திருப் பனையூர்

திருப் பனையூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்

பேரளம் - திருவாரூர் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து சென்று 'பனையூர் ' என்று கைகாட்டியுள்ள கிளைப்பாதையில் 1 கி. மீ. செல்ல வேண்டும். குறுகலான மண்பாதை, பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும்.


இறைவர்              : சௌந்தரேசுவரர், அழகியநாதர்,  தாலவனேசுவரர்.

இறைவியார்           : பிரகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்                : பனை.

தீர்த்தம்               : பராசர தீர்த்தம். (அமிர்தபுஷ்கரணிதிருமகள் தீர்த்தம்)

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - அரவச் சடைமேல் மதிமத்தம்.
                                  2. சுந்தரர்  - மாடமாளிகை கோபுரத்தொடு.

          இவ்வூருக்கு 'தாலவனம் ' என்றும் பெயர்; கோயிலுக்கு 'தாலவனேஸ்வரம் ' என்று பெயர்.

          கோயில் வாயில் நுழைந்ததும் - துணை இருந்த விநாயகர் - தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய் மாமனாகிய 'இரும்பிடர்த்தலையார் ' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூர்க்கு அனுப்பி வைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூர்க்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் 'துணை இருந்த விநாயகர் ' என்னும் பெயர் பெற்றார்.

          சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து " என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர் ' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊருக்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.

          சிறிய ஊர், பழமையான கோயில்; கரிகாற் சோழன் வளர்ந்த ஊர்.

          பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர்; இதற்கு "தாலவனம் " (தாலம் - பனை) என்றும் பெயருண்டு.

          தல மரங்களாக இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்த இம்மரங்கள் முதிர்ச்சியுறுங் காலத்தில், "வித்திட்டு முளைக்காததாக" (வாழையைப் போல) இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.

          கல்வெட்டில் இறைவன் 'பனையடியப்பன்', 'பனங்காட்டிறைவன் ' என்று குறிக்கப்பெறுகின்றன.

          சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக, இங்கு பிரகாரத்தில் உள்ள விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.

          சப்த ரிஷிகள் வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.

          பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் - இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார்.

          இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்பாக - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

          இக்கோயில் கி. பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும்; கல்வெட்டில் இக்கோயில் "இராசேந்திர சோழப் பனையூர் " என்று குறிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கண்டு ஈச நண்பனை ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழும் தண் பனையூர் மேவும் சடாதரனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 518
புவனஆ ரூரினில் புறம்புபோந்து,
         அதனையே நோக்கிநின்றே,
அவம்இலா நெஞ்சமே, அஞ்சல், நீ
         உய்யுமாறு அறிதிஅன்றே,
சிவனது ஆரூர்தொழாய் நீமற
         வாது,என்று செங்கைகூப்பிப்
"பவனமாய்ச் சோடையாய்" எனும்திருப்
         பதிகம் முன் பாடினாரே.

         பொழிப்புரை : மண் உலகத்தில் சிறந்த திருவாரூரின் நகர்ப் புறத்தின் மருதநிலத்தில் போய்ச் சேர்ந்து, அந் நகரத்தையே நோக்கி நின்ற வண்ணம், `பயனில்லாது கழிந்து போகாத மனமே! நீ அஞ்சாதே! உய்யும் வகையினை அறிவாய் அல்லையோ! சிவபெருமானின் திருவாரூரை நீ மறக்காது தொழுவாயாக!\' எனச் சொல்லி சிவந்த கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு, `பவனமாய்ச் சோடையாய்\' எனத் தொடங்கும் பதிகத்தை அந்நகரின் முன்பாடி அருளினார்.

         இப்பதிகம் `பவனமாய்' (தி.2 ப.79) எனத்தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். நெஞ்சறிவுறுத்தலாக அமைந்த இப்பதிகம், பிள்ளையார் தம் அளவில் பிரிவாற்றாமையாகவும், நம்மனோர் அளவில் அறவுரையாகவும் அமைந்த பதிகமாகும்.  `பதிகமுன் பாடினாரே' என்பது `பதிகமே பாடிநின்றார்' என்றும் பாடம்.

  
பெ. பு. பாடல் எண் : 519
காழியார் வாழவந்து அருள்செயும்
         கவுணியப் பிள்ளை யார்தாம்,
ஆழியான் அறியொணா அண்ணல்
         ஆரூர்பணிந்து, அரிது செல்வார்,
பாழிமால் யானையின் உரிபுனைந்
         தார்பனை யூர்ப ணிந்து,
வாழிமா மறைஇசைப் பதிகமும்
         பாடிஅப் பதியில் வைகி.

         பொழிப்புரை : சீகாழியிலுள்ளார் வாழ்வதன் பொருட்டாய்த் தோன்றிய கவுணியர், திருமாலும் அறியமுடியாத இறைவரின் திருவாரூரினைப் பணிந்து மேற்செல்பவராய், வலிமையும் மதமயக்கமும் உடைய யானையின் தோலைப் போர்த்த சிவபெருமானின் `திருப்பனையூரைப்' பணிந்து, வாழ்வுடைய பெரிய மறைகளின் பொருளையும் இசையினையும் உடைய திருப்பதிகத்தையும் பாடி அப்பதியில் தங்கியிருந்து,

         திருப்பனையூரில் அருளிய பதிகம் `அரவச் சடைமேல்' (தி.1 ப.37) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

  
1.037   திருப்பனையூர்                   பண் - தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

         பொழிப்புரை :சடைமுடிமேல் அரவம், மதி, ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்த சிவபெருமானது தலம் தொண்டர்கள் பலரும் கலந்து நாள்தோறும் வணங்கி மகிழ்வுறும் திருப்பனை யூராகும்.


பாடல் எண் : 2
எண்ஒன்றி நினைந் தவர்தம்பால்
உள்நின் றுமகிழ்ந் தவன்ஊர்ஆம்
கள்நின்று எழுசோ லையில்வண்டு
பண்நின்று ஒலிசெய் பனையூரே.

         பொழிப்புரை :மனம் ஒன்றி நினைந்த அடியார்களின் உள்ளத் துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன் பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில் வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையூராகும்.


பாடல் எண் : 3
அலரும் எறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறைஒன்று உடையான்ஊர்
சிலர் என்றும் இருந்து அடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.

         பொழிப்புரை :விளங்கும் எரிபோலச் சிவந்த சடைமுடிமீது   வளரும் பிறையொன்றை உடைய சிவபெருமானது ஊர், அடியவர்களில் சிலர் என்றும் இருந்து திருவடிகளைப் பரவிப்பூசனை செய்து போற்றவும், பலர் பலகாலும் வந்து பரவ விளங்கும் திருப்பனையூராகும்.


பாடல் எண் : 4
இடிஆர் கடல்நஞ்சு அமுதுஉண்டு
பொடிஆ டியமே னியினான் ஊர்
அடியார் தொழமன் னவர்ஏத்தப்
படியார் பணியும் பனையூரே.

         பொழிப்புரை :கரைகளை மோதுதல் செய்யும் கடலிடைத் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, மேனி மீது திருநீற்றுப் பொடியை நிரம்பப்பூசிய சிவபெருமானது ஊர், அடியவர்கள் தொழ, மன்னவர்கள் ஏத்த உலகில் வாழும் பிறமக்கள் பணியும் திருப்பனையூராகும்.


பாடல் எண் : 5
அறைஆர் கழல்மேல் அரவுஆட
இறைஆர் பலிதேர்ந் தவனஊர்ஆம்
பொறைஆர் மிகுசீர் விழமல்கப்
பறையார் ஒலிசெய் பனையூரே.

         பொழிப்புரை :ஒலிக்கின்ற வீரக்கழல் மேல் அரவு ஆட முன் கைகளில் பலியேற்றுத் திரியும் பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.


பாடல் எண் : 6
அணிஆர் தொழவல் லவர்ஏத்த
மணிஆர் மிடறுஒன்று உடையான்ஊர்
தணிஆர் மலர்கொண்டு இருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.

         பொழிப்புரை :தம்மைப் பூசனை செய்து தொழவல்ல அடியவர்கள் அண்மையில் இருப்பவராய், அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணிபோலும் கண்டத்தை உடைய சிவபெருமானது ஊர், தன்னைப் பணியும் அடியவர் குளிர்ந்த மலர்களைக் கொண்டு இருபோதும் தூவி வழிபடும் இடமான திருப்பனையூராகும்.


பாடல் எண் : 7
அடையா தவர்மூ எயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
உடையான் அவன்எண் பலபூதப்
படையான் அவன்ஊர் பனையூரே.

         பொழிப்புரை :தன்னை வணங்காத பகைவர்களான அசுரர்களின் மூன்று அரண்களையும் அழித்த விடையூர்தியனும், வலியயானையை உரித்து அதன் தோலை மேல் ஆடையாகக் கொண்டவனும் எண்ணற்ற பல பூதப்படைகளை உடையவனுமான சிவபெருமானது ஊர் திருப்பனையூராகும்.


பாடல் எண் : 8
இலகும் முடிபத் துஉடையானை
அலல்கண்டு அருள்செய் தஎம் அண்ணல்
உலகில் உயிர்நீர் நிலம் மற்றும்
பலகண் டவன்ஊர் பனையூரே.

         பொழிப்புரை :விளங்கும் முடிபத்தை உடைய இராவணனை அடர்த்து அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின்கண் உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்தளித்தவனும் ஆகிய சிவபெருமானது ஊர் திருப்பனையூர்.


பாடல் எண் : 9
வரம் உன் னிமகிழ்ந்து எழுவீர்காள்
சிரம் முன் அடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமால் அறியாத
பரமன் உறையும் பனையூரே.

         பொழிப்புரை :சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான் திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.


பாடல் எண் : 10
அழிவல் அமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவுஇல் லதொர்செம் மையினான்ஊர்
பழிஇல் லவர்சேர் பனையூரே.

         பொழிப்புரை :அழிதலில் வல்ல அமணர்களும் பௌத்தர்களும் வாய்த்திறனால் புறங்கூறிய போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது ஊர் பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.


பாடல் எண் : 11
பார்ஆர் விடையான் பனையூர்மேல்
சீர்ஆர் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொல்மா லைகள்பத்தும்
ஊர்ஊர் நினைவார் உயர்வாரே.


         பொழிப்புரை :மண்ணுலகிற் பொருந்தி வாழ்தற்கு ஏற்ற விடை ஊர்தியைக் கொண்ட சிவபெருமானது திருப்பனையூரின் மேல் புகழால் மிக்க தமிழ் ஞானசம்பந்தன் மென்மேலும் விருப்பத்தைத் தருவனவாகப் போற்றிப் பாடிய சொன்மாலைகளான இப்பத்துப் பாடல்களையும் ஒவ்வோரூரிலும் இருந்துகொண்டு நினைவார் உயர்வெய்துவர்.

                                             திருச்சிற்றம்பலம்


----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு:
         சுவாமிகள், திருப்புகலூர் இறைவரைத் தொழுது செங்கல் பொன்னாகப் பெற்றுப் பதிகம் பாடிப் பரவி நிதிக் குவைகளை எடுத்துக் கொண்டு திருப்பனையூர் செல்லும்பொழுது, ஊர்ப் புறத்தே பெருமான் திருக்கூத்தாடும் கோலம் காட்டக்கண்டு வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 53)

பெரிய புராணப் பாடல் எண் : 52
பதிகம் பாடித் திருக்கடைக்காப்பு
         அணிந்து பரவிப் புறம்போந்தே
எதிர்இல் இன்பம் இம்மையே
         தருவார் அருள்பெற்று எழுந்தருளி,
நிதியின் குவையும் உடன்கொண்டு,
         நிறையும் நதியும் குறைமதியும்
பொதியும் சடையார் திருப்பனையூர்
         புகுவார் புரிநூல் மணிமார்பர்.

         பொழிப்புரை : இத்திருப்பதிகம் பாடி அப்பதிகத்திற்குத் திருக்கடைக்காப்பும் அணிந்து போற்றி, வெளியே போந்து, ஒப்பற்ற இன்பத்தை இப்பிறவியிலேயே தரும் பெருமானின் அருள் பெற்று, அப்பெருமானின் அருளால் பெற்ற பொன் குவியலையும் உடன் கொண்டு, நீர் நிறைந்த கங்கை நதியையும், இளம் பிறையையும், திருச்சடையையும் உடைய பெருமானின் திருப்பனையூர் என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்தார் முந்நூலணிந்த அழகிய மார்புடன் விளங்கும் சுந்தரர்.

         எதிரில் - ஒப்பற்ற. `இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம், அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே' என வரும் இப்பதிக முதற் பாடல் கருத்தை உளங்கொண்டே `எதிரிலின்பம் இம்மையே தருவார் அருள் பெற்று' என ஆசிரியர் அருளுவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 53
செய்ய சடையார் திருப்பனையூர்ப்
         புறத்துத் திருக்கூத் தொடும்காட்சி
எய்த அருள, எதிர்சென்றுஅங்கு
         எழுந்த விருப்பால் விழுந்துஇறைஞ்சி,
ஐயர் தம்மை "அரங்குஆட
         வல்லார் அவரே அழகியர்" என்று
உய்ய உலகு பெறும்பதிகம்
         பாடி, அருள்பெற்று உடன்போந்தார்.

         பொழிப்புரை : திருப்பனையூர்த் திருக்கோயிலுக்குச் சுந்தரர் வந்து கொண்டிருக்க, அவர் முன்பாகச் சிவந்த சடையையுடைய சிவபெருமான், தம் கோயிலின் வெளிப்புறத்து, திருக்கூத்தாடும் காட்சியைக் காணுமாறு அருள் செய்திடலும், அங்கு எழுந்த பெருவிருப்பால் விழுந்து வணங்கிப் பெருமானை `அரங்காட வல்லார் அவரே அழகியர்' என்று இவ்வுலகம் உய்யத் திருப்பதிகம் பாடி, அருள் பெற்று, உடன் திருப்பனையூரினின்றும் சென்றார்.

         `மாடமாளிகை' (தி.7 ப.87) எனத் தொடங்கும் இத் திருப்பதிகம் சீகாமரப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் வரும் ஒன்பது பாடல்களிலும் பெருமானின் திருநடனத்தைப் பலவாறாகச் சிறப்பித்து, அவ்வாறு ஆடல் வல்லார் அவரே அழகியரே என நிறைவு படுத்தியருளுகின்றார் ஆரூரர். அதனையுளங்கொண்ட குறிப்பிலேயே ஆசிரியர் இப்பாடலை அருளியுள்ளார். திருக்கடைக்காப்பில், `வன்றொண்டன் செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே' என நிறைவு செய்திருப்பதும் அறிந்தின்புறத் தக்கதாம்.


பெ. பு. பாடல் எண் : 54
வளம்மல் கியசீர்த் திருப்பனையூர்
         வாழ்வார் ஏத்த எழுந்தருளி,
அளவுஇல் செம்பொன் இட்டிகைகள்
         ஆல்மேல் நெருங்கி அணிஆரூர்த்
தளவ முறுவல் பரவையார்
         தம்மாளிகையில் புக, தாமும்
உளமன் னியதம் பெருமானார்
         தம்மை வணங்கி உவந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : வளம் நிறைந்த சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்வார் வழிக்கொண்டு வணங்கிட, எழுந்தருளிச் சென்று, அளவற்ற செம்பொன் கட்டிகள் யாவற்றையும் ஆள்கள் எடுத்துவர, நெருங்கி வந்து, அழகிய திருவாரூரில் முல்லையரும்பு போலும் புன்முறுவலுடைய பரவையார் மாளிகையில் அவர்கள் புகுந்திட, தாமும் தம் உள்ளத்துப் பொருந்திய திருவாரூர்ப் பெருமானை வணங்கிப் பெருமகிழ்வுடன் சேர்வாராகி,


7. 087   திருப்பனையூர்               பண் - சீகாமரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மாடம் மாளிகை கோபு ரத்தொடு
         மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டுஅறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்துஒரு காதி னில்குழை
         தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்று
ஆடு மாறுவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : உயர்ந்த மேல்மாடங்களும் , சிறந்த மாளிகைகளும் , கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற , ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற , நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , ஒருகாதிற் குழை தூங்க , மற்றொரு காதினில் தோட்டினை இட்டு , அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையவர் .


பாடல் எண் : 2
நாறு செங்கழு நீர்ம லர்
         நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
நீறு பூசிநெய் ஆடித் தம்மை
         நினைப்பவர் தம்ம னத்தர் ஆகிநின்று
ஆறு சூடவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும் , நல்ல மல்லிகை மலரையும் , சண்பக மலரையும் , சேறு செய்யப்பட்ட கழனி யாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளி யிருக்கின்ற , நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி , தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும் , நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 3
செங்கண் மேதிகள் சேடு எறிந்து
         தடம்ப டிதலில் சேல்இ னத்தொடு
பைங்கண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னார்அடி
         யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந்து உறைவார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : சிவந்த கண்களையுடைய எருமைகள் , வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால் , அங்குள்ள கயல்மீனின் கூட்டமும் , பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக் கின்ற , சந்திரனைச் சூடிய செல்வனார் , தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின் , அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 4
வாளை பாய மலங்கு இளங்கயல்
         வரிவ ரால்உக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டம்இட்டு
         ஆடு வார்அடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : வாளை மீன்கள் துள்ள , மலங்கும் , இளமையான கயலும் , வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும் , பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந் துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற , திரண்ட தோள் களும் , அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும் , தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 5
கொங்கை யார்பல ரும்கு டைந்ந்து
         ஆட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மால்ஒர் பாகமும்
         தாம் உடையவர் மான்ம ழுவினொடு
அங்கைத் தீ உகப்பார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால் , குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர , அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி இருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும் , திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும் , அகங்கையில் , ` மான் , மழு , தீ ` என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 6
காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
         தாம்ப ரவிய கருணை அங்கடல்
பாவி ரிபுலவர் பயி லும்தி ருப்பனையூர்
மா விரிமட நோக்கி அஞ்ச
         மதக ரிஉரி போர்த்து உகந்தவர்
ஆவில் ஐந்துஉகப்பார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய் , பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு , மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும் , பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையார் .


பாடல் எண் : 7
மரங்கள் மேல்மயில் ஆல மண்டப
         மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாய்பிளந் தானும் தூமலர்த்
         தோன்ற லும் அறி யாமை தோன்றிநின்று
அரங்கில் ஆடவல்லார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம் , மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளின்மேல் , தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , குதிரை உருவங்கொண்டு வந்த , ` கேசி ` என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும் , தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று , மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 8
மண்நி லாமுழ வம்அ திர்தர
         மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்தி ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
         விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ணல் ஆகிநின்றார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : மாடம் , மாளிகை , கோபுரம் இவைகளில் , மண் பொருந்திய மத்தளம் அதிர , யாழ்கள் பண்களை இசைக்கின்ற , நல்ல வயல்கள் சூழ்ந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட , விண்ணவரும் மண்ணவரும் தொழுமாறு தலைவராகி நின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 9
குரக்கு இனம்குதி கொள்ளத் தேன்உகக்
         குண்டு தன்அயற் கெண்டை பாய்தரப்
பரக்கும் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை
         தோள் இருபது தாள்நெ ரிதர
அரக்கனை அடர்த்தார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க , அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற , குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , இரக்கமில்லாதவராய் , அரக்கனாகிய இராவணனை அவனுடைய பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் நெரியும்படி , தமது காலால் நெருக்கியவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .


பாடல் எண் : 10
வஞ்சி நுண்இடை மங்கை பங்கினர்
         மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்அடியார் பயி லும்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவல் ஊரன்
         வனப்ப கைஅவ ள்அப்பன் வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டுஉகப்பார் அவ ரேஅ ழகியரே

         பொழிப்புரை : வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய் , பெரிய தவத்தவர்கள் மிகுகின்ற , வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர் , ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே , யாவரினும் மிக்க அழகுடையர் .

திருச்சிற்றம்பலம்No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...