல் காலனுக்குக் கடைக்கால் மிதித்திட்டு --- வலிமை மிக்க காலன் உயிரைப் பற்றுதற்கு அடிப்படையைக் கோலி,

     அறப் பேதகப்பட்டு அழியாதே --- மிகவும் மனம் வேறுபாடு அடைந்து அழியாமலும்,

      கருக்காரர் நட்பைப் பெருக்க ஆசரித்து --- பிறவிக்கு ஏதுவான செய்கையை உடையோரது உறவை மிகவும் கைக்கொண்டு

     கலிச் சாகரத்தில் பிறவாதே --- துன்பக் கடலில் வீழ்ந்து பிறவாமலும்,

      கருத்தால் எனக்குத் திருத்தாள் அளித்து --- தேவரீர் அடியேன் மீது திருவுள்ளம் வைத்து, அடியேனுக்கு உமது திருவடியைத் தந்து,

     கலைப் போதகத்தைப் புகல்வாயே --- கலைஞானத்தை உபதேசித்து அருளுவீராக.

பொழிப்புரை

         ஒருமுறை தேவரீரை நினைத்து, இரு திருவடிகளையும் மிகுதியாகத் துதிப்பவர்களுடைய உள்ளத்தில் உறைபவரே!

         மலிமை மிகுந்த திருத்தோள்களில் தேன் போன்ற வள்ளிநாயகியை எடுத்துக்கொண்டு ஒளிந்து ஓடிய வெற்றி பொருந்திய குமாரக் கடவுளே!

         ஆணவம் கொண்டு கர்வம் பூண்டு, தேவர்களாகிய தெய்வத்தன்மை உடையோரை ஒடுக்கிய, போருக்கு வந்த அந்த சூரபன்மன் இறக்க, போர் செய்த வேலாயுதரே!

         நிலைபெற்ற இந்த உலகத்தில் திரண்டு நிற்கும் திருவண்ணாமலையில் அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

         அருமை வாய்ந்த உடல் நலத்தைக் கெடுப்பவர்களாகிய பொது மாதர்களின் மனத்துக்கும் வேண்டியபடி ஆசைகொண்டு தளர்ச்சி அடையாமலும்,

         வலிமை மிக்க காலன் உயிரைப் பற்றுதற்கு அடிப்படையைக் கோலி, மிகவும் மனம் வேறுபாடு அடைந்து அழியாமலும்,

         பிறவிக்கு ஏதுவான் செய்கையை உடையோரது உறவை மிகவும் கைக்கொண்டு துன்பக் கடலில் வீழ்ந்து பிறவாமலும்,

         தேவரீர் அடியேன் மீது திருவுள்ளம் வைத்து, அடியேனுக்கு உமது திருவடியைத் தந்து, கலைஞானத்தை உபதேசித்து அருளுவீராக.


விரிவுரை

அருக்கார் நலத்தைத் திரிப்பார் ---

அருக்கு - அருமை. இந்த உடம்பை இறைவன் கோயிலாகக் கொண்டு உள்ளான். "ஊனுடம்பு ஆலயம்" என்கின்றார் திருமூலர்.  ஆதலால், இந்த உடம்பு அருமையானது.  இந்த அரிய உடல் நலத்தை அறவே கெடுக்கும் தன்மை உடையவர் விலைமகளிர்.

மனத்துக்கு அடுத்த ஆசை பற்றித் தளராதே ---

விலைமாதருடைய மனத்துக்கு எது விருப்பம் என்று ஆராய்ந்து, அதனையே செய்து, அவர்கள் மீது மிகவும் ஆசை வைத்து, அதனால் மாந்தர் தளர்ச்சி அடைகின்றனர். மாதர் ஆசையால் மடிந்தோர் பலர். சுந்தோபசுந்தர் திலோத்தமையை விரும்பி மாய்ந்தார்.

அடல் காலனுக்குக் கடைக்கால் மிதித்திட்டு ---

காலன் என்பவன் இயமனுடைய அமைச்சன். உயிர்களைப் பற்றும் காலம் பார்த்து வருவதனால் காலன் என்று பேர் பெற்றான். காலன் வந்து உயிரைப் பற்றுதற்கு வேண்டிய அடிப்படையைச் செய்கின்றேன் என்கின்றார்.

கருத்தால் ---

"முருகா, தேவரீர் இவன் நம் அடியான் என்று திருவுளம் செய்தல் வேண்டும்" என்று அருணகிரியார் முறையிடுகின்றார். "ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே" என்று கந்தர் அநுபூதியிலும், "கருதி ஒரு பரமபொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி" என்று "ஒருவரையும்" எனத் தொடங்கும் திருப்புகழிலும் அருளுகின்றார்.

கலைப் போதகத்தைத் தருவாயே ---

கலைப் போதகம் - கலை ஞானம். உவமையிலாக் கலைஞானம் என்கின்றார் சேக்கிழார் பெருமான். பரஞானத்துக்குக் கலைஞானம் ஏதுவாக இருந்து உதவுகின்றது.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே ---

ஒருமுறை நினைத்து இரு திருவடிகளைத் துதி செய்தாலும் அந்த அடியார்களின் உள்ளத்தில் முருகன் உறைவான்.  இது அப் பெருமானுடைய கருணையின் எளிமையை உணர்த்துகின்றது.

"ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார்முன்"

"இரு கால்" என்பது சந்தத்தை நோக்கி "இருக்கால்" என வந்தது.

அன்றி, "இருக்கால்" என்பது இருக்கு வேத மந்திரத்தால் துதி செய்பவர் எனினும் பொருந்தும். 

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ---  திருவாசகம்.

கருத்துரை

அருணை மேவும் ஐயனே, அடியேனுக்குக் கலைஞானத்தைத் தந்தருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...